Read in : English

Share the Article

பொது போக்குவரத்து தான் இருக்கும் ஒரே வழி என்கிற போது, எண்ணி எண்ணி செலவு பண்ண வேண்டிய சிக்கனமான சூழலில் எவ்வளவு தூரம் ஒருவர் சென்னைக்குள் பயணிக்க முடியும்? பேருந்துகள், ரயில் வண்டிகள், மெட்ரோ ரயில்கள், ஷேர் ஆட்டோக்கள், பின்பு கால்நடை என்று மாறி மாறிப் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது எந்த வழிகளில் பயணிக்கலாம் என்பதைப் பற்றி கிடைக்கும் தகவல்களைப் பொறுத்தே ஒருவர் எவ்வளவு தூரம் பயணிக்கலாம் என்பதை முடிவு செய்ய முடியும்.

உங்களுக்குச் சென்னை பழக்கமில்லாத ஊராக இருந்தால் போக்குவரத்து தகவல்களைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல. ’சிட்டிஷன், கன்சூயுமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப்’ (Citizen, consumer and civic Action Group – CAG) எனும் சிஏஜி அமைப்பு சென்னை மாநகருக்குள் பயணிக்கத் தேவையான தகவல்களை மக்கள் எப்படிப் பெறுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள 506 பேர்கள் மத்தியில் ஒரு வாக்கெடுப்பை நிகழ்த்தி மேற்சொன்ன உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறது.

சிஏஜி தனது ஆய்வை “வரையறுக்கப்படாத பகுதிகளில் பயணிப்பது – சென்னையில் பொதுப் போக்குவரத்து தகவல்களைப் பெறுவது” என்ற ஓர் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது. சென்னையில் சமீபத்தில் நடந்த பொதுப்போக்குவரத்தைப் புரிந்துகொள்வது சம்பந்தமான ஒரு நிகழ்வில் ஆய்வு முடிவுகள் பகிரப்பட்டன.

சென்னையில் போக்குவரத்து சம்பந்தமான தகவல்களை எல்லோருக்கும் போய்ச்சேரும் விதத்தில் கட்டமைக்க ஒன்றிணைந்த முயற்சிகள் இல்லை

ஆய்வில் கலந்து கொண்ட 506 மனிதர்களில் 317 பேர் தனிப்பட்ட சொந்த வாகனங்களில் பயணிக்க விரும்புவதில்லை என்றும், 30 வயதுக்குக் கீழான 102 இளைஞர்கள் தனிப்பட்ட வாகனங்களுக்கு மாற விரும்புவதாகவும், பேருந்துகளிலும் ரயில்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் தனிப்பட்ட வாகனங்களுக்கு 41 பேர் மாறுவதாகவும் சொன்னார்கள்.

தகவல் பற்றாக்குறை
ஆய்வு முடிவுகள் சொல்லும் இன்னொரு செய்தி, சென்னையில் போக்குவரத்து சம்பந்தமான தகவல்களை எல்லோருக்கும் போய்ச்சேரும் விதத்தில் கட்டமைக்க ஒன்றிணைந்த முயற்சிகள் இல்லை என்பதே. சென்னை மெட்ரோ ரயில் இணையதளத்திலும் நிலையங்களிலும் பிரயாணிகள் சம்பந்தமான தகவல்கள் மிக அதிக அளவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் மாநகர் பேருந்துக் கழகம் (எம்டிசி) தனது இணையதளத்தில் தகவல்களைத் தரும் பாணி இன்னும் தரமாக இல்லை. சமீபத்தில் கொண்டுவரப்பட்ட சென்னை பஸ் என்னும் கைப்பேசி செயலி ஏதோ கொஞ்சம் பரவாயில்லை. ஒரு தனியார் நிறுவனம் நடத்தும் ‘சலோ’ என்னும் செயலி நிஜநேரத்து பேருந்து தகவல்களைத் தருகின்றன.

மேலும் படிக்க: சென்னை: போக்குவரத்து கட்டமைப்பில் மாற்றம்

சென்னை போக்குவரத்து வசதிகளைப் பற்றிய ஒரு கட்டமைப்புப் பார்வை இல்லாததால் தகவல் பற்றாக்குறை நிலவுகிறது. கூகுள் வரைபடங்கள் என்னும் மின்னணு வசதி உதவியாக இருக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட பேருந்து, ரயில் மற்றும் மெட்ரோ ரயில் கால அட்டவணைகளின் அடிப்படையிலும், செயலிகள் மூலம் இயங்கும் டாக்சி சேவைகளின் அடிப்படையிலும் கூகுள் வரைபடங்கள் பயண வகைமைகளைப் பட்டியலிட்டுத் தருகிறது.

ஆனால் சென்னை சாலைகளில் பிரதானமாக ஷேர் ஆட்டோக்கள் இயங்குகின்றன. (ஏழு இருக்கைகள் கொண்டு சுமார் 70,000 ஷேர் ஆட்டோக்கள் தற்போது கட்டுப்பாடு இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன).

இந்தத் தகவல் பற்றாக்குறையை நீக்கும் பொறுப்பு கும்டாவைச் (CUMTA) சார்ந்தது. சென்னையின் அனைத்து போக்குவரத்து வகைமைகளையும் கட்டுப்படுத்தச் சமீபத்தில் உருவாக்கப்பட்ட அரசு முகமை கும்டா. சென்னை மெட்ரோ ரயிலுக்கும் புறநகர் ரயிலுக்கும் பேருந்து நிலையங்களுக்கும் இறுதிக்கட்ட பயண வசதிகளை உருவாக்கும் சாத்தியங்களை ஆராய சிஎம்டிஏ ஒரு ஆய்வைத் தொடங்கியிருக்கிறது.

எப்படிப்பட்ட இறுதிக்கட்ட பிரயாண வசதிகள் வேண்டும் என்பதை குடியிருப்புகளில் வசிக்கும் மக்களிடமிருந்து தெரிந்து கொள்ள அந்த ஆய்வு அனைத்து தெருக்களிலும் மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வு பற்றிய அறிவிப்பு வந்து பல வாரங்கள் கடந்துவிட்டன.

சிக்கனமான அணுகுமுறை
சென்னையில் சிக்கனமாகப் பயணிப்பது எப்படி? இந்த விசயத்தில் கூகுள் மேப்ஸ் அல்லது காகித வரைபடம் ஒரு நல்ல நண்பன். ஈவேரா பெரியார் சாலை, அண்ணா சாலை-ஜிஎஸ்டி சாலை, காமராஜர் சாலை – ஓஎம்ஆர் – ஈசிஆர் ஆகிய மூன்று மையப்பாதைகளையும், புறநகர் ரயில், மெட்ரோ ரயில் பாதைகளையும் கொண்ட ஒரு பெரிய போக்குவரத்துக் கட்டமைப்பையும் கொண்டிருக்கும் சென்னையில் உங்களது பயணங்கள் தொட்டுப் போகும் தலங்களைத் தெரிந்துகொள்ள அந்த வரைபடங்கள் பெரிதும் உதவுகின்றன.

சென்னையின் மூன்று பிரதானமான மையப்பாதைகளில் புறநகர் ரயிலில் பயணம் செய்து வீட்டுக்கோ, அலுவலகத்திற்கோ அதிகபட்சக் கட்டணமாக ரூ.5 செலவழித்துச் செல்ல முடியும் என்ற புரிதல் ஏற்படுகிறது. கவனமாகப் பயணித்தால் மூன்று புறநகர் ரயில் நிலையங்களில் இறங்கி மெட்ரொ ரயிலுக்கு மாறி சென்னை சென்ட்ரலுக்கும் எக்மோருக்கும் கிண்டிக்கும் செல்ல முடியும்.

நீங்கள் செல்ல வேண்டிய இடம் புறநகர் ரயில் கடந்துசெல்லும் பாதையில் இருக்கலாம். அதனால் மிகவும் சல்லிசான விலையில் நீங்கள் பயணிக்க முடியும். அதே இடத்திற்குச் செல்ல சற்று விலை அதிகமாகும் மெட்ரோ ரயிலும் இருக்கிறது.

சென்னை போக்குவரத்து வசதிகளைப் பற்றிய ஒரு கட்டமைப்புப் பார்வை இல்லாததால் தகவல் பற்றாக்குறை நிலவுகிறது; கூகுள்  வரைபடங்கள் என்னும் மின்னணு வசதி உதவியாக இருக்கிறது

கட்டுப்படுத்தப்படவில்லை என்றாலும் ஷேர் ஆட்டோவில் ரூ 10லிருந்து ரூ. 40 வரை செலவழித்துப் பயணிக்க முடியும். மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, தி.நகர். அசோக் நகர், நெசப்பாக்கம், நெல்சன் மாணிக்கம் சாலை, சென்னை சென்ட்ரல், பூந்தமல்லி-போரூர், ஓஎம்ஆர், ஆவடி என்று நிறைய பகுதிகளில் ஷேர் ஆட்டோக்கள் ஓடுகின்றன. சுமாராக இருந்தாலும் ஏழு இருக்கை கொண்ட ஷேர் ஆட்டோக்கள் நிறைய ஓடுகின்றன. அவற்றைப் பயன்படுத்தி பொதுப்போக்குவரத்திற்காகக் காத்திருக்கும் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.

உண்மையைச் சொன்னால் இரவு நேரத்தில் வீடு திரும்ப ஷேர் ஆட்டோக்களைப் பயன்படுத்த யாரும் விரும்புவதில்லை. ஆனால் மாநகரப் பேருந்துக் கழகம் (எம்டிசி) பெரிதாக விரிவாக்கம் செய்யப்படாததால், பேருந்துகள் போதுமான அளவில் ஓடுவதில்லை. இந்தப் பற்றாக்குறையை நீக்குவதாலேயே ஷேர் ஆட்டோக்கள் எம்டிசி பயணிகளைக் கவர்ந்திழுக்கின்றன. இதுவொரு மோசமான இரகசியம்.

மேலும் படிக்க: பேருந்தில் கட்டணமில்லை, இது புரட்சிதானா?

செயலிகளின் தரவிறக்கங்கள்
போக்குவரத்து தகவல்களைப் பயன்படுத்த அதிகாரப்பூர்வமான செயலிகள் இருக்கின்றன. எம்டிசி, சிஎம்ஆர்எல், இந்திய ரயில்வேயின் யூடிஎஸ் போன்ற முக்கியச் செயலிகள் இருக்கின்றன. புறநகர் ரயில் டிக்கெட் பதிவு செய்வதற்கு யூடிஎஸ் செயலியைப் பயன்படுத்தலாம். அது ஆண்ட்ராயிட் மென்பொருள் கட்டமைப்பில் பரிசோதிக்கப்பட்டது. வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி ‘வாலட்டில்’ பணத்தை நிரப்பி டிக்கெட் பதிவு செய்யலாம்.

சிஎம்ஆர்எல் (சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்) உங்களுக்கு ரயில் கால அட்டவணைகளையும், செல்லும் பாதை தகவல்களையும் தருகின்றன. கியூஆர் கோடு மூலம் டிக்கெட் பதிவு செய்யலாம்.

’சென்னை பஸ்’ செயலி பேருந்து தகவல்களைத் தருகிறது. பெரும்பாலும் தகவல் சரியாகத்தான் இருக்கிறது. எனினும் ஓடுகின்ற எல்லாப் பேருந்துகளும் அப்படியிருக்கிறது என்று சொல்ல முடியாது. அதிகாரப்பூர்வற்ற சலோ செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அவசரத்திற்கு அது உதவும். அது நன்றாகச் செயல்படுகிறது.

சமீபகாலமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் வரை சென்னை விரிந்துவிட்டது. அந்தப் பகுதிகள் வரைக்கும் மாநகர்ப் பேருந்துகளும் புறநகர் ரயில்களும் பயணிக்கின்றன. ஆதலால் நீங்கள் எங்கே செல்கிறீர்கள், கடக்கும் பாதைகள் என்ன போன்ற தகவல்கள் உங்களுக்கு அவசியம். அதற்கு கூகுள் மேப்ஸ் மிகவும் உதவுகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக நிறைய பணம் செலவழிக்கப்படுகிறது; அதில் கொஞ்சம்கூட பேருந்து நிறுத்தங்களில் பயணியர் தகவல்களுக்காகச் செலவழிக்கப்படுவதில்லை

துரதிர்ஷ்டவசமாக சென்னையில் பேருந்து நிறுத்தங்களால் பெரிதாகப் பயணிகளுக்குத் தகவல்கள் தர முடிவதில்லை. அங்கே பலகைகளில் இருக்கும் வணிக விளம்பரங்களால் யாருக்கும் பிரயோஜனமில்லை. முன்பு ஜிபிஎஸ் அடிப்படையில் நிஜநேரத்து பயணியர் தகவல்கள் தரக்கூடிய ஓர் அமைப்பை எம்டிசி கொண்டு வந்தது. ஆனால் அது தோற்றுப்போனது. பெருநகர சென்னை மாநகராட்சி சில பேருந்து நிறுத்தங்களில் வைக்கப்பட்டிருந்த தகவல் பலகைகளை அப்புறப்படுத்தி விட்டது.

‘அடுத்த பேருந்து வரும்’ நேரத்தைப் பற்றிய தகவல் இணையத்தில் இருக்கிறது. வாஸ்தவம்தான். ஆனால் அந்த இணையத் தகவலைத் தெரிவிக்கும் தகவல் பலகை பேருந்து நிறுத்தங்களில் இல்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக நிறைய பணம் செலவழிக்கப்படுகிறது; ஆனால் அதில் கொஞ்சம்கூட பேருந்து நிறுத்தங்களில் பயணியர் தகவல்களுக்காகச் செலவழிக்கப்படுவதில்லை.

சென்னையில் சிக்கனமாகப் பயணிப்பதற்கு நிறைய வசதிகள் இருக்கின்றன. ஆட்டோ போன்ற செலவு வைக்கும் வழிகளைத் தேர்ந்தெடுக்கும் முன்பு இருக்கின்ற பயண வகைமைகளையும் தகவல்களையும் சற்று ஆராய்ந்து பார்ப்பது நல்லது.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles