Read in : English
பண்டைய தமிழ் வரலாற்றைப் போற்றக்கூடிய இயக்கமாக இருந்தாலும் திராவிட இயக்கம் பெரும்பாலும் நவீனமயமாக்கலை உயர்த்திப் பிடித்தே வருகிறது. அதன் தொடக்கப் புள்ளியான பெரியார், புனிதங்களை உடைப்பவராக இருந்தார். அவர் தமிழ் தேசியவாதிகளுடன் கூட்டணி வைத்து இந்தித் திணிப்பு மற்றும் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்தார். ஆனால் அவர் மரபார்ந்த பாரம்பரியத்தை மதிக்கவில்லை. நவீன கலாச்சாரம், பகுத்தறிவுவாதம் மற்றும் முன்னேற்றத்தை அரவணைத்த பெரியாரின் பாங்கு, அவரது அரசியல் வாரிசுகளிடமும் ஒட்டிக்கொண்டது.
திமுக, அரசியல் நோக்கங்களுக்காகவே, தமிழ் மொழியையும், பண்பாட்டையும் மேற்கோள் காட்டினாலும், அதன் ஆட்சி நடைமுறையில் இயல்பானதாகவே இருந்தது. கலாச்சாரத்தில் அதன் தலையீடு மிகக் குறைவு. கருணாநிதி, பாரம்பரியக் கலைகளை அடிப்படையாகக் கொண்ட சாதியைச் சேர்ந்தவர் என்றாலும், முற்போக்கான தலைவராக இருந்தார். புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தகவல்தொடர்பு ஊடகங்களை ஏற்றுக்கொள்வதில் அவர் முன்னோடியாக இருந்தார். உலகமயமாக்கலை திராவிடக்கட்சியினர் மனமுவந்து வரவேற்று, மத்திய அரசுகளில் பங்கேற்றதன் மூலம் இந்தியா முழுவதும் அதைத் தொடங்குவதற்கு உதவியபோதும், தமிழகத்தில் உலகமயமாக்கல் மீதான அதிருப்தி நிலவியது.
தமிழர்களின் நாகரிகம் மிகவும் வேரூன்றிய, தொடர்ச்சியாக இருக்கும் நாகரிகம். தங்களின் அடித்தளத்தைப் பற்றி பெருமை பேசும் ஒரு சமூகமான தமிழர்களிடையே, நவீனமயமாக்கல் ஒரு பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியது இயற்கையானதே. இருபதாம் நூற்றாண்டில் சமஸ்கிருதமயமாக்கல், கலாச்சாரம் மற்றும் பிராமணியம் ஓரளவிற்குப் பின்னடைவைச் சந்தித்தது. ஆனால், உலமயமாக்கல் காரணமாக தமிழர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
கிராமப்புறங்களுக்கும், நகர்ப்புறங்களுக்கும் இடையிலான வேறுபாடு மெல்ல மாறி, இரண்டிற்கும் இடையிலான எல்லைகளே தெரியாமல் போகத் தொடங்கியது.
திடீரென்று செல்ஃபோன்கள் எங்கும் பரவின. வெளி நாடுகளில் இருந்து வாழைப்பழம், பருப்பு வகைகள் வந்தன. பெரும்பாலான மக்கள் தங்களை விவசாயப் பின்னணி கொண்டவர்கள் என்று நினைத்தாலும், விவசாயம் முக்கியமற்றதாகிவிட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் கிராமங்கள் நகரங்களாக மாறின. கிராமப்புறங்களுக்கும், நகர்ப்புறங்களுக்கும் இடையிலான வேறுபாடு மெல்ல மாறி, இரண்டிற்கும் இடையிலான எல்லைகளே தெரியாமல் போகத் தொடங்கியது.
பல்லாயிரம் ஆண்டுகளாக, தமிழர்கள் எல்லா மாற்றங்களையும் மீறி வாழ்ந்து வளர்ந்து வந்தனர். அவர்களின் கடந்த காலம் அவர்களிடையே எப்போதும் இருந்தது. ஆயிரம் ஆண்டுகால பழமையான, பிரமாண்டமான ஆகமக் கோயில்கள் இருந்தாலும், அதன் அருகிலேயே மண் குதிரைகளும், அய்யனார்களும் இருந்தன. ஆனால், இப்போது ஒட்டுமொத்த மக்களும் காணாமல் போய்விடுவார்கள் என்று தோன்றுகிறது. வேரில்லாத நகர வாழ்க்கையில் தத்தளிப்போமோ என்று அனைவரும் அஞ்சுகிறார்கள்.
தூத்துக்குடியில் உள்ள ஒரு திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண் தன் தாயிடம் கேட்டாள்: “உண்மையில் இதுபோன்ற நாகரிகம் தீண்டாத கிராமம் இருக்கிறதா?” அது இடைவேளை நேரம்; படத்தைப் பற்றிப் பேசுவதற்கான நேரம்.
கடைசி விவசாயி உண்மையில் ஒரு கற்பனையான படம். உதாரணமாக, தேனி மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் இருந்து, சென்னையின் ஐ.டி> காரிடாருக்கு பணிபுரிய வந்த முதல் தலைமுறை ஐ.டி> ஊழியரின் அபிலாஷையின் வடிவம் போன்று இந்தப்படம் உள்ளது.
ஒரு வயதான மனிதர் மின்சாரம் இல்லாத ஒரு மண்குடிசையில் வசிக்கிறார். தனது மாடுகளையும், கோழிகளையும் பராமரித்து வரும் அவர்தான், கடந்த காலத்துடனான ஒரே இணைப்பு. பாரம்பரிய அறிவு கொண்ட அவருக்கு விவசாயம் தெரியும்.
ஒரு பெரிய விவசாயி யானை வாங்குவதற்காக தனது நிலத்தையெல்லாம் விற்றுவிட்ட கிராமத்தில், முதியவர் தன்னுடைய கொஞ்ச நிலத்தில் நெல் பயிரிட ஒப்புக்கொள்கிறார். கிராமத்தின் குல தெய்வத்தை, நீண்ட காலமாக வழிபடாமல் இருந்ததால், மழை பெய்யாமல் கிராமத்திற்கு துரதிர்ஷ்டம் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. முதியவருக்கு ஓரளவு நிலத்தடி நீர் கிடைக்கிறது. அவருடைய நிலத்தில் விளைந்த முதல் நெல் தெய்வத்திற்குப் படைக்கப்பட வேண்டும்.
ஆனால், முதியவர் மயில்களைக் கொன்றதற்காக காவல்துறையால் கைது செய்யப்படுகிறார். நிலத்தை விற்க மறுத்ததற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளது மறைமுகமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இருப்பினும், ஜெய் பீம் படத்தில் வருவது போன்று ஏதும் இல்லை.
அந்த ஏழை விவசாயிக்கு உதவ முயற்சிக்கும் நல்லவர்கள் இருக்கிறார்கள். போலீஸ்காரர் விவசாயத்தைக் கற்றுக்கொள்கிறார், நீதிபதி உரிய இடத்தில் அவரது வக்கீலாக மாறுகிறார். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொள்கிறார்கள். விவசாயம் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது.
படம் தமிழர்களின் ஆன்மிகத்தை அரவணைப்பதுடன் மட்டுமல்லாமல், கொண்டாடுகிறது. கடைசி விவசாயியில், தமிழன் அருங்காட்சியகத்தில் இருக்க வேண்டியவனாக கற்பனை செய்யப்படுகிறான். தமிழர்களின் உள்ளூர் புராணங்களும் நம்பிக்கைகளும் உண்மையானவை மற்றும் சக்திவாய்ந்தவை. அவை மேஜிக்காக இல்லாமல், நடைமுறையில் உள்ளதாக இருக்கின்றன. அவர்களின் கடவுள்கள் காலத்தைக் கடந்த முன்னோர்கள். இவர்களின் முன்னோடி முருகன்.
கடைசி விவசாயியில், ஒரு சில தொழில்முறை நடிகர்கள் மட்டுமே நடித்துள்ளனர். மீதமுள்ளவர்கள் அனைவரும் தொழில்முறை நடிகர்கள் அல்லர். உங்கள் அண்டை, அயலில் உள்ளவர்கள். இது பனை வெல்லம் போன்று படத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.
கடைசி விவசாயி, தமிழ்க் கடவுளான முருகனைப் போற்றுகிறது. விஜய் சேதுபதி விசித்திரமான முருக பக்தராக நடித்துள்ளார். எல்லாம் நன்றாகும் என்று அவர் ஆசீர்வதிக்கிறார்
கடைசி விவசாயி, தமிழ்க் கடவுளான முருகனைப் போற்றுகிறது. விஜய் சேதுபதி விசித்திரமான முருக பக்தராக நடித்துள்ளார். எல்லாம் நன்றாகும் என்று அவர் ஆசீர்வதிக்கிறார். அவர் காணாமல்போய் தனது காதலியுடன் மீண்டும் இணைகிறார்.
ஏறக்குறைய, இந்தப்படம் தமிழ் தேசியவாதியான சீமான் பேசிய அனைத்து விஷயங்களையும் எதிரொலிப்பது போல் தெரிகிறது. அவரது கருத்துகளை திரையில் உயிர்ப்பிக்க வைக்கிறது. அவை வேறு எங்கு உயிரோடு வர முடியும்?
Read in : English