Read in : English
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளாக இருந்த சாந்தன், முருகன், மற்றும் பேரறிவாளன் ஆகியோரை வேலூர் சிறையில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நான் நேரில் சந்தித்து பேசிய போது, பல கருத்துக்களை அமைதியாகவும், ஆணித்தரமாகவும் மனம் திறந்து பேசினர். பார்வையாளர்கள் அறையில் அவர்களை சந்தித்த போது, சிறைத்துறை அதிகாரிகள் டீ மற்றும் பிஸ்கட் கொடுத்தனர்; நான் அவர்களுடன் உரையாடினேன்; 2011, அக்டோபர் மாதம் அதாவது அதாவது ஶ்ரீபெரும்புதூரில் ராஜிவ் கொலை நடந்து 20 ஆண்டுகள் கழிந்த பின்னர் நடந்த அந்த சந்திப்பில் ராஜிவ் கொலைக் குறித்தும், அதன் பின்னில் உள்ள பல விபரங்களைக் குறித்தும் மூன்று பேருமே இணக்கமான குரலில் பேசினர். அவர்கள் ராஜிவ் காந்தி கொலை தவறான ஒன்று என்றும்; யாருடைய உயிரையும் எடுப்பது ஏற்கத்தகுந்ததல்ல எனவும் கூறினர்.
வேலூர், அக்டோபர் 12, 2011: விடுதலை புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இரு போராளிகள் சாந்தன் மற்றும் முருகன் என்கிற வி.ஶ்ரீஹரன். அவர்கள் அப்போது, 1991-ல் நடைபெற்ற ராஜிவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளாக இருந்தனர்.அப்போது அவர்கள், ஸ்ரீ பெரும்புதூர் குண்டுவெடிப்பு சம்பவத்தைக் குறித்து பேசும் போது, கால ஓட்டத்தினால் அவர்கள் எண்ண ஓட்டங்களும் மாறியிருந்ததை உணர்ந்தேன். 2011 இல் இருவருமே மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தி குறித்து வேறு வகை உணர்வு கொண்டவர்களாக இருந்தனர்.
1991 ஆண்டுகளில் விடுதலை புலிகள் இயக்கத்தின் அதிதீவிர போராளிகளாக செயல்பட்டு வந்த அவர்கள் ராஜிவ் காந்தி கொலை குறித்து குறிப்பிட்ட பார்வையை அப்போது (1990-91 ஆண்டுகளில்) கொண்டிருந்தனர். முருகன் பேசும்போது, “ இலங்கையில் இருந்த இந்திய அமைதிப்படையின் செயல்பாடுகள் குறித்து முன்கூட்டியே எங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. ராஜிவ் காந்தி பற்றியும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், ராஜிவ் கொலையில் எங்கள் பங்கு ஒன்றுமில்லை. இன்றும் கூறுகிறோம், ராஜிவ் காந்தியை கொன்றிருக்கக் கூடாது’’ என்றார்.
“நிச்சயமாக. யாரும் கொலை செய்யப்படக் கூடாது. அதனால் தான் மரண தண்டனைக்கு நான் எதிரானவனாக உள்ளேன்” என்றார் முருகன், தெளிவாக.
சாந்தன் பேசுகையில், “ராஜிவ் கொலையில் எங்களுக்கு தொடர்பில்லை என்று எல்லாருக்கும் தெரியும். அப்போது, இந்திய அமைதிப்படையின் நடவடிக்கைகளால் நாங்கள் சில கருத்துக்களைக் கொண்டிருந்தோம். ஆனால் காலம் உருண்டோட, என்னுடைய கருத்தை மாற்றிக் கொண்டேன். அதேவேளையில் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டிருக்கக் கூடாது’’ என்றார் உறுதியான குரலில். தொடர்ந்து பேசிய அவர்,”எந்த மனிதனும் மற்றவர்களின் உயிரை எடுக்கக் கூடாது என்பதை நான் ஆழமாகவும் உண்மையாகவும் நம்புகிறேன். அது எல்லாருக்கும் பொருந்துகின்ற விஷயம். மரணதண்டனைக்கு எதிரான இயக்கமும் முழக்கமும் உலகம் தழுவியதாக இருக்க வேண்டும். தூக்கு தண்டனை நிச்சயம் நீக்கப்பட வேண்டிய ஒன்று’’ என்றார் சாந்தன்.
இதுகுறித்து பேசிய பேரறிவாளன், “எனக்கும் கூட ராஜிவ் காந்தி படுகொலையில் எந்த தொடர்பும் இல்லை. நானும், இன்னொருவர் உயிரை எடுப்பது தவறு என்றே கூறுகிறேன். அது ராஜிவ் காந்தியாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் படுகொலை செய்யப்பட்டிருக்கக் கூடாது. மரண தண்டனைக்கு எதிரான இயக்கம் முக்கியமானது. இது, உலகின் எந்த மூலையிலும் அனுமதிக்கப்படவே கூடாது’’ என்று கூறிய பேரறிவாளனிடம், “இது எல்லாருக்கும் பொருந்துமா? ஒருவேளை இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டாலும் இதே கருத்தில் நிலையாகவும் உறுதியாகவும் நிற்பீர்களா’’ எனக் கேட்டதற்கு,’’ நிச்சயமாக. ராஜபக்சே தூக்கில் இடப்படக் கூடாது என்பதை தைரியத்துடனும் உறுதியிடனும் கூறுவேன். இதை சிலருக்கு சொல்லி புரிய வைப்பது கடினம்.ஆனால் நாங்கள் எங்களுக்காக மட்டும் தூக்கு தண்டனை கூடாது என்று கேட்கவில்லை;அனைவருக்குமாகத்தான் கேட்கிறோம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்றார் தீர்க்கமாக.
அவரைத் தொடர்ந்து பேசிய முருகன், “எங்களுக்கு மரண தண்டனை அளிப்பது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை; எங்களுக்குத் தெரியும் நாங்கள் குற்றமற்றவர்கள். ஆகையால் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது. நாங்கள் விடுதலை புலி இயக்கத்தை சேர்ந்தவர்கள். ஒருவேளை இயக்கத்தில் இருந்தபோது எங்காவது நாங்கள் இறந்திருக்கலாம் அல்லது 2009ஆம் ஆண்டில் நடந்த இறுதி போரில் மடிந்து போயிருக்கலாம். எங்களது தனிப்பட்ட சூழலும் நிலைமையும் பெரிய விஷயமல்ல. நாங்கள் மரண தண்டனை உலகின் எந்த மூலையிலும் நிகழ்த்தப்படக் கூடாது என்பதில் அக்கறையுள்ளவர்களாக இருக்கிறோம்’’ என்றார்.
Read in : English