Read in : English
மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் வெளியான ரஜினி படங்களில் ஷங்கரின் ‘சிவாஜி’யும், கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட’யும் மட்டுமே முழுக்க ’ரஜினி பார்முலா’வில் வெளியானவை.
அதுவரை ரஜினி நடித்த படங்களில் இடம்பெற்ற அனைத்து அம்சங்களும், அப்படங்களில் ஒரே வடிவில் சிறப்புத்தரத்துடன் இடம்பெற்றிருக்கும். ‘சந்திரமுகி’, ‘எந்திரன்’, ‘கபாலி’ போன்றவை அவற்றில் இருந்து விலகி நின்று வேறொரு ரஜினியைக் காட்டியிருக்கும். இரண்டு பாதைகளில் எதில் முழுமையாகப் பயணிப்பது என்று குழம்பியதால் மட்டுமே ‘தர்பார்’, ‘அண்ணாத்த’ இரண்டும் ரசிகர்களைக் கவரவில்லை.
அந்த வகையில், 2000க்கு முன் வந்த ‘படையப்பா’ மட்டுமே இன்றும் ரஜினியின் பெயர் சொல்லும் படமாக விளங்குகிறது. அவற்றில் கிடைத்த திருப்தியை இயக்குநர் நெல்சனின் ‘ஜெயிலர்’ தருகிறதா என்பதே இப்போது எழுந்திருக்கும் கேள்வி.
‘ஜெயிலர்’ என்றதுமே, ஒரு மாபெரும் சிறையின் அதிகாரியாக ரஜினி அமர்க்களம் செய்யப் போகிறார் என்ற கற்பனை மனதில் தோன்றுவது இயல்பு. கூடவே, அந்தக் கதை எப்படி ‘கமர்ஷியல் பார்முலா’வுக்குள் அமையும் என்ற கேள்வியும் எழுந்தது. அது போன்ற எந்தக் கற்பனையும் தேவையில்லை என்பது போல, ‘ஜெயிலர்’ படத்தின் திரைக்கதை தொடங்கியது.
ஒரு ஓய்வுபெற்ற சிறை அதிகாரி. அவரது மகன் காவல் துறையில் உதவி ஆணையராக இருக்கிறார். சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்து வருகிறார். அந்த நெட்வொர்க்கில் இருக்கும் ஒரு நபரைக் கைது செய்ததும், அந்த போலீஸ் அதிகாரி காணாமல் போகிறார். அவரைக் கொலை செய்ததாகத் தகவல்கள் வெளியாகின்றன. எதையும் உறுதி செய்துகொள்ள முடியாத நிலைமை.
தனது மனைவி, மருமகள், பேரன் ஆகியோரின் அழுகையைத் தாங்க முடியாமல், ‘பழிக்குப் பழி’ என்று கிளம்புகிறார் அந்த ஓய்வு பெற்ற சிறை அதிகாரி. அப்போது, அவரது உண்மையான முகம் சுற்றியிருப்பவர்களுக்குத் தெரிய வருகிறது. அவர் எப்படிப்பட்டவர்? எந்த வகையில் அவரது பழிவாங்கல் அமைந்தது என்று சொல்கிறது இப்படம்.
ரஜினி டூயட் பாடவில்லை, வில்லன்களை ‘தட்டாமாலை’ சுற்றவில்லை என்று யோசிப்பவர்களுக்கு இப்படம் ஒரு வரமாகத் தெரியலாம். ஆனால், குடும்பத்தோடு ரசிக்கத்தக்க ஒரு பொழுதுபோக்கு சித்திரத்தைப் பார்க்க விரும்பியவர்களுக்கு ‘ஜெயிலர்’ நிச்சயம் திருப்தியைத் தராது
வெறுமனே ஒரு சிறைக்குள் அடைபட்ட அனுபவத்தை ‘ஜெயிலர்’ தந்துவிடுமோ என்று பயந்தவர்களுக்கு, இந்தக் கதை ஆசுவாசமாகத் தோன்றலாம். ரஜினி டூயட் பாடவில்லை, வில்லன்களை ‘தட்டாமாலை’ சுற்றவில்லை என்று யோசிப்பவர்களுக்கு இப்படம் ஒரு வரமாகத் தெரியலாம். ஆனால், குடும்பத்தோடு ரசிக்கத்தக்க ஒரு பொழுதுபோக்கு சித்திரத்தைப் பார்க்க விரும்பியவர்களுக்கு ‘ஜெயிலர்’ நிச்சயம் திருப்தியைத் தராது. அதற்குச் சில காரணங்கள் உண்டு.
அறுபதைத் தாண்டிய ஒரு முதியவராக, தன் வயதுக்கேற்ற பாத்திரமொன்றில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். ‘கபாலி’, ‘காலா’ படங்களில் மக்கள் அவரை ரசிக்க, அது போன்ற பாத்திர வார்ப்புகளே காரணம். இதிலும் அது தொடர்கிறது. பிளாஷ்பேக்கில் 40 ப்ளஸ் மனிதராக நடிக்கச் சிறிது சிரமப்பட்டிருக்கிறார் ரஜினி. மீசை தாடி இல்லாமல் ‘க்ளீன் ஷேவ்’ முகத்துடன் வரும்போது வயதின் வறுமை தெரிகிறது. அதைத் தவிர்த்துப் பார்த்தால், திரையில் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக நிச்சயம் ரஜினி தெரிவார்.
மேலும் படிக்க: ஜெயிலர் பட விழா: யாரைப் பற்றி பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினி?
ரஜினியே பிரதானம் என்பதால், ‘நீலாம்பரி’யாக வந்த ரம்யா கிருஷ்ணனுக்கே இதில் நான்கு காட்சிகள் தான். அப்படியானால், மற்றவர்களின் நிலைமையைக் கேட்கவே வேண்டாம். சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால் நடித்த பாத்திரங்கள் வெறுமனே ரசிகர்களின் கைத்தட்டல்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த படத்தில் யோகிபாபு உடன் ரஜினிகாந்த் ‘கொலவெறி’யுடன் பேசும் காட்சிக்கு ரசிகர்கள் கைத்தட்டுகின்றனர் (அதுவா பிளாக் ஹ்யூமர்?!). பின்பாதியில் தெலுங்கு நடிகர் சுனில், ரெடின் கிங்ஸ்லி, சுனில், தமன்னா நடித்த காட்சிகள் சினிமாவுலகின் திசையைச் சீண்டுகின்றன. ஆனால், எல்லாமே ‘அவல நகைச்சுவை’யில் சேர்வதுதாக நினைத்திருக்கிறது ‘ஜெயிலர்’ குழு. இப்படியே போனால், ‘துன்பம் வரும் வேளையிலே சிரிங்க’ என்ற ‘ராஜபார்ட் ரங்கதுரை’ படப் பாடல் கூட ‘பிளாக் ஹ்யூமர்’ரில் சேர்ந்துவிடும். வில்லன் விநாயகத்தின் சேட்டைகள், எண்பதுகளில் வந்த ‘பழிக்குப் பழி’ வகையறா படங்களை நினைவூட்டுகின்றன.
ரஜினியை அழகாகத் திரையில் காட்டுவதில் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனும், அதனைக் காணும் ரசிகர்கள் இன்புறுவதற்கான பின்னணி இசையை அனிருத்தும் தந்திருக்கின்றனர். இன்னும் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டுழைப்புதான், திரையில் ரஜினியைப் பார்த்ததும் விசிலடிக்கும் ஆசையை விதைக்கிறது.
ஒரு சாதாரண ரஜினி ரசிகர் இந்த படத்தைப் பார்ப்பதில் இருக்கும் பெருந்தடை, இதில் நிறைந்திருக்கும் வன்முறை. ஒரு காட்சியில் தலையைத் துண்டாக வெட்டிவிட்டு, அந்த உடலில் இருந்து ரத்தம் எத்தனை செ.மீ. உயரம் வரை பீய்ச்சியடிக்கிறது என்று கண்களால் அளக்கிறார் ரஜினி. இதையெல்லாம் எப்படிக் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க முடியும்? இது போன்ற தருணங்கள்தான்,இப்படம் இளையோருக்கானது என்பதை உணர்த்துகிறது.
என்றென்றும் திரையுலகில் ரஜினிகாந்த் கோலோச்ச வேண்டுமென்ற விருப்பம் வெகுசிலரிடம் உண்டு. அவர்களைப் பொருத்தவரை, இது மற்றுமொரு ரஜினி படம். ஆனால், ‘ரஜினி படம் வராதா’ என்று ஏங்குபவர்களுக்கு இது மயிர்க்கூச்செறிய வைக்கும் திரையனுபவம்
கமலின் சமீபத்திய படமான ‘விக்ரம்’, ஷங்கரின் ‘இந்தியன்’, ஜீத்து ஜோசப்பின் ‘பாபநாசம்’ உட்படச் சில படங்களை நினைவூட்டுகிறது ‘ஜெயிலர்’. மேற்சொன்ன மூன்று படங்களின் கதைகளுமே, முதலில் ரஜினி நடிப்பதற்காகத் தயாரானவை என்பது பலர் அறியாத ஆச்சர்யம். அவற்றை லேசுபாசாகப் பிரதிபலிப்பதைவிட, முழுமையாக அதே தன்மையில் அமைந்த திரைக்கதைகளை ரஜினி தேர்ந்தெடுத்து நடிக்கலாம்.
கடந்த ஓராண்டில் வெளியான விக்ரம், வாரிசு, துணிவு மூன்றின் வசூல் வெற்றிகளை ‘ஜெயிலர்’ முறியடிக்க வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் விரும்புகின்றனர். அதனை நிகழ்த்தியே தீர வேண்டுமென்ற வெறி, இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினியிடம் தெரிந்தது.
‘விக்ரம்’ படத்தைப் பொருத்தவரை, இடைவேளைக்கு முன்னதாக வரும் 20 நிமிட சண்டைக்காட்சிகள் மயிர்சிலிப்புக்குரியதாக இருக்கும். அது போன்ற தருணங்கள் ‘ஜெயிலர்’ படத்தில் இல்லை. விக்ரமில் வரும் இடைவேளை போல, இதில் வலுவான காட்சிகள் இல்லை. அதேநேரத்தில், ரஜினியை ‘சூப்பர்மேன்’ ஆக காட்டும் ஷாட்கள் உள்ளன. ரஜினி அமைதியானவர் அல்ல, ஆக்ரோஷமானவர் என்பதைச் சில நிமிடங்களிலேயே ‘ஓப்பன்’ ஆக சொல்லிவிடுகிறார் இயக்குநர்.
மேலும் படிக்க: வெற்றிப் பாதையில் பீடு நடைபோடும் நடிகர் யோகிபாபு!
அதனை மூடிவைத்து ‘சஸ்பென்ஸ்’ ஏற்றத் தேவையில்லை என்பது சரியான முடிவுதானா? மிக முக்கியமாக, ஒரு நேர்மையான சிறைச்சாலை அதிகாரி ‘கேங்க்ஸ்டர்’கள் உடன் எத்தகைய நட்பைக் கொண்டிருக்கிறார் என்பது இக்கதையில் சொல்லப்படவில்லை. இது போன்ற சில அம்சங்கள் நிச்சயமாக ஒரு சாதாரண ரசிகனைக் கவர்ந்திழுக்காது.
ஏதேனும் ஒருவர் அல்லது ஒன்றுடன் ஒப்பிட்டுப் பேசுவதே இன்றைய பாணி. அப்படிப் பார்த்தால், ஒரு அமிதாப் பச்சன் போல, ஒரு சீன் கானரி அல்லது கிளிண்ட் ஈஸ்ட்வுட் போல, என்றென்றும் திரையுலகில் ரஜினிகாந்த் கோலோச்ச வேண்டுமென்ற விருப்பம் வெகுசிலரிடம் உண்டு.
அவர்களைப் பொருத்தவரை, இது மற்றுமொரு ரஜினி படம். ஆனால், ‘ரஜினி படம் வராதா’ என்று ஏங்குபவர்களுக்கு இது மயிர்க்கூச்செறிய வைக்கும் திரையனுபவம். நீங்கள் எந்த வகை என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம்!
Read in : English