Read in : English

குருவித்துறை விஜி மற்றும் முடக்கத்தான் மணி மாடு பிடிப்பவர்கள் மத்தியில் பிரபலமான பெயர்கள். வாடிவாசலிலிருந்து மாடு வெளியேறிய உடன் மின்னல் போல பாய்ந்து மாடுகளை பிடிப்பதில் வல்லவர்கள். பார்ப்பதற்கு மிகச்சாதாரணமாக இருக்கிறார்கள். “வெயிட் முக்கியம் கிடையாதுணே. ஸ்டமினா முக்கியம்,” என்கிறார் விஜி. 
 
மாடுபிடிப்பதில் கவனம்தான் முக்கியம் என்கிறார்கள் இவர்கள். மாட்டின் திமிலை பிடிக்கும் அந்த நொடிதான், மாடா அல்லது மனிதனா, யார் வெற்றிபெறுகிறார்கள் என்பதை தீர்மானிக்கிறது. ஆனால் அந்த நொடிக்கு பின்னால் மாதக்கணக்கான தயாரிப்பு இருக்கிறது. 

கவனம் தவறும் அந்த நொடியின் விலை மிகவும் அதிகம்.

 
கவனம் தவறும் அந்த நொடியின் விலை மிகவும் அதிகம். இடது நெற்றியின் மேல் இருக்கும் காயத்தை காண்பிக்கும் விஜி அது எப்படி ஏற்பட்டது என்பதை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். வழக்கம்போல 2018 ஆம் ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டபோது ஒரு காளை ஏற்படுத்திய காயம் அது. வினாடிகளுக்குள் நெற்றியின் மேல் பாய்ந்த காளையின் கொம்பு சதையோடு மண்டையோட்டை பிய்த்தெறிய, விஜி உயிர்பிழைப்பது பெரிய பாடாகிவிட்டது. கிட்டத்தட்ட எட்டு லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். 
 

ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பதும் ஜல்லிக்கட்டில் மாடுபிடிப்பதும் மதுரை மற்றும் திருச்சி சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் இளைஞர்களின் விருப்பமான வேலை. ஜல்லிக்கட்டு போராட்டம்

காளைக்கு பயிற்சியளிக்கும் இளைஞர்கள்

நடந்தபிறகு இந்த ஆர்வம் பெரும்பாலும் தமிழ்நாடு முழுவதும் உள்ளது எனலாம். மாடுபிடிப்பதிலும் மாடு வளர்ப்பதிலும் எல்லா சமூகத்தினரும் இருக்கிறார்கள். 

 
வாடிவாசலில் இருந்து பாயும் மாட்டின் அகன்ற பெரிய கண்களை அவதானித்து மாட்டின் போக்கை தீர்மானிக்கிறார்கள். பயப்படும் மாடுகள் தாவி செல்லவே பார்க்கும், நிதானமான மாடுகள் சட்டென்று அகப்படும், ஆனால் சற்று பரபரப்பாக தெரியும் மாடுகளிடம் கவனம் தேவை. பாஞ்ச (பாயும்) மாடு, ஓட்ட மாடு மற்றும் விளையாட்டு மாடு என்று காளைகளை தரம் பிரிக்கிறார்கள். காங்கேயம், புலிக்குளம், தஞ்சாவூர் குட்டை, நாட்டு குட்டை, தேனி மாடு முதலிய இனங்களில் புலிக்குளம் சற்று ஆபத்தானது போன்றவை மாடுபிடி வீரர்களிடம் கிடைக்கும் தகவல்கள். 
பிடிமாடாகும் காளை எது?
 
என்னதான் தயாரிப்பு இருந்தாலும், ஜல்லிக்கட்டு ஒரு ஆபத்தான விளையாட்டு. கிட்டத்தட்ட அரை டன் உள்ள காளையிடம் அகப்படுவது சாலை விபத்தில் அடிபடுவது போன்றது. என்றாலும் மாடுபிடி வீரர்களின் தயாரிப்புகள் அபரிமிதமானவை. பயிற்சிக்காக வாடிவாசலில் விடப்படும் கன்றுகளை அவர்கள் குறித்து வைத்து கொள்கிறார்கள். அந்த கன்று பிற்காலத்தில் எப்படி உருவாகும் என்பதையும் அந்த கன்றுகளை வளர்ப்பவர்கள் யார் அவர்களது பின்னணி என்ன என்பதையும் கவனித்து வைத்து கொள்கிறார்கள். “காளைகள் கலந்து கொள்வது போல எல்லா ஜல்லிக்கட்டுகளிலும் நாங்களும் கலந்து கொள்கிறோம். ஒரு மாட்டின் ஜாதகமே எங்களுக்கு தெரியும்,” என்கிறார் முடக்கத்தான் மணி. 

ஒரு குறிப்பிட்ட காளை கலந்து கொண்ட ஜல்லிக்கட்டை யூடியூபில் மீண்டும் மீண்டும் பார்க்கிறார்கள்.

 

மணி சொல்வது ஒரு பாரம்பரிய வழிமுறையெனின், விஜி சொல்வது இணையத்தின் வழியே கிடைத்திருக்கும் புது வழி. ஒரு குறிப்பிட்ட காளை கலந்து கொண்ட ஜல்லிக்கட்டை யூடியூபில் மீண்டும்

கால்களை வலுப்படுத்த காளைகளுக்கு நீச்சலும் நடையும்

மீண்டும் பார்க்கிறார்கள். மாடு எப்படி நடந்து கொள்கிறது, வலதா இடதா எந்த பக்கம் பாய்கிறது (குத்துகிறது), கொம்பு வாகு எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள இந்த காணொளிகள் உதவுகின்றன. 

 
மாடு பிடிக்கும்போது தங்கள் நண்பர்கள், ஊர்க்காரர்கள் தங்களோடு அரங்கில் இருக்கிறார்களா? என்பதிலும் கவனமாக இருக்கிறார்கள். ஒருவர் பிடிப்பதுதான் பிடிமாடு ஆனால் அதற்க்கு  ஒருங்கிணைப்பு தேவை. மாடு ஒருவரை உதறி எறியும்போது மற்றவர் அதன் மீது பாய வேண்டும். “நமக்கு தெரிஞ்சவங்க கூட இருக்கணும்ணே,” என்கிறார் விஜியின் நண்பர் தங்கபாண்டி. 
 
மாடும் மனிதனும் இணையும் புள்ளி 
 

மாடுபிடி வீரர்கள் பெரும்பாலும் மாடு வளர்பவர்களாகவும் இருக்கிறார்கள். கன்றாக இருக்கும்போதே காளைகளை வாங்குகிறார்கள். தங்களுடைய மாடுபிடி அனுபவத்தின் வழியே அவற்றை கவனமாக பழக்குகிறார்கள். ஊட்டமான தீவனத்தோடு மாட்டுக்கு பயிற்சி கொடுக்கிறார்கள். நீந்த வைக்கிறார்கள், நடக்க வைக்கிறார்கள் அத்தோடு அவற்றை பாயவும் பயிற்சியளிக்கிறார்கள்.

ஒவ்வொரு காளையின் பின்னும் ஒரு கதையுண்டு

 
இந்த காளைகளோடு அவர்களுக்கு உள்ள உறவு நெகிழ வைப்பதாக இருக்கிறது. விஜி வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளையின் பெயர் தக்காளி. சாலை விபத்தில் இறந்துபோன அவரது நண்பர் விஜயானந்தம் என்பவரின் செல்லப்பெயர் அது. “அவர் நினைவாக வளர்ப்பதால் தக்காளி என்று பெயர் வைத்திருக்கிறோம். அவனே கூட இருப்பது போன்ற ஒரு உணர்வு,” வாஞ்சையோடு காளையின் நெற்றியில் முத்தமிட்டுக்கொண்டே விவரிக்கிறார். 

களத்தில் நின்று விளையாடும் காளைகள் சில பெண்கள் வளர்ப்பவையாக இருக்கின்றன.

 
மற்றவர் அருகில் போனால் அனல் தெறிக்க சீறும் காளைகள் வளர்ப்பவர்களிடம் சிறுகுழந்தைகள் போன்றிருக்கின்றன. பல பெண்கள் வளர்க்கும் மாடுகளும் இப்படித்தான். களத்தில் நின்று விளையாடும் காளைகள் சில பெண்கள் வளர்ப்பவையாக இருக்கின்றன. ஆனால் பெண்கள் வளர்க்கும் மாடுகளுக்கு மாடுபிடி வீரர்களிடம் தனி மதிப்பு உண்டு. “பிள்ளைங்க கஷ்டப்பட்டு வளக்குங்க, பிடிச்சா சங்கடப்படுங்க…பெரும்பாலும் போக விட்ருவோம்…வளத்த மாடு பரிசு வாங்குனா அவிங்களுக்கு ஒரு பெருமைதானே,” முடக்கத்தான் மணி சொல்கிறார். 
 
கன்றுகளை காளைகளாக பழக்குவதை போன்று பையன்களை மாடுபிடி வீரர்களாக பயிற்சி கொடுப்பதும் நடக்கும். மாடுபிடி வித்தைகளை மூத்த வீரர்கள் இவர்களுக்கு கற்று கொடுக்கிறார்கள். ஆனால் காலங்கள் மாறி விட்டன. “எங்க காலத்துல மாடு பிடிச்சாதான் பொண்ணே, இப்ப மாடு பிடிக்கிறவனுக்கு எதுக்கு பொண்ணுன்னு கேக்கிறாங்க பொண்ணு வீட்டுக்காரங்க?” என்கிறார் விஜியின் தந்தை ராஜா. ஒரே மகனான அவர் மாடு பிடிக்க செல்வது குடும்பத்தினருக்கு பயம் கலந்த பெருமை. 
 
ஜல்லிக்கட்டு ஒரு வீர விளையாட்டு மட்டுமல்ல ஆபத்தான ஒன்றும் கூட. மாடை விட மனிதனுக்கு ஏற்படும் காயங்கள் அதிகம். கண்ணிலிருந்து முதுகெலும்பு வரை சேதாரமாகும். ஆனால் தமிழகத்தின் இந்த பகுதிகளில்  ஜல்லிக்கட்டு ஓர் அடையாளம். இந்த வருடம் ஓமிக்ரான் ஜல்லிக்கட்டை நடத்தவிடுமா என்ற சந்தேகம் இருந்தாலும் காளைகளும் வீரர்களும் நம்பிக்கையோடு பயிற்சி எடுக்கிறார்கள். 
Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival