Read in : English
“உங்க மாடு பெருசா இருந்தா அவுத்து பாரு. மாடா மனுசனானு களத்துல பாத்துருவோம்,” என்கிறார்கள் மதுரை மாவட்டத்தில் உள்ள மாடுபிடி வீரர்கள். ஓமிக்ரான் பரவலால் கட்டுப்பாடுகள் அதிகரிக்க பட்டிருக்கும் நிலையில் ஜல்லிக்கட்டு நடப்பது கேள்வி குறியாக இருக்கிறது. கடந்த கட்டுரையில் மாடு பிடி வீரர்களும் ஜல்லிக்கட்டு காளைகளும் எவ்வாறு தயாராகின்றன என்று பார்த்தோம். இந்த கட்டுரையில் ஜல்லிக்கட்டில் விதிமுறைகள் மீறப்படுவதாக எழுப்பப்படும் குற்றசாட்டுகளை சற்று பார்ப்போம்.
“என்ன மாறி மாடா இருந்தாலும் பிடிக்க இங்க ஆளு இருக்கு. பெரிய ஆளுங்கள தயவு இல்லனா நம்ம மாடு பிடிமாடுதான்,” என்கிறார் ரவி (பெயர் மாற்றுப்பட்டுள்ளது). ரவி ஜல்லிக்கட்டில் மாடு பிடிப்பதை விட்டு ஒதுங்கி சில ஆண்டுகளாகின்றன. “ஜல்லிக்கட்டு ஒரு பெரிய அரசியலப்பா” என்கிறார் அவர். ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடும் காளையை பற்றி அறிவிப்பதிலேயே மறைமுக குறிப்புகள் அறிவிக்கப்படும். ‘இன்னார் மாடு வருது. ஓடிப்போ’ என்பதெல்லாம் அப்படிப்பட்ட குறிப்புகள் என்கிறார் அவர்.
வாடிவாசலில் நிற்கவிடாமல் தடுப்பது, பாயும் காளையின் முன்பு தள்ளிவிடுவது, சமயம் பார்த்து பின்னால் இருந்து ஆடைகளை பிடித்து இழுப்பது எல்லாமே களத்தில் நடக்கும் என்கிறார் ரவி.
ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது பல அமைப்புகளும் மக்களும் சேர்ந்து நடத்திய போராட்டம். ஜல்லிக்கட்டில் விதிமீறல்கள் ஒன்றும் புதியது அல்ல. ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடை மற்றும் போராட்டம், அதனை தொடர்ந்து நீக்கப்பட்ட தடை எல்லாம் ஜல்லிக்கட்டை ஒரு கட்டுக்கோப்பான விளையாட்டாக மாற்றி இருப்பதை மறுக்க முடியாது. ஜல்லிக்கட்டு என்பது அரசின் மேற்பார்வையில் நடக்கும் ஒரு நிகழ்வாக இன்று இருக்கிறது. ஆனாலும் உள்ளூர் பிரபலங்களும், அமைப்புகளும் ஜல்லிக்கட்டை தங்களது பெருமைக்காக வளைப்பதை மறுப்பதற்கில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
திறமையான வீரர்களுக்கு அனுமதி மறுப்பது, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே அனுமதி சிட்டைகள் அளிப்பது, திறமையாக மாடுபிடிக்கும் வீரரை விதிமுறைகள் மீறியதாக களத்தில் இருந்து காவல்துறை மூலம் வெளியேற்றுவது என்று மாடுபிடி வீரர்களுக்கு மனஉளைச்சல் தரும் நிகழ்வுகள் ஜல்லிக்கட்டில் நடக்கின்றன
நூற்றுக்கணக்கான மாடுகளும், வீரர்களும் கலந்து கொள்ளும் ஜல்லிக்கட்டு பல்வேறு மணிக்கூறுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. வீரர்களுக்கும் காளைகளுக்கு நேரம் கொடுக்கப்படுகிறது. “நல்ல மாடு பிடிக்கிறவங்க இறங்குறப்ப பெரிய ஆளுங்க மாட்ட அவுக்க மாட்டாங்க,” என்கிறார் மாடுபிடி வீரர் குருவித்துறை விஜி. திறமையான வீரர்களுக்கு அனுமதி மறுப்பது, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே அனுமதி சிட்டைகள் அளிப்பது, திறமையாக மாடுபிடிக்கும் வீரரை விதிமுறைகள் மீறியதாக களத்தில் இருந்து காவல்துறை மூலம் வெளியேற்றுவது என்று மாடுபிடி வீரர்களுக்கு மனஉளைச்சல் தரும் நிகழ்வுகள் ஜல்லிக்கட்டில் நடக்கின்றன என்கிறார் விஜி.
பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டில் திறமையான மாடுபிடி வீரருக்கு கிடைக்கும் பெருமை பிடிபடாத அல்லது பிடிக்க முடியாத மாட்டுக்கும் உண்டு. அப்படிப்பட்ட மாடுகளை வாங்குவதற்கு பலத்த போட்டி நிலவுகிறது. ஜல்லிக்கட்டுகளில் சிறப்பாக விளையாடும் மாடுகளை தேடி பிடித்து சில
இலட்சங்கள் கொடுத்து வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். கம்பீரமான மாடுகளை வைத்திருப்பது ஒரு பெருமை என்கிறார்கள் வீரர்கள். “முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதிகளில் எல்லாம் பிரபலமாக கொண்டு சேர்த்திருப்பது அவருடைய மாடுகள்தான். வேறு யாராவது அவ்வளவு பிரபலமாக இருக்கிறார்களா?” என்று கேள்வி எழுப்புகிறார் மாடுபிடி வீரர் முடக்கத்தான் மணி.
இப்படி கம்பீரமாக வளர்க்கப்படும் மாடுகள் பிடிபடுவதை வளர்ப்பவர்கள் விரும்புவதும் இல்லை.
உள்ளூரிலும் வெளியூரில் பிரபலமாக உள்ள அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் வளர்க்கும் மாடுகளை பிடிபடாமல் இருக்க வீரர்களை தங்கள் பிடிக்குள் கொண்டு வரும் வேலைகளும் நடக்கும். மாடுபிடி வீரர்களுக்கு வேண்டியதை செய்து தருவது காயம் படும் போது உதவுவது போன்றவை அவர்களது நம்பிக்கையை பெற உதவுகிறது. எதற்கும் பணியாத வீரர்களுக்கு கொலை மிரட்டலும் விடப்படும். இவை எல்லாம் ஜல்லிக்கட்டில் நடக்கும் ஒரு நுட்பமான அரசியல்.
ஜல்லிக்கட்டு என்பது ஒரு காலத்தில் மாட்டின் கொம்பில் கட்டப்பட்டிருக்கும் பரிசு காசுகளை குறிக்கும் சொல். ஆனால் மாட்டின் மீது இப்போது வைக்கப்படும் பரிசுகள் கார், விமான பயண சீட்டுகள், இரு சக்கர வாகனங்கள் என்று நீண்டு கொண்டே போகிறது.
ஜல்லிக்கட்டு என்பது ஒரு காலத்தில் மாட்டின் கொம்பில் கட்டப்பட்டிருக்கும் பரிசு காசுகளை குறிக்கும் சொல். ஆனால் மாட்டின் மீது இப்போது வைக்கப்படும் பரிசுகள் கார், விமான பயண சீட்டுகள், இரு சக்கர வாகனங்கள் என்று நீண்டு கொண்டே போகிறது. இந்த அதீத பரிசு பொருட்கள் முறைகேடுகளுக்கு வழிவகுக்கின்றது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. விலை அதிகமுள்ள பரிசுப்பொருட்களை காளைகள் மீது பரிசாக வைப்பதை தவிர்ப்பது நல்லது என்கிறார் ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் ஜி ஆர் கார்த்திக் அவர்கள்.
மேலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு நாள் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு ஒரே இடத்தில் மாடுகளும் வீரர்களும் குவிய வழிவகுக்கிறது. “இதற்க்கு மாறாக ஒரே நாளில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தால் வீரர்களும் காளைகளும் தங்களுக்கு அருகிலுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு செல்வார்கள். நெரிசல் தவிர்க்கப்படும்,” என்கிறார் அவர்.
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி ராஜசேகரன் அவர்கள் ஜல்லிக்கட்டுகளில் நடைபெறுவதாக சொல்லப்படும் முறைகேடுகளை மறுக்கிறார். “ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் இன்று அரசின் மேற்பார்வையில் நடக்கின்றன. புகைப்படமும் வீடியோ பதிவும் செய்யப்படுகிறது. முறைகேடுகள் நடக்கும் வாய்ப்புகள் இல்லை,” என்கிறார் அவர்.
ஜல்லிக்கட்டின் போது அறிவிக்கப்படும் ஓடி போ என்ற வார்த்தைகள் வீரர்களுக்கு மாட்டை பற்றிய எச்சரிக்கையே அன்றி மாடு பிடிக்கக்கூடாது என்ற எச்சரிக்கை அல்ல, என்று வலியுறுத்துகிறார். “நன்றாக மாடுபிடிப்பவர்களும் இருப்பார்கள். கத்துக்குட்டிகளும் இருப்பார்கள். மாட்டை பற்றி சரியான எச்சரிக்கை கொடுக்க வேண்டியது போட்டியை நடத்துபவர்களது கடமை,” என்கிறார் அவர். ஜல்லிக்கட்டு என்பது மாடும் மாடுபிடி வீரர்களும் தங்களது திறமையை நிரூபிக்கும் களமே தவிர மற்ற குற்றசாட்டுகள் தவறானவை, என்று அவர் கூறினார்.
Read in : English