Read in : English
கல்விசார் மதிப்புகள் மைய வங்கி முறையை (அகாடெமிக் பாங்க் ஆஃப் கிரெடிட்ஸ் – ஏபிஸி) உருவாக்குவதை பல்கலைக் கழக மானியக்குழு வலியுறுத்தியுள்ளது. நாட்டில் உள்ள 46,887 கல்லூரிகளிலும், 1,143 பல்கலைக்கழகங்களிலும் மற்றும் பல்வேறு தனியார் கல்வி நிலையங்களிலும் பயிலும் சுமார் 3.9 கோடி மாணவர்களின் கல்விசார் மதிப்புகளைக் கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் அந்த மைய வங்கி செயல்படும்.
”பல்கலைக்கழக மானியக்குழு (உயர்கல்வியில் கல்விசார் மதிப்புகளின் வங்கியை நிறுவுதல் மற்றும் இயக்குதல் திட்டம்) விதிமுறைகள், 2021” என்ற தலைப்பிடப்பட்ட சட்டம் கடந்த ஆண்டு ஜுலையில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. முதலில் ‘ஏ’ தரவரிசை கல்வி நிலையங்களிலும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முதன்மைக் கல்வி நிலையங்களிலும் இந்த ‘ஏபிஸி’ திட்டத்தை நிறைவேற்ற தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அமைப்பு (நாக்) நினைத்தது. பின்னர் இதை விரிவுபடுத்தி அனைத்து உயர்கல்வி நிலையங்களிலும் இதை அமல்படுத்த முயற்சி செய்கிறது.
ஒரு கல்வி நிலையத்திலிருந்து மற்றொரு கல்வி நிலையத்திற்கு சென்று படிக்கும் போது ஏற்கெனவே படித்த கல்வி நிலையத்தில் மாணவர்கள் எடுத்துள்ள கிரெடிட்டுகளை மற்றொரு கல்வி நிலையத்துக்குச் சென்று படிக்கும்போது அதை மாற்றிக் கொள்ள முடியும்.
அதாவது, மாணவர்கள் உயர்கல்வி நிலையத்தில் படிக்கும் போது, படிக்கின்ற ஒவ்வொரு கோர்ஸுக்கும் எவ்வளவு கிரெடிட் (மதிப்பு) என்று நிர்ணயிக்கப்படும். மாணவர்கள் உயர்கல்வியில் எடுத்த எல்லா கல்விசார் மதிப்புகளையும் (அகாடெமிக் கிரெடிட்) கணக்கில் வைத்துக்கொள்ளப்படும். ஒரு கல்வி நிலையத்திலிருந்து மற்றொரு கல்வி நிலையத்திற்கு சென்று படிக்கும் போது ஏற்கெனவே படித்த கல்வி நிலையத்தில் மாணவர்கள் எடுத்துள்ள கிரெடிட்டுகளை மற்றொரு கல்வி நிலையத்துக்குச் சென்று படிக்கும்போது அதை மாற்றிக் கொள்ள முடியும். இதற்கான, நெகிழ்வுத்தன்மையையும் எளியவழியையும் கொடுக்க வேண்டும் என்ற கருத்தாக்கத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது இந்த அமைப்பு இந்த ஏபிஸி கல்வி முறை.
நெகிழ்வான, சரியாக பகிர்ந்தளிக்கப்பட்ட கற்பித்தல் மற்றும் கற்றல் முறையைச் சித்தாந்தமாகக் கொண்டிருப்பது மாணவர்கள் தங்கள் சௌகரியத்திற்கேற்ப கற்பதையும், இடையில் படிப்பை நிறுத்திவிட்டுப் பின்னர் அதைத் தங்கள் வசதிக்கேற்ப தொடர்வதையும் இந்த அமைப்பு அனுமதிக்கிறது. இதன்படி, கல்விசார் வங்கிக் கணக்கைத் தொடங்கலாம்; மூடலாம்; பின்பு அதற்கு உயிரூட்டலாம்; கோர்ஸில் எடுத்த மதிப்புகளைச் சரிபார்க்கலாம்; சேமித்து வைக்கலாம்; பின்னர் அவற்றை மீட்கலாம்; மாற்றல் செய்யலாம். இதுவெல்லாம் இதுவரை தனிப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பில்தான் இருந்தன.
ஏபிஸி அமைப்பு மாணவர்களின் விருப்பத்திற்கும் சௌகரியத்திற்கும் இடங்கொடுப்பது போல தெரிகிறது. பாடங்களின் எல்லைகளைத் தாண்டி, அதுவும் தங்களுக்கு விருப்பமான கல்வி நிலையங்களில் சேர்ந்து, மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கோர்ஸ்களை எடுத்துப் படிக்க முடியும்.
ஆனால், யதார்த்தத்தில் ஏபிஸி அமைப்பு, எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். ஏனென்றால் சட்டப்படி உருவான கல்வி நிலையங்களின் சட்டம் மற்றும் அறம் சார்ந்த தனியுரிமையில் அது அத்துமீறுகிறது. தாங்கள் படிக்கும் கல்வி நிலையம் தவிர, பிற உயர்கல்வி நிலையங்களிலும் 70 சதவீத கோர்ஸ்களை எடுத்துப் படிக்க மாணவர்களை இந்தப் புதிய விதிமுறை அனுமதிக்கிறது. இந்த அணுகுமுறை மாணவர்களை வழிகாட்டுவதற்கு அதிமுக்கியமான பல்கலைக்கழகப் பாடத்திட்ட ஒழுங்கமைப்பை சீரழித்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. பாடத்திட்ட ஒழுங்கமைப்பு என்பது பல்வேறு உட்காரணிகளின் கூட்டமைப்பு.
கல்விசார் தத்துவம், போதனா நெறிகள், கல்விசார் இலக்குகள், கற்றுக்கொள்ளும் பாடவிஷயங்கள், மற்றும் சமூக, கலாச்சார பிரச்சினைகள் ஆகியவைதான் அந்த உட்காரணிகள். இவைதான் கற்றலால் ஏற்படும் மொத்த விளைவுகளை அடைவதற்கு உதவுகின்றன.
சட்டப்படி உருவான கல்வி நிலையங்களின் சட்டம் மற்றும் அறம் சார்ந்த தனியுரிமையில் அது அத்துமீறுகிறது. இந்த அணுகுமுறை மாணவர்களை வழிகாட்டுவதற்கு அதிமுக்கியமான பல்கலைக்கழகப் பாடத்திட்ட ஒழுங்கமைப்பை சீரழித்துவிடும் என்பதில் சந்தேகமில்லை
ஏபிஸி போன்ற மையப்படுத்தப்பட்ட அமைப்புகள் பாடத்திட்டத்தை, அதன் கட்டமைப்பை, உத்தேசித்த இலக்குகளை அடையவிடாமல் தடுத்துவிடும். ஏபிஸி, கல்விசார் கட்டமைப்பைக் குலைத்துவிடும். பாடங்களைத் தேர்வு செய்வதில் அதிகாரிகளின், கல்வியாளர்களின் வழிகாட்டுதலும் ஒப்புதலும் இருக்குமென்றாலும், பாடத்தேர்வுகள் மாணவர்களின் சொந்த தனிப்பட்ட விஷயமாகவே இருக்கும்.
ஏபிஸி பல்வேறு பாடங்களில் அறிவுபெற வழிவகுக்கும். உண்மைதான். ஆனால் ஒட்டுமொத்தமான கற்றல், நடுநிலைத்தன்மை, கவனக்குவிப்பு, ஆழ்சிந்தனை ஆகியவற்றிற்கு அங்கே இடமில்லை. உயர்கல்வி என்பது வெறும் பாடங்கள் கற்றல், வேலைக்குத் தேவையான திறன்கள் பெறுதல் மட்டுமல்ல. அது போதனாமுறையில் அனுசரிக்கப்பட்ட கற்றல்முறை, சமூக உறவு, குடிமைப் பங்களிப்பு, அரசியல் பங்கெடுப்பு, ஆரோக்கியம், பிரக்ஞாபூர்வமாக உண்மையை அடைவதற்கான விடாப்பிடியான ஒரு தேடல்.
ஏபிஸி விதிமுறையில், வெவ்வேறான இலக்குகளைச் சாதிக்க வெவ்வேறு மூலங்களிலிருந்தும், இடங்களிலிருந்தும் கோர்ஸ்கள் எடுக்கப்படும். ஆனால் பல்வகையான தனிப்பட்ட கற்றல் என்பது எந்த வழியிலும் உதவாது. மையப்படுத்தப்பட்ட கல்விசார் மதிப்பு வங்கி விஷயத்தில் ஒன்றிய அரசு காட்டும் முனைப்பு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கல்வி வியாபாரத்தில் முற்போக்கான தாராளமயத்தை விரும்பும் உலக வணிக அமைப்பு (டபிள்யூடிஓ) மற்றும் சேவை வியாபாரத்தின் மீதான பொது உடன்பாட்டு அமைப்பு (ஜிஏடிஎஸ்) போன்ற உலக நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு இந்தியா பணிந்துவிட்டதோ என்ற சந்தேகம் வருகிறது.
இந்த டபிள்யூடிஓ, -ஜிஏடிஎஸ் அமைப்புகளின் நிர்பந்தத்தின்படி 2005-லிருந்து ஓர் உயர்கல்விமுறை இந்தியாவில் புழக்கத்திற்கு வந்தது. தொடர்ந்துவந்த அரசுகள் மேற்கொண்ட சீர்திருத்தங்களால் கல்வித்துறை பெரிய அளவில் தனியார்மயமானது. தனியார் கல்வி வியாபாரிகள் தாராளமாகவே கல்விக்கட்டணங்களை நிர்ணயித்தார்கள். உயர்கல்வி நிறுவனங்கள் சுயநிதி அமைப்புகளாகி நிறுவனமயமானது. பொதுக்கல்வியில் அரசு முதலீடுகள் கணிசமாக குறைந்துபோனது. ஆராய்ச்சிக்கான முதலீடுகளும் மானியங்களும் சொற்பமாயின. கல்விக்கொள்கை வடிவமைப்பில் தனியார் ஆதிக்கம் அதிகரித்தது.
கல்வியைத் தனியார்மயமாக்குதல், வணிகமயமாக்குதல் சம்பந்தமான உலக வணிக அமைப்பின் கட்டளைகளைத் தலைமேல் வைத்துக்கொண்டு அரசு எடுத்த முன்னெடுப்பில் மற்றுமொரு மைல்கல் இந்த ஏபிஸி. முன்பெல்லாம் மாணவர்கள் ஆண்டுதோறும் அல்லது ஆண்டுக்கு இருமுறை கல்விக்கட்டணம் செலுத்தினார்கள். இனிமேல் இந்த ஏபிஸி அமைப்பில் மற்ற கல்விநிலையங்களில் எடுத்த ஒவ்வொரு கோர்ஸ்க்கும் அவர்கள் கட்டணம் கட்டவேண்டிவரும். மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் இதுவரை தனியார் உயர்கல்வி நிலையங்களில் கல்விக்கட்டணத்தைக் கட்டுப்படுத்தாமல் ஒதுங்கியே நின்றன.
ஒவ்வோரு கோர்ஸ்க்கும் ஒவ்வொரு கட்டணம் என்ற இந்த அணுகுமுறையால் ஒட்டு மொத்தக் கல்விக்கட்டணமும் ஒரேயடியாக அதிகரித்துவிடும். இது தனியார் கல்வி வியாபாரிகளின் வளர்ச்சிக்கு அடிகோலும். இந்த புதிய அமைப்பில் இருக்கும் நெகிழ்வுத்தன்மையாலும், இயல்பான சந்தைப்பலத்தாலும், பொதுக்கல்வி நிறுவனங்களைவிட, தனியார் கல்வி வியாபாரிகளால் மிக நன்றாகவே மாணவர்களை சென்றடைந்து அவர்களிடம் கோர்ஸ்களை விற்பனை செய்யமுடியும்.
அதனால் பொதுநிறுவனங்களும்கூட ஒவ்வொரு கோர்ஸ்க்கும் ஒரு கட்டணத்தை வசூலிக்க ஆரம்பித்துவிடும். இறுதியில் அவையும் சுயநிதி அமைப்புகளாகிவிடும். காலப்போக்கில் தனியார் பயிற்சி நிலையங்களையும், சுயாதீன நிலையங்களையும் இந்த ஏபிஸி தனது கட்டமைப்பில் அனுமதித்துவிடும். முடிவில், இந்தியா கையெழுத்திட்ட ‘டபிள்யூடிஓ -காட்ஸ்’ ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட விதிகள்படி, கல்வி என்பது நிஜமாகவே முழுமையானதொரு வியாபாரமாகிவிடும்.
இந்தியாவில் கல்வி அமைப்புக்கான சந்தை ஏற்கனவே மையப்படுத்தப்பட்டதுதான். அதனால் வெளிநாட்டுக் கல்விவியாபாரிகளும் தங்களுக்கு இணக்கமான இந்த ஏபிஸி அமைப்போடு ஒத்துப்போய் விடுவார்கள். அதனால் அவர்களுக்குச் சாதகமான சூழலும் உருவாகிவிடும்.
ஒவ்வோரு கோர்ஸ்க்கும் ஒவ்வொரு கட்டணம் என்ற இந்த அணுகுமுறையால் ஒட்டு மொத்தக் கல்விக்கட்டணமும் ஒரேயடியாக அதிகரித்துவிடும். இது தனியார் கல்வி வியாபாரிகளின் வளர்ச்சிக்கு அடிகோலும்.
கல்வி என்பது சமூகரீதியாக, கல்விரீதியாக பலமாக இருப்பவர்களின் சொத்து என்பதை இந்த ஏபிஸி உறுதிப்படுத்திவிடும். தற்போது மக்கள் தொகையில் 47 சதவீதத்தினருக்கு இணையதொடர்பு வசதி இருக்கிறது. இந்த டிஜிட்டல் உலகத்தில் பலமானவர்களை ஏபிஸி மேலும் பலமானவர்களாய் மாற்றிவிடும். இணையவழிப் படிப்புகள் சமூகரீதியாக, கல்விரீதியாக சிறப்புரிமையோடு இருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதனால் கல்வி கற்றலில் இருக்கும் சமூக இடைவெளி மேலும் பலமாகிவிடும்.
பலதரப்பட்ட மாணவ சமூகம் என்பது அடிவாங்கும். கல்வியின் புதுமைக்கு பலதரப்பட்ட மாணவ சமூகத்தின் முக்கியத்துவத்தை, பங்களிப்பை விஞ்ஞானிகளும், சமூக விஞ்ஞானிகளும், பொருளாதார அறிஞர்களும் பெரிதும் மதிக்கிறார்கள். எல்லோருக்குமான கல்வி என்ற கருத்தியலை அழிக்க வந்துள்ள திட்டத்தின் ஒருபகுதிதான் இந்தக் கல்விசார் மதிப்புகளின் மையவங்கி என்றழைக்கப்படும் ஏபிஸி.
சமூகரீதியிலாக, கல்விரீதியாக பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கல்வி இடஒதுக்கீட்டு அமைப்பை ஏபிஸி ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும். கல்வி நிலையங்களில் கோர்ஸ் வாரியாக இடஒதுக்கீடு செய்வது சாத்தியம் ஆகுமா? சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்த ஒருமாணவர், இந்தப் புதிய திட்டத்தின்கீழ் தொழில்நுட்பக் கழகங்களில் ஒரு கோர்ஸில் தன்பெயரைப் பதிவு செய்துகொள்ள முடியுமா? எல்லாச் சமூகப்பிரிவு மாணவர்களுக்கும் எல்லா உயர்க்கல்வி நிலையங்களின் ஊடாகவும் நகர்ந்து செல்வதற்கு இந்த ஏபிஸி கொடுக்கும் உத்தரவாதம் என்ன?
ஒரு மாணவரின் கல்விநிறுவனத்திலும், மற்ற நிறுவனங்களிலும் அவர் கல்விகற்கும் வசதியை ஏற்படுத்தித்தரும் நெகிழ்வுத்தன்மை கொண்ட இதைப்போன்ற அமைப்புகள் முன்னேறிய நாடுகளில் இருக்கின்றன என்பது ஏபிஸி ஆதரவாளர்கள் முன்வைக்கும் வாதம். ஆனால் அந்த அமைப்புகள் ஒரு கோர்ஸில் எடுத்த மதிப்புகளை (கிரெடிட்) பகிர்ந்தளிப்பதற்கும், அங்கீகரிப்பதற்கும் வசதி ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றன. அவை முதிர்வான அமைப்புகள். அந்தமாதிரியான கல்விச் செயற்பாடுகளுக்கான பொறுப்பு சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிலே இருக்கிறது. ஆனால் ஏபிஸி என்பது மையப்படுத்தப்பட்ட ஒரு கட்டுப்பாட்டு அமைப்பு. பிராந்திய கல்விநிறுவனங்களின் ஆகச்சிறந்த நடைமுறைகளை அது புறந்தள்ளுகிறது.
எல்லா உயர்க்கல்வி நிலையங்களும் மாணவர்களும் கோர்ஸ் கிரெடிட்களை ஓர் ஒற்றைக் கட்டமைப்பில் வைத்துக்கொள்ள, எடுத்துக்கொள்ள வேண்டுமென்று விதிவகுத்த ஓர் மைய அதிகாரம்தான் கல்விசார் மதிப்புகளின் மைய வங்கி என்னும் இந்த ஏபிஸி அமைப்பு.
(கட்டுரையாளர், பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்)
Read in : English