Read in : English
பாலமேடு கிராமத்தில் திங்கள் கிழமை (ஜனவரி 16, 2023) குளிர்காலச் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடித்துக் கொண்டிருந்தபோது ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. நடந்த ஜல்லிக்கட்டில் அரவிந்த்ராஜிக்கு முதலில் எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
காலை 7.45 மணி அளவில் முதல்சுற்று ஜல்லிக்கட்டில் காளையடக்க நுழைந்தவர்களில் ஒருவர் 25 வயது அரவிந்த்ராஜ். தொடர்ந்து பல சுற்றுகளில் ஒன்பது காளைகளை அடக்கி உற்சாகத்தின் உச்சியில் இருந்த அவர் பத்தாவது காளையை அடக்கப் போராடியபோது அவர் தன் அதிர்ஷ்டத்தையும் உயிரையும் ஒருசேர இழந்தார்.
வாடிவாசலில் இருந்து 10.30 மணி அளவில் உக்கிரமாக ஓடிவந்த ஒரு கறுப்புக் காளை அரவிந்த்ராஜின் அடிவயிற்றைக் கிழித்தது. ஒருசில கணங்கள் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு அவர் மயங்கி விழுந்தார். சுகாதாரப் பணியாளர்களும், பிற ஜல்லிக்கட்டு வீர்ர்களும் மருத்துவ ஊழியர்களும் அவரை ஸ்ட்ரெச்சரில் கிடத்தி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அதற்குள் அரவிந்த்ராஜ் அகால மரணமடைந்தார்.
தொடர்ந்து பல சுற்றுகளில் ஒன்பது காளைகளை அடக்கி உற்சாகத்தின் உச்சியில் இருந்த அவர், பத்தாவது காளையை அடக்கப் போராடியபோது அவர் தன் அதிர்ஷ்டத்தையும் உயிரையும் ஒருசேர இழந்தார்
இவ்வளவுக்கும் கடந்து ஆறு ஆண்டுகளாகக் காளையடக்கும் கலையில் வல்லவராகத் திகழ்ந்தவர்தான் அரவிந்த்ராஜ் என்று அவரது குடும்பத்தினர் கூறினார்கள். கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்த அவர் உழைப்பால் உரமேறிய உடலும் நல்ல உயரமும் கொண்டவர். மேலும் வளைந்து கொடுக்கக் கூடிய நெகிழ்வுத்தன்மையும் கொண்டது அவரது உடல்.
அதுதான் ஒரு ஜல்லிக்கட்டு வீரருக்கு இருக்க வேண்டிய முக்கிய அம்சம். எப்போது காளையைப் பிடிக்குள் கொண்டுவர வேண்டும்; எப்போது அதை விட்டுப் பிடிக்க வேண்டும் என்றெல்லாம் துரிதகதியில் எதிர்வினையாற்றக் கூடிய திறன் அவருடைய உடல்வாகுவிற்கு இருந்தது.
“தை மாதத்திற்காக நாங்கள் காத்திருந்தோம். அவருக்குப் பெண் பார்க்க வேண்டும் என்பதற்காக. ஆனால் எல்லாமும் படுவேகமாக முடிந்துவிட்டது. அற்பாயுசிலே அவர் போய்விட்டார்,” என்று அவரது உறவினர் மோகன் துயரம் தோய்ந்த குரலில் சொன்னார்.
மேலும் படிக்க: ஜல்லிக்கட்டில் காளைகளை மாடுபிடி வீரர்கள் எப்படி பிடிக்கிறார்கள்?
அரவிந்த்ராஜின் தந்தை ஒரு தினக்கூலி; வீட்டைக் கவனித்துக் கொண்டிருந்த அவரது தாய் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். ”அம்மாவுக்கு அரவிந்த்ராஜ் மிகவும் செல்லம். அந்த அம்மாவை எப்படித் தேற்றப் போகிறோம் என்று தெரியவில்லை,” என்றார் மோகன். அரவிந்த்ராஜின் அண்ணனுக்குத் திருமணமாகிவிட்டது. அரவிந்த்ராஜ் இளையவர்.
அரசு வழங்கிய மூன்று லட்சம் ரூபாயும், அத்துடன் மந்திரியும், சோழவந்தான் எம்எல்ஏ-யுமான வெங்கடேசன் தந்த இரண்டு லட்சம் ரூபாயும் சேர்த்து மொத்தம் .5 லட்சம் ரூபாயும் அரவிந்த்ராஜின் குடும்பத்திற்குத் தரப்பட்டது. செவ்வாய்க் கிழமை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முடிந்ததும், வணிகவரி அமைச்சர் பி. மூர்த்தி அரவிந்த்ராஜின் வீட்டுக்கு வந்து அந்த உதவித் தொகையை வழங்கினார்.
பொதுமக்களைப் பொறுத்தவரை ஜல்லிக்கட்டு என்பது ஓர் எளிதான விளையாட்டாகத் தோன்றலாம். வாடிவாசலிலிருந்து ஓடிவரும் காளையின் திமிலைக் கெட்டியாகப் பிடித்துத் கொண்டு மாடு எல்லையைத் தாண்டும்வரை தாக்குப் பிடிக்கும் வீரர் வெற்றி பெறுகிறார்; பரிசைத் தட்டிப் பறிக்கிறார்; இல்லை என்றால் ஆளை வென்றுவிடுகிறது காளை. இப்படித்தான் எல்லோரும் எளிமையாக யோசிக்கிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டில் நுட்பங்களும் சூட்சுமங்களும் நிறையவே உண்டு. வாடிவாசலுக்குள் மாடு நுழையும் கணம் முதலே அதன் நோக்கையும் போக்கையும் காளையடக்குபவர் கூர்ந்து அவதானிப்பார். மாட்டின் மூக்கணாங்கயிறு தளர்த்தப்பட்டு மாடு கட்டவிழ்க்கப்பட்டவுடன், முதலில் அது எப்படி தலையாட்டுகிறது என்பதை முதலில் ஜல்லிக்கட்டு வீரர் உற்று நோக்குவார்.
ராக்கெட்டின் வேகத்தோடு நுழைவாசலிலிருந்து காளை ஓடிவரும் போதே அது எகிறி இடப்பக்கம் பாயுமா அல்லது வன்மையோடும் வன்மத்தோடும் வலப்பக்கம் ஓடுமா என்பதைக் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் எண்ணி முடிக்க வேண்டும். வாடிவாசலில் தந்திரமான வசதியான ஓரிடத்தில் நின்றுகொண்டால்தான் காளையடக்கும் வீரரால் மாட்டுக் கொம்புத் தாக்குதலிலிருந்து தன்னைக் காத்துக்கொண்டு அதன் திமிலைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள முடியும்.
அரசு வழங்கிய மூன்று லட்சம் ரூபாயும், அத்துடன் மந்திரியும், சோழவந்தான் எம்எல்ஏ-யுமான வெங்கடேசன் தந்த இரண்டு லட்சம் ரூபாயும் சேர்த்து மொத்தம் .5 லட்சம் ரூபாயும் அரவிந்த்ராஜின் குடும்பத்திற்குத் தரப்பட்டது
ஜல்லிக்கட்டில் துள்ளி விளையாடுவது ஆளைப் பதம்பார்க்கும் காளைகள் மட்டுமல்ல; அரசியலும் கூட. குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்குப் புரவலராக இருக்கும் பெரிய மனிதர்களின் காளைகளை வீரர்கள் விட்டுவிடுவார்கள்; அல்லது வீரர்கள் அந்த மாடுகளைப் பிற வீரர்கள் தொடாதவண்ணம் பார்த்துக் கொள்வார்கள்.
காளையடக்குபவர்கள் மட்டும் பயிற்சி எடுத்துக் கொள்வதில்லை; கெளரவத்திற்காகவும் பெருமைக்காகவும் போஷாக்கு ஊட்டி வளர்க்கப்படும் அரை டன் கனமான ஒரு ஜல்லிக்கட்டு காளைக்கும் கடுமையான பயிற்சி உண்டு.
வாடிவாசலிலிருந்து ஓடிவருவது முதல் தொடவரும் ஆளை அடையாளம் கண்டு தன்னை அடைய முடியாதவாறு தாக்கித் தூக்கி எறிவது வரை காளைக்கு நுட்பமான பயிற்சிகள் ஏராளமாகத் தரப்படுகின்றன. ஜல்லிக்கட்டு வீரர்கள் துள்ளிக்கொண்டு திரியும் முன்பின் தெரியாத மைதானத்தில் கட்டவிழ்த்து விடப்படும் ஒரு காளை தனக்குப் பரிச்சயமான சமிக்ஞைகள் ஏதேனும் தென்படுகிறதா என்று சுற்றுமுற்றும் உற்றுப் பார்க்கும். அந்த சமிக்ஞைகள் அதன் உரிமையாளரின் விசில் சத்தமாக இருக்கலாம்; அல்லது கைத்தட்டல் ஓசையாக இருக்கலாம். அல்லது உற்சாகக் கூப்பாடாக இருக்கலாம்.
மேலும் படிக்க: ஜல்லிக்கட்டின் விதிமுறைகள் காற்றில் பறக்கின்றனவா?
”அரவிந்த்ராஜைக் கொன்ற காளை ஒன்றும் அசாதாரணமானது அல்ல. சொல்லப் போனால் அதற்கு முந்திய நாள்தான் அது அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அடக்கப்பட்டது. உயிரைக் காவுகொள்ளும் காயங்கள் ஏற்படும் அளவுக்கு அரவிந்த்ராஜ் எப்படி தவறு செய்தார் என்று புரியவில்லை,” என்றார் குருவித்துறையைச் சேர்ந்த ஆர். விஜி என்னும் மற்றொரு ஜல்லிக்கட்டு வீரர்.
அவரும் கூட சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டில் படுமோசமான அனுபவம் பெற்றவர்தான். அப்போது அவரது கண் புண்ணாகிப் போனது. நல்ல வேளையாக முகத்தில் செய்யப்பட்ட பல அறுவைச் சிகிச்சைகளுக்குப் பின்னர் அவர் உயிர்பிழைத்தார்.
ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் ஒவ்வொரு காளையையும் பற்றி, குறிப்பாக அசாதாரணமான மாடுகளைப் பற்றி வீரர்கள் தொடர்ந்து அவதானித்து தெரிந்துகொள்வார்கள்: பழைய காலத்தில் வாய்வார்த்தை மூலமாக அந்த அறிவு அவர்களுக்கு ஏற்பட்டது.
ஆனால் தற்காலத்தில் நவீன கருவிகளும், யூடியூப் போன்ற செயலிகளும் காளைகளைப் பற்றி ஏராளமான தகவல்களை அள்ளித் தெளிக்கின்றன. “என்றாலும் கூட ஜல்லிக்கட்டு என்பது துல்லியமான கணிப்புகளுக்கும் ஆருடங்களுக்கும் அப்பாற்பட்டது. அதன் சிறப்பே அதுதான்,” என்றார் விஜி.
Read in : English