Read in : English

Share the Article

சாதாரண மக்களின் அரசியல் புரிதல் எப்படிப்பட்டதாக இருக்குமென்பதைப் பேசியிருக்கிறது வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் விடுதலை பாகம்-1 திரைப்படம். அது எல்லோரும் உணர்ந்துகொள்ளும்படியாக இருக்கிறதா என்ற கேள்வியே, அத்திரைப்படம் ஓடும் திரையரங்குகளுக்கு நம்மை இழுத்துச் சென்றது.

அருமபுரி அருகே ரயில் பாலமொன்று வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படுகிறது. ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் கடக்கும்போது நிகழ்ந்த காரணத்தால், முப்பதுக்கும் மேற்பட்டோர் இறந்துபோகின்றனர். சம்பவ இடத்தில் கிடந்த துண்டறிக்கைகளைக் கொண்டு, ‘மக்கள் படை’ எனும் தீவிரவாத இயக்கம் அந்த சதியின் பின்னணியில் இருப்பதாகச் சொல்கிறது காவல் துறை. அதையடுத்து, மக்கள் படைக்கு ஆதரவளிப்பவர்கள் முதல் உதவிகள் செய்பவர்கள் வரை அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கிறார் தலைமைச்செயலாளர் ஏ.சுப்பிரமணியம் (ராஜீவ் மேனன்).

பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி), என்ஜினியர் ரமேஷ் உட்பட அவ்வியக்கத்தின் தலைவர்கள் தேடப்படும் குற்றவாளிகளின் வரிசையில் சேர்க்கப்படுகின்றனர். அதன் தொடர்ச்சியாக, அருமபுரி அருகே ராகவேந்தர் (சேத்தன்) தலைமையில் ஒரு தனிப்படை முகாமும் அமைக்கப்படுகிறது.

அந்த முகாமுக்கு மாற்றலாகி வருகிறார் கடைநிலை காவலர் குமரேசன் (சூரி). முகாமைச் சுற்றியிருக்கும் சோதனைச்சாவடிகளில் பணியாற்றும் காவலர்களுக்கு உணவு எடுத்துச் செல்வதுதான் அவரது பணி. முதல் நாளே, ராகவேந்தர் உத்தரவை மீறி உயிருக்குப் போராடும் ஏழை மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் குமரேசன். அதனால், பல நாட்கள் தொடர்ச்சியாக இரவு பகல் பாராமல் வேலை செய்யும் கொடுமைக்கு ஆளாகிறார்.

அந்த காலகட்டத்தில், அந்த மூதாட்டியின் பேத்தி தமிழரசி (பவானிஸ்ரீ) உடன் ஏற்படும் பழக்கமே அவருக்கு ஆறுதல் தருகிறது. நாட்கள் செல்லச் செல்ல, அது காதலாகிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தான் இதுவரை இயக்கிய படங்களை விடக் கூடுதலான நேர்த்தியுடன் ‘விடுதலை பாகம்-1’ தந்திருக்கிறார் வெற்றிமாறன்

இதற்கிடையே, யாருமே நேரில் பார்த்தறியாத பெருமாள் வாத்தியாரின் வரைபடம் போலீஸ் தரப்பில் தயாரிக்கப்படுகிறது. அந்த படத்தைப் பார்க்கும் குமரேசன், தான் அந்த நபரை நேரில் பார்த்ததாகச் சொல்கிறார். உடனிருக்கும் போலீஸ்காரர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.

இந்தச் சூழலில், தமிழரசி – குமரேசன் காதலை ஏற்றுக்கொள்ள அந்த மூதாட்டி (அகவம்மா) மறுக்கிறார். ‘நம் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மக்கள் படையில் இருப்பதை அறிந்தால், அந்த போலீஸ்காரர் ஏற்றுக்கொள்ள மாட்டார்’ என்று தமிழரசியிடம் காரணம் சொல்கிறார். குமரேசனிடம் உண்மையைச் சொன்னபிறகு, அவரும் அப்படித்தான் எதிர்வினை ஆற்றுகிறார்.

மேலும் படிக்க: சிம்பு நடித்துள்ள பத்து தல: பொருந்தாத ரீமேக் முயற்சி

சில நாட்களுக்குப் பிறகு, தமிழரசியின் குடும்பம் போலீசாரால் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டது என்றறியும்போது மனம் மாறுகிறார் குமரேசன். இருவரும் வாழ்வில் ஒன்று சேரலாம் என்றெண்ணும்போது, தமிழரசியின் கிராமத்தைச் சேர்ந்தவர்களைக் கொத்துகொத்தாக அள்ளுகின்றனர் போலீசார். மக்கள் படையைச் சேர்ந்தவர்களின் உறவினர் யார் என்று கேட்டு, அவர்களை விசாரிக்கின்றனர்.

பெண்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதைகள் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமான கட்டத்தை எட்டுகிறது. அந்த கொடுமைகளுக்கு தமிழரசி ஆளாகிவிடக் கூடாது என்று பதைபதைக்கும் குமரேசன், வாத்தியார் பெருமாள் இருக்கும் இடத்தைத் தனது மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்கிறார்.

அதன்பிறகு வாத்தியார் போலீசாரிடம் பிடிபட்டாரா? தமிழரசி போலீசாரின் அத்துமீறல்களில் இருந்து விடுபட்டாரா என்றறிய ‘விடுதலை பாகம்-1’யை முழுமையாகப் பார்த்தாக வேண்டும்.

அருமபுரி மலைப்பிரதேசத்தில் வெளிநாட்டு சுரங்க நிறுவனமொன்று முதலீடு செய்ய மாநில அரசு அனுமதி வழங்குவதுதான் மக்கள் படையின் எதிர்ப்புக்கான காரணமாகப் படத்தில் சொல்லப்படுகிறது. ’100 பேர் இருக்குற ஊர்ல 100 அடியில ரோடு போடுறாங்கன்னா அது மக்களுக்காகவா, இல்ல அங்க வர்ற கார்பரேட் கம்பெனிகளுக்காக’ என்பது போன்ற வசனங்களே நலத்திட்டங்கள் யாருக்கானவை என்ற கேள்வியை எழுப்புகின்றன. கூடவே, இப்படம் பேசும் அரசியல் யாருக்கானது என்பதையும் சொல்கின்றன.

1987ஆம் ஆண்டில் நிகழ்வதாக, ‘விடுதலை பாகம்-1’ திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. எண்பதுகளில் மார்க்சியம், தமிழ் தேசியம் சார்ந்து சில குழுக்கள் புரட்சிகரமான கருத்துகளைப் பேசின. ஆனால், அவ்வாறு இயங்கிய குழுக்களின் கொள்கை ரீதியான விளக்கங்கள் இப்படத்தில் இடம்பெறவில்லை.

சமதர்மம், சமூக நீதி என்று அனைத்து கட்சிகளும் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் கூடப் பயன்படுத்தப்படவில்லை. அதற்கு மாறாக, காவல் துறையின் அத்துமீறல்களால் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கை எவ்வாறு நசிக்கப்படுகிறது என்பதைச் சொல்கின்றன சில காட்சிகள்.

படம் நிகழ்வதாகச் சொல்லப்படும் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த அதிமுகவையும் எம்ஜிஆரையும் மிக நுணுக்கமாக விமர்சிக்கிறது ‘விடுதலை’ என்பதை மறுப்பதற்கில்லை

போலீசாரின் அடக்குமுறைகளை விமர்சிக்கும்போது, அதனை மேற்கொள்பவர்களின் மனம் எந்த பக்கம் நிற்கும் என்ற கேள்வி எழும். அதற்கான பதிலாக, காவல் துறையில் மேலதிகாரிகளின் உத்தரவுகளை ஏற்காத ஒரு கீழ்நிலைப் பணியாளர் எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கப்படுவார் என்பதை குமரேசன் பாத்திரம் மூலமாக உணர்த்துகிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

எந்தவொரு அரசியலையும் சாராத, அறியாத சாதாரண குடிமகனே குமரேசன். காவலரின் பணியே மக்கள் நலம் பெற உதவுவது என்ற அடிப்படைப் புரிதலோடு இருப்பதாகக அப்பாத்திரத்தைக் காட்டுவது, போலீசாரின் மனசாட்சி குறித்த விமர்சனங்களுக்கான பதிலாக உள்ளது. இந்த படத்தில், கீழ்நிலைக் காவலர்களுக்கான உணவைத் தரமற்ற வகையில் தயாரிப்பதாக ஒரு அதிகாரியின் பாத்திரம் காட்டப்படுகிறது. விலை மலிவான சவ்சவ்வை வாங்கிப் பயன்படுத்துவதால், ‘சவ்சவ்’ என்றே அவர் கிண்டலடிக்கப்படுகிறார்.

மேலும் படிக்க: தமிழ்நாட்டு அரசியலை விமர்சிக்கிறதா ‘செங்களம்’?

முகாம் பொறுப்பாளர் ராகவேந்தர், ஏழைப்பெண்களையும் ஆண்களையும் விசாரணை என்ற பெயரில் அருவருக்கத்தக்க சித்திரவதைகளுக்கு ஆளாக்குகிறார். தனிப்படை அதிகாரியாக நியமிக்கப்படும் சுனில் மேனன், விசாரணைக்கு அழைத்துவரப்பட்டவரின் நகங்களை ஒவ்வொன்றாகப் பிடுங்குகிறார்.

ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளரோ, ‘சூப்பர் பாஸ் என்ன நினைக்கார்னு தெரியலை’ என்று முதல்வரின் மனமறிந்து விஷயத்தைத் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்த்துகிறார்.

இப்படி ஒவ்வொரு பாத்திரமும் அதற்குரிய நியாயங்களைப் பேசும் வகையிலேயே திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதுவே, எவ்வித அரசியல் அறிவுமற்ற ஒரு ரசிகர் ஒரு கதையாக இப்படத்தை ரசிக்கவும் காரணமாகிறது. அதேநேரத்தில், படம் நிகழ்வதாகச் சொல்லப்படும் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த அதிமுகவையும் எம்ஜிஆரையும் மிக நுணுக்கமாக விமர்சிக்கிறது ‘விடுதலை’ என்பதையும் மறுப்பதற்கில்லை.

பா.ரஞ்சித்தின் ‘சார்பட்டா’வும் ரஃபீக்கின் ‘ரத்தசாட்சி’யும் கூட, இது போன்ற விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றன. அப்படங்களைப் போலவே, இதிலும் அந்த இடங்களில் வரும் வசனங்கள் ‘மியூட்’ செய்யப்பட்டிருக்கின்றன. ‘இல்ல, இவரு நிஜமாவே வாத்தியாரு.. டீச்சரா இருந்தவரு’ என்பது போன்ற வசனங்கள் எதைச் சொல்ல முனைகின்றன என்பதை அறுபது எழுபதுகளில் பிறந்தவர்களே முழுமையாக உணர முடியும்.

போலவே, 1987இல் நிகழ்ந்த அரியலூர் ரயில் பாலம் தகர்ப்பு, வாச்சாத்தி வன்முறை போன்றவற்றைச் செய்தித்தாள்களின் வழியே அறிந்தவர்களால், இப்படத்தில் அவற்றின் சாயல் இருப்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

சூரி நன்றாக நடித்தார், பவானிஸ்ரீ மலைவாழ் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தனித்தனியாக விமர்சிப்பதைவிட, ‘விடுதலை பாகம்-1’இல் ஓரிரு பிரேம்களில் வந்து போனவர்கள் கூட மிகச்சிறப்பாக நடித்துள்ளனர் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். கிட்டத்தட்ட 3 டஜனுக்கும் மேற்பட்டோர் தங்கள் முகத்தைத் திரையில் காட்ட அனுமதி தந்திருக்கிறது திரைக்கதை.

ஆனால், ஒரு பிரேமில் கூட ரசிகர்கள் தலையைத் திருப்ப அனுமதி தர மறுத்திருக்கிறது ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மற்றும் படத்தொகுப்பாளர் ராமரின் உழைப்பு.

நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதியுடன் இயக்குனர் வெற்றிமாறன்

இதுவரை தமிழ் திரை கண்டிராத ஒரு வனப்பகுதியை இதில் காட்டியிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். அதற்காகவே நீண்ட கால காத்திருப்பையும் கடின உழைப்பையும் தன் குழுவினரோடு இணைந்து முதலீடு செய்திருக்கிறார். அதன் பலனாக, சிறப்பான காட்சியனுபவம் நமக்குக் கிடைக்கிறது.

நான்கரை மணி நேரத்திற்கும் மேலாக ஓடும் திரைப்படமொன்றை உருவாக்குவதைவிட, அதனை இரு பாகங்களாக எவ்விதைச் சிதைவுமற்றுத் தந்துவிடலாம் என்று யோசித்திருக்கிறார் வெற்றிமாறன். அதனாலேயே, முதல் பாகத்தின் முதல் பாதியில் சூரி – பவானிஸ்ரீ சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை விலாவாரியாகக் காட்டியிருக்கிறார். ஆனால் அது தேவையின்றி நீட்டிக்கப்பட்டதாகத் துளியளவும் மனம் அயர்ச்சியுறுவதில்லை.

ஒருவேளை இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்படாமலிருந்தால், தற்போது ‘விடுதலை பாகம்-1’ கிளைமேக்ஸ் தான் முதலில் தீர்மானிக்கப்பட்ட இடைவேளையாக அமைந்திருக்கும் என்பதையும் உணர முடிகிறது.

ஒரு திரைக்கதையில் லாஜிக் மீறல்களைத் தேடும் வழக்கம், இப்படத்திற்குப் பொருந்தாது. அதையும் மீறி சூரியின் வாய்ஸ் ஓவர் வழியே கதை சொல்லப்படுவதும், ஆங்காங்கே தரக்குறைவான சாதனங்களைப் பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்யப்பட்டிருப்பதும் துருத்தலாகத் தெரிகின்றன. மிகமுக்கியமாக, வசனத்திலும் விஎஃப்எக்ஸிலும் கௌதம் மேனன் ஏற்ற பாத்திரத்தின் பெயர் சுனில் மேனன் என்று குறிப்பிடப்பட்டாலும், அவர் அணிந்திருக்கும் பட்டையில் ‘சுனில் சர்மா’ என்ற பெயரும் இடம்பெற்றுள்ளது. அப்படியொரு தவறுக்கு வெற்றிமாறன் குழுவினர் எப்படி இடம்கொடுத்தார்கள் என்றும் தெரியவில்லை.

இதுவரை தமிழ் திரை கண்டிராத ஒரு வனப்பகுதியை இதில் காட்டியிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். அதற்காகவே நீண்ட கால காத்திருப்பையும் கடின உழைப்பையும் தன் குழுவினரோடு இணைந்து முதலீடு செய்திருக்கிறார்

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தான் இதுவரை இயக்கிய படங்களை விடக் கூடுதலான நேர்த்தியுடன் ‘விடுதலை பாகம்-1’ தந்திருக்கிறார் வெற்றிமாறன். பிரசார நெடி தென்படும் வகையிலான அரசியல் முழக்கங்களைப் புகுத்த வாய்ப்பிருந்தும், அதனைத் தவிர்த்து காட்சியாக்கத்தின் வழியே கதாபாத்திரங்களுக்கு ஏற்பட்ட ரணங்களை நமக்குக் கடத்துகிறார். எவ்விதச் சார்புமற்று செயல்படும் சாதாரண மனிதனான குமரேசன் இடத்தில் பார்வையாளர்கள் தங்களைப் பொருத்திப் பார்க்க வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கிறார்.

சுருக்கமாகச் சொன்னால், ’அரசியலில் கொள்கைகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், அது மக்களுக்கு நலம் பயப்பதாக அமைய வேண்டும்’ என்பவர்கள் நிச்சயம் இப்படத்தை ரசிப்பார்கள்!


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles