Read in : English
அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக தாங்களே முன்வந்து நட்புறவுடன் ஆக்கப்பூர்வமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு அசத்தி வருகிறார்கள் சில அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வாட்ஸ் அப்பில் ஆரம்பித்து பிறகு ஹைக் மெசெஞ்சரில் இணைந்து தற்போது முகநூல் வழியே தங்களது தொடர்பு எல்லைகளை விரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எங்களது அமைப்பில் சுமார் 600க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இணைந்து செயல்பட்டு வருகிறோம். மாணவர்களுக்கு நல்ல கல்வி வழங்க வேண்டும் என்ற பொது அக்கறை எங்களை ஒன்று சேர்த்து இயக்கி வருகிறது.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து கொண்டு ஆர்வத்துடனும் திறமையாகவும் சாதிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் தனித்திறனுடன் கூடிய ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியே அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்ற இந்த அமைப்பு. சுருக்கமாக A3 என்று அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்காக பல்வேறு அமைப்புகளும் சங்கங்களும் செயல்பட்டு வரும் சூழ்நிலையில் இது எந்த வகையில் வித்தியாசமானது? இந்த அமைப்பில் இருக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் ஏதாவது சாதனை படைத்தவர்களாகவோ அல்லது சாதனை படைக்க முயற்சிகளைச் செய்பவர்களாகவோ இருக்கிறார்கள் என்பதுதான் இந்த அமைப்பின் சிறப்பு அம்சம்.
“எங்களது அமைப்பில் சுமார் 600க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இணைந்து செயல்பட்டு வருகிறோம். மாணவர்களுக்கு நல்ல கல்வி வழங்க வேண்டும் என்ற பொது அக்கறை எங்களை ஒன்று சேர்த்து இயக்கி வருகிறது. மாணவர்களுக்குக் கற்றுத் தருவதில் தீரா ஆர்வம் கொண்ட இந்த ஆசிரியர்கள் தங்களது பணியில் மேம்படுத்திக் கொள்ளவும் பள்ளிக் குழந்தைகளின் பல்துறை திறன்களை வெளிக் கொணரும் வகையில் ஆசிரியர்கள் கற்பிக்கவும் எங்கள் அமைப்பு வழிகாட்டி வருவதுடன், பரஸ்பர அனுபவப் பகிர்வுக்கும் உதவி வருகிறது. அத்துடன், அகில இந்திய அளவிலும் மாநில அளவிலும் ஆசிரியர்களுக்காக நடைபெறும் பல்வேறு பயிற்சிகள் குறித்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து, அவர்களை அதில் பங்கேற்று பயன் பெறச் செய்கிறோம். ஆங்கில மொழிப் பயிற்சி, தொழில்நுட்ப கற்பித்தலுக்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்துகிறோம். இதனால், பலனடைந்த ஆசிரியர்கள், தாங்கள் கற்றுக் கொண்ட புதிய விஷயங்களை மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கிறார்கள்” என்கிறார் இதன் ஒருங்கிணைப்பாளரும் அரசுப் பள்ளி ஆசிரியருமான உமா மகேஸ்வரி.
“மாணவர்களுக்குப் படிப்பதற்கு பொருளாதாரரீதியான பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறோம். ரூ.25 லட்சத்துக்கு அதிகமான மதிப்புள்ள பயன்படுத்திய கம்ப்யூட்டர்கள், லேப்டாப்களை பெற்று 20 பள்ளிகளுக்கு வழங்கி இருக்கிறோம். தன்னார்வலர்கள் மூலம் 2 பள்ளிகளுக்கு புதிய லேப்டாப்களை வாங்கி வழங்கியிருக்கிறோம். தொண்டு நிறுவனங்கள் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 8 பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் செய்து தந்துள்ளோம். க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ள அகராதி உள்ளிட்ட புத்தகங்களை (சுமார் ரூ.1.35 லட்சம்) இலவசமாகப் பெற்று 65 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கி இருக்கிறோம். அதே பதிப்பகத்தின் உதவியுடன் காகித பாவைகள் என்ற புத்தகம் 100 பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. பாடநூல் உருவாக்கம், மின்நூல்கள் தயாரிப்பு போன்ற பல்வேறு அரசுத் துறையின் முயற்சிகளில் எங்களது ஆசிரியர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்கள். அரசுப் பள்ளிகளை மீட்டெடுக்கும் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கப் பணிகளிலும் எங்களது ஆசிரியர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார் அவர்.
Read in : English