Read in : English
சென்னை காசிமேட்டை சேர்ந்த மீனவர்கள் 9 பேர் கடந்த 17 ஆம் தேதி அதிகாலையில் மீன்பிடிப்பதற்காக ஆழ்கடலுக்கு சென்றிருந்தனர். காசிமேட்டை சேர்ந்த செங்குட்டுவன் எனபவருக்கு சொந்தமான கில் நெட் வகை படகில் , ராஜன் என்ற மீனவர் தலைமையில் சென்ற இந்த குழுவினருக்கு முதல் நாளே அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் வீசிய வலைகள் துண்டாகிப் போனது. இருப்பினும் அவற்றை படகில் ஏற்றிய குழுவினர், இரண்டாவது நாளான நேற்றும் சுமார் 80 கடல் மைல் தொலைவில் வலை வீசத் துவங்கியுள்ளனர். அப்போது, வீசிய பலத்த காற்று, படகை நிலைதடுமாறச் செய்துள்ளது. தொடர்ந்து, விடாமல் காற்று பலமாக வீசவே, அந்த படகானது கடலில் குப்புற கவிழ்ந்தது. இதனையடுத்து செய்வதறியாது திகைத்த மீனவர்கள், வயர்லெஸ் மூலம் அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களுக்கு உதவி கேட்டு தகவல் கொடுத்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த கடலோர காவல்படையினருக்கு தகவல் கிடைக்கவே, தாங்கள் சம்பவ இடம் வந்து சேர்ந்து மீட்பதற்கு 3 மணி நேரம் ஆகும் என்பதால், அதுவரை நிலைமை சமாளிக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே, படகின் எஞ்சினில் தண்ணீர் ஏறத் துவங்கியதுடன் படகும் முழுமையாக மூழத் துவங்கியது. தொடர்ந்து, கடலோர காவல்படையினர் படகைப் பிடித்து கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 9 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்களை பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்துள்ளனர். சம்பவ நடந்த இடம் சுமார் 80 கடல் மைல்கள் தொலைவில் இருப்பதால் வந்து சேர நாளைக் காலை வரை ஆகும் என கடலோர காவல்படை அதிகாரிகள் தரப்பில் மீனவர்களின் குடும்பத்தினர்களுக்கு கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து படகு உரிமையாளர் செங்குட்டுவனின் மகன் பாலமுருகன் கூறும் போது, “ தற்போது, மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட செய்தி எங்களை மகிழ்ச்சியடையச் செய்கிறது. இருப்பினும், தனிப்பட்ட முறையில் எங்கள் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான படகு மூழ்கியுள்ளது. அரசு, போதிய இழப்பீடு தந்துதவ வேண்டும்” எனக் கூறினார்.
இதனிடையே, இதுபோன்ற படகு விபத்துக்கள் கடலில் ஏற்பட்டால், அவற்றிற்கான காப்பீட்டு வசதிகள் நம்பிக்கையற்ற வகையில் இருப்பதாகக் கூறுகின்றனர் மீனவர் சங்கத்தினர். எல்லா படகுகளுமே, காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்ட நிலையில், காப்பீடு செய்யப்பட்ட படகுகள், விபத்துக்களில் சிக்கினால், பல காரணங்களால் இழப்பீட்டு தொகையை குறைத்தோ அல்லது தராமல் தட்டிக் கழிக்கும் வழியை தேடவோ தான் காப்பீட்டு நிறுவனங்கள் பார்ப்பதாக கூறுகிறார் தென்னிந்திய மீனவர்கள் நலச்சங்க தலைவர் பாரதி. அவர் மேலும் கூறுகையில் “ குறிப்பிட்ட விபத்துக்குள்ளாகியுள்ள படகு, காப்பீடு செய்யப்பட்டிருந்தால், சிறிய அளவிலான இழப்பீடு கிடைப்பது சாத்தியம் தான். இருப்பினும், இழப்பீட்டுத் தொகை வழங்க நாங்கள் விபத்து நடந்த பகுதியை கடலில் காட்ட வேண்டும் எனக் கேட்கும், காப்பீட்டு நிறுவனங்களை எப்படி எதிர்கொள்வது ?” எனக் கேட்கிறார் அவர்.
Read in : English