Read in : English

பழைய காகிதம், பாட்டில்கள், தீக்குச்சி, நூல், ஸ்ட்ரா, வால் டியூப், போன்று நம்மால் தூக்கி எறியப்படும் சாதாரணப் பொருள்களிலிருந்து அறிவியல் விளையாட்டுப் பொருட்களை உருவாக்கி அதனைப் பள்ளிக் குழந்தைகளிடம் பிரபலப்படுத்தி அவர்களுக்கு அறிவியல் பாடங்களில் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறார் கான்பூர் ஐஐடி முன்னாள் மாணவர் அரவிந்த் குப்தா.

அரவிந்த் குமார் குப்தாவின் பெற்றோர் பள்ளிக்குச சென்றதில்லை. ஆனால், சமானியக் குடும்பத்தில் பிறந்த  இவர் தனது முயற்சியால் படித்து ஐஐடியை எட்டிப் பிடித்தவர்.  1975இல் கான்பூர் ஐஐடியில் எலெக்ட்ரிக் என்ஜினீயரிங் படித்து முடித்த அவர், டெல்கோ நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். 1978ஆம் ஆண்டில் ஓராண்டு படிப்பதற்காக விடுமுறை எடுத்துக் கொண்டு மத்திய பிரதேசத்தில் ஒரு கிராமத்துக்குச் சென்றார். அங்கு குழந்தைகளுக்கு அறிவியலைக் கற்றுத் தருவது குறித்த திட்டத்தில் பங்கேற்றார். அது அவரது வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, குழந்தைகளுக்கு அறிவியலைக் கற்றுத்தர எளிய விளையாட்டுப் பொருள்களை உருவாக்க நினைத்தார். கிராமங்களில் உள்ள பல பள்ளிகளில் அறிவியல் சோதனைகளை மாணவர்களுக்குச் செய்து காட்ட அறிவியல் கருவிகள் இருக்காது. சாதாரணமாக உள்ளூர்களிலிருந்து கிடைக்கும் பொருள்களிலிருந்தே சிறிய சோதனைகளைச் செய்து காட்ட முடியும். அதற்குத் தேவை அறிவு. முயற்சி. இந்த இரண்டும் அரவிந்த் குப்தாவிடம் நிறையவே  இருந்தது.

பழைய செய்தித்தாள்கள், பாட்டில்கள், சைக்கிள் வால் டியூப், பிளாஸ்டிக் பாட்டில்கள், பென்சில், மேக்னெட், தீக்குச்சிகள், வீணாகப் ன காலணிகள், துடைப்பம், நூல், ரீபில், ஸ்ட்ரா, குண்டூசி, கோந்து…இப்படி கையில் கிடைக்கும் பொருள்களை வைத்துக் கொண்டு பல அறிவியல் பொருட்களை குழந்தைகளிடம் செய்து காட்டினார்.

பழைய பேப்பரைக் கொண்டு மடித்து மடித்து பலவிதமான தொப்பிகள் செய்கிறார். அதையே சிறிய டப்பாவாக மாற்றிக் காட்டுகிறார். சிறிய காகித்தை வைத்துக் கொண்டு மடித்து மடித்து புத்தகமாக்கிக் காட்டுகிறார். பயன்படுத்திவிட்டுப் போட்ட டெட்ரா பேக்கிலிருந்து மணிப் பர்ஸ், சிறிய பேட்டரி, சேப்டி பின், மேக்னெட் ஆகியவற்றை வைத்து பல்பை எறிய வைக்கிறார். கையடக்க மோட்டாரை இயங்க வைக்கிறார். ஸ்ட்ராவிலிருந்து ஊதினால் காற்றாடி இயங்குகிறது. பெரிய ஸ்ட்ராவை வாயில் வைத்து ஊதிக் கொண்டிருக்கும்போதே கொஞ்சம் கொஞ்சமாக வெட்டுகிறார், அதன் இசை மாறிக் கொண்டே போகிறது. தீக்குச்சியுடன் வால் டியூப்பை இணைத்து அணுக் கோட்பாடுகளை விளக்கக் கருவி, இதேபோல கயிறுகளைப் பயன்படுத்தி ஒன்று, பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்தி மற்றொன்று, பழைய ரப்பர் செருப்பிலிருந்து இன்னொன்று.

இப்படி வேண்டாம் என கீழே போடும் பொருள்களிலிருந்தே பல அறிவியல் விளையாட்டுப் பொருட்களை சில நிமிடங்களில் நமது கண் முன்னே செய்து காட்டுகிறார். நம்மையும் செய்து பார்க்க வைக்கிறார். வீணாகக் கிடக்கும் பொருட்களிலிருந்து அறிவியல் விளையாட்டுப் பொருட்களைத் தயாரித்த குழந்தைகளின் முகங்களில் மட்டுமல்ல கடந்த காலக் குழந்தைகளான பெரியவர்கள் முகங்களிலும் மகிழ்ச்சி பொங்கி வழிகிறது. வீண் என்று நாம் தூக்கி எறியும் பொருள்களிலிருந்து குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்களை உருவாக்கி அதனைப் பள்ளிக் குழந்தைகளிடம் பிரபலபடுத்துவதே இவரது முழு நேரப் பணியாகி விட்டது.

அவரது எளிமையையும் பழகும் பண்பையும் பார்க்கும் பள்ளிக் குழந்தைகளால் இவரை எந்தக் காலத்திலும் மறக்க முடியாது. கிராமத்துப் பள்ளிகளுக்கு, குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இவரது எளிய உபகரணங்கள் ஓர் அரிய வரப்பிரசாதம். இவரை நேரடியாக அறியாதவர்கள்கூட, இவரது அறிவியல் விளையாட்டுப் பொருள்களைப் பார்த்தால், அவரது ரசிகர்களாகி சொக்கிப் போய்விடுவார்கள்.

ஒவ்வொரு விளையாட்டிலும் ஒர் அறிவியல் கோட்பாடு இருக்கிறது. விளையாட்டுப் பொருட்களை உருவாக்கி விளையாடுவதன் மூலம் அந்தக் குழந்தைகளே அந்த அறிவியல் கோட்பாடுகளை எளிதாகப் புரிந்து கொள்வார்கள். அதுதான் இவரது விளையாட்டுப் பொருள்களின் பின்னே உள்ள அடிப்படை.

இவர் உருவாக்கியுள்ள நூற்றுக்கணக்கான விளையாட்டுப் பொருள்களுக்கு எந்தக் காப்புரிமையும் கிடையாது. பொது நோக்கங்களுக்காக, மாணவர்களுக்குக் கற்றுத் தருவதற்காக யாரும் பயன்படுத்தலாம். இவரது இணைய தளத்திலிருந்து டவுன்லோடு செய்து, குழந்தைகளுக்குப் போட்டுக் காட்டிப் புரிய வைக்கலாம். பின்னர், அவர்களைச் செய்ய வைக்கலாம். எப்படியும் பள்ளிக் குழந்தைகளுக்குப் பரவலாகக் கிடைக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம்.

அறிவியல் விளையாட்டுப் பொருள்களை உருவாக்குவது குறித்த புத்தகங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருக்கின்றன. இவரது இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்களை நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்துப பயன்பெறுகிறார்கள். இவர் உருவாக்கியுள்ள நூற்றுக்கணக்கான அறிவியல் விளையாட்டுப் பொருள்கள் குறித்த விவரங்கள் அவரது இணைய தளத்தில் ஆங்கிலம் உள்ளிட பல மொழிகளில் உள்ளன. தமிழிலும் உள்ளது. யாரும் விரும்பினால், இவர் வெளியிட்டுள்ளவற்றை மொழிமாற்றம் செய்ய உதவலாம். அந்த வீடியோக்களைப் போட்டுப் பார்த்து நாமே செய்து விடலாம்.

குழந்தைகளிடம் அறிவியலைப் பிரபலப்படுத்தி வருவதற்காக அவருக்கு 1988ஆம் ஆண்டில் அவருக்கு தேசிய விருது கிடைத்தது. 2001ல் ஐஐடியின் சிறந்த முன்னாள் மாணவர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. அறிவியலைப் பிரபலப்படுத்தியதற்காக 2008இல் இந்தியன் நேஷனல் சயின்ஸ் அகாதெமியின் இந்திராகாந்தி விருது கிடைத்தது. இந்த ஆண்டில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

விருதுகளுக்கும் பாராட்டுகளுக்கும் அப்பாற்பட்டு குழந்தைகளிடம் அறிவியலை வளர்க்கும் சேவையில் கடந்த முப்பது ஆண்டுகளாக தொடர்ந்து ஈடுபட்டு வரும் அரவிந்த் குப்தா, தற்போது கடந்த ஓராண்டுக்கும் மேலாக சென்னையில் தனது மகள் மற்றும் பேரக்குழந்தையுடன் வசித்து வருகிறார் . குழந்தைகளுக்கு விளையாட்டு மூலமாக அறிவியல் கற்பிக்கும் அவரது பணி இங்கும் தொடர்கிறது.

சமீபத்தில் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் சார்பில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆசிரியர்களுக்கான பயிலரங்கில் கலந்து கொள்ள வந்திருந்தார் அரவிந்த் குப்தா. பல சரக்குக் கடையில் சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்தது போல இரு பைகள் அவரிடம். அவ்வளவுதான். அதில் சில டப்பாக்கள். அதில் அவர் உருவாக்கிய பொருள்களின் மாதிரிகள். பழைய நாளிதழ்கள். புதிதாகச் செய்து பார்ப்பதற்கான சில பொருள்கள் அவ்வளவுதான். கொஞ்சம் பேச்சு. மற்றதெல்லாம் செயல். அவரது செயல்முறை விளக்கங்களைப் பார்த்து வந்திருந்த ஆசிரியர்களும் செயல்பாட்டாளர்களும் மட்டுமல்ல, அவர்களுடன் வந்திருந்த சின்னக் குழந்தைகளும் சில மணி நேரம் தங்களை மறந்து பயிலரங்கில் முழுமையாக மூழ்கி இருந்தார்கள்.

அவரது பணிகளைப் பற்றி மேலும் விவரங்களுக்கு:

http://www.arvindguptatoys.com/

http://www.arvindguptatoys.com/toys.html

https://www.youtube.com/channel/UCT7EcU7rC44DiS3RkfZzZMg

https://www.ted.com/talks/arvind_gupta_turning_trash_into_toys_for_learning

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival