தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பி.எட். படித்தவர்கள் ஆசிரியராகலாம். தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (NCTE) இதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
பி.எட். படித்து விட்டு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியராக நியமிக்கப்படுபவர்கள், இரண்டாண்டுகளுக்குள் என்.சி.டி.இ. அங்கீகாரம் பெற்ற அமைப்புகளில் ஆறுமாத இணைப்புப் பயிற்சிப் படிப்பை (பிரிட்ஜ் கோர்ஸ்) படிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படித்தவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு வந்தனர். அனைவருக்கும் கட்டாய ஆசிரியர் கல்விச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இந்த ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் (டெட்) தகுதி பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், தொடக்கப் பள்ளி பட்டயப் படிப்புகளுக்கு இனி பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் என்று மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT) அறிவித்துள்ளது.
“தொடக்கக் கல்வி டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வுக்காக அழைக்கப்பட்ட 713 பேரில் 413 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதையடுத்து, இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு முடித்து, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த விருப்பமுள்ளவர்களை இரண்டாண்டு டிப்ளமோ படிப்பில் சேர்த்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று எஸ்சிஇஆர்டி இயக்குநர் க.அறிவொளி தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பில் சேருவதில் மாணவர்களிடம் ஆர்வம் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டிலேயே அரசு, அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் ஏராளமான காலி இடங்கள் இருந்தன. இந்த ஆண்டிலும் அந்த நிலை தொடர்கிறது.
முன்பு முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரை ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படித்தவர்களை ஆசிரியர்களே நியமிக்கப்பட்டு வந்தனர். தற்போது, 6 முதல் எட்டாம் வகுப்பு வரை ஏற்படும் காலி இடங்களில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதனால் டிப்ளமோ படித்த ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. தற்போது, தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பி.எட். படித்தவர்கள் ஆசிரியராகலாம் என்ற நிலை ஏற்பட்டால் தங்களுக்கான வேலை வாய்ப்பு மேலும் பறிபோகலாம் என்று அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ பெற்று வேலைக்காகக் காத்திருக்கும் ஆசிரியர்கள்.