Read in : English

Share the Article

திருச்செந்தூர் கோயிலில் பூஜை செய்து வரும் ஈஸ்வர ஐயருக்கு அது அவருடைய மூதாதையர்கள் பாரம்பரியமாக செய்து வரும் தொழில் என்பதால்  இயல்பாகக் கிடைத்த உரிமை என்கிறார். இதுதான் அவரின் வாழ்வாதாரம் மற்றும் வருமானத்துக்கான ஒரே வழியும் கூட. சென்னை உயர்நீதிமன்றம், கோயில் நிர்வாகம் வரையறுத்திருப்பதை விட சிறப்பு பூஜைக்கு அதிக பணம் வசூலிக்க தடை விதித்திருப்பதால்  ஈஸ்வர ஐயர் மட்டுமில்லாது அவருடன் சேர்த்து 300 பூசாரிகளின் உரிமை அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.அங்கீகரிக்கப்படாத பூசாரிகள் கோயில் வளாகத்துக்குள் நுழைவதை தடை செய்யும் விதமாக  அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்கள் கோயிலினுள் நுழையும் போது ‘பயோமெட்ரிக்’ முறை மூலம் கைரேகை பதிந்து உள்ளே நுழையும் வசதியை ஏற்படுத்த வேண்டுமென்று  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

காவடி எடுத்து கோயிலுக்கு வரும் பக்தர்கள்

பல பக்தர்கள் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.  சிறப்பு பூஜைகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதும் நீண்ட வரிசையில் நிற்காமல் இருக்க சிறப்புக் கட்டணம் செலுத்துவதும் வழக்கத்தில் இல்லாத, மாறுபட்ட நடைமுறை அல்ல.உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த வாதி, ‘அங்கீகரிக்கப்படாத ஐயர்கள்’ ஒரு குழுவாக இணைந்து கோயில் வாசலில் நின்று கொண்டு சிறப்பு பூஜை செய்ய அதிக பணம் வசூலிக்கிறார்கள் என கூறியிருந்தார்.கோயிலில் பூசாரிகள் சாமி கும்பிடுவதற்கான உதவிகளைச் செய்கிறார்கள். ‘’கட்டணம் கொடுத்தால் இந்த பூசாரிகள் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் அப்பூஜைகள் கோயில் நிர்வாகத்தால் செய்யப்படுபவை அல்ல’’ என்கிறார் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த அழகேசன் என்னும் பக்தர். மேலும், அழகேசன் கூறுகையில் தான் பல வருடங்களாக இக்கோயிலுக்கு வந்து செல்வதாகவும் இம்முறை தன் குழந்தைக்கு மொட்டை அடித்து நேர்த்திக் கடனை செலுத்துவதற்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொலைந்து போன உரிமை

கருவறையில் உள்ள சாமிக்கு கோயில் நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட போற்றி பிராமணர்கள் மட்டுமே பூஜை சேவை செய்து வருகின்றனர். கோயில் நிர்வாகத்தால் அனுமதிக்கப்படாதவர்கள் தமிழ் பிராமணர்கள். இதுகுறித்து ஈஸ்வர ஐயர் கூறுகையில், தமிழ் பிராமணர்களும் கர்ப்பகிரஹத்தில் உள்ள மூலவருக்கு சேவை செய்தவர்கள் தான். ஆனால் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு, அப்பகுதியில் பஞ்சம் ஏற்பட்டபோது பிழைப்புக்காக அவர்கள் திருச்செந்துரை விட்டு போகும் முடிவில் இருந்தனர் என்கிறார். அச்சமயத்தில் திருவாங்கூர் அரசர் விசாகம் திருநாள் கோயிலுக்கு கொடை கொடுத்து காப்பாற்றினார். அப்போது அவர் தன்னுடன் அழைத்து வந்த நம்பூதிரிகளை மூலவருக்கு பூஜை செய்ய பணித்தார். “எங்கள் முன்னோர்கள்  இந்த உரிமை தாங்கள் அவர்களுக்கு விட்டுக் கொடுத்ததாக கூறுவதை கேட்டுள்ளேன்”  எனக் கூறும் அவர், அதன்பிறகு நம்பூதிரிகள் உடுப்பியில் இருந்து தன்னுடன் வந்த சில போற்றிகளுக்கு மூலவருக்கு பூஜை செய்யும் உரிமையைக் கொடுத்தனர் என்று கூறுகிறார் ஈஸ்வர ஐயர்.

“எங்கள் முன்னோர்கள்  இந்த உரிமை தாங்கள் அவர்களுக்கு விட்டுக் கொடுத்ததாக கூறுவதை கேட்டுள்ளேன்” – ஈஸ்வர ஐயர்.

தற்போதும் போற்றி ஐயர்கள் தான் மூலவருக்கும் வள்ளி, தெய்வானை பீடத்துக்கும் பூஜை செய்து வருகின்றனர்.”அவர்கள் தான் தற்போது திருச்செந்தூர் கோயிலில் அங்கரிக்கப்பட்ட ஐயர்கள்’’ என கூறுகிறார் சுப்ரமணிய ஐயர். இன்றும் காலைவேளை பூஜையான உதயமார்த்தாண்டம் பூஜை மூலவருக்கு செய்யப்படுவது, திருச்செந்தூர் வரலாற்றில் விசாகம் திருநாள் மன்னரின் அந்த கொடை நிகழ்வை நினைவுகூரும் வகையில் தான் என்கிறார் ஈஸ்வர ஐயர். இந்து அறநிலையத்துறையில் ஓய்வுபெற்ற அதிகாரியான சுசீந்தரம்  ராமநாதபிள்ளை, ஈஸ்வர ஐயர் கூறிய வரலாறை ஒத்துக்கொள்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, ” திருவாங்கூர் மன்னர்கள் இந்த கோயிலில் ஆர்வமாக  இருந்தது உண்மை தான். அவர்கள் வருகைக்கு முன்னர் முக்காணிகள் அல்லது திரிசுதந்திரர்கள்  என அழைக்கப்பட்ட இந்த ஐயர்கள் தான் மூலவருக்கு பூஜைகள் செய்து வந்துள்ளனர். ” எனக்கூறும் அவர்,  ஒரு காலத்தில் பழனி உட்பட உள்ள கோயில்களில் பண்டாரங்கள் எனப்படுவோர் பூஜைகள் செய்து வந்த நிலையில் , அங்கு ஆகம விதிப்படி பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்பதற்காக பூஜைகள் செய்ய பிராமணர்கள் நியமிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார்.

தங்கள் நேர்த்திக்கடனை செய்யும் பக்தர்கள்

நாட்டுப்புறவியல் ஆய்வாளர், அ.க. பெருமாள் கூறுகையில், “ ஐயர்கள் கூறும் வரலாறு உண்மை தான். ஐயர்களிடமிருந்து, நம்பூதிரிகளே பூஜை செய்யும் உரிமையை பெற்றார்கள். அதனை  ‘திருச்செந்தூர் கோயில்’ என்ற நூலில் சோம சுந்தரபிள்ளையும் உறுதி செய்கிறார்” என்றார்.மலையாள வரலாற்றாய்வாளரான விஸ்வநாதன், திப்புவின் காலத்தில் போற்றிகளில் பலர் திருவாங்கூருக்கு தப்பி வந்தனர். அவர்கள் நம்பூதிரிகளுக்கு உதவியாளர்களாக இருந்தனர். விசாகம் திரு நாள் மகாராஜா காலத்தில் பஞ்சம் தீவிரமாகவே இருந்தது என கூறுகிறார்.

நெருக்கடியில் தமிழ் பூஜாரிகள்

தினசரி செய்யப்படும் பூஜைகள் தவிர, கோயில் நிர்வாகம் சண்முகார்ச்சனை, அபிசேகம், தங்கத் தேர் இழுத்தல் போன்ற பூஜைகளை தமிழ் ஐயர்களிடம் தான் ஒப்படைக்கிறது என உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த பூஜைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தில் ஒரு பகுதி தமிழ் ஐயர்களுக்கு வழங்கபடுகிறது என்றும் அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஆறு மாதத்துக்கு ஒருமுறைதான் அந்த தொகை கிடைக்கும். மற்ற நாட்களில் இப்பணம் கிடைக்கும் வரை நாங்கள் எங்கள் வாழ்க்கையை எப்படி நடத்துவது? என கேள்வி எழுப்புகிறார் கண்ணன் ஐயர்.எண்ணற்ற பூஜை வகைகள் இருந்தாலும் அபிஷேகமும் சண்முகார்ச்சனையும் மட்டுமே கோயில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது. இவற்றை தவிர, தாராபிஷேகம், சந்தனக் காப்பு உள்ளிட்ட பூஜைகள் செய்ய வேண்டுமானால் இந்த ஐயர்களைத் தான் பக்தர்கள் நேரடியாகவே தொடர்பு கொள்ளவேண்டியுள்ளது. “சில பக்தர்களுக்கு காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன் இருந்தாலும் ஐயர்களை நேரடியாக தொடர்பு கொண்டால் மட்டுமே வெற்றிகரமாக நடத்தி விட முடியும்” என்கிறார் 63 வயதான பக்தர் சாமி துரை.

“கோயில் நிர்வாகத்தால் ஏற்று நடத்தப்படும் பூஜைகளைத் தவிர பிற பூஜைகளை செய்ய, நாங்கள் அதற்கான அனுமதிக்கட்டணம் செலுத்தித் தான் வரும் பக்தர்களுக்கு செய்ய முடியும்” எனக் கூறுகிறார் ஈஸ்வர ஐயர். மேலும் அவர் கூறுகையில் “உதாரணத்திற்கு , சந்தனக் காப்பு பூஜை செய்ய வேண்டுமெனில் அதற்கு ரூ.650 அனுமதிக்கட்டணம் செலுத்த வேண்டும். அதோடு 6 கிலோ சந்தனம் தேவைப்படும்.
அதில் 2 கிலோ சந்தனம் வரை தேவஸ்தானத்திற்கு வழங்க வேண்டியுள்ளது. அது எதற்கு எனக் கேட்டால் வரும் வி.ஐ.பிக்களுக்கு வழங்க வேண்டியுள்ளது எனக் கூறுகிறார்கள். சந்தனத்துடன், பரிவட்டம் கட்டுதல், மேளம் ஏற்பாடு, சாமிக்கு நெய்வேத்தியம் கூடவே இன்னும் பூஜைக்கு வேண்டிய பொருட்கள், செய்யும் ஐயருக்கு கூலி என கணக்கிடும் போது அதுவே 15 ஆயிரம் ரூபாய் வந்துவிடுகிறது’’ என்கிறார் ஈஸ்வர ஐயர்.

கோயிலில் ஊழியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்டவர்கள் நுழையும் போது பயோ மெட்ரிக் கருவி கொண்டு தான் ஏற்கனவே வருகையை பதிவு செய்கிறோம். – பாரதி, இணை ஆணையர்

கேள்விக்குறியாகும் வாழ்வாதாரம்

அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் பூஜாரிகள் மட்டுமே உள்ளே நுழைவதை உறுதி செய்ய பயோ மெட்ரிக் முறையில் வருகைப் பதிவு செய்வதற்கான கருவியைப் பொருத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு 300 தமிழ் ஐயர்களின் வாழ்வாதாரத்துக்கு  நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அற நிலையத்துறையின் சார்பில் கோயிலின் இணை ஆணையர் பாரதி கூறுகையில் “கோயிலில் ஊழியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்டவர்கள் நுழையும் போது பயோ மெட்ரிக் கருவி கொண்டு தான் ஏற்கனவே வருகையை பதிவு செய்கிறோம். ஐயர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் உரிமம் வழங்கியிருந்தோம். அதைப் பெற்றவர்களில் பலர் இறந்து போய்விட்டனர். இன்னும் பலர், புதுப்பிக்காமல் உள்ளனர். தற்போதைய நிலையில்,புதுப்பிக்காமல் உள்ளவர்களுக்கு புதுப்பித்தும், மற்றவர்களுக்கு புதிதாகவும் உரிமம் வழங்கி அங்கீகாரம் வழங்கப்படும்” என்றார்.

தனித்தனியாக தங்களுக்கு உரிமம் வழங்குவதை விட, தங்கள் சங்கமான ஸ்ரீ சுப்ரமணிய சாமி கோயில் சுதந்திர பரிபாலன ஸ்தலத்தார்கள் சபைக்கு அங்கீகாரம் வழங்கி, அதனடிப்படையில் அதில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு கோயில் நிர்வாகம் அங்கீகாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles