Read in : English
தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் எண்ணிக்கை 2.8 லட்சமாக அதிகரித்துவிட்டதால் கடவுளின் சொந்த தேசம் என்றழைக்கப்படும் கேரளா, நாய்களின் சொந்த தேசம் என்று அழைக்கப்படும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. அங்கு தெரு நாய்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நாய்த் தொல்லைகளைக் கட்டுப்படுத்துவது மாநில அரசுக்குக் கடினமான பணியாகி விட்டது.
தெருநாய்களைத் தவிர, மாநிலத்தில் கூடுதலாக உரிமம் பெற்ற 9 லட்சம் வீட்டுச் செல்ல நாய்களும் இருக்கின்றன. அவற்றில் பல ’பராமரிப்பாளர்களின்’ கவனக்குறைவால் தெரு நாய்களைப் போல அல்லது வீடுகளை விட்டுத் தெருக்களில் சுற்றி அலைகின்றன என்று 2022-ஆம் ஆண்டின் கால்நடைத் துறைத் தரவுகள் தெரிவிக்கின்றன.
கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பதிவுகளின்படி, 2019 ஆம் ஆண்டில் மாநிலத்தில் 5,794 தெரு நாய்கள் கடித்ததாகத் தெரிய வந்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை 2023 ஜூன் 19 வரை 6276 ஆக உயர்ந்துள்ளது. இது 2020-இல் 3,951 ஆகக் குறைந்து, 2021-ல் மீண்டும் 7,927 ஆக உயர்ந்தது.
2022-ஆம் ஆண்டில் தெரு நாய்கள் கடித்ததாக 11,776 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கால்நடைத் துறையின் தரவுகளின்படி, மாநிலத்தில் 170 இடங்களில் தெரு நாய் கூட்டங்கள் இருக்கின்றன. மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் மட்டும் 28 இடங்களில் நாய் வசிப்பிடங்கள் உள்ளன.
இந்த நாய் அச்சுறுத்தல் கேரளாவோடு மட்டும் நின்றுவிடவில்லை. கடந்த ஆண்டு மழைக்கால கூட்டத்தொடரின் போது மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளின்படி, தமிழ்நாடு, மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் மற்றும் குஜராத்தில் தெருநாய் கடித்த சம்பவங்கள் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மதுரை மற்றும் சென்னையில் காலை நடைப்பயிற்சி செய்பவர்களை தெரு நாய்கள் கடித்த சம்பவங்கள் பொதுமக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் எண்ணிக்கை 2.8 லட்சமாக அதிகரித்துவிட்டதால் கடவுளின் சொந்த தேசம் என்றழைக்கப்படும் கேரளா, நாய்களின் சொந்த தேசம் என்று அழைக்கப்படும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. அங்கு தெரு நாய்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 20 சதவீதம் அதிகரித்துள்ளது
உத்தரபிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான தெரு நாய்கள் உள்ளன, அதைத் தொடர்ந்து ஒடிசா, மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளன. இருப்பினும், ’கடவுளின் சொந்த தேசம்’ என்ற பெயர் பெற்ற கேரள மாநிலம் தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலா வட்டாரங்களில் தெரு நாய் தொல்லைகள் முக்கிய விவாதப் பொருளாகியுள்ளன. இந்தியாவில் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றான கேரளா மனித மேம்பாட்டு அளவீடுகளில் மற்ற மாநிலங்களை விட முன்னணியில் உள்ளது.
நாய்களை ஈர்க்கும் வகையில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டிக் கிடப்பதும், விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தப் போதுமான கருத்தடை வசதிகள் இல்லாததும்தான் அடர்த்தியான மக்கள் தொகை கொண்டுள்ள கேரளாவில் தெருநாய்களின் தொல்லைக்கு முக்கிய காரணங்கள்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் கண்ணூரில் உள்ள முழப்பிலங்காடு கடற்கரையில் 11 வயது மாற்றுத் திறனாளி சிறுவன் நிஹால் இறந்ததைத் தொடர்ந்து மாநிலத்தின் தெரு நாய் தொல்லைப் பிரச்சினையின் மீது திடீர் கவனம் திரும்பியது. தெரு நாய்க் கூட்டம் சிறுவனைக் கடித்த சம்பவம் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மாலை 5 மணி முதல் அந்தச் சிறுவனை காணவில்லை என்று உறவினர்கள், உள்ளூர்வாசிகள் மற்றும் போலீசார் அடங்கிய குழு அவனை அப்பகுதியில் தேடி வந்தது. இரவு 8.30 மணியளவில் வீட்டின் அருகே படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். ஆனால் அங்கு அந்தச் சிறுவன் இறந்து போனான்.
இதனால், தெருக்களில் போவோர் வருவோரை கடித்துத் தொல்லை செய்யும் தெரு நாய்களை கொல்ல அனுமதி கோரி மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகுவது குறித்து பரிசீலிக்க வேண்டிய நிலைக்கு நிர்வாகம் தள்ளப்பட்டது. ஆனால், வெறிபிடித்த தெரு நாய்களைக் கொல்ல அனுமதி கோரி கேரளாவைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபரில் நிராகரித்தது. தெரு நாய்கள் சாமானிய மக்களைக் கடித்துத் தீங்கு விளைவித்த போதிலும் மாநில அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அதையடுத்து, கடந்த ஆண்டு விலங்குகளுக்கான தடுப்பூசி மற்றும் கருத்தடைத் திட்டம் செப்டம்பரில் மிகவும் ஆரவாரத்துடன் தொடங்கப்பட்டது. ஆனால் அது படிப்படியாக கைவிடப்பட்டது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது சமீபத்திய பயணத்தின் போது நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் புலம்பெயர்ந்த மலையாளி மக்களுக்கு தனது மாநிலத்தை ஒரு முன்மாதிரியாகக் காட்டிய நேரத்தில் இதுபோன்ற விஷயங்கள் மாநிலத்தில் நடந்து வந்தன. குழந்தையை நாய்கள் கோரமாகக் கடித்த சம்பவத்தை முன்வைத்து மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன், அதிர்ஷ்டவசமாக டைம்ஸ் சதுக்கத்தில் கொடிய தெரு நாய்கள் இல்லை என்று முதல்வரைக் கிண்டலடித்து முகநூலில் விமர்சித்தார்.
தெரு நாய்களால் முதியவர்கள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், பாதசாரிகள், கடற்கரையோர மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. விலங்குகள் மற்றும் பறவைகளையும் நாய்கள் தாக்கின. முதல்வர் பினராயி விஜயனின் சொந்த ஊரான கண்ணூர் மாவட்டத்தில் ஜூன் 19, 2023 வரை 6,276 தெரு நாய் கடித்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன என்று உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கால்நடைத் துறையின் உதவியுடன் மாநிலத்தின் 152 வட்டாரங்களில் விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு மையங்களை அரசாங்கம் திறந்திருந்தாலும், தெரு நாய் பிடிப்பவர்கள் பற்றாக்குறை காரணமாக இந்தத் திட்டம் இலக்கை எட்டத் தவறிவிட்டது. இந்த வேலைக்கு பலர் பயிற்சி பெற்றிருந்தாலும், ஒரு சிலர் மட்டுமே கீழ்த்தரமாகக் கருதப்படும் இந்த வேலையைத் தொடர்ந்தனர். 2022 தரவுகளின்படி, 2016 முதல் 20,000 நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இது, இந்தத் திட்டத்தின் தோல்வியைக் காட்டுகிறது.
தெருநாய் நாய்க்கடி, வெறி நாய்க்கடி மரணங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு வெறி நோயால் பாதிக்கப்பட்ட தெரு நாய்களைப் பிடிக்க உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்பிரச்சினைக்கு நிர்வாகம் முனைப்புடன் தீர்வு கண்டு வருகிறது. இருப்பினும், விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் மற்றும் விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு விதிகள்- 2001 போன்ற ஒன்றிய சட்டங்களின் சில விதிகள் சிக்கலைத் தீர்ப்பதை கடினமாக்கியுள்ளன.
இந்தச் சட்டம் தொல்லையாக இருக்கும் வன விலங்குகளை கொல்ல அனுமதித்தாலும், ஆபத்தான தெரு நாய்களுக்கு அதே நடவடிக்கையை அனுமதிப்பதில்லை. அமைச்சரின் கருத்துப்படி, தெரு நாய்கள் கடிக்கும் சம்பவம் கேரளாவில் மட்டும் இல்லை; பீகார் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற பகுதிகளிலும் இது நிகழ்கிறது. சில சூழ்நிலைகளில் வெறிபிடித்த மற்றும் ஆபத்தான தெரு நாய்களைக் கொல்வதற்கு அனுமதி கோரி கேரளா முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தாலும், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
தெருநாய் நாய்க்கடி, வெறி நாய்க்கடி மரணங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு வெறி நோயால் பாதிக்கப்பட்ட தெரு நாய்களைப் பிடிக்க உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது
தெரு நாய்கள் கடித்ததால் பலர் இறந்ததை அடுத்து இந்த விவகாரம் உள்ளூர், தேசிய மற்றும் உலகளாவிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. இருப்பினும், மாநிலத்தில் 25 விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு மையங்களைக் கட்டி, கருத்தடை மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்புக்கான திட்டத்தை விரைவுபடுத்த அரசு முடிவு செய்தது. தற்போது மாநிலத்தில் மொத்தம் 20 விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகளின் வளாகங்களிலும் விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குப்பை கொட்டுவதை தடுக்க, இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படும் இடங்களில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: நீலகிரி: உச்சத்தில் வனவிலங்குகள் அத்துமீறல்!
தெரு நாய்களின் பிறப்புக் கட்டுப்பாட்டை அமல்படுத்தக் கூடாது என்ற வகையில் கொண்டுவரப்பட்டிருக்கும் விதிகளை மேற்கோள் காட்டி மக்கள் பிரதிநிதிகள் பிரச்சினையைத் தீர்ப்பதில் உள்ள தங்கள் இயலாமையை வெளிப்படுத்தி இருக்கின்றனர். அந்த விதிகளில் சில ”நடைமுறைக்கு சாத்தியமற்றவை” என்று சொல்லப்படுகின்றன. இந்த விதிகளை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகி திருத்தம் செய்ய கேரள அரசு திட்டமிட்டுள்ளது. கொடிய காயங்கள் மற்றும் குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை கருணைக் கொலை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தெரு நாய்களுக்கு குறைந்தபட்சம் 4 மாத வயதை அடைந்த பின்னரே கருத்தடை செய்ய முடியுமே தவிர அதற்கு முன் அல்ல. இந்திய தண்டனைச் சட்டம், 1860 பிரிவு 428-இன் கீழ் எந்தவொரு விலங்கையும் கொல்வது, ஊனமாக்குவது, விஷம் கொடுப்பது அல்லது பயனற்றதாக மாற்றும் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
2023-ஆம் ஆண்டு விதிகளின்படி தெரு நாய்களைப் பிடித்து, தடுப்பூசி போட்டு, மீண்டும் விடுவிக்க வேண்டும். விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960-இன் கீழ் விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு விதிகளை (2023) மத்திய அரசு அறிவித்தது. புதிய விதிகளின்படி, தெருநாய்களுக்குக் கருத்தடை மற்றும் தடுப்பூசி போடுவது உள்ளாட்சி அமைப்புகள் அல்லது நகராட்சிகள் அல்லது மாநகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதற்கிடையே குழந்தைகள் மீதான நாய்க்கடி சம்பவங்களைத் தடுக்க, அவற்றைக் கொல்வது போன்ற ’உடனடி உத்தரவுகளை’ கோரி கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தெரு நாய் தொல்லை தொடர்பாக மாநில அரசு தாக்கல் செய்த 2019-ஆம் ஆண்டு நிலுவையில் உள்ள வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த அமைப்பு கோரியிருக்கிறது.
Read in : English