நீட் தேர்வு குறித்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய செகண்டரி கல்வி போர்டு (சிபிஎஸ்இ) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், அடுத்து என்ன ஆகுமோ என்று தெரியாமல் திரிசங்கு நிலையில் உள்ளனர் தமிழக மாணவர்கள்.
நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மொழிபெயர்ப்பில் 49 கேள்விகளில் ஏற்பட்ட தவறுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் புதிய ரேங்க் பட்டியல் வெளியிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் எம்.பி. டி.கே. ரங்கராஜன் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. இதனால் தமிழில் நீட் தேர்வு எழுதிய 24,700 மாணவர்களுக்கும் இந்த கருணை மதிப்பெண்கள் கிடைப்பதன் மூலம், அதில் பலருக்கு எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைக்கும் வாய்ப்பு உருவானது.
உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, சிபிஎஸ்இ மேல் முறையீடு செயதுள்ளதால், உயர்நீதிமன்றம் தங்களுக்கு வழங்கிய நீதி, உச்சநீதிமன்றத்திலும் நிலைக்குமா அல்லது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமா என்ற தவிப்பில் தமிழில் நீட் தேர்வு எழுதியவர்கள் உள்ளனர். .
இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்கெனவே நடைபெற்ற முதல் கட்ட கவுன்சலிங்கில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் இடம் பெற்ற மாணவர்களில் பலர், உயர்நீதிமன்றத் தீர்ப்பால் தங்களது கைக்குக் கிடைத்த அட்மிஷன் கை நழுவிப் போய்விடுமோ என்று அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் நடைபெற்ற கவுன்சலிங் மூலம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் பெற்ற மாணவர் ஒருவர், உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் தனக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட அட்மிஷன் மறுக்கப்படக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சிபிஎஸ்இ மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதைப் பொருத்துதான் டாக்டர் கனவுகளில் மிதந்து வரும் இந்த மாணவர்களின் தலை எழுத்து நிர்ணயிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் எம்பிபிஎஸ் அட்மிஷன் முடிந்த பிறகு ஜூன் கடைசி வாரத்திலோ அல்லது ஜூலை முதல் வாரத்திலோ பொறியியல் மாணவர் சேர்க்கை தொடங்கி ஜூலை 30ஆம் தேதிக்குள் முடிப்பது வழக்கம். தற்போதைய வழக்குகளால் எம்பிபிஎஸ் அட்மிஷன் எப்போது முடியும் என்று தெரியாத நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கை தொடங்குவதும் தள்ளிப் போய் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அட்மிஷனை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைக்கா விட்டால் கால்நடை மருத்துவப் படிப்பில் சேரலாம் என்று காத்திருக்கும் சில மாணவர்களும் முடிவு தெரியாமல் ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் கால்நடை மருத்துவுக கவுன்சலிங்கில் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் எப்போது அனுமதி தருவார்? அல்லது அனுமதி மறுப்பாரா என்பது யாருக்கும் தெரியாது.
உச்சநீதிமன்ற வழக்கின் இடைக்கால உத்தரவின்படிதான் தற்போது நீட் தேர்வை சிபிஎஸ்இ நடத்திக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வு வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில் எப்போது இறுதித் தீர்ப்பு வரும்?
நீட் தேர்வு கொண்டு வந்ததால் தடுமாறிய மாணவர்கள், தற்போது நீதிமன்ற வழக்குகளால் மேலும் தடுமாறிப் போயிருக்கிறார்கள்.