Read in : English

ஒரு வரலாற்றுப் படம் திரையில் ஓடும்போது, ரசிகர்கள் மனதில் பிரமாண்டம் நிறைந்து வழிய வேண்டும். காட்சிகளும் சரி, ஒலிகளும் சரி; நம்மைப் பல நூற்றாண்டுகள் அழைத்துச் செல்லும் தொனியில் இருக்க வேண்டும். அக்காலம் இப்படித்தான் இருந்திருக்கும் என்றெண்ணும் அளவுக்கு, மிரட்சியடைய வைக்கும் உழைப்பு அதில் கொட்டப்பட்டிருக்க வேண்டும்.

மிக முக்கியமாக, சமகாலத்தை நினைவுபடுத்தும் எதுவுமே திரையில் தென்பட்டுவிடாமல் கவனம் செலுத்த வேண்டும். ‘பொன்னியின் செல்வன் 2’ படக்குழு மேற்சொன்ன எல்லாவற்றையும் திட்டமிட்டு, கனகச்சிதமாக ஒவ்வொரு பிரேமையும் இழைத்து, தங்கள் படைப்புக்கு உயிரூட்டியிருக்கும். பொன்னியில் செல்வன் 1 பெற்ற மாபெரும் வெற்றியே, அதனைச் செய்யப் பணித்திருக்கும்.

முதல் பாகத்தில் பாடல்கள் கொண்டாடப்பட்ட போதிலும், அவற்றில் பழமை இழையோடவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தற்போது இரண்டாம் பாகத்தின் பாடல்கள் வெளியாகி ரசிக்கப்படுகின்றன. இப்பாடல்களாவது நூற்றாண்டுகளுக்கு முந்தைய கணங்களை உயிர்ப்பிக்கின்றனவா? இன்னும் சில நாட்கள் கழித்து படம் வெளியாகும்போது, தியேட்டர்களில் இப்பாடல்கள் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறும்? அந்தக் கேள்விகளே, திரும்பத் திரும்ப இப்பாடல்களுக்குள் நம்மை மூழ்க வைக்கின்றன.

’ஆறு ஆறா ரெண்டு பாகத்தைப் பிரிச்சுக்கோ’ என்று ‘பாட்ஷா’ ரஜினியைப் போலவே தனக்கென்று தனி பாணியை மணிரத்னம் கைக்கொண்டாரா என்று தெரியவில்லை. பொன்னியில் செல்வன் 1ஐ போலவே, இதிலும் ஆறு பாடல்கள். ஒரு பாடல் மட்டும் இரண்டு முறை இடம்பெற்றுள்ளது. மேற்கத்திய திரைப்படங்களில், ஒரு பிரேமில் எந்தெந்த இடங்களில் எல்லாம் ஒளி தென்பட வேண்டுமென்ற கணக்கு பின்பற்றப்படும். அதுபோன்று, திரைக்கதையில் எந்தெந்த இடங்களில் பாடல்கள் இடம்பெறும் என்பதையும் அவர் திட்டமிட்டிருப்பார்.

‘அகநக அகநக முகநகையே’ பாடல். இளங்கோ கிருஷ்ணனின் பாடல் வரிகள் எளிதாகப் புரிய முடியாதவாறு இருந்தாலும், திரும்பத் திரும்பக் கேட்கும்போது அவை கற்கண்டாய் இனிப்பது உண்மை

இந்த ஆல்பத்தில் முதன்முறை கேட்டவுடனே நம் மனதோடு ஒட்டிகொள்கிறது ‘அகநக அகநக முகநகையே’ பாடல். இளங்கோ கிருஷ்ணனின் பாடல் வரிகள் எளிதாகப் புரிய முடியாதவாறு இருந்தாலும், திரும்பத் திரும்பக் கேட்கும்போது அவை கற்கண்டாய் இனிப்பது உண்மை.

இதில் ‘நடை பழகிடும் தொலை அருவிகளே’ என்ற வார்த்தைப் பிரயோகம் சந்தத்திற்குள் அடங்குமா என்ற சந்தேகத்தை எழுப்பினாலும், அந்த கற்பனை புதிதல்ல. அதே நேரத்தில், குடை பிடித்திடும் நெடுமரச் செறிவே என்பது போன்ற வரிகள் நிச்சயம் தமிழ் திரையிசைக்குப் புதிது.

மேலும் படிக்க: பொன்னியின் செல்வன்: ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் ரசிகரை ஈர்க்கவில்லையா?

குந்தவையும் வந்தியத்தேவனும் பாடும் காதல் பாடல் இது என்பதை பாடல் வரிகளைத் தாங்கிய வீடியோ சொல்லிவிடுகிறது. இந்த பாடலில் சரணத்தில் வரும் வரிகள் ஆண், பெண் இருவரும் மாறி மாறிப் பாடும் தொனியில் எழுதப்பட்டது போன்றிருக்கிறது. ஆனால், முழுப்பாடலையும் சக்திஸ்ரீ கோபாலன் பாடுவதாக மாற்றியது ஏனோ தெரியவில்லை. ’அழகிய புலமே உனதிள மகள் நான்.. வளவனின் நிலமே.. எனதரசியும் நீ’ என்பது போன்ற வார்த்தைகள் மாறி மாறிக் காதலைப் பொழியும் இரண்டு மனங்களையே பிரதிபலிக்கின்றன. இது நம் மனதில் பட்டது.

உண்மை என்னவென்பது மணிரத்னம் குழுவினருக்கே வெளிச்சம். இந்த பாடலின் இடையே ‘உன் மடி கிடந்தால் தவிதவிக்கிறதே.. நினைவழிந்திடுதே’ என்று சக்திஸ்ரீ குரல் நீளும்போது, கல் மனதுக்குள் புதைந்திட்ட காதலும் தானாகப் பீறிடாவிட்டால் ஆச்சர்யம்!

’காணீரோ’ என்று தொடங்கும் வீரா ராஜ வீர பாடல், ராஜராஜ சோழனாகக் கொண்டாடப்பட்ட அருள்மொழிவர்மனின் வீரத்தைப் பறை சாற்றும் வகையிலானது. கேட்டவுடன் பிடித்துப் போகும் வகையில் அடங்காது இப்பாடல். நிச்சயம் தியேட்டருக்குச் செல்லும் முன்பாகப் பலமுறை ரசிகர்கள் கேட்க வேண்டியது. அப்போதுதான், திரையில் தெரியும் பிரமாண்ட காட்சிகள் நம் நெஞ்சில் விஸ்வரூபமெடுக்கும். இந்த பாடலின் சிறப்பே, ஒவ்வொரு வரியின் இறுதியிலும் உள்ள வார்த்தை ‘குறில்’ ஆக அமைந்திருப்பது.

‘வீரா’ என்று நெடிலாக அமைவதுதான் உரக்கப் பாட வசதியாக இருக்கும். இதிலோ, பல வார்த்தைகள் வீர, சூர என்றே முடிகின்றன. மாண்டேஜ் பாணியில் அமைந்திருப்பது இதன் இன்னொரு சிறப்பு. கொஞ்சம் கண் மூடி தியானித்து இப்பாடலைக் கேட்டால், கதையின் வெவ்வேறு கட்டங்கள் வரிகளில் நிறைந்திருப்பது புரியும். அதற்கேற்றவாறு இடையிசை முடியும் முன்பே பல்லவி ஆங்காங்கே ஒலிப்பதைக் காண முடியும். இதில் சாதாரண பெண்ணாக ஹரிணியைப் பாட வைத்துவிட்டு, நடுவில் மட்டும் சித்ராவைப் பாட வைத்திருக்கிறார் ரஹ்மான்; அந்த இடம் நாயகிக்கானது என்பது பிடிபடுகிறது. இதிலும் பாடலாசிரியர் கோர்த்திருக்கும் சொல்லாடல் பொதுவான திரையிசை எழுத்திற்கு மாறானது.

ஒரு குழந்தையின் தாலாட்டு போல தொடங்குகிறது ‘சின்னஞ்சிறு நிலவே’. இது, ‘காதலன்’ படத்தில் வரும் ‘இந்திரையோ இவள் சுந்தரியோ’ பாடலை நினைவூட்டுகிறது. காதல் பிரிவை நினைத்து வருந்தும் ஆன்மாவின் குரலாக, இதில் ஹரிசரண் குரல் அமைந்துள்ளது. இப்பாடலில் வரும் இடையிசை, கொடிய போர்க்காட்சிகளுக்கு இடம் தருவதாக உள்ளது.

கதீஜா ரஹ்மானின் குரலில் ஒலிக்கும் இதன் இன்னொரு வடிவம், மனக்குழப்பத்தில் ஏதும் செய்யவியலா பெண்குரலென எண்ண வைக்கிறது. ஒருவேளை, இப்பாடல் ஆதித்த கரிகாலன் குறித்த முதிர்ச்சியடைந்த நந்தினியின் எண்ணவோட்டமாக அமையக்கூடும்; பற்றுவதற்கான வாய்ப்பைப் பொசுக்கிக் கொண்ட காதல் தீயாகவும் இருக்கலாம். ஆனால், பாடலைக் கேட்டு முடித்ததும் ஹரிசரண் பாடிய முதல் வடிவத்தின் ‘ரீமிக்ஸ்’ என்றே எண்ணத் தோன்றுகிறது.

பழந்தமிழ் இசையைக் கேட்க விரும்பியவர்களுக்கு, இப்பாடல்கள் எதுவும் தரவில்லை என்பதே உண்மை. அதேநேரத்தில், தியேட்டரில் ஒரு கமர்ஷியல் படம் பார்க்க வந்த ரசிகனை இப்பாடல்கள் எந்தவிதத்திலும் ஏமாற்றாது

ஹரிணியின் குரலில் ஒரு குறும்பாடலாக ஒலிக்கிறது ’ஆழி மழை கண்ணா’ பாடல். ஆழி என்ற வார்த்தையே, இது படகோட்டும் பெண்ணாக வரும் பூங்குழலியின் மனக்கருத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும் என்ற அனுமானத்தை ஊட்டுகிறது. அருண்மொழி வர்மனின் மீது அதீத அன்பைக் கொண்டிருக்கும் அப்பெண்ணின் மன வருத்தமாகவோ, ஏக்கமாகவோ அல்லது சொல்ல இயலாத உணர்வாகவோ இப்பாடலின் பின்னணி இருக்கலாம்.

மேற்சொன்ன நான்கு பாடல்களும் இளங்கோ கிருஷ்ணனின் கைவண்ணத்தில் அமைந்தவை. இதே உத்வேகத்துடன், அவர் இன்னும் பல பாடல்கள் எழுத வேண்டும்.

குடவாயில் கீர்த்தனாரின் ’இளையோர் சூடார் வளையோர் கொய்யார்’ பாடல், கர்நாடக இசை மேடைகளில் ஒலிக்கும் தமிழ் பாடல் போலிருக்கிறது. இது ஒரு புறநானூற்றுப் பாடல்.

மேலும் படிக்க: பொன்னியின் செல்வன் 2: ஆதித்த கரிகாலனின் உண்மை கொலையாளியை அம்பலப்படுத்துமா?

கீர்த்தனா வைத்தியநாதன் பாடியிருக்கும் இப்பாடலும் இரண்டு நிமிடத்திற்கும் குறைவாகவே ஒலிக்கிறது. பாடல் வரிகள், ஒரு மரணச் செய்திக்குப் பின் சோழ நாட்டில் இருப்பவர்களின் மனநிலையை வெளிப்படுத்தப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். கல்கியின் கதையைப் படித்தவர்கள், ஆதித்த கரிகாலன் மறைவுக்குப் பிறகு இப்பாடல் ஒலிக்குமென்று தாராளமாக நம்பலாம்.

பொன்னியின் செல்வன் 2இல் இடம்பெற்றிருக்கும் ‘சிவோகம்’ பாடலும் குறுகியது தான். இது ஆதி சங்கரரின் நிர்வாண ஷட்கத்தை அடிப்படையாகக் கொண்டது. பாடல் வீடியோவில் இடம்பெற்றிருக்கும் ரகுமானின் இருப்பு, இது மதுராந்தக சோழருக்குச் சிவனடியார்கள் தரும் மரியாதையை வெளிப்படுத்துவதாக உள்ளது. கதையின் முக்கியமான கட்டத்தில் இடம்பெறுவதை உணர்த்துவதாகவும் இது விளங்குகிறது.

படத்தில் வரும் காட்சிகளுக்கேற்ப, இப்பாடல் ஒவ்வொன்றும் திரும்பத் திரும்ப தொலைக்காட்சிகளிலும் மொபைல் திரைகளிலும் ஹிட் அடிக்கலாம்.

புத்தம்புதிய ஒலிகள் ஒன்றிணைந்து இசையாக மாறும் மாயாஜாலத்தை ரஹ்மானின் பாடல்களில் காண முடியும். தான் பங்கேற்கும் படத்தின் கதைக்கேற்ப, விதவிதமான வாத்தியங்களைத் தேடும் ஆர்வமும் அவரிடம் உண்டு. ஆனால், பொன்னியின் செல்வன். இரு பாகங்களிலும் அது நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. அந்த வகையில், ரஹ்மான் நிகழ்த்தும் மாயாஜாலம் இதில் தொலைந்திருக்கிறது.

பழந்தமிழ் இசையைக் கேட்க விரும்பியவர்களுக்கு, இப்பாடல்கள் எதுவும் தரவில்லை என்பதே உண்மை. அதேநேரத்தில், தியேட்டரில் ஒரு கமர்ஷியல் படம் பார்க்க வந்த ரசிகனை இப்பாடல்கள் எந்தவிதத்திலும் ஏமாற்றாது. பழந்தமிழ் இசைக்கூறுகளை எழுத்து வடிவில் அறிய முடியும் என்றபோதும், அந்த இசைக்கருவிகளையோ அல்லது அதன் உட்கூறுகளையோ மறு ஆக்கம் செய்வது இயலாத காரியம். அதனை முன்னெடுக்க பொன்னியின் செல்வன்.2 முயற்சிக்கவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

படம் வெளியான சில வார காலத்திற்கு, இந்த பாடல்கள் எல்லாம் சமூகவலைதளங்களின் இண்டு இடுக்குகளில் புகுந்து புறப்படும் என்பது தெரிந்த கதைதான். அந்த ஆரவாரம் அடங்கியபிறகும் கொண்டாடப்படுமா என்பது கேள்விக்குறியே..

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival