Read in : English
கவுன்சலிங் தாமதமாகியுள்ளதால் பொறியியல் கல்லூரிகளில் புதிதாகச் சேரும் முதலாண்டு மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வுகளும் தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சலிங் விதிமுறைகளின்படி, முதலாண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி வாக்கில் வகுப்புகள் தொடங்குவது வழக்கம். வழக்கமாக ஜூலை 31ஆம் தேதிக்குள் முடிய வேண்டிய பொறியியல் பொது கவுன்சலிங், இந்த ஆண்டில் நீட் தேர்வு வழக்கு காரணமாக தாமதமாகியுள்ளது.
இதனால், ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பொறியியல் கவுன்சலிங்கை நடத்துவதற்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அனுமதி பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து ஜூலை 25ஆம் தேதி ஆன்லைன் கவுன்சலிங் தொடங்குகிறது.
இந்த நிலையில், பொறியியல் கல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பரில் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு செமஸ்டருக்கும் 90 நாட்கள் வகுப்புகள் நடக்க வேண்டும். எனவே, வழக்கமாக நவம்பரில் முதல் செமஸ்டர் தேர்வு நடத்துவதற்குப் போதிய கால அவகாசம் இருக்காது.
ÔÔஇந்த நிலையில் பொறியியல் முதலாண்டு மாணவர்களுக்கு முதல் செமஸ்டர் தேர்வு தள்ளிப் போகலாம். பத்தாண்டுகளுக்கு முன்னால், நீதிமன்ற வழக்குகள் காரணமாக கவுன்சலிங் முடிய கால தாமதமாகி, முதலாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவதிலும் கால தாதமம் ஏற்பட்டது. மாணவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, முதல் செமஸ்டரை நடத்தாமல், இரண்டாம் செமஸ்டருடன் சேர்த்து மே மாதத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதுபோன்ற நிலை தற்போதும் ஏற்படலாம்ÕÕ என்கிறார் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கைப் பிரிவு முன்னாள் இயக்குநர் ப.வே. நவநீதகிருஷ்ணன்.
அதேசமயம், அடுத்த ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் வருவதால், இரண்டாம் செமஸ்டர் தேர்வுகளை மே மாதத்திற்கு முன்னதாக நடத்தி முடிக்க வேண்டிய அவசியம் உள்ளதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
விடுமுறை நாட்களிலும் பாடங்களை நடத்தி முடிக்கப் போகிறார்களா அல்லது கடந்த காலத்தைப் போல இரண்டு செமஸ்டரையும் சேர்த்தே நடத்தப் போகிறார்களா என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் விரைவில் முடிவு செய்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களைப் பொருத்தவரை அட்மிஷனில் தாமதம் போன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லாததால் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு இதுபோன்ற காலதாமதச் சிக்கல் இல்லை.
Read in : English