Read in : English
சமீபகாலமாக தமிழக-கர்நாடக எல்லையிலுள்ள காடுகளில் வனவிலங்கு வேட்டை மீண்டும் ஆரம்பமாகிவிட்டது போலத் தெரிகிறது. ஒருகாலத்தில் அடிக்கடி செய்திகளில் அடிபட்ட சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வை தமிழக-கர்நாடக எல்லைக் காடுகளில் பணியாற்றும் வன அதிகாரிகள் மறந்து நீண்டகாலம் ஆகிவிட்டது. ஆனால் அவர்களால் இப்போது நிம்மதியாக இருக்க முடிகிறதா? இல்லை என்கிறார்கள் கர்நாடக காவல்துறை, வனத்துறை அதிகாரிகள்.
சமீபத்தில் ஈரோடு மாவட்டத்தில் சின்னம்பட்டி கிராமத்தில் வனக்கொள்ளையன் என்று சந்தேகிக்கப்பட்ட ராஜா என்ற காரவடையான் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்த மரணத்தில் சாமராஜநகர் மாவட்ட வன அதிகாரிகளுக்குச் சம்பந்தமுண்டு என்று பேசப்படுகிறது.
தமிழக-கர்நாடக எல்லைக் காடுகளில் வசிப்பவர்கள் இரண்டு மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்தை நிறுத்தி வாகன ஓட்டிகளுக்குத் தொல்லை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். கர்நாடக வன அதிகாரிகள் ராஜாவைச் சுட்டுக் கொன்று பாலாறு நதியில் உடலைத் தூக்கிப் போட்டுவிட்டார்கள் என்பது போலச் சித்தரிக்கப்பட்டது.
தமிழ்நாட்டிலிருந்தும் கேரளாவிலிருந்தும் குண்டுலுபேட்டை வழியாக வனவிலங்கு வேட்டைக்காரர்கள் கர்நாடகத்திற்குத் தப்பித்து விடுகிறார்கள்
ராஜாவும் அவனது கூட்டாளிகள் மூன்று பேரும் கர்நாடக எல்லைக் காடுகளில் அடிக்கடி நுழைந்து காட்டு வளத்தைக் கொள்ளையடிப்பவர்கள். ராஜா மீது வனவிலங்கு வேட்டை வழக்குகள் மூன்றும், ஒரு சூதாட்ட வழக்கும் நிலுவையில் இருக்கின்றன என்கிறார்கள் சாமராஜநகர் வன அதிகாரிகள். மூன்று ஆண்டுகளாக அவர் தலைமறைவாகக் காடுகளில் வசித்தவாறு வன வளங்களைக் கொள்ளையடித்து விற்று வந்தார் என்கிறார்கள் அதிகாரிகள்.
இப்படித்தான் வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் ஆரம்பத்தில் செயல்பட்டனர். அப்போது வீரப்பனும் சேத்துக்குழி கோவிந்தனும் மட்டுமே இருந்தனர். பின்னர் மாறன், இனியன், அன்றில், சத்யா, நாகராஜ், புட்டுசாமி, ராமா, பசவன்னா, கோவிந்த்ராஜ் ஆகியோர் வீர்ப்பன் கூட்டத்தில் இணைந்தனர்.
மேலும் படிக்க: வனவிலங்கு வேட்டை தடுப்பில் பின்னடைவு ஏன்?
தமிழக-கர்நாடக எல்லைக் காடுகளைக் கொள்ளையடிக்கத் துணை போனார்கள் என்று அவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டு அனைவரும் கர்நாடகத்தில் சிறைப்படுத்தப்பட்டனர்.
இந்த விவரங்களை எம்எம் குன்றுகள், பிஆர் குன்றுகள், முதுமலை, குதுரேமுக், நகரஹோலே, பிரம்மகிரி மற்றும் நீலகிரியில் செயலாற்றும் இயற்கை ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அந்தக் காலத்தில் வீரப்பனும் சேத்துக்குழி கோவிந்தனும் செயல்பட்ட பாணியில் இன்று ஈரோட்டிலும் சாமராஜநகர் மாவட்டத்திலும் சில தனிநபர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக-கர்நாடக எல்லைக் காடுகளில் அவர்கள் பெரிதாகக் கொள்ளையடித்திருக்கலாம்; கொள்ளையடிக்காமலும் இருந்திருக்கலாம். அவை எல்லாம் உலகுக்குத் தெரிய வரவில்லை என்று கருதுகிறது கர்நாடக வனப்பிரிவு குற்றப் புலனாய்வுக் காவல்துறை.
யானைத் தந்தம் போன்ற விலைமிக்க பொருட்களுக்காகவும் மாமிசத்திற்காகவும் வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல்களை காவல்துறை, வனத்துறை, சிஐடி அதிகாரிகள் கைது செய்து வருகின்றனர்.
பிடரள்ளி கெஞ்சா என்பவர் தமிழக-கர்நாடக எல்லைக் காடுகளில் மும்முரமாக இயங்கிக் கொண்டிப்பவர் என்று சொல்லப்படுகிறது; அவரைப் பிடிக்காமல் விட்டால் இயற்கை வளங்களுக்கு ஆபத்தாக முடியும்
முன்பு வீரப்பன் இயங்கிவந்த பகுதிகளில் வனவிலங்கு வேட்டைக்காரர்களைப் பிடிக்கும் பணியில் வனத்துறை அதிதீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாமிசத்திற்காக மட்டுமின்றி தோலுக்காகவும் விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன.
பெரும்பான்மையான விலங்கு வேட்டை தமிழ்நாட்டுக் காடுகளில் நிகழ்கிறது. தமிழ்நாட்டிலிருந்தும்,கேரளாவிலிருந்தும் குண்டுலுபேட்டை வழியாக வனவிலங்கு வேட்டைக்காரர்கள் கர்நாடகத்திற்குத் தப்பித்து விடுகிறார்கள்.
பிடரள்ளி கெஞ்சா என்பவர் தமிழக-கர்நாடக எல்லைக் காடுகளில் மும்முரமாக இயங்கிக் கொண்டிப்பவர் என்று சொல்லப்படுகிறது. அவரைப் பிடிக்காமல் விட்டால் இயற்கை வளங்களுக்கு ஆபத்தாக முடியும் என்று எம்எம் குன்றுகள் மற்றும் பிஆர் குன்றுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் இயற்கை ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.
இதற்குத் தீர்வாக, திறன்மிக்க ஊழியர்களைக் கொண்டு காவல்துறையின் வனப்பிரிவு சிஐடியில் இருக்கும் காலியிடங்களைத் தமிழ்நாடும் கர்நாடகமும் நிரப்ப வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். வனவிலங்கு வேட்டையை அப்போதுதான் முற்றிலும் ஒழிக்க முடியும் என்பதே அவர்களது கருத்து.
Read in : English