Read in : English
செங்கல் சூளையில் வேலை செய்யும் விளிம்பு நிலை இருளர் பழங்குடியினர் குடும்பத்தில் பிறந்த சக்திவேல், விழுப்புரம் மாவட்ட செங்கல் சூளைத் தொழிலாளர்கள் பற்றி ஆய்வு செய்து பிஎச்டி படித்து முடித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சாலையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். அவரது அப்பா தங்கவேலும் அம்மா கல்விக்கரசியும் செங்கல் சூளையில் வேலைபார்த்து வந்தனர். பள்ளியில் சென்று படிக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும் அவர்களது குழந்தைகளை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்பதில் கல்விக்கரசி ஆர்வமாக இருந்தார். அதற்கு பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் அளித்து வந்த விழிப்புணர்ச்சியும் ஒரு முக்கியக் காரணம்.
“சிறிய குடிசை வீட்டில்தான் எங்களது வாழ்க்கை. எட்டாம் வகுப்பு படிக்கும் வரை வீட்டில் மின்சார வசதி இல்லை. அதன் பிறகும் தற்போது வரை வீட்டில் ஒற்றை பல்புதான். கழிப்பறை வசதி இல்லை. எங்கள் ஊரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். ஆறாம் வகுப்பு படிக்க வளவனூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். தினந்தோறும் ஐந்து, ஆறு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். ஏரியைக் கடந்து செல்ல வேண்டும். அதனால், எனது பெரியக்கா எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டார். பத்தாம் வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் 32 மதிப்பெண்கள் எடுத்ததால் என்னால் அத்தேர்வில் தேர்ச்சி பெற இயலவில்லை. அதைத் தொடர்ந்து, தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவர்களுக்கு விழுப்புரத்தில் பயிற்சி அளிக்கும் சாந்தி நிலையம் என்ற இலவசப் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து அந்தப் பாடத்தில் தேர்ச்சி பெற்றேன்.
இந்த இடைப்பட்ட காலத்தில் நான் எனது அம்மாவுடன் செங்கல் சூளைக்கு வேலைக்குச் செல்வேன். இந்தக் கஷ்டத்திலிருந்து விடுபடுவதற்கு எப்படியாவது படித்துத் தீர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அத்துடன், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தில் இருந்தவர்கள் என்னை எப்படியாவது படிக்க வைத்து விட வேண்டும் என்று என் அம்மாவிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தனர். அதனால், என் அம்மா என்னை மீண்டும் பள்ளியில் சேர்த்தார்” என்கிறார் சக்திவேல்.
பத்தாம் வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெற்ற பிறகு, அடுத்த ஆண்டில் வளவனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் வகுப்பில் பொருளாதாரம், வரலாறு, புவியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தார். பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 821 மதிப்பெண்கள் பெற்றேன். அதையடுத்து, 2007இல் கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் பிஏ பொருளாதாரப் படிப்பில் சேர்ந்து 65 சதவீத மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் எம்ஏ பொருளாதாரப் படிப்பில் சேர்ந்து படித்து 68.23 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.
எங்களைப் போன்றவர்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ படிப்புதான் ஒரே வழி.
பின்னர் அதே கல்லூரியில் எம்பில் படிப்பில் சேர்ந்து, புதுச்சேரி திருப்புவனையில் உள்ள கூட்டுறவு நூற்பாலைகளில் உள்ள தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறைத் தலைவர் பேராசிரியர் ஜி.ரவி மேற்பார்வையில் பிஎச்டி படிப்பில் சேர்ந்தார். விழுப்புரம் மாவட்டத்தில் செங்கல் சூளை தொழிலாளர்களின் பொருளாதார நிலைமை குறித்த ஆய்வை மேற்கொண்டார்.
“செங்கல் சூளைத் தொழிலாளர்களுக்கு, உரிய வசதிகளுடன் தங்குமிடம் அளிக்கப்படுவதில்லை. கழிப்பறை வசதிகள் செய்துத ரப்படுவதில்லை. அந்தத் தொழில் காரணமாக உடல்நலம் பாதிக்கப்படுகிறது. அவர்களுக்கு இன்சூரன்ஸ் வசதி எதுவும் செய்யப்படுவதில்லை. செங்கல் சூளை தொழிலாளர்களின் நலன்களைப் பாதுக்காப்பதில் தொழிலாளர் நலத் துறை போதிய அக்கறை செலுத்துவதில்லை. அத்துடன், செங்கல் சூளையில் பணிபுரியும் தொழிலாளர்கள் முன்பணமாக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிக்கு ஆளாகிறார்கள்” என்பது போன்றவை தனது ஆய்வின் மூலம் தெரிய வந்ததாகவும், “இந்தக் கடன் பிரச்சினையிலிருந்து செங்கல் சூளைத் தொழிலாளர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கூறுகிறார் அவர்.
“எங்களைப் போன்றவர்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ படிப்புதான் ஒரே வழி. எப்பாடுபட்டாவது படித்து விடலாம் என்று பார்த்தால், இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ் பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது. நான் எட்டாவது படிக்கும் போதிலிருந்தே எனக்கும் எனது அக்காவுக்கும் சாதிச் சான்றிதழ் பெறுவதற்காக ஆர்டிஓ (ரெவின்யூ டிவிஷனல் ஆபீசர்) அலுவலகத்துக்கும் தாலுகா அலுவலகத்துக்கும் எத்தனையோ முறை தொடர்ந்து போய் வந்திருக்கிறார். எப்படியோ ஒருவழியாக சாதிச் சான்றிதழ் பெற முடிந்ததால்தான் நான் தொடர்ந்து படிக்க முடிந்தது. சாதிச் சான்றிதழ் கிடைக்காததால் இருளர் இனத்தைச் சேர்ந்த பலர் படிப்பை இடையிலேயே விட்டு விடும் சூழ்நிலை உள்ளது. சாதிச்சான்றிதழ் இல்லாமல் படிக்க முடியாது. அத்துடன், அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையையும் பெற முடியாது. சாதிச்சான்றிதழ் கிடைத்தாலேயே இருளர் இன மாணவர்கள் எப்படியாவது கஷ்டப்பட்டு படித்து விடுவார்கள்” என்கிறார் அவர்.
“பள்ளியிலிருந்து தமிழ் வழியில் படித்து வந்தேன். பிஏ படிக்கும் போது தமிழில் தேர்வு எழுத அனுமதி இருந்ததால் எனக்குப் பிரச்சினை இல்லை. எம்ஏ படிக்கும் போது ஆங்கிலத்தில் தேர்வு எழுத சிரமப்பட்டேன். பாடங்களை எழுதி எழுதிப் பார்த்துப் பயிற்சி செய்வேன். கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் அரியர்ஸ் எதுவும் கிடையாது. டியூஷன் எதுவும் சென்றதும் கிடையாது. அதற்கான வசதியும் இல்லை. பிஎச்டி படிக்கும் போது எனது ஆய்வுக்கு லேப்டாப் தேவைப்பட்டது. அதை வாங்கும் வசதி என்னிடம் இல்லை. லூசினா சிஸ்டர் தான் எனக்கு லேப் டாப் வாங்கிக் கொடுத்தார்” என்பதை நன்றியுடன் நினைவுகூறும் சக்திவேல், கோடையில் இருளர் இன மாணவர்களுக்காக நடத்தப்படும் கோடை காலத்தில் நடத்தப்படும் இலவசப் பயிற்சியில் கலந்து கொண்டு அந்த மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார். இவரது இன்னொரு அக்கா திறந்த நிலைப் பல்கலைக்கழகம் மூலம் நர்சிங் டிப்ளமோ படித்துள்ளார்.
சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் சக்திவேலுக்கு விரிவுரையாளர் வேலை கிடைத்துள்ளது. நெட், செட் தேர்வுகளை வெற்றிகரமாக எழுத வேண்டும் என்பதுடன் அரசுக் கல்லூரியில் நிரந்தமாக வேலையில் சேர வேண்டும் என்பதும் இந்த 29 வயது இருளர் இன மாணவர் சக்திவேலின் அடுத்த இலக்கு. முயன்றால் முடியாது எதுவும் இல்லை.
Read in : English