Read in : English
உயிர் வாழ்வதற்கு அடிப்படையானது உணவு. ஓர் உயிரினம், தாவரம் அல்லது விலங்கினத்திடமிருந்து உயிர் வாழ்வதற்குப் பெறும் பொருளே, உணவு என வரையறுக்கப்படுகிறது. ஆற்றல் வழங்குதல், வளர்ச்சிக்கு உதவுதல், சேதம் அடைந்த திசுக்களைப் புதுப்பித்தல், நோய்களிடம் இருந்து உடலைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு ஆதாரமான அத்தியாவசிய சத்துக்களைக் கொண்டதே முழுமையான சத்துணவு.
கெட்டுப்போன உணவுகளே, பல நோய்களுக்குக் காரணமாகின்றன. கலப்படப் பொருள்களால் சமைக்கப்படும் உணவும் நோயை உண்டாக்குகிறது. ரசாயனம் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருள்களை உணவில் கலப்பது, உணவுப் பொருள்களில் இயல்பாக நிறைந்திருக்கும் சத்துக்களை, சுவைக்காக நீக்கிப் பயன்படுத்துவது போன்ற செயல்களும், உடல்நலனுக்குச் சேதம் விளைவிக்கிறது.
இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில், உணவுப் பாதுகாப்புச் சட்டங்கள், நுகர்வோர் நலச் சட்டங்கள் ஆகியவற்றை அமல்படுத்துவதில் தேக்கம், திறனின்மை, ஊழல் போன்றவை நிலவுகின்றன. போதிய விழிப்புணர்வு இன்மையால் மக்கள் எளிதாக நோய்களுக்கு இலக்காகின்றனர். இதனால் உழைப்பு சக்தி பேரளவில் வீணடிக்கப்படுகிறது. உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இது, நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் தேக்கத்தை ஏற்படுத்துகிறது.
இதற்கு மிக முக்கியக் காரணம், சத்துணவு பற்றி மக்களிடம் போதிய அறிவும், விழிப்புணர்வும் இல்லாததுதான். உணவுப் பொருள்களில் உள்ள சத்துக்களை அறிந்து அதற்கேற்ப உண்ணும் நடைமுறை தமிழகத்தில் பெரும்பாலும் இல்லை.
ஆற்றல் வழங்குதல், வளர்ச்சிக்கு உதவுதல், சேதம் அடைந்த திசுக்களைப் புதுப்பித்தல், நோய்களிடம் இருந்து உடலைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு ஆதாரமான அத்தியாவசிய சத்துக்களைக் கொண்டதே முழுமையான சத்துணவு
தமிழகம், வட்டாரரீதியாகப் பல்வேறு உணவுப் பண்பாட்டைக் கொண்டது. பெருங்கோவில் மற்றும் நாட்டுப்புற தெய்வ வழிபாடுகளில் மரபுரீதியாக உணவைக் கொண்டாடும் நிலை இன்றும் உள்ளது. தெய்வங்களுக்கு பிரத்யேக உணவு படைப்பதும் நடைமுறையில் உள்ளது. அதில், சைவம், அசைவம் என்ற பாகுபாடு இல்லை. இது, உணவுப் பண்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நடைமுறையாக உள்ளது.
மரபைத் தமிழகம் கடைப்பிடித்த போதிலும், உணவில் உள்ள சத்துக்களை அறிந்துகொள்ளவோ, அது சார்ந்து உண்பதற்கோ ஏற்ற சூழல் உருவாக்கப்படவில்லை. உணவுப் பண்பாட்டில் அதற்கான இடம் இல்லை. கால மாற்றங்களுக்கு ஏற்பவும், விளையும் பொருளுக்கு ஏற்பவும் தமிழகத்தில் உணவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. மரபுரீதியாக ஊட்டச்சத்து சார்ந்த அறிவு செயல்பாட்டுடன் உணவு தயாரிப்புக்கு முன்னுரிமை தரப்படவில்லை. மாறாக, சுவைக்கே முதலிடம் தரப்பட்டது. இன்றும் தரப்படுகிறது.
மேலும் படிக்க: சிறு தானியங்கள் உடலுக்கு நல்லதுதான், எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
ஊட்டச்சத்துப் பற்றாக்குறைக்கும், நோய் அறிகுறிக்கும் உள்ள தொடர்பு பற்றிய கேள்வியை, இன்னும் எழுப்பவில்லை. சமய நம்பிக்கையில் அமிழ்ந்து போன சமூகங்களில், நோய்க்குறி என்பது, கடவுளின் தண்டனையாகவே நம்பப்படுகிறது. இதனால், சத்துணவு சார்ந்த அறிவுச் செயல்பாடு தேங்கியே உள்ளது.
தமிழகப் பள்ளிக்கல்விப் பாடத்திட்டங்களில், ஊட்டச்சத்து பற்றிய தகவல்கள் தற்போதுதான் தலை காட்டத் தொடங்கியுள்ளன. சமூக அறிவியல் பாடத்தில், ஆறாம் வகுப்பு முதல் உணவு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறை, மாணவ மாணவியரிடம், உணவு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய சிந்தனையை உருவாக்கக்கூடும். பாடத்திட்டத்தில் இந்த அறிவை மேலும் மேம்படுத்தி வழங்குவதில் கல்வித்துறை முனைப்பு காட்ட வேண்டும்.
தமிழகத்தில் இலக்கியம் எழுதுவோர், அறம் போதித்தலுக்கும், புனைவுகளுக்கும் மட்டுமே முன்னுரிமை தருகின்றனர். உணவு மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த தகவல்களைக் கொண்ட இலக்கியங்களின் வரத்து மிகவும் குறைவு.
நவீன இலக்கியத்தில், எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், நிவேதிதா லுாயிஸ் போன்ற சிலரே உணவு சார்ந்து எழுதியுள்ளனர். பத்திரிகையாளர் சமஸும் ஒரு நூல் எழுதியுள்ளார். இலங்கையில் மறைந்த எழுத்தாளர் கே.டானியல் உணவு சார்ந்து எழுதியிருந்தாலும், அதன் பரவலின்மையை அதிகம் வெளிப்படுத்தியுள்ளார். டாக்டர் சிவராமன் போன்ற மிகச் சிலரே ஊட்டச்சத்து சார்ந்த உணவுகள் பற்றிய புத்தகங்கள் எழுதியுள்ளனர்.
மரபைத் தமிழகம் கடைப்பிடித்த போதிலும், உணவில் உள்ள சத்துக்களை அறிந்துகொள்ளவோ, அது சார்ந்து உண்பதற்கோ ஏற்ற சூழல் உருவாக்கப்படவில்லை. உணவுப் பண்பாட்டில் அதற்கான இடம் இல்லை
தமிழில் புனைவுகள் எழுதுவோர் உணவில், சுவை மற்றும் பாரம்பரிய பெருமைகளையே முன்னிலைப்படுத்தி வருகின்றனர். உணவு விநியோகத்தில் தடைகள், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக் குறைபாடு போன்றவற்றில் கவனம் செலுத்தவில்லை. இதனால் தமிழில் ஊட்டச்சத்து பற்றிய அறிவு நூல்களே பெரும்பாலும் இல்லாத நிலையே நிலவுகிறது.
இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில், ‘இந்திய அடிப்படை மற்றும் மூல உணவுப்பொருட்களில் உள்ள சத்துக்கள்’என்ற தலைப்பில் மிகப் பெரிய தொகுப்பு நூல் தற்போது தமிழில் வெளிவந்துள்ளது. முழுமையாக உணவு மற்றும் ஊட்டச்சத்து சார்ந்து, நான்கு பெரும் தொகுதிகளாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுக்க, ஊர்கூடி தேர் இழுக்கும் முயற்சி!
தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள அடிப்படை நூல்களில் உள்ள தகவல்கள் பலவும், இதில் சேர்க்கப்பட்டுள்ளன. அவை தமிழிலும் மொழிபெயர்த்து வழங்கப்பட்டுள்ளன.
தனிமனிதருக்குத் தினசரி தேவையான நிர்ணயிக்கப்பட்ட ஊட்டச்சத்தின் புதிய அளவு முறைகளும் தரப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள, 528 மூல உணவுகளில் உள்ள சத்துக்கள் பகுத்து அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. அதிக பழக்கமற்ற உணவுப் பொருள்கள் பற்றிய தகவலும், அவற்றில் உள்ள அடிப்படைச் சத்துக்களும் விரிவாகத் தரப்பட்டுள்ளன.
நூல் ஆசிரியர் டாக்டர் சத்தியமூர்த்தி, மனைவி காஞ்சனாவுடன் இணைந்து, பல ஆண்டுகள் உழைத்து உருவாக்கியுள்ளார். புத்தகத்துக்கு, 30 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான்கு தொகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த பார்வை நூலாகப் பயன்படுத்த ஏற்றது.
தமிழில் சமீபத்தில் வெளிவந்த மிகப் பெரிய அறிவு நூலாக இதைக் கொள்ளலாம். தனி மனிதரின் அயராத உழைப்பு, அறிவுலகத்தைச் செழிக்க வைக்கும் என்பதற்கு இந்த நூல் தயாரிப்பையும் ஓர் உதாரணமாகக் கொள்ளலாம்.
உணவு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய அறிவுக்களஞ்சியமான இந்த நூல் தொகுதிகளைப் பெற, 94866 71819 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Read in : English