Read in : English
சமீப காலங்களில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் இயற்கை வேளாண்மைக்கு ஆதரவு குரல்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, உரங்களையும் வேளாண் வேதிப் பொருள்களையும் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துவதில்லை. பயிர்களுக்கு ஊட்டமளிக்க இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்யப்படுகிறது. ஒட்டுமொத்த இயற்கை வேளாண்மை வரவேற்புக்குரியதாக இருக்கலாம். ஆனால், நடைமுறையில் இது சாத்தியமில்லை. நவீன வணிகரீதியாக பயிர் சாகுபடி மூலம் அதிக அளவில் பயிர் உற்பத்தியை நிலைநிறுத்த வேண்டியுள்ளதால், நமது அனைத்து சாகுபடி நிலங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்கான இயற்கை உரம் போதுமானதாக இல்லை.
நம் நாட்டில் சில பத்தாண்டுகளுக்கு முன்னதாக நமது வாழ்வாதாரத்துக்காக பாரம்பரியமான, குறைந்த உற்பத்தியளிக்கும் விவசாயம் இருந்த காலத்தில் ஒட்டுமொத்த இயற்கை வேளாண்மை சாத்தியமாகி இருக்கலாம். குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இயற்கை உரங்களான மக்கிய சாண உரம், கம்போஸ்ட் உரம் போன்றவற்றை தோட்டக்கலை பயிர்களுக்கு பயன்படுத்துவது போதுமானதாக இருந்தது. குறைந்த உற்பத்தி, அதிக செலவு என்று இருந்தாலும் பசுமை விளைபொருள்க¬ளை அதிக விலை கொடுத்து வாங்க நுகர்வோர் தயாராக இருந்தனர்.
நம் நாட்டில் எப்போதும் இல்லாதவகையில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப 1950களில் 50 மில்லியன் டன்னாக இருந்த உணவு உற்பத்தி, தற்போது 220 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. ஒருங்கிணைந்த பயிர் ஊட்டசத்து நடைமுறை, இயற்கை உரம் மற்றும் வேதி உரம் ஆகியவற்றைப் பயன்படுத்துதல், நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டுக்கு ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாட்டு மேலாண்மை நடைமுறை போன்றவற்றால் இந்த அளவுக்கு நமது உற்பத்தியை அதிகரிக்க முடிந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், இயற்கை உரம், வேதி உரங்களில் ஏதேனும் ஒன்றை மட்டும் பயன்படுத்தாமல் இரண்டையும் தகுந்த அளவில் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
ஊட்டச்சத்துகளின் மூலம்
இயற்கை உரம் அல்லது வேதி உரம் என எப்படி அளித்தாலும், மண்ணிலிருந்து ஊட்டச் சத்தை கனிம-அயனி வடிவில்தான் பயிர்கள் உறிஞ்சிக்கொள்கின்றன. அது உறிஞ்சிக்கொள்ளும் சத்து கனிம உரத்திலிருந்து வருகிறதா அல்லது இயற்கை உரத்திலிருந்து வருகிறதா என வேறுபடுத்தி பார்ப்பதில்லை. பயிர்களின் ஊட்டச்சத்து, அது எந்த மூலங்களிலிருந்து எடுத்துக்கொண்டாலும் பயிர்களுக்குள் அவை வித்தியாசமாக இயங்குவதில்லை. கனிம உரமோ, இயற்கை உரமோ அது கிடைக்கும் அளவிலிருந்துதான் அதனை உட்கொள்ளும் அளவு மாறுபடுகிறது. வேதி உரத்திலிருந்து கிடைக்கும் சத்து எப்போதும் பயிர்களுக்குக் கிடைக்கக் கூடிய வகையில் மண்ணில் கரைந்து காணப்படும். அதேவேளையில் இயற்கை உரத்திலிருந்து கிடைக்கும் சத்துகள் மண்ணில் மெதுவாகவே கரைந்து குறைந்த அளவே பயிர்களினுள் உட்செல்லும். இயற்கை உரமானாலும் அல்லது வேதி உரமானாலும் அது மண்ணில் கரைந்தால் ஒரே மாதிரிதான் இருக்கும். அதே வேதி மாற்றங்களும் உயிரி வேதி மாற்றங்களும் மண்ணிலும் பயிர்களுக்குள்ளும் நிகழும்.
உற்பத்தி செய்யப்படும் பயிர்களின் தரம்
உற்பத்தி செய்யப்படும் பயிர்களின் தரத்தைப் பொருத்தவரை வேதி உரங்களைக் காட்டிலும் இயற்கை உரங்களைப் பயன்படுத்தும்போது குறிப்பாக தோட்டக்கலை பயிர்களான பூக்கள், காய்கறிகள், மற்றும் பழங்களின் தரம் மேம்பட்டதாகத்தான் இருக்கும். இதற்குக் காரணம் நொதிப்பொருட்கள் (என்சைம்கள்), ஹார்மோன்கள், வளர்ச்சி ஊக்கிகள் என பயிர் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஊட்டசத்துகளும் இயற்கை உரம் மூலம் கிடைக்கிறது. அதனால் வேதிச் செயல்பாடுகள் ஆற்றலுடன் ஒழுங்குபடுத்தப்படுகிறது. அதன் விளைவாக கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு, எண்ணெய் போன்ற முதன்மை சத்துகள் பயிர்களுக்கு முறையாகக் கிடைக்கிறது.
ஆனால், கனிம உரங்கள் ஒரே ஒரு அல்லது சில ஊட்டச்சத்துப் பொருள்களை மட்டுமே கொடுக்கலாம். பயிர் தரத்துக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகள், நொதிப் பொருட்கள், வைட்டமின்கள் ஆகியவற்றை அளிப்பதில்லை. இதுதான் விளைபொருட்களின் தரத்துக்குக் காரணமேதவிர, பயிருக்குக் கொடுக்கப்படும் ஊட்டச்சத்தின் தன்மை மற்றும் குணங்கள் இயற்கை உரத்திலிருந்து கிடைக்கிறதா£ அல்லது கனிம உரத்திலிருந்து கிடைக்கிறதா என்பதால் அல்ல.
மண்ணின் திரிந்து போன தன்மைக்கும் மண் வள குறைபாட்டுக்கும் முறையற்ற மற்றும் அதிக அளவிலான வேதி உர பயன்பாடுதான் காரணம். அதேபோல் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷியம் போன்ற ஒரே வகையான ஊட்டச் சத்துகள் மண்ணில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறியாமல் திரும்ப திரும்ப அளிப்பதும் மண்வளக் குறைபாட்டுக்குக் காரணம். இவ்வகையான உரமிடும் முறை மண்ணில் பயிர்களுக்குத் தேவையான ஊட்டசத்துகளில் சமமற்ற நிலையை உருவாக்கிவிடும். அதேபோல் இந்த ஊட்டச் சத்துக்களை அதிக அளவில் கிடைக்கச் செய்து வேறு சில சத்துகளில் குறைவை ஏற்படுத்தியது. மண்ணின் உரத் தன்மை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைக் கண்டறிந்து தகுந்த முறையில் உரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் ஏற்பட்டுள்ள இந்தத் திரிபுக் குறைபாட்டை சரி செய்ய முடியும்.
உரங்களை எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம்?
இயற்கை உர பயன்பாட்டால் வணிக நோக்கத்துக்காக செய்யப்படும் தீவிர விவசாயத்தை அதிக நாட்களுக்குத் தொடர முடியாது. வேதி உரங்கள் இல்லாவிட்டால், பயிர்களின் விளைச்சல் கணிசமாகக் குறைந்துவிடும். பயிர்களுக்கு அதிக அளவில் தேவைப்படும் ஊட்டச்சத்துகளான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷியம் போன்ற ஊட்டச்சத்துகள் வேதி உரங்களில் அதிகம் இருக்கிறது. அந்த அளவுக்கு இயற்கை உரங்களால் இந்தச் சத்துக்களை வழங்க முடியாது. வரைமுறையின்றி அதீதமாக வேதி உரங்களைப் பயன்படுத்தியதால் சுற்றுசூழல் மாசடைந்துள்ளது உண்மையாக இருப்பினும், இவ்வேதி உரங்களை பயன்பாட்டிலிருந்து நீக்குவதால் சுற்றுச்சூழல் மேம்படும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை; மேலும் அதன் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கக்கூடும்.
இயற்கை உரம், உயிரி உரம் மற்றும் வேதி உரங்களை ஒருங்கிணைந்து பயன்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த உர மேலாண்மையை மேற்கொண்டால், மண்ணின் வளத்தை மீட்கவும் அதனை பராமரிக்கவும் இயலும். இந்த அணுகுமுறை அதிக தரமுடைய விளைபொருட்களை விளைவிக்கவும் அதிக உற்பத்தியை உறுதி செய்யவும் வாய்ப்பாக அமையும். அனைத்து நிலைகளிலும் விவசாயத்தில் அதிக உற்பத்தியை உருவாக்குவது என்பது இயற்கை உரம், உயிரி உரம், வேதி உரங்களை இணைந்து பயன்படுத்துவதன் மூலம் சுற்றுசூழலையும் இயற்கை வள ஆதாரங்களையும் பாதுகாக்கவும் அவை அதிகமாக சுரண்டப்படுவதையும் தடுக்க முடியும்.
தரத்தை மேம்படுத்துதல் அல்லது சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற காரணங்களை முன்னிறுத்தி வேதி உரங்களின் பயன்பாட்டைக் குறைத்தாலோ அல்லது புறக்கணித்தாலோ வளங்குன்றா வேளாண்மையின் தத்துவம் கசப்பான முரணாகிவிடலாம். முற்றிலும் வேதி உரங்களின் பயன்பாட்டை நிறுத்தினால், எதிர் காலங்களில் வளங்குன்றா வேளாண்மை பாதிக்கப்படும். பசுமை மறுமலர்ச்சி பாதையை நாம் மீண்டும் கண்டறிய வேண்டும். அதற்கு இயற்கை உரம், உயிரி உரம் மற்றும் வேதி உரங்களை இணைந்து பயன்படுத்த வேண்டும். இந்த அணுகுமுறையால் அதிக உற்பத்தியுள்ள தரமுள்ள வளங்குன்றா வேளாண்மையை இப்போதும் எப்போதும் உருவாக்க முடியும். வேதி உரத்தைவிட அல்லது இயற்கை உரத்தைவிட, ஒருங்கிணைந்த மண் வள மேலாண்மை தான் நிலைத்த, அதிக உற்பத்தி திறனும் தரமும் கொண்ட வேளாண்மைக்கு உறுதி செய்யும். அதன் மூலம் உணவு பாதுகாப்பு உறுதிப்படும்.
(கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை முன்னாள் பேராசிரியர் முனைவர் கே.குமாரசாமியின் கட்டுரை, அவரது தனிப்பட்ட கருத்தாகும்.)
தொடர்புக்கு: kkkswamy9@yahoo.co.in
Read in : English