Read in : English
ஜனவரி என்றாலே சென்னையில் தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி முக்கியத்துவம் வாய்ந்தது. 46வது ஆண்டாக இந்தப் புத்தகக் கண்காட்சி நடைபெறுவதே இதற்குச் சான்று.
ஜனவரி 6ஆம் தேதியிலிருந்து ஜனவரி சுசுஆம் தேதி வரை நடைபெறும் இந்தபு புத்தகக் கண்காட்சிக்கு வரும் ஏராளமான வாசகர்கள் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை வாங்கிச் செல்கிறார்கள். இந்த ஆண்டுப் புத்தகக் கண்காட்சியின் நடைபெறுவதையொட்டி முதன்முறையாக சர்வதேசப் புத்தகக்கண்காட்சியும் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்க அம்சம்.
இந்தப் பின்னணியில், இன்மதியின் வேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேர்காணல் தந்த எமரால்டு பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.ஒளிவண்ணன் சென்னையில் நிரந்தரப் புத்தகக் கண்காட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளார். ஒளிவண்ணன் அளித்த நேர்காணல் விவரங்கள் இதோ:
இந்த ஆண்டுப் புத்தகக் கண்காட்சியின் நடைபெறுவதையொட்டி முதன்முறையாக சர்வதேசப் புத்தகக்கண்காட்சியும் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்க அம்சம்
இன்மதி: சென்னையில் புத்தகக் கண்காட்சி எப்போதிருந்து நடந்து வருகிறது?
ஒளிவண்ணன்: எனது அப்பா எம்.டி.கோபாலகிருஷ்ணன் ராஜாஜி ஹாலில் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சியை நடத்தினார். பு970-ல்தான் முதல் சென்னை புத்தகக் கண்காட்சி காயிதே மில்லத் கல்லூரிக்கு அருகே அண்ணா சாலையில் மதராஸா பள்ளியில் நடத்தப்பட்டது. ஒரு நீண்ட ஹாலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களுக்கு இடையில், என் அப்பாவுடன் நான் இருந்த நாட்கள் இன்றைக்கும் நினைவில் இருக்கின்றன.
வெறும் 20 கடைகளோடு ஆரம்பிக்கப்பட்ட புத்தகக் கண்காட்சி 1980-களில் பிரபலமாகத் தொடங்கியது. கடைகளின் எண்ணிக்கையும் உயர ஆரம்பித்தது. 2000-ஆம் ஆண்டுக்கு முன்பாக புத்தகக் கண்காட்சியில் 100-க்கும் மேலான கடைகள் இடம் பெற்றன. தொடக்ககத்தில் காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் ஆண்டுதோறும் நடத்தப்பட்ட புத்தகக் கண்காட்சி, சமீபகாலமாக நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தாண்டு கண்காட்சியில் 1,000-க்கும் மேலான கடைகள் இருக்கின்றன.
ஆரம்ப காலத்தில் இந்தப் புத்தகக் கண்காட்சியில் ஆங்கிலப் புத்தகங்களே அதிக அளவில் இடம் பெற்றன. பு999களில் தமிழ் பதிப்பகங்கள் அதிக அளவில் இந்தப் புத்தகக் கண்காட்சியில் இடம் பெறத் தொடங்கின. ஆங்கிலப் புத்தகக் கடைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட குறைவான வாடகையே தமிழ் கடைகளில் வசூலிக்கப்பட்டது. புத்தகக் கண்காட்சியில் கலந்துகொண்ட தமிழ் பதிப்பகத்தார்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது
மேலும் படிக்க: தூத்துக்குடி: காவல்துறை அதிகாரியின் அனுபவங்கள்
2020ல் ஏற்பட்ட கரோனா ஊரடங்குத் தடைகளால் சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறாமல் போய்விட்டது. உலகம் முழுவதும் எங்கேயும் புத்தகக் கண்காட்சிகள் நடக்கவில்லை. பின்பு 2021 மார்ச்சில் ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது., அடுத்து 2022-ல் ஓமைக்ரான் வந்து அச்சத்தை உருவாக்கியது. அதனால், அந்தாண்டு பிப்ரவரியில் புத்தகக் கண்காட்சி நடந்தது.
சமீபத்தில் ஃபிராங்ஃபர்ட் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வந்த நமது குழுவொன்று ஆய்வு நடத்தி அதுபோன்ற புத்தகக் கண்காட்சியை இங்கும் நடந்த யோசனைகளை அளித்தது. அதையடுத்து, இந்தப் புத்தகக் கண்காட்சியையொட்டி பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியும் நடைபெறுகிறது.
இன்மதி: மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியின் வளத்தைப் பெருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம். தமிழ் மொழி மொழிபெயர்ப்புப் பணிகள் எப்படி போய்க் கொண்டிருக்கின்றன?
ஒளிவண்ணன்: ஓர் எழுத்தாளனின் மகிழ்ச்சி இரண்டு படிநிலைகளைக் கொண்டது. ஒரு படைப்பை எழுதி முடித்ததும் அவருக்கு ஏற்படும், மகிழ்ச்சி முதல் படிநிலை. அடுத்து அவரது படைப்பு ஏராளமான பேரால் விவாதிக்கப்படும் போது ஏற்படும் மகிழ்ச்சி. இரண்டாம் படிநிலை. தனது படைப்புகள் உலகம் முழுவதும் போய்ச் சேர வேண்டும் என்று ஓர் எழுத்தாளர் ஆசைப்படுவது நியாயம்.
அதற்கு இன்று உலகத்தின் பொதுமொழியான ஆங்கிலம் பல கதவுகளைத் திறந்துவிடக் கூடியது. அந்த மொழியில் தமிழ்ப் படைப்புகளைக் கொண்டு சேர்க்க வேண்டியது அவசியம்
ஃபிராங்க்ஃபர்ட் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றபோது ஓர் எழுத்தாளர் தன்னை வற்புறுத்தி அழைத்து தமிழ்மொழியில் தன் படைப்பை மொழிமாற்றம் செய்வது சம்பந்தமாக தன்னோடு ஓர் ஒப்பந்தம் போடுமாறு அவர் வேண்டிக் கேட்டுக் கொண்டார். ”ஆனால் அவரது படைப்பு தமிழ் வாசகர்களுக்குச் சரியாக வராது என்று நான் சொல்லியும் அவர் கேட்கவில்லை,”.
தனது படைப்பு மொழிமாற்றம் பெற்ற மொழிகளின் பட்டியல் பெரிதாக இருந்தால்தான், ஜெர்மன், ஃபிரெஞ்ச் போன்ற மொழிகளுக்கும் தன் படைப்புகள் மொழிமாற்றம் செய்யப்படும் என்றார் அந்த வெளிநாட்டு எழுத்தாளர். இந்நிகழ்வு உலகம் முழுவதும் மொழிபெயர்ப்புக்கு இருக்கும் மதிப்பையும், முக்கியத்துவத்தையும் உணர்த்தியது
தேவைக்கேற்ப புத்தகங்களை அச்சிடும் போக்கு (பிரிண்ட் ஆன் டிமாண்ட்) இன்றைய காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. அதுவொன்றும் தவறில்லை
இன்மதி: எந்நேரமும் மும்முரமாகச் செயற்படும் மின்னணு தகவல் தொடர்புச் சாதனங்கள், கைப்பேசிகள், சமூக ஊடகங்கள், யூடியூப் போன்ற காட்சி ஊடகங்கள் ஆகியவை மக்களின் கவனத்தை, குறிப்பாக இளைய தலைமுறையின் கவனத்தையும், காலத்தையும் பெரிதும் ஈர்த்துவிட்ட இந்தப் புத்தாயிரமாண்டு யுகத்தில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் அற்றுப்போய்விட்டது போல தோன்றுகிறதே?
ஒளிவண்ணன்: யாராவது இரண்டு பேரைக் கேளுங்கள். ஒருவர் சொல்லுவார், வாசிப்புப் பழக்கம் மறைந்து விட்டது என்று. ஏனென்றால் புத்தகம் வாசிப்பதை அவர் நிறுத்தியிருப்பார்,. மற்றொருவர் பதில் சொல்ல மாட்டார். ஏனென்றால் அவர் இன்னும் வாசித்துக் கொண்டிருப்பார், ஆனால் இளைஞர்கள் வாசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். முந்தைய தலைமுறைகளை விட, இன்றைய தொழில்நுட்பத் தலைமுறையின் மூளை அதிபுத்திசாலித்துடனும், திறனுடனும் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் அவர்கள் நிறையவே எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
எதையும் வாசிக்காமல் அப்படி எழுத முடியாது. “நமது இளமைக் காலத்தில் அதிக பட்சம் கல்கி போன்ற எழுத்தாளார்களை வாசித்திருப்போம். ஆனால் இன்றைய இளைஞர்கள் பொன்னியின் செல்வனை ஒரே வாரத்தில் வாசித்து முடித்துவிட்டு அடுத்தடுத்து வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
12 வயதிற்குள்ளே ஹாரி பாட்டர் போன்ற புதினங்களை அநாயசமாக வாசிக்கிறார்கள். சொல்லப் போனால் தீவிர இலக்கியங்களை வாசித்து விட்டு அவர்கள் சமூக ஊடகங்களில் எழுதுகிறார்கள்.
சமீபத்தில் இலக்கியத் திருவிழாவுக்கு முன்பாக பல இலக்கியப் போட்டிகள் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்டன. கட்டுரை, கவிதை, ஓவியம், மீம் படைப்புகள் என்று பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் மாணவர்களையும் ஒன்றிணைத்து அவர்களின் திறன்களுக்கும், திறமைகளுக்கும் பெரியதோர் வாய்ப்புக் கொடுத்த மாபெரும் நிகழ்வு தமிழ்நாட்டில்தான் நடத்தப்பட்டது.
மேலும் படிக்க: நாத்திகரான பெரியார், ஏன் ஆத்திகர்களாலும் நேசிக்கப்படுகிறார்?
போட்டிகள் நடந்தபோது ஒருகட்டத்தில் எழுதும் காகிதங்கள் தீர்ந்து போனது. அந்த அளவுக்கு இளைஞர்கள் மும்முரமாக எழுதினார்கள். இறுதி நேரத்தில் காகிதங்கள் வரவழைக்கப்பட்டு பற்றாக்குறை தீர்க்கப்பட்டது
எங்களது எக்மோர் புத்தக அரங்கில் நடந்த வாருங்கள், வாசிப்போம் என்ற நிகழ்ச்சியில் எழுத்தாளர் இமையம் கலந்துகொண்டார். தான் எழுதிய 14 புத்தகங்களை அவர் பட்டியலிடத் தொடங்கியபோது ஒரு மாணவர் எழுந்து அவற்றைத் தானே பட்டியலிட்டார்.
மேலும் அவற்றை எல்லாம் தான் படித்து முடித்ததாகவும் அவர் சொன்னவுடன் இமையம் அசந்துபோனார். கொஞ்ச நேரம் மட்டுமே நிகழ்ச்சியில் இருப்பதாக முதலில் சொல்லியிருந்த இமையம் மாணவர்களின் பேரார்வத்தைக் கண்டு அதிசயித்து நீண்ட நேரத்தை அங்கே செலவழித்தார்.
லயோலா கல்லூரியில் நாங்கள் நடத்திய பயிற்சிப் பட்டறையில் 4,000 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டார்கள். லயோலா கல்லூரி மாணவர்கள் மட்டுமே சு0 சதவீதம் இருந்தார்கள். அவர்களின் திறன்களும், ஆர்வமும் வியக்க வைத்தன, இளைஞர்கள் அச்சுப் புத்தகங்களை மட்டுமல்ல மின்னணு புத்தகங்களையும் வாசிக்கிறார்கள்.
தேவைக்கேற்ப புத்தகங்களை அச்சிடும் போக்கு (பிரிண்ட் ஆன் டிமாண்ட்) இன்றைய காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. அதுவொன்றும் தவறில்லை . நாங்களே 2016லே அதைப் பரீட்சித்து பார்த்துவிட்டோம். என்றாலும் ஆஃப்செட் அச்சுமுறை இன்னும் இருக்கத்தான் செய்கிறது. தேவைக்கேற்ப புத்தகங்களை அச்சிடும் போக்கு புதியதோர் தொழில்நுட்பம். அதில் நிறைய வசதிகள் இருக்கின்றன.
இன்மதி: சமீபத்தில் காலமான இலங்கை மலையகத் தமிழ் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள் புத்தகமாக வெளிவருவதாகச் சொன்னார்களே?
ஒளிவண்ணன்: ஒருகாலத்தில் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் கண்ணீரும், நம்பிக்கையும் நிரம்பிய வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுபவை தெளிவத்தை ஜோசப்பின் சிறுகதைகள் புதுமைப்பித்தனின் துன்பக் கேணியைப் போன்று, எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பி.எச். டேனியலின் சிகப்புத் தேனீர் என்ற ஆங்கில புதினத்தைப் போன்று தெளிவத்தை ஜோசப் கதைகள் இலங்கை மலையக தமிழர்களின் வாழ்வியலைப் பேசுகின்றன . இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு அவரது சிறுகதைத்தொகுப்பைக் கொண்டுவர நாங்கள் முயற்சிக்கிறோம் என்றார் அவர்.
ஒருகாலத்தில் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் கண்ணீரும், நம்பிக்கையும் நிரம்பிய வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுபவை தெளிவத்தை ஜோசப்பின் சிறுகதைகள்
இன்மதி: புத்தகக் கண்காட்சியில் இடப்பற்றாக்குறையால் சிறு பதிப்பாளர்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்ற பிரச்சினை எழுப்பப்படுகிறதே?
ஒளிவண்ணன்: இன்று 1,000-க்கும் மேலான கடைகள் புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றிருக்கின்றன. மற்ற மாநிலங்களுடன் ஒப்பீடு செய்கையில் தமிழ்நாட்டில்தான் இவ்வளவு பெரிய புத்தகக் கண்காட்சி நடக்கிறது என்பதே பெருமைக்குரிய விசயம்தான். ஆதலால் இடப்பற்றாக்குறை என்ற பிரச்சினை ஓர் ஆக்கப்பூர்வமான பிரச்சினைதான். அது நம் புத்தகக் கண்காட்சியின் வீச்சையும், பிரபல்யத்தையும் காட்டுகிறது.
இன்மதி: சமீபத்தில் கலைஞர் பொற்கிழி விருது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. விருது பெற்றவர்களின் பட்டியலை அறிவித்த பபாசி வெறும் பொற்கிழி என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்தியது தொடர்பாக அமைச்சர் தென்னரசு தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். கலைஞர் பெயர் விடுபட்டதுதான் சர்ச்சைக்குக் காரணம்.
ஒளிவண்ணன்: இரண்டு ஆண்டுகளாக நான் தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க நிர்வாகக் குழுவில் இல்லை. அதனால் இந்தக் கேள்விக்கு விடை சொல்லும் நிலையில் நான் இல்லை. என்றாலும் இந்தப் பிரச்சினை நிர்வாகக் குழுவிடம் எடுத்துச் சொல்லப் பட்டது. கவனப் பிசகால் நடந்துவிட்ட பிரச்சினை இது என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இனி இதுபோல் தவறு நிகழாமல் பார்த்துக்கொள்வதாகவும் அவர்கள் உறுதியளித்திருக்கிறார்கள்.
Read in : English