Read in : English

குழந்தைத் திருமணம் என்பது சர்வசாதாரண விஷயமாகவும், பெண்களின் மறுமணம் பாவமாகவும், பெண் விடுதலை கொடுமையாகவும் கருதப்பட்ட ஒரு காலத்தில், ஆணாதிக்கத்தின் தளைகளில் இருந்து விடுபட்டு, ஒரு துணிச்சலான பெண்ணாக எழுந்து, ஆண்கள் ஆண்டு கொண்டிருந்த கோட்டைகளைச் சூறையாடினார். மேடை நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் பாடி நடித்தார், திரைப்படங்களை இயக்கினார்.

முதல் கதாநாயகி, முதல் இயக்குநர், முதல் திரைக்கதை எழுத்தாளர், முதல் ஸ்டுடியோ உரிமையாளர் என்று பல ’முதல்’களை சம்பாதித்தார். அவற்றோடு நில்லாமல், தீவிர சுதந்திரப் போராட்ட வீராங்கனையாகவும், சமூகச் சீர்திருத்தவாதியாகவும் செயற்பட்டார். அவர் தோள்களில் விழுந்த புகழ் மாலைகள் ஆணாதிக்கவாதிகளை முகம் சுழிக்க வைத்தன.

இன்றைய தமிழ் சினிமா அந்தச் சீர்மிகு பெண்ணாளுமையை மறந்துவிட்டது. அவர் தான் திருவையாறு பஞ்சாபபகேசன் ராஜலட்சுமி (1911-1964) எனப்படும் டி.பி.ராஜலட்சுமி. ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த அவரது திரை வாழ்க்கையில், அவருக்குக் கிடைத்த மறக்க முடியாத ஒரே அதிகாரப்பூர்வமான கௌரவம் 1964ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட கலைமாமணி விருது தான். அவர் மறைந்து 47 ஆண்டுகள் கழித்து, 2011ஆம் ஆண்டில் அவரது நூற்றாண்டு விழாவை ஒரு பெண் முதல்வர் (ஜெயலலிதா) சிறப்பாகக் கொண்டாடியபோது ராஜலட்சுமிக்கு இன்னுமொரு கௌரவம் கிடைத்தது.

‘சினிமா ராணி’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட டி.பி.ராஜலட்சுமி, அப்போதைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்த கிராமமான சாலியமங்கலத்தில் 5ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். ஆனால் இசை மற்றும் நடனத்தின் மீதான இயல்பான ஆர்வமும், உள்ளார்ந்த நினைவாற்றலும், பெண்கள் நுழைய முற்றிலும் தடை செய்யப்பட்ட களங்களுக்குள் அவரை அழைத்துச் சென்றன. அப்போது பெண் விடுதலைக்குப் பொதுவான சாபமாக இருந்த குழந்தைத் திருமணம் எனும் கொடுமையை அவரும் அனுபவித்தார்.

ராஜலட்சுமி தான் தமிழ் நாடகத்தின் முதல் அசல் நடிகை; பெண்கள் திரைகடலோடிச் செல்லக்கூடாது என்று அக்காலத்தில் நடைமுறையில் இருந்த தடையை உடைத்தெறிந்தவர்

7 வயதில் தன்னை விட வயது மூத்த ஒருவரை அவர் மணந்துகொள்ளும் படி ஆனது. இருப்பினும், மற்றொரு சமூகக் கொடுமையான வரதட்சணை காரணமாக அந்தத் திருமணம் முறிந்தது.

அநீதியை ஏற்றுக்கொள்ளும் குணம் கொண்டவர் அல்ல ராஜலட்சுமி. இந்த உணர்வுதான் பின்னாளில் ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்கொண்ட அவரது துணிச்சலில் பிரதிபலித்தது; அவர்களை ஒரு பாடலில் ‘வெள்ளை கொக்குகளா’ என்று உருவகமாக அழைக்க வைத்தது. அடிக்கடி சிறைவாசம் சென்றார் அவர். ஆனாலும் மனம் தளரவில்லை.

பெண் விரோத ஆணாதிக்கக் கலாச்சாரத்தின் முகத்தில் காறி உமிழ்ந்தது அவரது வாழ்க்கை.

மேலும் படிக்க: நடிகைகள் இல்லாத சுவரொட்டி

தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் வழிகாட்டுதலில் பயிற்சி பெற்ற இவர், மேடை நாடகங்களில் பாடல்கள் பாடியும், நடனமாடியும் வந்தார். அதுவரை பையன்கள் மட்டுமே பெண் வேடங்களில் (ஸ்திரீ பார்ட்) நடித்து வந்தனர். ராஜலட்சுமி தான் தமிழ் நாடகத்தின் முதல் அசல் நடிகை. ஒரு நாடகக் கலைஞராக அவர் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது.

பெண்கள் திரைகடலோடிச் செல்லக்கூடாது என்று அக்காலத்தில் நடைமுறையில் இருந்த தடையை இதன் மூலம் அவர் உடைத்தெறிந்தார். ஏற்கனவே சாதிப் பிரஷ்டம் செய்யப்பட்டிருந்த ராஜலட்சுமி பழமைவாதிகள் விதித்த அத்தனை தடைகளையும் தவிடுபொடியாக்கினார்.

ராஜலட்சுமி தனது 18 வயதிற்குள்ளே தமிழ் நாடகத் துறையில் நட்சத்திரமாகிவிட்டார். 1931ஆம் ஆண்டில் முதல் தமிழ் (மற்றும் தெலுங்கு) திரைப்படமான காளிதாஸிலும், அதைத் தொடர்ந்து வள்ளி திருமணம் (1933) படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தபோது, அவரது நட்சத்திர அந்தஸ்து உத்வேகத்தைப் பெற்றது; இது அவரது ரசிகர்களைக் கிறங்கடித்தது.

பல வெற்றிப் படங்களில் நடித்த அனுபவத்தைக் கொண்டு, 1936ல் தனது சொந்த படமான மிஸ் கமலாவை எழுதி, இயக்கி, இசையமைத்தார் ராஜலட்சுமி. தனது கூர்மையான அறிவாற்றலாலும், கலைநேர்த்தித் திறனாலும் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மேற்கொண்டார். அவருக்குச் சொந்தமான ஸ்ரீ ராஜம் ஸ்டுடியோவில் இப்பணிகள் நடந்தன. கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகர் என்ற அவரது நாவலை அடிப்படையாகக் கொண்டே இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டது.

கணவனை விட்டுப் பிரிந்து மீண்டும் காதலனுடன் இணையும் ஒரு பெண்ணின் கதை அது.

ராஜலட்சுமியின் சொந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பாக அமைந்தது இந்தக் கதை; ஆணாதிக்கம் ஆழங்காற்பட்டிருந்த சமூகத்தில் இது ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்குப் புரட்சிகரமானதும் முற்போக்கானதுமாகும். ஆனாலும் அவரது பாடல்கள், நடனங்கள், தொழில்நுட்ப நுணுக்கம், எடிட்டிங் திறமை ஆகியவற்றால் படம் சுவாரசியமாக்கப்பட்டது. ஆதலால் பார்வையாளர்கள் சற்று நிறுத்தி, யோசித்து, வழக்கத்திற்கு மாறான புரட்சி உள்ளடக்கத்தை எதிர்க்க முடியாமல் தத்தளித்தனர். மிஸ் கமலா இமாலய வெற்றி அடைந்தது. வி.ஏ.செல்லப்பா, டி.ஆர்.மகாலிங்கம் போன்று தன்னோடு நடித்த நடிகர்களாலும் கற்பனை செய்து பார்க்க முடியாத உயரத்திற்குச் சென்றார் ராஜலட்சுமி.

கணவனை விட்டுப் பிரிந்து மீண்டும் காதலனுடன் இணையும் ஒரு பெண்ணின் கதையைச் சொன்ன மிஸ் கமலா மிகவும் புரட்சிகரமானது, முற்போக்கானது

பெண்களின் மறுமணத்தை ஆதரித்தது மட்டுமல்லாமல், தனது 20ஆம் வயதில் டி.வி.சுந்தரத்தைத் திருமணம் செய்து கொண்டு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார் ராஜலட்சுமி.

திருமணம் என்பது ஒரு பெண்ணின் விருப்பம் மட்டுமே; சமூகத்தின் விருப்பம் அல்ல என்ற துணிச்சலான கருப்பொருளைச் சுற்றிச் சுழலும் கதை தமிழ் சினிமாவுக்கு ஒரு டெம்ப்ளேட்டாக மாறியது; பிற்காலத்தில் ஆண், பெண் என ஏராளமான இயக்குநர்கள் இதைப் பயன்படுத்தினார்கள்.

மிகவும் பிற்போக்குத்தனமான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த துணிச்சலான முற்போக்குப் படம், ஒப்பீட்டளவில் முன்னேறிய யுகத்தில், அதாவது இந்தப் படம் வெளியாகி சரியாக 45 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு பெண் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் திருமண பந்தத்தில்தான் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திய ஒரு பிற்போக்குத்தனமான திரைப்படத்திற்கு முற்றிலும் முரணாக அமைந்தது. (கே.பாக்யராஜின் அந்த ஏழு நாட்கள்).

மேலும் படிக்க: பெண்களுக்கு எதிரான சிந்தனைகளைக் கட்டமைக்கும் தமிழ் சினிமா!

மிஸ் கமலாவின் அமோக வெற்றி ராஜலட்சுமியை தனது ஒரே குழந்தைக்கு படத்தின் கதாநாயகியின் பெயரைச் சூட்டத் தூண்டியது. (சிசுக்கொலை ஆவதில் இருந்து காப்பாற்றிய மல்லிகா என்ற மற்றொரு குழந்தையை அவர் தத்தெடுத்தார்).

”காளிதாஸ் திரைக்கு வந்தபோது, முதல் பேசும் படத்தில் ராஜலட்சுமியின் நடிப்பைக் காண திரையரங்குகளுக்கு வெளியே சென்னை மக்கள் சுமார் 4-5 கி.மீ தூரம் நிற்பார்கள். அவருக்கு ஆரவாரத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலைகள் மற்றும் ஆட்டோக்களில் பொருத்தப்பட்ட ஸ்பீக்கர்களில் இருந்து அவரது பெயர் அறிவிக்கப்பட்டது; பேசும் படம் என்பது அக்காலத்து மக்களுக்குப் புதியது” என்று கூறினார் ராஜலட்சுமியின் மகள் கமலா; 1964ல் தனது தாயின் மரணத்திற்குப் பிறகு ஒரு நேர்காணலில் இதனைத் தெரிவித்திருந்தார்.

30 படங்களில் நடித்த டி.பி.ராஜலட்சுமி 1950ம் ஆண்டுக்குப் பிறகு திரைப்படத் துறையை விட்டு ஒதுங்கினார். அவர் வாழ்ந்த காலத்தில் வாங்கிய வீடுகள், சொத்துக்கள் அனைத்தும் ஒரு கட்டத்தில் விற்கப்பட்டன; அவரும் அவரது குடும்பத்தினரும் வறுமையில் தள்ளாடினார்கள்.

தனது தேசபக்திக்காக டி.பி.ராஜலட்சுமி பெரும் விலை கொடுத்தார். அவர் எடுத்த ‘இந்தியத் தாய்’ திரைப்படம் பிரிட்டிஷ் தணிக்கைக் குழுவால் வெட்டிச் சிதைக்கப் பட்டது. அதனால் படம் தோல்வி அடைந்து ராஜலட்சுமிக்குப் பெருத்த நட்டத்தை ஏற்படுத்தியது. ஆனாலும், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது அவர் வைத்திருந்த பற்றையும், மகாத்மா காந்தி மீதான மரியாதையையும் பேசும் வகையில் எடுத்த காரணத்தால், அந்தப் படத்தின் நட்டத்தில் அவருக்கு வருத்தமில்லை.

சாதி ஒழிப்பு, சமூகச் சீர்திருத்தம், பெண்ணியம் குறித்த அவரது கொள்கைகளும் கருத்துக்களும் திராவிட இயக்கத்தின் கொள்கைகளோடு ஒத்திசைந்ததால், சினிமாவை ஒரு தீமையாகக் கருதிய பெரியார் ஈ.வெ.ராமசாமி கூட, முற்போக்குக் கொள்கையில் ராஜலட்சுமி கொண்டிருந்த உறுதியான பற்று காரணமாகக் கவரப்பட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார். அன்பின் மிகுதியால் அந்தப் பகுத்தறிவுத் தலைவர் ராஜலட்சுமியைத் தங்கை என்று அழைத்தார்.

பாத்திமா பேகம் தனது ‘புல்புல்-இ-பரிஸ்தான்’ படத்தை எடுக்காமல் இருந்திருந்தால், ராஜலட்சுமிதான் முதல் இந்தியப் பெண் திரைப்பட இயக்குனர் என்ற பெருமையைப் பெற்றிருப்பார். அவ்வாறு நிகழாத காரணத்தால், தற்போது தென்னிந்தியத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர், இந்தியாவின் இரண்டாவது பெண் இயக்குநர் என்ற புகழோடு திருப்தியடைய வேண்டியிருந்தது.

இந்த சர்வதேச மகளிர் தினத்தில், ஒரு நடிகை என்பதையும் தாண்டி சிறப்படைந்த ராஜலட்சுமிக்கு நாம் அனைவரும் வணக்கம் செலுத்துவோம்; ஒரு திரைப்பட இயக்குனர்; ஒரு தயாரிப்பாளர்; ஒரு ஸ்டுடியோ உரிமையாளர்; இதெல்லாவற்றையும் விட நாட்டின், பெண்களின் சுதந்திரத்திற்காகப் போராடிய ஒரு தீவிரப் போராளி என்று சொல்லும்போதுதான் நாம் செலுத்தும் அஞ்சலி அர்த்தமும் அழகும் கொள்கிறது.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival