Read in : English
பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களின் முதல் விருப்பம் தாங்கள் விரும்பிய படிப்புதான் என்றாலும்கூட, அதைவிட முக்கியமாகக் கருதுவது கல்லூரிகளின் முக்கியத்துவத்தைத்தான். முக்கியக் கல்லூரிகளில் இடம் கிடைக்கிறது என்றால், தங்களது முதல் விருப்பப் பாடப்பிரிவை மாற்றிக் கொள்ளக்கூடத் தயங்குவதில்லை.
பொறியியல் கல்லூரியைப் பொருத்தவரை படிப்புகளில் இடம் கிடைப்பதில் பிரச்சினை இல்லை. முக்கியத்துவம் வாய்ந்த கல்லூரியில் இடம் கிடைக்கிறதா என்பதைத்தான் மாணவர்கள் பார்க்கிறார்கள். அதனால்தான், பொறியியல் கல்லூரிகளில் சுமார் 1 லட்சம் காலி இடங்கள் இருந்தாலும்கூட, முக்கியமான பிரபல பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலான இடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களின், குறிப்பாக மிக அதிக மதிப்பெண் பெற்றவர்களின் முதல் விருப்பம் கிண்டி பொறியியல் கல்லூரிதான். இக்கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் படிப்புதான் மிகச் சிறந்த மதிப்பெண் பெற்ற பல மாணவர்களது முதல் விருப்பமாக இருந்து வந்திருக்கிறது. அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவைத் தேர்வு செய்கிறார்கள். தாங்கள் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கவில்லை என்றால் அதே பாடப்பிரிவில் சுயஆதரவுப் படிப்பில் (செல்ப் சப்போர்ட்டிங் கோர்ஸ்) இடம் இருக்குமா என்று பார்க்கிறார்கள். அல்லது அதே கல்லூரியில் தங்களுக்குப் பிடித்த வேறு பாடப்பிரிவுகளில் இடம் கிடைக்குமா என்று பார்க்கிறார்கள். தங்களது விருப்பப்படி குறிப்பிட்ட பாடப்பிரிவில் சேருவதில் மட்டும் குறியாய் இருக்கும் மாணவர்கள், குறிப்பிட்ட கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால் தங்களது அடுத்த விருப்பம் உள்ள சிறந்த கல்லூரிகளில் அதே படிப்பில் இடம் இருக்குமா என்று பார்க்கிறார்கள்.
இந்த ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய கவுன்சலிங்கில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவை தேர்வு செய்துள்ளனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் அதிகபட்சமாக 15,149 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இப்படிப்பில் உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது குறைவு என்கிறார்கள்.
அதேசமயம், கடந்த ஆண்டில் மாணவர்களை அதிக அளவில் ஈர்த்த மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பில் 14,177 மாணவர்கள் சேர்ந்தாலும்கூட, அந்தப் படிப்பில் கடந்த ஆண்டைப் போல அதிக ஆர்வம் இல்லாததால் அப்படிப்பில் காலி இடங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
அதைத் தொடர்ந்து எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் 12.930 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். சிவில் என்ஜினீயரிங் படிப்பில் 5,232 பேரும் ஐ.டி. படிப்பில் 5,012 பேரும் சேர்ந்துள்ளனர்.
190 கட் ஆப் மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கான முதல் கட்ட கவுன்சலிங்கில் மாணவர்களின் முதல் விருப்பமாக இருந்தது எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன். அதையடுத்து கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் எலெக்ட்ரானிக்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷ் (செல்ப் சப்போர்ட்டிங்), கம்ப்யூட்டர் சயின்ஸ் (செல்ப் சப்போர்ட்டிங்), சிவில், இன்பர்மேஷன் டெக்னாலஜி (செல்ப் சப்போர்ட்டிங்), மெக்கானிக்கல் (செல்ப் சப்போர்ட்டிங்) என்ற வரிசையில் மாணவர்களின் தேர்வு இருந்தது.
இதேபோல முதல் சுற்றில், மாணவர்களின் விருப்பக் கல்லூரியில் முதலிடம் கிண்டி பொறியியல் கல்லூரிக்குத்தான் முதல் இடம். அதைத் தொடர்து அண்ணா பல்கலைக்கழக எம்ஐடி வளாகம், பி.எஸ்.ஜி. கல்லூரி, எஸ்.எஸ்.என். கல்லூரி, கோவை ஜிசிடி, கோயம்புத்தூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, தியாகராஜர் பொறியியல் கல்லூரி, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக ஏசிடி வளாகம்…என்று விருப்பப் பட்டியல் தொடர்ந்தது.
கடந்த ஆண்டுகளில் கவுன்சலிங் தொடங்கியதும் முதல் நாளில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் பாடப்பிரிவுதான் மாணவர்களின் முதல் சாய்ஸாக இருக்கும். அதை அடுத்து கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவைத் தேர்வு செய்வார்கள். கடந்த சில ஆண்டுகளில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்புகளில் மாணவர்கள் சேருவதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டியதால் அந்தப் படிப்பில் மாணவர்கள் அதிகம் சேர்ந்தனர். அதையடுத்துதான் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் மாணவர்களது ஆர்வம் இருந்தது. தற்போது இந்த ஆண்டில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேருவதில் மாணவர்களிடம் அதிக ஆர்வம் உள்ளது. சிவில் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதில் இருந்த ஆர்வம் தற்போது குறைந்துள்ளது.
ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை இருந்த கடந்த ஆண்டுகளில், கல்லூரிகளில் காலி இடங்கள் இருப்பதைப் பார்த்து மாணவர்கள் தங்களது விருப்பத்தை உடனே இறுதி செய்யும் வாய்ப்பு இருந்தது. ஆனால், இந்த ஆண்டு ஆன்லைன் கவுன்சலிங் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் தங்களது விருப்பப் பட்டியலை தயாரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி பதிவிட வேண்டியுள்ளது. நமது கட் ஆப் மதிப்பெண்களைப் பொருத்து, ஆலோசித்து பட்டியல் வரிசையை சரிவர அமைத்தாலம்கூட, நமது விருப்பப்படி முதல் இடமே கிடைக்குமா என்று சொல்ல முடியாது. அடுத்த சுற்றுக்குப் போகலாம் என்று நினைத்தால் இருக்கின்ற நல்ல கல்லூரியை விட வேறு நல்ல கல்லூரி கிடைக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. மாணவர்கள் தங்களுக்குக் கிடைத்ததில் திருப்திபட்டுக் கொள்ள வேண்டிய நிலைதான் ஏற்பட்டுள்ளது.
Read in : English