Read in : English

‘டிஷ்யூம்.. டிஷ்யூம்..’ சத்தம் கேட்டவுடனே, எந்தவொரு குழந்தையும் குஷியாகிவிடும். அந்த வயதில், சண்டைக்காட்சிகள் இல்லாத திரைப்படத்தைப் பார்ப்பதென்பது வெறுப்பைத் தரும் அனுபவம். ‘எத்தனை சண்டை இருக்கு’ என்ற கேள்வியைக் கேட்காத குழந்தைகளே இருக்க முடியாது. நடனம் போலவே உடனடியாக ஈர்க்கக்கூடியவை நாயகனின் மோதல்கள்.

அந்தக் காலம் மட்டுமல்ல, இன்றும் அதே நிலைமைதான். அபாரமான சண்டைக்காட்சிகளே ஒரு வெற்றிகரமான படத்திற்கான அளவுகோலாகப் பார்க்கப்படுகின்றன. அதனாலேயே, நடிகர்களும் கூட ஆக்‌ஷன் ஹீரோக்களாக மாறும் இலக்கை நோக்கியே தங்கள் ஆயுளைச் செலவழிக்கின்றனர்.

அப்படியென்றால், சண்டைக்காட்சிகள் என்பது ஒரு படத்திற்கு எவ்வளவு முக்கியம்? தமிழ் சினிமாவில் சண்டைக்காட்சிகள் எப்படியெல்லாம் இருந்தன?

எப்பேர்ப்பட்ட சண்டைக்காட்சியாக இருந்தபோதும், திரையில் துளிகூட ரத்தம் தெறித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த காலம் அது

பாட்டா, சண்டையா?
புராணங்களையும் சரித்திரங்களையும் திரைக்கதை ஆக்கியபோதே, சண்டைக்காட்சிகளுக்கென்று ஒரு மவுசு வந்துவிட்டது. ‘பாகவதர் படம்னா பாட்டா இருக்கும், சின்னப்பா படம்னா சண்டையா இருக்கும்’ என்று ரசிகர்கள் தங்களுக்குள் பாகம் பிரித்துக்கொண்டனர்.

1940களில் பி.யு.சின்னப்பா நடித்த உத்தமபுத்திரன், ஜகதலப்பிரதாபன் போன்றவை சண்டைக்காட்சிகளுக்காகவே வரவேற்பைப் பெற்றன. அதற்கேற்றவாறு வாள், சுருள்பட்டா, கத்தி கொண்டு சண்டையிடுவதும், குதிரையேற்றம் செய்வதும் சின்னப்பா படங்களில் நிறைய இருக்கும்.
அப்போதே எஸ்.எஸ்.கொக்கோ, பாட்லிங் மணி போன்ற பல நடிகர்கள் சண்டைக்காட்சிகளை மையமாக கொண்ட படங்களில் நடித்தார்கள்.

எப்பேர்ப்பட்ட சண்டைக்காட்சியாக இருந்தபோதும், திரையில் துளிகூட ரத்தம் தெறித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த காலம் அது. அதனால் வில்லனும் ஹீரோவும் மோதும்போது ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து உருள்வதும் தள்ளுவதும் தான் இருக்குமே தவிர கொலை வெறி கொஞ்சமும் இருக்காது.

மேலும் படிக்க: எம்ஜிஆர் படங்களில் பெருந்தாக்கம் ஏற்படுத்திய ஹாலிவுட் நடிகர்கள்!

ஆக்‌ஷன் ஹீரோ எம்ஜிஆர்!
அரச கதைகள் மட்டுமே ஆக்‌ஷனுக்கு இடம் தந்த காலமொன்று உண்டு. சுதந்திரம், சமத்துவம் பேசிய சமூகப் படங்களில் பாடல்களும் வசனங்களும் இருக்குமளவுக்குச் சண்டைக்காட்சிகள் இடம்பெறவில்லை.
1950களில் நிலைமை மாறியது. அரச கதைகளில் வாள்வீச்சும் சொல் வீச்சும் மிகுந்திருந்தாலும் நிறைய சமூக கதைகள் திரையரங்குகளை நிறைத்தன. எம்ஜிஆரும் சிவாஜியும் தலையெடுத்தார்கள்.

அப்போது “சிவாஜி படம் பார்த்தால் அழுகை வரும் எம்ஜிஆர் படம் பார்த்தால் சந்தோஷம் வரும்” என்ற பிரச்சாரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். ஒன்றுமில்லை, எம்ஜிஆர் படங்களில் எல்லா உணர்வுகளும் அளவோடு வெளிப்படுத்தப்பட்டிருக்கும். சிவாஜி படங்களில் அந்த உணர்வுகள் ஆழத்தைத் தொட முயற்சித்திருக்கும். ஆனாலும், எம்ஜிஆர் அளவுக்கு சண்டைக்காட்சிகள் இருந்தே தீர வேண்டுமென்று சிவாஜி மெனக்கெட்டதில்லை. அதனாலேயே, குழந்தைகள் எம்ஜிஆர் படங்களை விரும்பிப் பார்த்தார்கள்.

ஐம்பதில் தொடங்கி அறுபதுகளின் இறுதிவரை ஆர்.என்.நம்பியார், ஷ்யாம் சுந்தர், எம்.எஸ்.தாஸ், மாடக்குளம் அழகிரி, தர்மலிங்கம் போன்ற ஸ்டண்ட்மாஸ்டர்கள் வெற்றிக்கொடி நாட்டினார்கள். பின்னணி இசையில் வாத்தியங்கள் ஒருபக்கம் உருண்டோட, திரையில் துள்ளிக் குதித்து விலகி நின்று முஷ்டியை முறுக்கி மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்கள் நாயகர்கள்.
அவற்றோடு கொஞ்சமாய் குத்துச்சண்டை, சிலம்பம் போன்றவை படங்களில் இடம்பெற்றன.

கூடவே காளை, சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட விலங்குகளை அடக்குவது சாகசமாய் கொண்டாடப்பட்டன. மான் கொம்பு பயன்படுத்திச் சண்டையிடுவதும் வழக்கமாய் இருந்தது.

பின்னணி இசையில் வாத்தியங்கள் ஒருபக்கம் உருண்டோட, திரையில் துள்ளிக் குதித்து விலகி நின்று முஷ்டியை முறுக்கி மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்கள் நாயகர்கள்

அடைப்புக்குறி இட்டாற் போல..!
அறுபதுகளுக்கு பிறகு, முழுக்க ஆங்கிலப் பட பாணியில் சண்டைகளை வடிவமைக்கும் வழக்கம் புழக்கத்திற்கு வந்தது. கராத்தே, ஜுடோ, குங்ஃபூ என்று கிழக்காசிய தற்காப்புக் கலைகளின் பிரதிபலிப்பு திரையில் தெரிந்தது. வில்லன் அடிக்கும்போது நாயகன் தடுப்பதும் திருப்பித் தாக்குவதும் ஒரு வானவில்லை போல் அல்லாமல், நேர்கோடுகளை அள்ளி வீசி அடைப்புக்குறி இட்டாற் போலிருக்கும்.

கூடவே சுற்றுச்சுவர்கள், மேஜை நாற்காலிகள், எதிராளிகளின் தோள்பட்டை என்று எங்கு இடம் கிடைத்தாலும் ஏறி நின்று சண்டையிடுவதும் ஒரு பாணியாக மாறியது.

எழுபதுகளின் தொடக்கத்தில் ரவிச்சந்திரன், சிவகுமார், விஜயகுமார் என்று அடுத்த தலைமுறை எம்ஜிஆரின் ஆக்‌ஷன் முகத்தை பிரதியெடுக்கத் துடித்தது. அவர்களுக்கு நடுவே துப்பறிவாளராகத் தோன்றி துப்பாக்கியை நீட்டினார் ஜெய்சங்கர். ’டிஷ்யூம் டிஷ்யூம்’ சத்தங்களுக்கு நடுவே ‘டமால்.. டுமீல்..’ சத்தமும் ரசிகர்களின் காதுகளுக்குள் புகுந்தது.

எழுபதுகளின் பிற்பாதியில், ரஜினியின் அறிமுகத்திற்குப் பிறகு அதே சண்டைக்காட்சிகள் அப்படியே ரோபோவின் அசைவு போல மாறியது. ரஜினியின் ஸ்டைலான மேனரிசங்களுடன் சண்டைக்காட்சி வடிவமைப்பு பொருந்திப் போனது. மறைந்த சண்டைப்பயிற்சி இயக்குனர் ஜூடோ கே.கே.ரத்னம் ரஜினியின் ஆஸ்தான மாஸ்டராக இடம்பிடித்தார்.
இயல்பான மோதலைப் பார்க்கும் உணர்வைத் தந்தன கிருபாவின் சண்டைக்காட்சிகள்.

மேலும் படிக்க: அந்தரத்தில் பறக்க வைத்த ஆசான் – ஜூடோ ரத்னம்

இவர்களது உதவியாளர்கள் பலர் திரையில் தொடர்ச்சியாக அடிகளையும் உதைகளையும் பெற்று, மெல்ல சண்டைப்பயிற்சியாளர் அந்தஸ்தை அடைந்தனர். கிருபாவும் சரி, ரத்னமும் சரி, தற்காப்புக் கலைகளில் சிறப்பான இடத்தைப் பிடித்தபிறகே கேமிராவுக்கு முன்னால் அவற்றை நகலெடுக்கும் வித்தையை அறிந்துகொண்டார்கள்.

அந்தரத்தில் பறக்கலாமா?
குழாயில் இருந்து தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது போல, நாயகர்கள், வில்லன்கள் தொடங்கி சண்டைக்கலைஞர்கள் வரை அனைவரும் அந்தரத்தில் பறந்த காலமொன்று உண்டு. நியூட்டனுக்கே சவால் விடும் வகையில், இருக்கும் இடத்தில் இருந்தே பல மீட்டர் உயரத்திற்கு எம்பிச் சென்றனர் மனிதர்கள். அதன் எதிரொலியாக, இன்று பத்து இஞ்ச் தடிமன் கொண்ட மரத்தடியை டயரில் செருகி பனை மர உயரம் வரை வாகனங்கள் பஞ்சாகப் பறக்கின்றன.

உண்மையில், எழுபதுகளுக்குப் பிறகே சைக்கிள், மோட்டார்சைக்கிள், கார் போன்றவை அந்தரத்தில் பறக்கத் தொடங்கின. ஹீரோக்கள் மட்டுமே அந்த வாகனங்களை ஓட்டினார்கள். அதன்பிறகு, ‘டூப்’ ஆக நடிப்பவர்களுக்கு தனி மவுசு பிறந்தது. மிகச்சில நடிகர்கள் மட்டும் அபாயங்களை எதிர்கொள்வதை சாகசமாக நினைத்தார்கள். அந்த வித்தியாசம் படப்பிடிப்புத்தளங்களில் இருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

சில படங்களில் நெருப்பைக் கக்கும் நுட்பங்கள் காட்டப்பட்டன. இருளைக் கிழித்து மஞ்சளும் பழுப்புமாய் ஒளிரும் நெருப்பு திரையில் பிரமாண்டமாகத் தெரிந்தது. சில வேளைகளில் நடிப்புக்கலைஞர்களோடு ஆடு, மாடு, குதிரை உட்படப் பல உயிரினங்களும் தீக்கு நடுவே ஓடியாடிச் சம்பாதித்தன. அதேபோல, மணற் பரப்புகளிலும் நீர்நிலைகளிலும் அவை தடுக்கி விழுவதை 90 டிகிரியில் படமாக்கினார்கள் ஒளிப்பதிவாளர்கள்.

புரூஸ்லீ தாக்கம்!
ஜேம்ஸ்பாண்டின் சாகசங்களை பார்த்து சண்டை போட்டுக் கொண்டிருந்த இந்திய நட்சத்திரங்கள், எண்பதுகளில் புரூஸ் லீயையும் பின்னர் ஜாக்கிசானையும் பார்த்து மிரண்டு போனார்கள்.

புரூஸ் லீயைப் போல உடல் மெலிவதும் உறுதிப்படுவதும் கடினம் என்பதால், அந்த சண்டைக்காட்சிகளில் இருந்து சத்தங்களை மட்டும் இரவல் வாங்கிக் கொண்டது இந்தியத் திரையுலகம். ’ஹூவா.. ஹூ… ஹி’ போன்ற வார்த்தைகள் அப்படித்தான் தமிழ் அகராதியில் இடம்பிடித்தன. பீப்பாய், பெஞ்ச், மேஜை, நாற்காலி, தள்ளுவண்டி தொடங்கி என்னென்ன பிராபர்டிகளை பயன்படுத்தி சண்டைக்காட்சிகளை அமைக்கலாம் என்று சண்டைப்பயிற்சியாளர்கள் யோசிக்கத் தொடங்கியது அப்போதுதான்.

அதன் தொடர்ச்சியாக, சண்டை போடுவதற்குத் தோதான களங்களையும் தேடிக் கண்டுபிடித்தனர் தமிழ் பட இயக்குனர்கள். பூ, பழம், காய்கறி என்று பொருட்கள் பல கொட்டிக் கிடக்கும் சந்தைகளும் அங்காடிகளும் நாயகனின் புஜபலத்தைக் காட்டும் இடங்களாக மாறின. மேஜை நாற்காலி முதல் கதவுகள், ஜன்னல்கள், ஏன் சுவர்களே கூட உடைந்துவிடும் அளவுக்கு ஆக்‌ஷனில் பின்னியெடுக்கத் தொடங்கினார்கள் நாயகர்கள். அப்புறமென்ன, ஒவ்வொரு படத்திலும் ஓட்டை உடைசல்கள் எண்ணிக்கை புற்றீசல்களாய் பெருகத் தொடங்கின.

எண்பதுகளில் ஆம்பூர் பாபு, சூப்பர் சுப்பராயன், விக்ரம் தர்மா, ராம்போ ராஜ்குமார், தளபதி தினேஷ், பொன்னம்பலம் தொடங்கிப் பலரும் ஸ்டண்ட் மாஸ்டர் ஆனார்கள். அந்த காலகட்டத்தில்தான் விஜயகாந்தின் கால்கள் வில்லனின் முகம் வரை எகிறி திரையைக் கிழிக்கத் தொடங்கியிருந்தது. அது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவே, பல நாயகர்கள் தலைக்கு மேலே கால்களைத் தூக்கப் பயிற்சி எடுத்தனர். அவர்களால் ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கும் நல்வாழ்வு பிறந்தது.

எண்பதுகளில் ஆம்பூர் பாபு, சூப்பர் சுப்பராயன், விக்ரம் தர்மா, ராம்போ ராஜ்குமார், தளபதி தினேஷ், பொன்னம்பலம் தொடங்கிப் பலரும் ஸ்டண்ட் மாஸ்டர் ஆனார்கள்; அந்த காலகட்டத்தில்தான் விஜயகாந்தின் கால்கள் வில்லனின் முகம் வரை எகிறி திரையைக் கிழிக்கத் தொடங்கியிருந்தது

துப்பாக்கியுடன் நாயகர்கள்!
தெலுங்கு படங்களில் நாயகனும் நாயகியும் டூயட் பாடும்போது இருவருக்கும் இடையே டன் கணக்கில் பூ, பழம், காய்கறிகள் தூது செல்லும். காதலுக்கு மட்டுமல்ல, மோதலுக்கும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றானபிறகு, திரையரங்குகளில் ரசிகர்கள் மீதெல்லாம் பழமும் காயும் பூக்களும் கொட்டத் தொடங்கின. அதுவும் திருப்தியில்லை என்றானபிறகு, வில்லனும் நாயகனும் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை வீசி திரையில் ஹோலி கொண்டாடத் தொடங்கினார்கள். ஒரு படம் என்றில்லை, பலவற்றில் அந்த உத்தியை நம்மால் பார்க்க முடியும்.

தொண்ணூறுகளின் பின்பாதியில் கத்தி கப்படாக்கள் வேண்டாம் என்று துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் கையிலெடுத்தார்கள் நம் நாயகர்கள். மெதுமெதுவாக ராக்கெட் லாஞ்சர், மெஷின் கன் என்று முன்னேறியவர்கள், இன்று ஆர்னால்டு ஸ்வாசநேகர் ரேஞ்சில் நம் மீது குண்டுமழை பொழிகிறார்கள்.

இன்று தென்னிந்தியாவைச் சேர்ந்த எந்தவொரு சண்டைப்பயிற்சியாளரும் இந்தி உட்பட இந்தியாவெங்கும் இருக்கும் பிற மொழிப்படங்களில் பணியாற்ற முடியும். இரண்டாயிரத்தில் அது பரவலானாலும், ஓடிடியின் வரவு அவர்களுக்கான இடத்தை வசதியாக்கித் தந்துள்ளது. அதனால் தான் ‘அய்யப்பனும் கோஷியும்’ தந்த சுப்ரீம் சுந்தரும் சரி, ‘கேஜிஎஃப்’ தந்த அன்பறிவ் சகோதரர்களும் சரி ஒரே படத்தில் கொண்டாடப்படுபவர்களாக மாறியிருக்கின்றனர். ’பதான்’ படத்தில் ஷாரூக்கின் ஆக்‌ஷன் வேடம் தூள் பரத்துவதற்கு அனல் அரசுவின் சண்டைக்காட்சிகளே காரணம்.

பெரியவர், சிறியவர் வித்தியாசம் இல்லாமல், பட்ஜெட் விஷயங்களில் பாகுபாடில்லாமல் அனைத்து சண்டைப்பயிற்சியாளர்களும் கொண்டாடப்படும் சூழல் உருவாகியிருக்கிறது. சிறிய படம் என்றாலும், சண்டைக்காட்சி வடிவமைப்பில் சத்து இருந்தால் ரசிகர்கள் விசிலடித்து வரவேற்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் வந்த ‘உறியடி’ போன்ற படங்களே அதற்குச் சாட்சி.

அதேபோல, இன்று உருவாக்கப்படும் சண்டைக்காட்சிகளில் இளைய தலைமுறையின் கவனத்தைத் திருப்பும் விஷயங்கள் பல இருப்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மனித உணர்வுகளை மறக்கடித்து ஒரு எந்திரம் போல ஒருவரையொருவர் கருதுவதையும் குறிப்பிடத்தான் வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன், தென்மாவட்டப் பள்ளியொன்றில் ஒரு மாணவர் இன்னொரு மாணவரை தலைக்கு மேலே தூக்கி தரையில் வீசிய வீடியோ வைரலாக பரவியது.

அந்த மாணவர் பலியானார் என்ற செய்திக்குப் பிறகு அந்த வீடியோ பரவவில்லை; என்றாலும், நாம் பார்க்கும் சண்டைக்காட்சிகளே அவற்றுக்கான விதை என்று நினைக்கத் தோன்றுகிறது.

தரையில் வீசப்பட்ட பந்து போல, இன்றைய திரைப்படங்களில் ஒரு அடிக்குப் பலமுறை துள்ளி எழுந்து விழுகின்றனர் சண்டைக்கலைஞர்கள். ஆனால், யதார்த்தம் அதுவல்ல என்பது ரசிகனுக்குப் புரிவதில்லை. கான்கிரீட் கட்டடங்களில் தாவிச் செல்வதை இலகுவானதாக நினைத்து விடுகின்றனர். நிச்சயம் அது தவிர்க்கப்பட வேண்டும்.

மொபைல் வருகையால் உலகமே கைக்குள் சுருங்கி விட்ட சூழலில், உலகின் ஏதோ ஒரு மூலையில் கொண்டாடப்படும் சண்டைக்காட்சி உத்திகள் அடுத்த நொடியே இங்கு பயன்படுத்தப்படுகின்றன. பெரும் பொருட்செலவு உண்டாவதைத் தவிர்த்து, மற்றனைத்தையும் இங்கேயே செய்து காட்டலாம் என்றாகி வெகுநாட்களாகிறது.

இன்னும் சொல்ல ஏராளம் இருக்கின்றன. ஒரு ஆக்‌ஷன் பட ரசிகராக இருந்தால் மட்டுமே, அதனைப் புரிந்துகொள்ள முடியும்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival