Read in : English
பரம்பரையாக இருந்து வந்த வைத்திய முறைகள் பழக்கத்தில் இருந்த காலத்தில் பிரிட்டீஷ் வருகைப்பிறகு அலோபதி மருத்துவம் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில் அலோபதி மருத்துவத்தை தமிழர்களுக்கு ஆங்கில வழியில் கற்றுத்தருவதற்கான முயற்சிகள் தொடங்கின. இந்த நிலையில், தமிழ் மொழியில் மருத்துவப் படிப்பைக் கற்றுத் தர முடியும் என்று 21ஆம் நூற்றாண்டில் சொன்னால்கூட யாரும் நம்புவார்களா என்பது தெரியாது. ஆனால், 19ஆம் ஆண்டிலேயே இதனைச் சாதித்துக் காட்டியவர் டாக்டர் சாமுவேல் ஃபிஷ் கிறீன் (1822-1884). இது நடந்தது தமிழகத்தில் அல்ல. யாழ்ப்பாணத்தில். மருத்துவப் படிப்பை முதன் முதலில் தமிழில் கற்றுக் கொடுத்தவர் தமிழர் அல்லர். அமெரிக்கர்.
அமெரிக்க மிஷனரியைச் சேர்ந்த மருத்துவரான ஃபிஷ் கிறீன், யாழ்ப்பாணம் மானிப்பாயில் தமிழ் மாணவர்களுக்கு அலோபதி மருத்துவப் படிப்பை 1864ஆம் ஆண்டிலேயே தமிழில் சொல்லித் தந்தார். ஆங்கிலத்தில் மருத்துவம் படித்து அரசு சேவைக்குப் போவதைவிட, தமிழில் மருத்துவம் படித்து, அந்தந்த ஊர்களில் பணி செய்வதன் முலம் அங்கு உள்ள ஏழை மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியில் இறங்கியவர் ஃபிஷ் கிறீன்.
சாமுவேல் ஃபிஷ் கிரீன், அமெரிக்காவில் மாசாசூசெட்ஸ் மாநிலத்தில் கிரீன் ஹில் என்ற இடத்தில் 1822ஆம் ஆண்டு அக்டோபரில் பிறந்த பிஷ் கிரீன், டாக்டருக்குப் படித்த பிறகு, அமெரிக்க மிஷனரிகளால் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். முதலில் வட்டுக்கோட்டையில் இருந்த அவர், பின்னர் மானிப்பாய்க்கு வந்தார். அங்கு மருத்துவமனையைத் தொடங்கினார். அது தற்போது கிறீன் மெமோரியல் மருத்துவமனை என்று அழைக்கப்படுகிறது.
மருத்துவப் படிப்பை தமிழில் சொல்லித்தர முயன்றபோது, அரசு சேவையில் பணி கிடைத்து சம்பளம் பெறும் வாய்ப்பு குறையும் என்று மாணவர்கள் எண்ணினார்கள். ஆனால் வைத்தியர்களை அவரவர் கிராமத்தில் நிலை பெறச் செய்வதே எனது நோக்கம் என்று தனது குறிப்பில் பிஷ் கிறீன் எழுதியுள்ளார்.
அங்குள்ளவர்களுக்கு முதலில் ஆங்கிலத்தில் மருத்துவப் படிபபைச் சொல்லித் தந்தார். பின்னர், தமிழ் வழியில் மருத்துவப் படிப்பைச் சொல்லித் தருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டார். தமிழில் முதன் முதலில் மருத்துவப் படிப்பு தொடங்கப்படுவது குறித்த விளம்பரம் அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘மார்னிங் ஸ்டார்’ செய்தித்தாளில் வெளியிடப்பட்டது. தமிழ் வழி மருத்துவப் படிப்பில் சேருவதற்காக, அப்போது 30 தமிழ் மாணவர்கள் விண்ணப்பத்தனர். அவர்களில் 11 மாணவர்கள் மருத்துவப் படிப்புக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
“மருத்துவப் படிப்பை தமிழில் சொல்லித்தர முயன்றபோது, அரசு சேவையில் பணி கிடைத்து சம்பளம் பெறும் வாய்ப்பு குறையும் என்று மாணவர்கள் எண்ணினார்கள். ஆனால் வைத்தியர்களை அவரவர் கிராமத்தில் நிலை பெறச் செய்வதே எனது நோக்கம். எனவே, அவர்கள் தீர்மானிக்க அவர்களுக்கு அவகாசம் கொடுத்துள்ளேன்” என்று தனது குறிப்பில் பிஷ் கிறீன் எழுதியுள்ளார்.
ஆரம்ப காலத்தில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழில் புத்தகங்கள் இல்லை. ஆங்கிலப் புத்தகங்கள்தான் இருந்தன. தமிழில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில புத்தகங்களை வைத்துக் கொண்டு, மாணவர்களுக்கு விரிவுரை நிகழ்த்தப்படும். மாணவர்கள் தமிழில் நோட்ஸ் எடுத்துக் கொள்வார்கள். இப்படித்தான் ஃபிஷ் கிறீன் தமிழ் வழியில் மருத்துவப் படிப்பை மாணவர்களுக்குக் கற்றுத்தரத் தொடங்கினார்.
ஏழை மக்களுக்காக மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதற்காகவே தமிழில் மருத்துவர்களை உருவாக்க விரும்பினார். அதற்காக, வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள், அவர்களது தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி அணியும் ஆடையுடனேயே வகுப்பில் கலந்து கொள்ள அனுமதித்தார். அதனால், அவரது மாணவர்கள், பாரம்பரிய உடைகளான வேட்டி, சால்வை, தலைப்பாகை ஆகியவற்றுடன் வகுப்புகளுக்கு வந்து படித்தனர். அவரது காலத்தில் 33 மாணவர்களுக்கு தமிழ் வழியில் மருத்துவம் கற்பித்து அவர்களை டாக்டர்களாக்கினார்.
இதற்கிடையே, அவர் நியூயார்க் சென்றபோது, மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆங்கிலத்தில் வந்துள்ள மருத்துவ நூல்களைத் தேர்வு செய்து, அதனை மொழிபெயர்த்து வெளியிடுவதற்கான உரிமையையும் பெற்றார். இந்தப் புத்தகங்களை வெளியிடுவதற்கு அப்போதைய இலங்கை தேசாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினார். “அமெரிக்க மிஷன் நடைமுறையில் மேற்கொண்டிருக்கும் ஆங்கிலம் தவிர்க்கும் கொள்கை பேராபத்தானதும் தற்கொலைக்கு ஒப்பானதுமாகும்” என்று கூறி தமிழில் மருத்துவப் புத்தகங்களை வெளியிடுவதற்கு இலங்கை தேசாதிபதி அனுமதி மறுத்துவிட்டார். ஆனாலும், ஃபிஷ் கிறீன், அந்த நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துப் புத்தகங்களாக வெளியிட்டார்.
கிறீன் வைத்தியர் என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொள்ளும் ஃபிஷ் கிறீன், தான் இறந்த பிறகு, தனது கல்லறையில் தமிழருக்கான மருத்துவ ஊழியர் (Medical Evangelist to Tamils) என்று எழுத வேண்டும் என்று விரும்பினார்
மனுஷவங்காதிபாதம் (Human Anatomy), கெமிஸ்தம் (Chemistry), மனுஷ சுகரணம் (Human Physiology), இரண வைத்தியம்(The science and Art of surgery), இந்துப் பதார்த்தசாரம் (Pharmacopceia of India) போன்ற பல்வேறு தலைப்புகளில் மருத்துவப் புத்தகங்களை வெளியிட்டார். அவர் மொழிபெயர்த்தது சில நூல்கள்தான். மொழிபெயர்ப்புக்கு மாணவர்கள் உதவியதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். மற்ற அனைத்து நூல்களும் பிஷ் கிறீனால் பார்வையிடப்பட்டு திருத்தப்பட்டதாக நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் அவரது தமிழ் அவரது தமிழ் மொழிபெயர்ப்புகள் 4650 பக்கங்கள் இருக்கும். இன்றைக்குப் பார்த்தால்கூட, இத்தனை புத்தகங்களை, அதுவும் மருத்துவ அறிவியல் புத்தகங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் எப்படி மொழிபெயர்த்து, பிறகு அச்சிட்டு வெளியிட்டார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அந்தப் புத்தகங்களின் ஒரு பிரதி முன்பு சென்னை மறைமலையடிகள் நூலகத்தில் இருந்தது, தற்போது கன்னிமாரா நூலகத்தில் உள்ளது.
பிஷ் கிறீனின் தமிழ்ப் பணிகள் குறித்து கிறீன் அடிச்சுவடு என்ற புத்தகத்தை ஈழத் தமிழரான அம்பி (ஆர். அம்பிகைபாகன்) எழுதியது, 1967இல் யாழ் இலக்கிய வட்ட வெளியீடாக வெளிவந்துள்ளது. வெளியிட்டுள்ளார். அதன் பிறகு, ஆஸ்திரேலியாவில் உள்ள திரு ஆறுமுகம், 19ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மிஷனரிகளின் பணி குறித்து ஆங்கிலத்தில் Nineteenth Centuray American medical missionaries in Jaffna, Ceylon with special reference to Samuel Fisk Green என்ற புத்தகத்தை 2009இல் எழுதியுள்ளார்.
கிறீன் வைத்தியர் என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொள்ளும் ஃபிஷ் கிறீன், தான் இறந்த பிறகு, தனது கல்லறையில் தமிழருக்கான மருத்துவ ஊழியர் (Medical Evangelist to Tamils) என்று எழுத வேண்டும் என்று விரும்பினார். அதன்படியே, அவரது மறைவுக்குப் பிறகு அமெரிக்காவில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் அவ்வாறே எழுதப்பட்டது.
ஆங்கிலத்தில் மருத்துவம் படிப்பதற்கே நீட் நுழைவுத் தேர்வு போன்ற பல படிகளைத் தாண்டி வந்தே படிக்க முடியும் என்ற சூழ்நிலை உள்ள இந்தக் காலத்தில், சாமானிய மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக 19ஆம் நூற்றாண்டிலேயே தமிழில் மருத்துவம் சொல்லிக் கொடுத்த ஃபிஷ் கிறீன் பணிகள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது தெரியும்.
Read in : English