Read in : English

ஒரு நாட்டின் ராணுவத்தை எதிர்ப்பதை விட மிக எளிதானது, அதன் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பது. வளமிக்க நாடுகளால் வலு குறைந்த நாடுகள் மீது அந்த உத்தியைப் பிரயோகிக்க முடியும். ஒரு நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள், பங்குச்சந்தை மோசடிகள், போலி நிறுவனங்களின் முதலீடு போன்றவை இதற்கான உதாரணங்கள்.

இவற்றைத் தாண்டி, எதிரி நாடுகளின் கைகளுக்குச் சுலபமான வழி கள்ளநோட்டுப் புழக்கம் தான். அதனை மையமாக வைத்தே, ராஜ் & டிகேவின் கைவண்ணத்தில் வெளியாகியுள்ளது ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸ். இது அமேசான் பிரைம் வீடியோவில் வந்துள்ளது.

இளம் தலைமுறை இந்தி நடிகரான ஷாகித் கபூர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள இந்த வெப்சீரிஸில் விஜய் சேதுபதி, ரெஜினா கேசண்ட்ரா, ராஷி கன்னா என்று தென்னிந்திய ரசிகர்களுக்குத் தெரிந்த முகங்களும் இருக்கின்றன. இந்தியில் தயாரிக்கப்பட்டு தமிழ் உட்பட 4 தென்னிந்திய மொழிகளில் இது டப் செய்யப்பட்டுள்ளது. தமிழ் பதிப்பில் ஷாகித்துக்கு ஜீவாவும் அமுல் பலேகருக்கு நாசரும் விஜய் சேதுபதிக்கு சின்னத்திரை நட்சத்திரமான டிஎஸ்கேவும் குரல் கொடுத்துள்ளனர்.

’என்னது, விஜய் சேதுபதிக்கு இன்னொருத்தர் டப்பிங் வாய்ஸா’ என்ற கேள்வியுடன் இதனைப் பார்க்க உட்கார்ந்தால் டிஎஸ்கே குரல் வழியே ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது.

ஒரு நாட்டின் ராணுவத்தை எதிர்ப்பதை விட மிக எளிதானது, அதன் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பது

எல்லை தாண்டும் கள்ளநோட்டுகள்!
ஜோர்டான் போன்ற மத்தியதரைக்கடல் நாடுகளில் இந்திய ரூபாய் நோட்டுகளைப் போலியாக உருவாக்கி வங்கதேசம், பர்மா, நேபாளம், குஜராத் எல்லைகளைத் தாண்டி இந்தியாவுக்குள் கொண்டு வருகிறது மன்சூர் தலால் (கே கே மேனன்) கும்பல். மைக்கேல் (விஜய் சேதுபதி) தலைமையிலான கள்ளநோட்டு கண்டுபிடிப்பு மற்றும் விசாரணைக் குழு, நோட்டு எண்ணும் எந்திரத்தில் ஒரு மாற்றத்தைக் கொணர்கிறது.

அதனால், மன்சூர் கும்பலின் 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் எளிதில் பிடிபடுகின்றன. அந்த எந்திரத்தை மாற்றியமைத்தவர் ரிசர்வ் வங்கி ஊழியரான மேகா (ராஷி கன்னா). எந்திரத்தால் கண்டுபிடிக்காத கள்ளநோட்டுகளை உருவாக்குவதற்காக, ஆர்ட்டிஸ்ட் என்றழைக்கப்படும் சந்தீப்பின் (ஷாகித் கபூர்) உதவியை நாடுகிறது மன்சூர் கும்பல்.

தனது தாத்தா மாதவ்வின் (அமுல் பலேகர்) கிரந்தி பத்திரிகை அலுவலகத்தையும் பிரிண்டிங் பிரஸ்ஸையும் மீட்பதற்காக, கையில் இருக்கும் வசதிகளை வைத்துக்கொண்டு மிகத்துல்லியமாக 500 ரூபாய் கள்ள நோட்டுகளை சந்தீப்பும் அவரது நண்பர் பிரோஸும் (புவன் அரோரா) வடிவமைத்ததே அதன் பின்னிருக்கும் காரணம்.

மேலும் படிக்க: நெட்பிளிக்ஸ் சிறிய படங்களை வெளியிடாதா?

வறுமையின் பிடியில் சிக்கி அவமானப்பட்ட அனுபவம் கொண்ட சந்தீப், மன்சூர் தந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்கிறார். மைக்கேல் குழுவினர் கண்டுபிடிக்க முடியாதபடி மிகத்துல்லியமான 2,000 ரூபாய் கள்ள நோட்டை உருவாக்குகிறார். அவ்வாறு தயாரான சுமார் 12,000 கோடி கள்ள நோட்டுகளை மிகத்தந்திரமாக இந்தியாவுக்குள்ளும் கொண்டு வருகிறார் சந்தீப்.

அதற்காகவே, மேகா உடன் நட்பு கொள்வது போல நடித்து அவரது மொபைலில் ஒரு செயலியை இன்ஸ்டால் செய்கிறார்; அவருக்கு வரும் போன் கால்களை, மெசேஜ்களை அறிந்துகொண்டு தனது திட்டங்களை வகுக்கிறார். அதையும் மீறீ, கள்ள நோட்டு வடிவமைப்பில் சந்தீப் செய்த சிறு தவறு மைக்கேல் குழுவினரின் பார்வையை அவர் மீது விழச் செய்கிறது.

அந்த தவறு எப்படிப்பட்டது? சந்தீப்பும் பிரோஸும் சிக்கினார்களா? இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட கள்ளநோட்டுகள் என்னவானது என்பது உட்படப் பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது ‘ஃபார்ஸி’. கள்ளநோட்டுகள் மூலமாக இந்தியாவின் பொருளாதார வீக்கம் பாதிப்பைச் சந்திப்பதோடு, அதன் வழியே லவட்டப்படும் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் போதை மருந்து பரவலுக்கும் பயன்படுத்தப்படுகின்றன என்பதே ‘ஃபார்ஸி’யின் மையக்கருத்து. ஆனால், அது தொடர்பான காட்சிகள் இதில் இடம்பெறவில்லை.

வழக்கமான காட்சியனுபவம்!
ஓடிடிகளில் வெளியாகும் வெப்சீரிஸ்களுக்கு என்று ஒரு வடிவம் உண்டு. டைட்டிலுக்கு முன்னதாக ஒன்று அல்லது சில காட்சிகள் முன்கதையைச் சொல்லும் அல்லது முக்கியமானதாகவோ அமையும். முன்கதை சொல்லும் உத்தி இதில் தவிர்க்கப்பட்டிருக்கிறது. போலவே, ஒரே நேரத்தில் வெவ்வேறு தரப்பின் செயல்பாடுகளைக் காண்பிக்கும் ‘இண்டர்கட்’ உத்தியும் பெரிதாகப் பயன்படுத்தப்படவில்லை.

ஒரு நாயகனின் சாகசம் போன்று முதல் நான்கு எபிசோடுகளில் சந்தீப் மற்றும் பிரோஸின் கள்ளநோட்டு உருவாக்கம் காட்டப்படுகிறது. பத்து வயதில் பன் சாப்பிட்டே பால்யத்தை ஓட்டினான் உள்ளிட்ட தகவல்கள் சில நொடிகளில் கடந்து போகின்றன. சந்தீப்பின் தாய், தந்தை குறித்த விவரணைகள், அவர்களது மரணத்திற்கான காரணங்கள் இதில் விளக்கப்படவில்லை. அதனால், சந்தீப் பாத்திரத்துடன் சாதாரண ரசிகன் ஒன்றுவது கடினமாகிறது.

மனிஹெய்ஸ்ட் சீரிஸில் வரும் புரபொசர் பாத்திரம், பணம் ஏன் மக்களின் வாழ்க்கையை மாற்றுவதாக இருக்க வேண்டுமென்று கேள்வி எழுப்புவார். அப்படித் தத்துவார்த்தமான கேள்விகள் ஏதுமல்லாமல், வெறுமனே அரசு எந்திரத்தின் பார்வையில் மட்டுமே மொத்தக் கதையும் விரிகிறது

மனிஹெய்ஸ்ட் சீரிஸில் வரும் புரபொசர் பாத்திரம், பணம் ஏன் மக்களின் வாழ்க்கையை மாற்றுவதாக இருக்க வேண்டுமென்று கேள்வி எழுப்புவார். அப்படித் தத்துவார்த்தமான கேள்விகள் ஏதுமல்லாமல், வெறுமனே அரசு எந்திரத்தின் பார்வையில் மட்டுமே மொத்தக் கதையும் விரிகிறது. அதேநேரத்தில், சந்தீப்பை பண வெறி பிடித்த மிருகமாகவும் சித்தரிக்கவில்லை.  மன்சூர், பிரோஸ், அனீஸ் மற்றும் அவரது நண்பர்கள், போலிப் பொருட்களை உலவவிடும் கும்பல் என்று ஏமாற்றுக்காரர்களில் பெரும்பாலானோரை இஸ்லாமியர்களாகக் காட்டியிருக்கிறது ’ஃபார்ஸி’.

இது நிச்சயம் சலசலப்பை உண்டாக்கும். இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதில் மேற்கத்திய நாடுகளுக்கோ, அங்கிருக்கும் குற்றக் கும்பல்களுக்கோ சிறிதும் ஆர்வமில்லை என்கிற தொனியே இதிலும் வெளிப்படுகிறது.
இக்கதையில் ஒரு மத்திய அமைச்சர் வருகிறார். கள்ளநோட்டுகளை ஒழிக்க முயற்சிப்பதாக அவர் ஊடகங்களுக்கு பேட்டி தருகிறார்.

மேலும் படிக்க: தமிழ் சினிமா: மாறிவரும் சண்டைக்காட்சிகள்!

தேர்தல் லாபங்களை மனதில் கொண்டு, அரசு அதிகாரிகள் தரப்பு கேட்கும் வசதிகளைச் செய்து தருகிறார். அதேநேரத்தில், காந்தியக் கொள்கைகளைப் பேசும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர், கள்ளநோட்டுகளை வீட்டில் பதுக்கி வைப்பதாகவும் இதில் காட்டப்படுகிறது. இதுவே, எந்தெந்த அரசியல் கட்சிகளை ‘ஃபார்ஸி’ விமர்சிக்கிறது என்பதைத் தெளிவாக காட்டிக் கொடுக்கிறது.

கள்ளநோட்டு எப்படி தயாரிக்கப்படுகிறது? வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு எந்தெந்த வழிகளில் கொண்டுவரப்படுகிறது என்பதெல்லாம் இக்கதையில் சொல்லப்படுகிறது. அத்தகவல்கள் தினசரிகளில் வெளியாகும் செய்திகளையே நினைவூட்டுகின்றன. அதேநேரத்தில், பிடிபட்ட கள்ளநோட்டுகள் இத்தனை சதவிகிதம் என்றால் பிடிபடாமல் உலவிக் கொண்டிருப்பவை எத்தனை சதவிகிதம் எனும் கேள்வியையும் எழுப்புகின்றன.

இவற்றைத் தாண்டி எதிரெதிராகப் பயணிக்கும் இரு நாயகர்களின் சாகசம் போன்றே விரிகிறது ’ஃபார்ஸி’ திரைக்கதை. பரபரப்பு குறைவென்றாலும், அது ரசிகர்களை ஈர்க்கும் காட்சியனுபவமாக இருக்கும்.

விஜய் சேதுபதியின் இருப்பு!
இந்த சீரிஸில் உள்ள 8 எபிசோடுகளிலும் நிறைந்திருக்கிறார் ஷாகித் கபூர். அதற்குத் தக்கவாறு முழுக்க ‘ஹீரோயிசம்’ கொண்டதாக சந்தீப் பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. அவருக்கு இணையான முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறார் விஜய் சேதுபதி. டிஎஸ்கே தந்திருக்கும் குரல் பல காட்சிகளில் விஜய் சேதுபதியே தமிழில் டப்பிங் பேசிய பிரமையை ஏற்படுத்துகிறது.

இதன் மூலமாக, உலகம் முழுக்கப் பலரையும் சென்றடையும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் டிஎஸ்கே. மைக்கேல் வேதநாயகம் எனும் பாத்திரத்தில் விஜய் சேதுபதியின் இருப்பு, அடுத்த சீசனில் நிச்சயம் உச்சம் தொடும்.

மேற்கத்திய வெப்சீரிஸ்களில் வரும் நாயகிகள் போலவே இதிலும் குற்றப் பின்னணி கொண்ட நாயகனுடன் உறவாடுகிறார் ராஷி கன்னா. ரெஜினாவுக்கு அந்தளவுக்கு முக்கியத்துவம் இல்லை; மையக்கதையோடு ஒட்டாதபடி சோகத்தை கொட்டிச் செல்கிறார்.

அமுல் பலேகர், ஜாகீர்கான், கே.கே.மேனன் போன்ற மூத்த தலைமுறையோடு போட்டி போட்டு நடித்துள்ளார் ஷாகித்தின் நண்பராக வரும் புவன் அரோரா. இப்படைப்பு அவருக்கு நல்லதொரு துருப்புச்சீட்டு. போலவே, யாசிர் பாய் ஆக வரும் சித்தரஞ்சன் கிரியும் நம்மை ஈர்க்கிறார்.

மைக்கேல் வேதநாயகம் எனும் பாத்திரத்தில் விஜய் சேதுபதியின் இருப்பு, அடுத்த சீசனில் நிச்சயம் உச்சம் தொடும்

படத்தொகுப்பாளர் சுமித் கோடியன், அடுத்தடுத்த பாகங்களுக்காகச் சில காட்சிகளை ஒதுக்கி வைத்துள்ளாரா என்று தெரியவில்லை. பிரிண்டிங் பிரஸ் விபத்து உட்படப் பல விஷயங்கள் திரையில் முழுதாக தென்படுவதில்லை. இறுதி எபிசோடில் வரும் சேஸிங் காட்சிகளில் பரபரப்பு இல்லை; ஆனாலும் மற்ற இடங்களில் அவரது படத்தொகுப்பு நறுக்கு தெறித்தாற் போல உள்ளது.

பங்கஜ் குமாரின் ஒளிப்பதிவும் பரிசித் பரல்கரின் தயாரிப்பு வடிவமைப்பும் இணைந்து ஒவ்வொரு பிரேமிலும் செறிவைக் கூட்டியிருக்கின்றன. பல காட்சிகள் வழக்கமான சீரியல்தன்மையில் இருந்து விலகி சினிமா தரத்தில் உள்ளன.
இயக்குனர்கள் ராஜ் நிதிமொரு, கிருஷ்ணா டிகே உடன் இணைந்து சீதா மேனன், சுமன் குமார் இருவரும் அமைத்துள்ள திரைக்கதை சீராக நகர்கிறது. ஆனால், ஒரு காட்சியில் லேசாக கடந்துபோகும் அம்சத்தைப் பொதித்து பின்பகுதிக் காட்சிகளில் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் தரும் உத்தியைத் தவற விட்டிருக்கின்றனர். அதனால், அடுத்த எபிசோடு பார்க்க வேண்டுமென்ற ஆசை மட்டுப்படுகிறது.

முதல் படமான ‘99’இல் தொடங்கி இப்போது வரை, உண்மையான நிகழ்வுகளைப் பிரதிபலிப்பதாகவே தங்களது படைப்புகளைத் தருகிறது ராஜ் & டிகே இணை. ’ஃபார்ஸி’யும் கூட அப்படித்தான் தெரிகிறது. ஆனால், இதில் கள்ளநோட்டுகள் இந்தியாவுக்குள் வரும் விதம் கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. பல ஆயிரம் கோடி கள்ளநோட்டுகளைக் கொண்டுவரும் கண்டெயினர்களை கடலில் தள்ளுவதாகக் காட்டுவதெல்லாம் ‘நாயகன்’ காலத்து பார்முலா.

நல்ல நடிகர்களைக் கொண்டு வழக்கமான கதையைக் கூட சிறப்பான வடிவில் தர முடியும். இயக்குனர்கள் ராஜ் & டிகே அதைச் சாதித்தாலும், ஒரு புதிதான, புத்துணர்வான அனுபவத்தை ‘ஃபார்ஸி’ தரவில்லை என்பதே உண்மை. இதன் அடுத்த சீசன் இந்த விமர்சனத்தைத் தாண்டுகிறதா என்று பார்க்கலாம்!

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival