Read in : English
சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில் குழந்தைத் திருமணம் நடைபெறவில்லை என ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தீட்சிதர்கள் தரப்பிலும் கூறப்பட்ட நிலையில், சிறுமிக்கு திருமணம் நடந்ததாக கூறி வீடியோ ஒன்று வெளியானது.
ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்த விவாதங்கள் நடந்து வரும் சூழ்நிலையில், குழந்தைத் திருமண விவகாரத்தில் தீட்சிதர்களுக்கு எதிராக பல கேள்விகளை எழுப்பியுள்ளார் இன்மதி இணைய இதழின் நேர்காணலில் பத்திரிகையாளர் பன்னீர் பெருமாள்.
குழந்தைத் திருமண விவகாரத்தில் திருமணத்தில் சம்பந்தப்பட்ட ஒருவரே வீடியோவை வெளியிட்டதாக கூறிய அவர், குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்துவது பொறுப்புள்ள அரசின் கடமை என்றும், அதன் மீதான நடவடிக்கையில் கைது செய்யப்படுவது இயல்பு என்றார் அவர்.
குழந்தைத் திருமண புகாரில், தொடர்புடைய உறவினர்கள் மீதான கைது நடவடிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த பன்னீர் பெருமாள், குழந்தைத் திருமணம் நடந்த குற்றச்சாட்டில் சாட்சிகளாக இருந்தவர்களை விசாரிப்பதில் தவறில்லை என்றதுடன், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் பெண் குழந்தைகள் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுவதை தமிழக டிஜிபி மறுத்துள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தாங்கள் சிறுபான்மையின சமூகத்தினர் என கூறி தமிழக அரசை தீட்சிதர்கள் தரப்பில் மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டினார்.
சிதம்பரம் கோவிலை மையப்படுத்தி இருக்கும் சொத்து தங்களது கையை விட்டுப் போய்விடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக தங்களது குழந்தைகளை பகடைக்காயாக தீட்சிதர்கள் பயன்படுத்துவதாகவும் பன்னீர் பெருமாள் குற்றம்சாட்டினார்
இருந்தாலும் தமிழக அரசு தீட்சிதர்கள் சமூகத்தினரை ஒதுக்கவில்லை என்றும், அவர்களே சமூகத்தில் இருந்து ஒதுங்கி இருப்பதாகவும் தெரிவித்தார். சிதம்பரம் கோவிலை மையப்படுத்தி இருக்கும் சொத்து தங்களது கையை விட்டுப் போய்விடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக தங்களது குழந்தைகளை பகடைக்காயாக தீட்சிதர்கள் பயன்படுத்துவதாகவும் பன்னீர் பெருமாள் குற்றம்சாட்டினார்.
சிதம்பரம் கோவிலை தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அந்தக் கோவில் நிர்வாகத்தைக் கைப்பற்ற தமிழக அரசு அதீத கவனம் செலுத்த காரணம் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம், வருவாய், உண்டியல் பணம் உள்ளிட்டவை வெளிப்படைத் தன்மையாக இருப்பதாகக் குறிப்பிட்டதுடன், அப்படி சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்றார்.
மேலும் படிக்க: குழந்தைத் திருமணங்கள்: தீட்சிதர்கள் குறிவைக்கப்படுகிறார்களா?
சிதம்பரம் கோவிலுக்கு சொந்தமாக 200 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், திருவிளக்கு பூஜை மூலம் கோவிலுக்கு அதிகளவில் வருமானம் வருவதாகவும் குறிப்பிட்ட அவர், கோவில் வருமானத்தையும், 200 ஏக்கர் நிலத்தை விட்டுக் கொடுக்க விரும்பாமல் தங்களது நிர்வாகத்தின் பிடியிலேயே கோவிலை நிர்வகிக்க வேண்டும் என தீட்சிதர்கள் பிடிவாதமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
சிதம்பரம் கோவில் காலம் காலமாக அரசாண்ட மன்னர்கள் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், சைவ சமய குரவர்கள் நான்கு பேரால் பாடப்பட்ட கோவில் என்றும் வரலாற்றை குறிப்பிட்டுக் காட்டிய பன்னீர் பெருமாள், மக்களுக்குப் பொதுவான ஒரு சொத்தை குறிப்பிட்ட சமூகத்துக்காக அரசு விட்டுவிட முடியாது என்றார். சைவ சமய குரவர்கள் நால்வரால் பாடப்பட்ட தில்லை நடராஜர் கோவிலில் தேவாரம், திருவாசகம், திருமறை பாட முடியவில்லை.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய முடியும். ஆனால், தில்லை நடராஜர் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்ய நீதிமன்றம் வரை சென்று போராட வேண்டியுள்ளது என்றார்.
இதுமட்டுமின்றி, தில்லை நடராஜர் கோவிலில் பராமரிப்பு சரியில்லை என்றும், பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஆறுமுகம் ஓதுவார் சிவபக்தராக இருதாலும், அவரை சிவன் முன்பு பாடவிடவில்லை என்றும் தீட்சிதர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அடிப்படையில் தீட்சிதர்களுக்கும், சிதம்பரம் கோவிலுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்ற அவர், சிதம்பரம் கோவிலுக்குள் அனுமதிக்காமல் தீண்டாமையால் நந்தன் எரித்து கொல்லப்பட்ட காலத்தில் கூட தீட்சிதர்கள் இல்லை என்றும், அந்தணர்கள் மட்டுமே கோவிலை பராமரித்தாகவும் சுட்டிக்காட்டினார். தீட்சிதர்கள் என்ற சொல் திருமறை, தேவாரம் மற்றும் ஆழ்வார்கள், நாயன்மார்கள் எழுதிய பாடல்களில் இல்லை என்றும் குறிப்பிட்டார். இப்படி இருக்கும் போதும், கோவில் வருவாய்க்காக சொந்தக் குழந்தைகளுக்கே தீட்சிதர்கள் துரோகம் செய்வதாக கூறினார்.
இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் வருவாய் வெளிப்படை தன்மையான இணையத்தில் பகிரப்படுவதாக குறிப்பிட்ட அவர், சிதம்பரம் கோவில் வருவாயில் வெளிப்படை தன்மை இல்லாமல் ஊழல் நடப்பதாக மீண்டும் குற்றம்சாட்டினார்.
வறுமையினாலும், அறியாமையாலும் குழந்தை திருமணம் செய்வதை விட கோவில் சொத்துக்காக குழந்தைகளுக்கு திருமணம் செய்பவர்களை மன்னிக்க முடியாது என்றார்…பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அடையாளப்படுத்துவது சட்டப்படி குற்றம் என்றதுடன், அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்
அரசாண்ட மன்னர்கள் கட்டுப்பாட்டில் கோவில்கள் இருந்ததால், அரசு கட்டுப்பாட்டில் இந்து கோவில்கள் இருக்க வேண்டும் என கூறப்படும் நிலையில், தமிழகத்தில் பல பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் அரசு கட்டுப்பாட்டில் இருப்பதில்லையே என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இஸ்லாமியர்கள் வழிபடும் பள்ளிவாசல்கள் வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் வருவதை போல் தேவாலயங்களும் அரசு கட்டுப்பாட்டில் வர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும், தேவாலயங்கள் மீது அரசின் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பதிவுசெய்தார்.
மேலும், சிதம்பரம் தில்லை கோவில் உள்ளிட்ட இந்துகள் வழிபடும் கோவில்களுக்கு மன்னர்கள் பொது சொத்தை கொடுத்துள்ளதால் அரசு கட்டுப்பாட்டில் வருவது தவறு இல்லை என்றார். தில்லை கோவிலுக்கு சோழ மன்னன் ராஜராஜன் குடும்பமே நிலங்களை தானமாக வழங்கியுள்ளதாகவும், பொது சொத்துக்கள் கோவில் நிர்வாகத்தில் இருப்பதால் தான் அரசு அதை நிர்வகிக்க முயற்சிப்பதாகவும் குறிப்பிட்ட அவர், தேவாலயங்களுக்கு எந்த பொதுசொத்துக்களும் தானமாக வழங்கப்படவில்லை என்றார்.
பொது சொத்துக்களில் உருவாக்கப்பட்ட கோவில்கள் என்பதால், அதன் நிர்வாகத்தில் அரசு தலையிடுவதாக தெரிவித்தார். மேலும், இந்து சமய அறநிலைய துறையை உருவாக்கியது நீதிக்கட்சி காலத்தில் தான் என்றும், கடவுள் நம்பிக்கை இல்லாத கருணாநிதி போன்றவர்களால் அறநிலை துறை உருவாக்கப்பட்டதாக வதந்தி பரப்பி திராவிட கட்சிகள் கோவில் நிர்வாகத்தில் தலையிடுவதாக ஒரு சிலர் குற்றம்சாட்டுவதாகவும் தெரிவித்தார்.
2021இல் குழந்தை திருமணம் 4வது இடத்தில் இருப்பதாக தகவல் வெளியானது. தமிழகத்தில் பல பகுதிகளில் குழந்தை திருமணங்கள் நடைபெற்றதாக புகார்கள் உள்ளன. ஆனால், சிதம்பரத்தில் மட்டும் அரசு தீவிர கவனம் செலுத்த காரணம் என்ன என்ற கேள்விக்கு, பதிலளித்த பன்னீர் பெருமாள், கடலூரில் 23 குழந்தை திருமணம் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தது. 19 வழக்குகளில் எந்த பிரச்சினையும் எழவில்லை. ஆனால், தீட்சிதர்கள் மீதான 4 வழக்குகள் மட்டும் பெரிதாக பேசப்படுகிறது.
காரணம் தீட்சிதர்களுக்காக ஆளுநரே குரல் கொடுத்தது இங்கு பெரிதாக பேசப்படுகிறது. வறுமையினாலும், அறியாமையாலும் குழந்தை திருமணம் செய்வதை விட கோவில் சொத்துக்காக குழந்தைகளுக்கு திருமணம் செய்பவர்களை மன்னிக்க முடியாது என்றார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அடையாளங்கள் சமூக வலைதளத்தில் பகிரப்படுவதை அரசு தடுக்க தவறிவிட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அடையாளப்படுத்துவது சட்டப்படி குற்றம் என்றதுடன், அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Read in : English