Read in : English
மூன்று நாகசுவரக் கலைஞர்கள் மேடையில் என்பதே நமக்கு சற்று மலைப்பாகத்தான் இருந்தது. ஆனால் அவர்களுக்கு அவ்வாறு இல்லை போலும். கச்சேரி முழுவதிலுமே ஒரு இயல்புத் தன்மையைத் தான் கண்டோம், கேட்டோம். இன்னொன்று, வாசித்த ஒரு ஐந்தே நிமிடத்தில் இவர்கள் தேர்ந்த கலைஞர்கள் என்பதை எளிதில் இனம் கண்டு கொள்ள நேர்ந்தது. இந்த மூவர், திரு டி சி கருணாநிதி, திருமதி டி கே மஹேஸ்வரி மற்றும் அவர்களது மகனான திரு கார்த்திகேயன்.
களை கட்டும் ஹம்ஸத்வனி ராகத்தில் அபிஷ்டவரதா என்பதில் ஆரம்பித்து முதல் பாட்டிற்கே ஒரு நீண்ட ஸ்வரக் கோர்வையை அளித்தனர். சரவணபவா சமயமிதிரா என்ற பசுபதிப்ரியா ராகத்தில் உள்ள ஹரிகேசநல்லூரின் பாடலை ஒரு ஃபில்லர் (filler) போன்று அதிகம் விவரிக்காமல் வாசித்தனர். இப்படி விதம் விதமான குறுகியதும், நீண்டதும், நடுத்தர ரூபமும் உள்ள க்ருதிகள் பலவற்றைக் கொண்டதுதான் நமது சங்கீதம். அடுத்து மத்யமவராளி எனும் ராகத்திற்கான ஆலாபனை. வழக்கமாக சுபபந்துவராளியைத் தான் உருகாதாரையும் உருகவைக்கும் ராகம் என்று அதிகமாக கர்நாடக இசை தெரியாதவர்கள் கூட உதாரணமாகச் சொல்வார்கள். அதே போலத்தான் அமைகிறது இதுவும். நின்று, நிதானித்து, அனுபவித்து வாசித்தார் கருணாநிதி. கடைசியில் குறிப்பிட்டதைதான் ஸ்வானுபம் என்பார்கள். பாடல் நாராயண நமோ என்ற நாராயண தீர்த்தரின் சாஹித்யம். இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும்! ஒவ்வொரு ராகத்தையும் வெறும் ஆரோகணக் க்ரமம், அவரோகணக் க்ரமம் என்ற ஸ்கேல் (scale) முறையைக் கடைபிடிக்காமல், அதன் ஸ்வரூபத்தை உள்வாங்கி, அதுவும் பிரத்யேகமாக நாகசுவரத்தில் , வாசித்தால் எந்த ராகமும் நெஞ்சைத் தொடவல்லதே!
அதிருக்கட்டும், அது என்ன! அந்த தியாகராஜரின் சீதம்ம மாயம்ம (வசந்தா) அபரிமித துரிதத்தில், குறுகிய ரூபக தாளத்தில்! ஏதோ ப்ரேக்-நெக் (break-neck) ஸ்பீட் என்பார்களே! வாத்தியக்காரர்களுக்கும் வாய்ப்பாட்டுக்காரர்களுக்கும் இதெல்லாம் ஒரு சவால் போல! (திரு டி எம் க்ருஷ்ணா தனது புத்தகத்தில் (A Southern Music – The Karnatik Story) இம்மாதிரி திடீரென்று அதிதுரிதம் அதையடுத்து அதிவிளம்பம் என்றெல்லாம் ஒரேயடியாகப் பாகுபாடு செய்து, வித்தியாசப்படுத்திப் பாடுவதில் தனக்குப் பிடித்தம் இல்லை என்ற கருத்தை விவரித்திருப்பார்). நிறைவில் முத்தாய்ப்பாக தனஸ்ரீ ராக தில்லானா (சுவாதித் திருநாள்)
தவில் வித்வான்கள் மணிகண்டனும் வெங்கடேஷும் கீர்த்தனைகளின் அவசியத்திற்கேற்ப வாசிப்பதில் வல்லமை பெற்றிருந்தனர். முக்கியமாக சீதம்மா மாயம்மா க்ருதிக்கான தாள நிர்ணயத்தை இம்மி பிசகாமல் கட்டுப்படுத்திக் கொண்டு செல்லும் ஆற்றல் முழுமையாக இவர்கள் கையில்! மற்றபடி தனியாவர்தனத்தின் போது தவிலுக்குரிய லய வேலைப்பாடுகளை குறைவில்லாமல் கையாண்டனர்.
தெரிந்தோ தெரியாமலோ கல்யாண விழாக்கோலத்தை பின்னணியில் உள்ள ஓவியத்திரையாக அமைத்தது, எப்படி படிப்படியாக நாகஸ்வரம் திருமணம் போன்ற உன்னதமான நிகழ்ச்சிகளிலும் வழக்கொழிந்து கொண்டு வருகிறது, அல்லது பேருக்குச் சேர்க்கப்படுகிறது என்பதைச் சொல்லாமல் சொன்னது. நிலைமை இவ்வாறிருக்க “பரிவாதிநி” பெரும் முயற்சி எடுத்து நாகஸ்வரக் கலையை மீட்டுயிர்ப் பெறச் செய்து கொண்டு வந்திருப்பது ஓரு மெச்சத்தக்க செயலாகும்.
தொடர்ந்து ஒன்பது “ஜோடிக் கச்சேரிகள்” எனும் வகையாக, பரிவாதிநி ஒருங்கிணைத்து நடத்தி வரும் “நவராத்ரி நவசக்தி கச்சேரிகள் – 2021ல்”, இது ஒரு நாளின் நிகழ்வு!
Read in : English