Read in : English
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் இருந்த பல அம்சங்கள் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான திரைப்படத்தில் இடம் பெறவில்லை. நாவலும் சினிமாவும் எப்போதுமே எதிரும்புதிருமானவை. தங்கள் கதைகள் திரைப்படமாக்கப்பட்டவிதத்தைக் கண்டு நொந்துபோய் எழுத்தாளர்கள் வெறுத்துப்போன நிகழ்வுகள் பல உண்டு. உலகம் முழுவதும்.
எடுத்துக்காட்டாக, ஜே.டி.சாலிங்கரின் அங்கிள் விகிலி இன்கனெக்டிகட் என்ற சிறுகதையைத் தழுவி மைஃபூலிஷ்ஹார்ட் (1949) என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. கதைக்கும் படத்திற்கும் சம்பந்தமே இல்லாத முறையில் தனது கதைகெடுக்கப்பட்டுவிட்டது என்று கொந்தளிந்த சாலிங்கர் அதன்பிறகு ஹாலிவுட்டுக்கு தனது கதைகளின் உரிமையைக் கொடுக்கமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார். ஆனால் மைஃபூலிஷ் ஹார்ட் படம் பெற்ற அகாதமி விருது பரிந்துரைகள் சாலிங்கரை வாயடைத்துப் போகச்செய்தன.
அதைப்போல தமிழ் எழுத்தாளர் சுஜாதாவும் பிரியா என்ற படம் எப்படி தனது கதையைக் கொத்திக்கொத்திச் சிதைத்தது என்பது பற்றி எழுதியிருக்கிறார்.ஆனால் அவர் வெற்றிபெற்ற வணிக எழுத்தாளர் என்பதால், திரைப்படங்களுக்கென்று தனியாகக் கதை வசனம் எழுதி சினிமாவில் ஜெயித்தார் என்பது வேறு வரலாறு.
கல்கி இப்போது உயிருடன் இருந்திருந்தால், இயக்குநர் மணிரத்னம் எடுத்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் தனது கதையை மாற்றியமைத்ததற்கு எப்படி எதிர்வினையாற்றியிருப்பார் என்று தெரியவில்லை.
தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் சரி, 2022-ல் வெளியான முதல் பாகமும் சரி, இரண்டுமே வணிகத் திரைப்பட வெற்றிச்சூத்திரத்தில் வேர்ப்பரவவிட்டிருக்கும் மணிரத்தினத்தின் மணியான வெள்ளித் திரைப்படைப்புகள்தான்.
கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் மூன்று தலைமுறை வாசகர்களை இன்னும் வசீகரித்துக் கொண்டிருக்கின்ற ஓர் இலக்கியப் படைப்பு. அந்த வாசகர்களுக்கு வாசிப்பு அனுபவம் தந்த உணர்வை அந்தத் திரைப்படம் தந்திருக்கிறதா என்பது விவாதத்துக்குரிய விஷயம்
ஆனால் ஐந்து பகுதிகளையும், 1,000-க்கும் மேற்பட்ட பக்கங்களையும் கொண்ட கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் மூன்று தலைமுறை வாசகர்களை இன்னும் வசீகரித்துக் கொண்டிருக்கின்ற ஓர் இலக்கியப் படைப்பு. அந்த வாசகர்களுக்கு வாசிப்பு அனுபவம் தந்த உணர்வை அந்தத் திரைப்படம் தந்திருக்கிறதா என்பது விவாதத்துக்குரிய விஷயம்.
பொன்னியின் செல்வன் இரண்டு பாகத் திரைப்படங்களில் நாவலில் இருந்த பல அம்சங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன; இல்லாதவை சேர்க்கப்பட்டிருக்கின்றன; திரிக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால் நாவல் தந்த உணர்வை இந்த திரைப்படங்கள் தரவில்லை என்பது பல வாசகர்களின் கருத்து.
மேலும் படிக்க: பொன்னியின் செல்வன் 2: ஆதித்த கரிகாலனின் உண்மை கொலையாளியை அம்பலப்படுத்துமா?
ஆயினும் நாவலை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களின் உள்ளடக்கத்தைத் திரைக்குத் தகுந்த மாதிரி மாற்றி எழுத வியர்வை சிந்தி உழைக்கும் திரைக்கதை எழுத்தாளர்கள் அசல் படைப்புக்குத் தாங்கள் செய்யும் துரோகத்தை நியாயப்படுத்தப் பயன்படுத்தும் ஒரே வார்த்தை: தழுவல். 19-ஆம் நூற்றாண்டு ஆங்கில சரித்திர எழுத்தாளர் சர் வால்டர் ஸ்காட்டின் இவான் ஹோ போன்ற சரித்திரப் படைப்புகள் படமாக்கப்பட்டபோது அவைத் தழுவல்களாக இல்லையா? அப்படியேவா எடுத்தார்கள்? இப்படி திரைக்கதை எழுத்தாளர்கள் வாதாடலாம். ஆனால் பொன்னியின் செல்வன் வாசகர்கள் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்வர்களா என்பது சந்தேகம்.
மதுராந்தகச் சோழனின் பிறப்புப் பின்னணியில் கற்பனையானதொரு மர்மத்தை கல்கி கட்டமைத்திருந்தார்.1950-களில் கல்கி இதழில் இந்தக் கதை தொடராக வெளிவந்து கொண்டிருந்தபோது இந்த மர்மம் தான் வாசகர்களை வாரக்கணக்கில் திக்குமுக்காட வைத்தது. அதுவரை சோழப்பேரரசி செம்பியன் மாதேவியின் மகனாகக் கருதப்பட்டு, சோழ அரியணைக்கு உரிமைகொண்டாடிய மதுராந்தகன் உண்மையில் அரசியின் மகன் இல்லை என்று இறுதியாக ‘தியாகத்தின் சிகரம்’ என்ற பகுதி-5இல் வெளியான தகவல் வாசகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
புதிதாகப் பிறந்த குழந்தைகள் மாற்றப்பட்டிருக்கின்றன என்ற செய்தி புதினத்தில் ஓர் அதிரடித் திருப்பம்.செம்பியன் மாதேவியின் ஆண் குழந்தையும், காதுகேளாத, வாய்பேசமுடியாத வேலைக்காரியின் ஆண் குழந்தையும் மாற்றப்பட்டுவிட்டன. தன் குழந்தை இறந்துவிட்டது என்று நினைத்து அதை வேலைக்காரியிடம் ஒப்படைத்தார்.
செம்பியன் மாதேவி.பின்பு வளர்ப்புத்தாய் வாணிஅம்மையால் சிவநெறிகளில் வளர்க்கப்படும் பூக்காரன் சேந்தன் அமுதன்தான் உண்மையான மதுராந்தகச்சோழன் என்ற உண்மைக்கதை முடிவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு தெரியவர தனக்குச் சித்தப்பா முறையான சேந்தன் அமுதனுக்கு மதுராந்கச்சோழன் என்ற உத்தமச்சோழனாக அருள்மொழி வர்மன் முடிசூட்டுகிறான். இதுதான் கல்கி வரைந்த பரபரப்பான சித்திரம்.
ஆனால் திரைப்படத்தில் இந்த அதிரடிக்காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டன. யாரைப் போலி மதுராந்தகச்சோழர் என்று கல்கி காட்டியிருந்தாரோ அவருக்கே (ரகுமான்) திரைப்படத்தில் அருள்மொழிவர்மன் முடிசூட்டுகிறான். உப்புசப்பில்லாமல் போய்விட்ட இந்தக் காட்சிகளில் நாவலில் இருந்த பரபரப்பும் இல்லை. விறுவிறுப்பும் இல்லை.
ஏற்கனவே பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் வந்தியதேவன் குந்தவையையும் வானதியையும் சந்திக்கும் காட்சிகள் நாவலில் காட்டப்பட்ட காட்சிகளிலிருந்து மிகவும் வேறுபட்டவை. ஒரு ஜோதிடரின் வீட்டில் அவர்கள் சந்திக்கும் காட்சியும், பின்னர் ஆற்றங்கரையில் ’டம்மி’ முதலைக்காட்சியும் நாவலில் நேர்த்தியாக விவரிக்கப்பட்டுள்ளன. அந்த அசல் காட்சிகளுக்குப் பதிலாக வெறும் நடனக் காட்சியில் அவர்கள் அறிமுகம் ஆவது போல திரைப்படம் காட்டியிருந்தது.
மணிரத்னம் கற்பனையைவிட வரலாற்றுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருப்பது போல தெரிகிறது. எழுத்தில் கல்கி, வரலாற்றைவிட தனது கற்பனைத் திறனையே அதிகம் நம்பியிருந்தார்
கல்கி தன் படைப்புச் சுதந்திரத்தை வரலாற்றோடு இணைத்து நாவலில் தன் கற்பனைக் குதிரையைத் தாராளமாக ஓடவிட்டிருக்கிறார் என்பது உண்மைதான். உதாரணமாக, அருள்மொழி வர்மன் இலங்கையில் இருப்பதுபோல நாவல் காட்டியிருக்கிறது. ஆனால் அருள்மொழி வர்மன் என்ற முதலாம் ராஜராஜசோழன் கி.பி 985-இல் ஆட்சிக்கு வந்த பின்னரே இலங்கை மீது படையெடுத்தான் என்று வரலாறு கூறுகிறது.
சம்புவராயர்கள் 12-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே சோழநாட்டின் முக்கியத் தூண்களாக மாறினர் என்றாலும், கல்கி அவர்களை 10-ஆம் நூற்றாண்டிலே தன் நாவலில் கொண்டு வந்திருக்கிறார். வரலாற்று ரீதியாக ஒரே ஒரு பழுவேட்டரையர் மட்டுமே இருந்தார், ஆனால் கல்கி இரண்டு பழுவேட்டரையர் சகோதரர்களை உருவாக்கி அவர்களில் மூத்தவர் நந்தினியை மணப்பது போன்ற ஒரு புனைவை உருவாக்கினார்.
மேலும் படிக்க: வசூலில் குவிக்குமா மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2?
கல்கி காட்டிய இரண்டு மதுராந்தகர்களில் ஒருவர் முழுக்கமுழுக்க அவரது கற்பனை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த கற்பனைத் திருப்பம் தான் நாவலின் பரபரப்பைக் கூட்டியது. ஆனால் மணிரத்னம் கற்பனையைவிட வரலாற்றுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருப்பது போல தெரிகிறது. எழுத்தில் கல்கி. வரலாற்றைவிட தனது கற்பனைத் திறனையே அதிகம் நம்பியிருந்தார்.
அதைப்போல திரைப்படத்தில் தன் அனுபவத்தையும் திறமையையும் மட்டுமே மணிரத்தினம் அதிகம் நம்பியிருக்கிறார் போல! அதனால்தான் கல்கியின் நாவலில் இருக்கும் பல காட்சிகளை அவர் மீளுருவாக்கம் செய்திருக்கிறார்; பல காட்சிகளை வெட்டி எறிந்திருக்கிறார். கல்கி வெறும் வசனங்களில் சொன்ன நாவல் காட்சிகளுக்கு ஸ்தூல வடிவம் கொடுத்திருக்கிறார் மணிரத்னம்.
எடுத்துக்காட்டாக, நந்தினி- ஆதித்த கரிகாலன் ஜோடியின் பதின்ம வயதுக் காதலையும், வந்தியதேவன்-குந்தவையின் அழகியல் காதலையும் கல்கி நேரடிச் சித்திரமாக எழுதியிருக்கவில்லை; இலைமறைக்காயாகத்தான் காட்டியுள்ளார். ஆனால் மணிரத்னம் திரைப்படம் என்னும் அழகியல் கலை ஊடகத்தின் தேவைகளுக்காக அவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். கல்கி பூடகமாகச் சொன்னார்; மணிரத்னம் நாடகமாகச் சொன்னார் .காரணம், 1950கள் 2020-கள் அல்லவே!
ஆனால் வந்தியத்தேவன் மீது ஒரு தலைக் காதல் கொண்டிருந்த மணிமேகலை என்ற சம்புவரையர் மகள் (கந்தமாறன் தங்கை) ஆதித்த கரிகாலனைத்தான் கொன்றதாகப் புலம்பிக்கொண்டு பைத்தியமாகும் காட்சிகள் திரைப்படத்தில் இல்லை. நந்தினியின் வசீகரமும், குந்தவையின் கம்பீரமும் மணிமேகலையிடம் இல்லைபோலும்!
மதுராந்தகன் விசயம் சம்பந்தமாக நாவல் சொல்லியிருந்தபடி படம் எடுக்கப்பட்டிருந்தால், சேந்தன் அமுதனாக நடித்த நடிகர் அஸ்வின்கக்குமனுக்கு முக்கியத்துவம் கூடியிருக்கும். அதனால் அவரது ரசிகர்கள் தங்களது ஏமாற்றத்தை ’ட்வீட்’ செய்துள்ளனர்.
எது எப்படியிருந்தாலும், திரைப்படக் கலையின் வணிகத் தேவைகளும் நிர்த்தாட்சண்ய நிர்ப்பந்தங்களும் முற்றிலும் வேறு. எழுத்து முக்கியமென்றாலும், எழுதியதையெல்லாம் திரைப்படமாக்க முடியாது என்பது நிதர்சனம்.
ஒரு வேளை இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கியதற்குப்பதில் ‘அதை ‘வெப்சீரிஸ்’ஸாக எடுத்திருந்தால் புதினத்தை அப்படியே எடுத்திருக்க முடிந்திருக்குமோ என்னவோ!
Read in : English