Read in : English
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பழமையானது. பல்லவ மன்னர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. திருஞான சம்பந்தரால் தேவார பதிகம் பாடப்பட்ட தலம். முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கியங்கள் உள்ளன. தாண்டவ கவிராயர் இக்கோயில் குறித்து ‘திருமயிலை யமக அந்தாதி’ நூலை உ.வே.சா 1936 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார்.
புழ்பெற்ற இந்தக் கோயிலின் பணிகள் தடையின்றி நடப்பதற்காக பல்வேறு மன்னர்களும் வருவாய் தரக்கூடிய விளைநிலங்களை எழுதி வைத்துள்ளனர். ஆபரணங்களை பூட்டி அழகு பார்த்துள்ளனர். செல்வமும் செல்வாக்கும் மிக்க கோயில்களில் கபாலீஸ்வரர் கோயிலும் ஒன்று. இந்தக் கோயிலுக்கு வருவாய் கிடைப்பதற்காக, அதன் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டன. இப்படி குத்தகைக்குப் பெற்று கடைகள், வணிக வளாகங்கள், பள்ளிகள், கிளப்புகள் என பல தொடங்கப்பட்டன.
தற்போது, கோயில் நிலங்களை ‘சர்வே’ செய்து பட்டா எண்ணுடன் அறநிலையத்துறை இணைய தளத்தில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக பதிவேற்றம் செய்யப்பட்ட கோயில்களில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலும் உள்ளது.
இதுகுறித்துப் பேசிய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கோயிலுக்கு சொந்தமாக 500 சொத்துகள் இருப்பதாக தெரிவித்தார். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.8 கோடி வருமானம் வர வேண்டும் என்றும் ஆனால் தற்போது இதில் 60 சதவீதமே வசூலாகிறது என்றும் கூறினார். வாடகையும் சொத்து மதிப்பும் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் பலரும் பழைய வாடகையை மட்டுமே தருகின்றனர் என்றார் அவர்.
இந்த நேரத்தில்தான், கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ஆயிரம் கோடிக்கும் மேல் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ, குத்தகையோ கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருப்போர் பட்டியலை நிர்வாக அதிகாரி பரஞ்சோதி வெளியிட்டார். தமிழ்நாடு முழுவதும் கோயில் சொத்துகளைக் கண்டறிந்து அவற்றை பட்டியலிடும் முயற்சியைத் தொடங்கியிருப்பதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்தப் பட்டியல் வெளிவரும்போது கபாலீஸ்வரர் கோயிலின் மொத்த சொத்து மதிப்பு தெரியவரும்.
அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கோயிலுக்கு சொந்தமாக 500 சொத்துகள் இருப்பதாக தெரிவித்தார். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.8 கோடி வருமானம் வர வேண்டும் என்றும் ஆனால் தற்போது இதில் 60 சதவீதமே வசூலாகிறது என்றும் கூறினார். வாடகையும் சொத்து மதிப்பும் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் பலரும் பழைய வாடகையை மட்டுமே தருகின்றனர் என்றார் அவர்.
முதல்கட்டமாக தற்போது கோயிலைச் சுற்றியுள்ள சொத்துகளை குத்தகை மற்றும் வாடகை செலுத்தாமல் அனுபவித்து வருபவர்கள் பட்டியலில் இருக்கும் 473 பேர் கண்டறியப்பட்டனர். விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற கே.எம். முன்ஷி மகாத்மா காந்தி ஆதரவுடன் உருவாக்கிய பாரதீய வித்யா பவன் 32 லட்சம் ரூபாய் வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருக்கிறது.
புகழ்பெற்ற பி.எஸ்.ஹைஸ்கூல் 1928 ஆம் ஆண்டில் 82 கிரவுண்ட் நிலத்தை குத்தைக்கு பெற்றுள்ளது. 1979 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட குத்தகை ஒப்பந்தப்படி மாதத்துக்கு ரூ.1250 குத்தகை தொகை செலுத்தப்படவில்லை. மொத்தமிருந்த 82 கிரவுண்ட் நிலத்தில் 5 கிரவுண்ட் நிலத்தை திருப்பிக்கொடுத்துவிட்டதால், எஞ்சிய 76 கிரவுண்ட் பி.ஸ்.பள்ளி கட்டுப்பாட்டில் உள்ளது. உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இதுதொடர்பான வழக்கு அண்மையில் முடிவுக்கு வந்துள்ளது. இதில், 46 கிரவுண்ட் நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும். நியாயமான வாடகை நிர்ணயிக்க வேண்டும், நிலுவைத் தொகையை பகுதி பகுதியாக செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து 46 கிரவுண்ட் நிலத்தை அறநிலையத்துறை மீட்டுள்ளது. இதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ.276 கோடி.
கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான 42 கிரவுண்ட் நிலம் ‘தி மயிலாப்பூர் கிளப்’ நடத்த 1903 ஆம் ஆண்டு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. விளையாட்டுப் பயிற்சி, பொழுதுபோக்கு ஆகியவற்றில் செல்வாக்கு செலுத்தி இந்த மயிலாப்பூர் கிளப்புக்கு, சொற்பத் தொகையில் கொடுக்கப்பட்ட குத்தகை காலமும் 2003 ஆம் ஆண்டு முடிவடைந்தது. அதன் பிறகு குத்தகைக்கு விடுவதை நிறுத்திய அறநிலையத்துறை, சந்தை நிலவரத்துக்கு ஏற்ப வாடகை நிர்ணயித்து வசூலித்து வருகிறது. 42 கிரவுண்ட் நிலத்தில், 2007 ஆம் ஆண்டு 15 கிரவுண்ட் நிலத்தை கோயில் நிர்வாகம் கையகப்படுத்தியது. எஞ்சிய 27 கிரவுண்ட் நிலத்துக்கு செலுத்தவேண்டிய வாடகையில் ரூ.3.57 கோடியை செலுத்தாமல் மயிலாப்பூர் கிளப் நிலுவை வைத்திருக்கிறது. இந்நிலையில் மயிலாப்பூர் கிளப்பில் மதுபான பார் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அறநிலையத்துறை விதிகளுக்கும் சட்டத்துக்கும் புறம்பாக நடத்தப்பட்ட மதுபான பார் சீல் வைக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை உருவாவதற்கு முன்பு 1901 ஆம் ஆண்டில் 25 கிரவுண்ட் நிலத்தை 99 ஆண்டு குத்தகைக்கு பார்த்தசாரதி என்பவர் பெற்றுள்ளார். தற்போது அவர் குடும்பத்தினர் இந்த நிலத்தை உள் குத்தகைக்கு விட்டும், வணிக வளாகம் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டியும் சம்பாத்தித்துவருகின்றனர். மேலும் 35 பேரின் ஆக்கிரமிப்பில் இருக்கும் இந்த நிலத்தை மீட்க அறநிலையத்துறை நீதிமன்றத்திற்கு அலைந்துகொண்டிருக்கிறது.
நாகேஷ்வர ராவ் பூங்ககா அருகேயுள்ள அமிர்தாஞ்சன் நிறுவனம் ரூ.6.45 கோடி குத்தகை நிலுவை வைத்திருக்கிறது. இதனை வசூலிப்பதற்கான வழக்கும் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது.
ஆனால், கோவில் திருப்பணிகளாக விளக்கு எரித்தல், சந்தனம் அரைப்பது, பூமாலை கட்டித் தருவது, சுத்தம் செய்வது போன்ற கோயில் பணிகளை பல தலைமுறைகளாக சிலர் செய்து வருகின்றனர். இவர்களுக்கு அரசால் தரப்பட்ட அரை கிரவுண்ட் முக்கால் கிரவுண்ட் நிலத்தில் வீடுகளைக் கட்டிக்கொண்டு வாழ்கின்றனர். கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவோருக்கு குடியிருப்புகள் கட்டித்தரும் திட்டம் ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயில்களுக்கு பெருவாரியான பொதுநிலத்தை மன்னர்கள் எழுதிவைத்து, அதனை அதிகாரமிக்க இடமாகவும் அதிகாரத்தின் அடையாளமாகவும் மாற்றினர். இந்த அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ள பலர் முயன்று வருகின்றனர். இதனைத் தடுப்பதுடன், கோயில் நிலங்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தனிநபர் நலனுக்குப் பயன்படாமல், மக்களின் நலனுக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.
Read in : English