Read in : English
பிளஸ் டூ படித்து விட்டு, மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் இளநிலைப் பட்டப் படிப்புகளிலோ அல்லது ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு படிப்புகளிலோ சேருவதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் ஆங்கிலம், இந்தி மொழிகளில் அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே கேள்வித்தாள்கள் வழங்கப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2019 20 ஆண்டு கணக்குப் படி 3.7 லட்சம் மாணவர்கள் பிளஸ் டூ படிக்கிறார்கள். அவர்களில் சுமார் 80 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் தமிழ் வழியில் படிப்பவர்கள். அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களும் மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதை உறுதி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கல்வியாளர்கள் கருத்து.
எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு கொண்டுவரப்பட்டபோது, ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே கேள்வித்தாள்கள் இருந்தன. நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்பட 13 மொழிகளிலும் கேள்வித்தாள்கள் வழங்கப்படுகின்றன.
2018ஆம் ஆண்டில் வினாத்தாளில் ஏற்பட்ட மொழிபெயர்ப்பு’ குளறுபடிகளால், தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஆனால், அந்தத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழில் கேள்வித்தாள் கொடுத்தபோதும், நீட் தேர்வு என்பது தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு சாதகமாக இருப்பதாகக் கூற முடியாது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிள் பெரும்பாலோர் சாமானியக் குடும்பங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். அவர்களால் பல ஆயிரம் பணம் செலவழித்து கோச்சிங் மையங்களுக்குச் சென்று பயிற்சி பெற முடியாது. மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
இந்த நிலையில், மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்’கீடு வழங்கப்பட்டது. அதனால் தற்போது அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவப் படிப்புகளில் சேரும் வாய்ப்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது. அத்துடன், படிப்புச் செலவையும் அரசே ஏற்றுக் கொள்வதால், மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்கும் ஏழை மாணவர்கள் படிப்புச் செலவைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
எனினும், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் தமிழக அரசு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றிய தீர்மானமும் ஆளுநரின் கையில் இருக்கிறது. இதற்கிடையே, மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக அகில இந்திய அளவில் நடத்தப்படும் மற்ற நுழைவுத் தேர்வுகள் பற்றியும் குறிப்பிட வேண்டியுள்ளது.
தமிழ் வழியில் படித்த ஒரு மாணவர், மெயின் தேர்வில் தகுதி பெற்றாலும், அட்வான்ஸ்ட் தேர்வை ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ எப்படி எழுத முடியும் என்பது தெரியவில்லை. மெயின் தேர்வில் 12 மொழிகளில் கேள்வித்தாள்களைத் தந்துவிட்டு, அட்வான்ஸ்ட் தேர்வில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் கேள்வித்தாள்களை ஏன் தரவில்லை என்று தெரியவில்லை.
ஐஐடிக்கள், என்ஐடிக்கள் உள்பட மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்பட 13 மொழிகளில் கேள்வித்தாள் வழங்கப்படுகிறது. இந்தத் தேர்வை நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி நடத்துகிறது. இந்த மெயின் தேர்வில் தகுதி பெறுகிறவர்கள்தான் ஐஐடிக்களில் சேருவதற்கான ஜேஇஇ அட்வானஸ்ட் தேர்வை எழுத முடியும்.
இந்தத் தேர்வை ஐஐடிக்களே நடத்துகின்றன. இத்தேர்வில் கேள்வித்தாள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே தரப்படுகின்றன. இந்த நிலையில், தமிழ் வழியில் படித்த ஒரு மாணவர், மெயின் தேர்வில் தகுதி பெற்றாலும், அட்வான்ஸ்ட் தேர்வை ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ எப்படி எழுத முடியும் என்பது தெரியவில்லை. மெயின் தேர்வில் 13 மொழிகளில் கேள்வித்தாள்களைத் தந்துவிட்டு, அட்வான்ஸ்ட் தேர்வில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் கேள்வித்தாள்களை ஏன் தரவில்லை என்று தெரியவில்லை.
பிளஸ் டூ படித்த மாணவர்கள் நேஷனல் டிபன்ஸ் அகாதெமி மற்றும் நேவல் அகாதெமியிலும் இலவசமாகப் படிக்க முடியும். ஆனால், இங்கு சேருவதற்காக நடத்தப்படும் நேஷனல் டிபனஸ் அகாதெமி அண்ட் நேவல் அகாதெமி தேர்வுக்கு ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே கேள்வித்தாள்கள் தரப்படுகின்றன.
மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட், கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு நியூட்ரிஷன் கல்வி நிலையம் சென்னை தரமணி உள்பட நாடு முழுவதும் 21 இடங்களில் செயல்படுகின்றன. இந்தக் கல்வி நிலையங்களில் பிஎஸ்சி அண்ட் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பைப் படிக்கலாம். இந்தப் படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே தரப்படுகின்றன.
இதேபோல வேளாண் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்விலும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே நுழைவுத் தேர்வு கேள்வித்தாள்கள் தரப்படுகின்றன.
தமிழ்நாட்டில் திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழகம் இரு’கிறது. இந்த மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டுப் படிப்புகள் உள்ளன. இந்த மத்தியப் பல்கலைக்கழகம் உள்பட 12 மத்திய பல்கலைக்கழகங்களு’கு பொதுவான நுழைவுத் தேர்வு (கியூசெட்) நடத்தப்படுகிறது. இத்தேர்வு ஆங்கில வழியில் நடத்தப்படுகிறது.
திருச்சியில் நேஷனல் லா ஸ்கூல் உள்ளது. இந்த உயர்கல்வி நிறுவனத்தில் இளநிலை சட்டப் படிப்புகளில் சேருவதற்கு கிளாட் என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கான கேள்வித்தாளும் ஆங்கில வழியில்தான் தரப்படுகிறது. இந்தக் கல்வி நிறுவனத்தில் 50 சதவீத இடங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் வழியில் படித்த மாணவர்கள் எப்படி இந்த நுழைவுத் தேர்வை எழுதுவார்கள்?
மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. எனினும், இந்த நுழைவுத் தேர்வை தமிழ் வழியில் பிளஸ் டூ படித்த மாணவரால் எழுத முடியாது.
இந்திய கடல் சார் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு, இந்தியன் இன்ஸடிட்யூட்ஸ் ஆஃப் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச் கல்வி நிலையங்களில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த அறிவியல் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு, அணுசக்தித் துறையின் கீழ் செயல்படும் நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்டர் பார் எக்ஸலன்ஸ் இன் பேசிக் மெடிசின்ஸ் ஆகிய கல்வி நிறுவனங்களில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த அறிவியல் படிப்புகள், சென்னை ஐஐடியில் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ், இங்கிலீஸ் ஸ்ட்டீஸ் ஆகிய படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வு போன்றவற்றில் ஆங்கிலத்தில் மட்டுமே கேள்வித்தாள்கள் கேட்கப்படுகின்றன.
இதுபோன்ற மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. எனினும், ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ இந்த நுழைவுத் தேர்வை தமிழ் வழியில் பிளஸ் டூ படித்த மாணவரால் எழுத முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதுபோல, மத்திய அரசுக் கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகள் குறித்து பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள், கல்லூரிகளில் சேர்ந்த பிறகு, ஆங்கில வழியில் பாடங்களைக் கற்றுக் கொண்டு சிறப்பாகக் கற்றுத் தேர்கிறார்கள். அவர்களுக்கு முதுநிலை படிப்புக்காக நுழைவுத் தேர்வு எழுதுவதில் அவ்வளவாகச் சிரமம் இருப்பதில்லை.
பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவது என்பது மாநில அளவில் சரியாக இருக்கலாம். ஆனால், அகில இந்திய அளவில் உள்ள இடங்களுக்கு என்பதால் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டியது இருக்கிறது என்ற வாதம் சரியானதுபோல தோன்றினாலும்கூட, பள்ளிகளில் மாணவர்கள் படித்த தாய்மொழியியிலேயே நுழைவுத் தேர்வை நடத்துவதற்கு என்ன தடை என்பதுதான் பல பெற்றோர்களின் கேள்வி.
மருத்துவப் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதை தமிழக மக்கள் வலியுறுத்தி வரும் இந்த நேரத்தில் மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு பிளஸ் டூ மதிப்பெண்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் அல்லது அந்த நுழைவுத் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் நடத்த வேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில், தமிழ் வழியில் படிக்கின்ற மாணவர்களும் மத்தியக் கல்வி நிறுவனங்களில் எளிதாகச் சேருவது எப்போது சாத்தியமாகும் என்பது தெரியவில்லை.
Read in : English