Read in : English

ஒருமுறை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, பெரியார் என்பது ‘அறிவியல்’ என்றார். இது ஏதோ மிகைப்படுத்திச் சொல்லப்பட்ட ஒன்று அல்ல, ஆழமான அர்த்தம் பொதிந்த ஒன்று.

பெரியார், மொழிப்பற்று, ஜாதிப்பற்று, இனப்பற்று, நாட்டுப்பற்று இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட சமூகப் போராளி. அவர் எந்த ஒரு வட்டத்திற்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் சுதந்திரப் பறவையாகத் திகழ்ந்தவர். தவறென்றால், எதனையும் துணிச்சலோடு விமர்சிப்பதற்குத் தயங்காதவர். அவருடைய எழுத்துகளை ஊன்றிப் படிக்கும்போது, அவரது  தொலைநோக்குப் பார்வையும் மனிதகுல மேம்பாட்டிற்குத் தேவையான கருத்துகளும் புலப்படும்.

கடந்த 70 ஆயிரம் ஆண்டுகளாக மனிதன் மற்ற உயிரினங்களைக் கடந்து உணவுச் சங்கிலியில் முதலிடத்தில் வந்தமைக்கு இன்றியமையாத காரணம், தனது அறிவை பயன்படுத்தியது; அத்துடன், சக மனிதர்களுக்கு அதனைக் கொண்டு சேர்த்தது. அறிவு என்பது நமக்கு ஒரு ஆயுதம். அதைப்போலவே நமக்கு சுயமரியாதை முக்கியம். வறியவன் கூட தன் வயிற்றுப் பசிக்காகச் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கமாட்டான்.

இவை இரண்டும் தான் மனிதர்களுக்கு அடிப்படை என்பதைக் கருத்தில் கொண்டு பெரியார், ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்றார்.

இன்றைக்குத் தமிழகத்தில் சமூக நீதி என்கிற மரம் பூத்துக் குலுங்குகிறது என்று சொன்னால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் விதைத்த விதையே காரணம்

1920களிலேயே லட்சம் ரூபாய்க்கு வருமானவரி கட்டிய செல்வந்தர். திருவிதாங்கூர் அரச குடும்பத்தினர் போன்ற அரச குடும்பத்தினர், செல்வந்தர்கள் ஈரோடு நகரத்தில் வந்து தங்கிச் செல்லும் புகழ் பெற்ற குடும்பம் அவருடையது. இவற்றையெல்லாம் துறந்து  பல இன்னல்களை, சவால்களை எதிர்த்துப் போராடி தொண்ணூற்று அய்ந்து வயது வரை சமூகத்திற்கு உழைத்துவிட்டுச் சென்றவர். இறுதிக் காலங்களில் மூத்திரச் சட்டியைச் சுமந்து கொண்டு ஊர் ஊராகச் சென்று பகுத்தறிவு பிரச்சாரம் செய்தவர்.

மக்களிடையே ஏன் சமத்துவமின்மை நிலவுகிறது என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தவர். இதற்குப் பொருளாதார ஏற்றத்தாழ்வு என்று எளிதில் சொல்லிவிட முடியாது. அது மேலோட்டமான பார்வை.  எவ்வளவு செல்வாக்கு படைத்தவர்களாக இருந்தாலும் அவர்களைச் சாதிப் பாகுபடுத்துகிறது, கீழ்மைப்படுத்துகிறது என்பதை உணர்ந்தார். சாதி வேற்றுமை களைதல், தீண்டாமை எதிர்ப்பு என மேல் பூச்சு வேலைகளில் அவர் திருப்தியடையவில்லை.

சாதி என்கிற செடியைப் பிடுங்க வேண்டும் என்று சொன்னால் மதம் என்கிற வேரினைப் பிடுங்கி எறிய வேண்டும். மதம் என்கிற வேர், கடவுள் என்கிற கற்பிதத்தில் ஊன்றி இருக்கிறது. ‘நோய் நாடி நோய் முதல் நாடி’ என்பதற்கு ஒப்பக் கடவுள் கொள்கையைத் தகர்த்தார்.

மக்களுக்கு இப்படிப்பட்ட இழிவு நிலை ஏற்படுவதைக் கண்டும் காணாமலும் ஒரு கடவுள் இருக்கிறது என்று சொன்னால் அந்த கடவுளே வேண்டாம் என்கிற நிலையைப் பெரியார் எடுக்கிறார். இப்படியாகத்தான் தர்க்க ரீதியாகக் கடவுள் மறுப்பு நிலையைத் தேர்ந்தெடுக்கிறார்.

பெரியார் என்பது ஒரு பல்கலைக்கழகம். பல்கலைக்கழகத்தில் பல்வேறு வகையான படிப்புகள் இருப்பதுபோல அவருடைய எண்ணச் சுரங்கத்திலிருந்து  தெரிந்து கொள்ளக்கூடிய, பயனடையக் கூடிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. அவ்வாறு பயனடைந்தோர், அவர்மீது பற்றுதலும் நன்றி விசுவாசமும் கொண்டு இருப்பது இயல்பு தானே.

உதாரணத்திற்கு ஒன்றிரண்டைப் பார்ப்போம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் கல்வி என்பது பரவலாக எல்லா சமூகத்தினரிடம் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. 1924களில் இந்தியாவிற்கு விடுதலை கிடைக்க ஏனைய பகுதிகளில் காந்தி தலைமையில் நாடு தயாராகிக் கொண்டிருக்க, தென்னிந்தியாவில், பெரியார் சமூக விடுதலை வேண்டும் என்கிற நோக்கத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ சட்டத்திற்குக் குரல் கொடுக்கிறார். இதில் கருத்து வேறுபாடு காரணமாக, காங்கிரசு கட்சியை விட்டு விலகுகிறார். இன்றைக்குத் தமிழகத்தில் சமூக நீதி என்கிற மரம் பூத்துக் குலுங்குகிறது என்று சொன்னால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் விதைத்த விதையே காரணம்..

‘உனக்கெல்லாம் படிப்பதற்கு?’, ‘மாடு மேய்க்கச் செல்’ என்று சென்ற தலைமுறையில் கேட்கப்பட்ட சமூகங்களிலிருந்து வந்தவர்கள் இன்றைக்கு உயர் படிப்பு படித்து மருத்துவத்திலும் பொறியியல் துறையிலும் கோலோச்சுகிறார்கள் என்றால் இட ஒதுக்கீடு அதற்கு வழி வகுத்தது. சுதந்திர இந்தியாவில் சமூகநீதிக்கு ஆபத்து வந்தபோது தென்னாட்டிலே பெரியார் இயக்கம் கொடுத்த குரல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முதன்முறையாகத் திருத்த வைத்தது.

இட ஒதுக்கீட்டால் பயனடைந்த சமூகத்தினர் பெரியாரை எப்படி நேசிக்காமல் இருக்க முடியும்?

பெண் விடுதலை குறித்து ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்துச் செயல்பட்டவர் பெரியார். தன் தங்கை மகள், 10 வயது சிறுமி, திருமணமாகி ஒரே மாதத்தில் கணவனை இழக்கிறாள். துணிச்சலாக குடும்பத்தை எதிர்த்து மறுமணம் செய்து வைக்கிறார். எந்த மாற்றமும் நம்மில் நிகழ வேண்டும், நம் குடும்பத்தில் நிகழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் பெண்கள் மேம்பாட்டிற்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வரலாற்று முக்கியம் கொண்டவை. ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை கொடுக்க வேண்டும் என்று பெரியார் முழங்கியது, முதன்முதலாக முழுமையான வடிவத்தில் தமிழ்நாட்டில் 1989இல் திமுக ஆட்சியில் அமலாக்கப்பட்டது.

பிறகு 2005இல் நாடு முழுவதும் மன்மோகன்சிங் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது; அதில் திமுகவும் அங்கம் வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களின் திருமண வயது அதிகரிக்க வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவர் பெரியார். அறியாப் பருவத்தில் அவர்களை மணவாழ்க்கையில் சிக்கவைத்து எதிர்காலத்தைப் பொசுக்குவதைத் தடுக்க வேண்டும் என்றால் திருமண வயது தள்ளிப் போட வேண்டும் என்றார். சமூகத்தில் ஒன்றிய அரசின் அமைச்சரவை நாடாளுமன்றத்தில் மசோதாவைக் கொண்டுவர ஒப்புக்  கொண்டுள்ளது.

திருமணம் செய்து கொள்ளும் பெண்ணே தனது இணையரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் பெரியார். மேலும்  குழந்தைப் பேறு என்பது அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமை. குழந்தைகள் ஆய்வுக்கூடங்களில் உருவாக்கப்பட வேண்டும் என்று தொலை நோக்குடன் பேசினார். டெஸ்ட் டியூப் பேபிக்கள் எல்லாம் யோசிக்கப்படாத காலம் அது.

சமீப காலங்களில், சமூக வலைத்தளங்களில் எழுதும் பெண்கள், ‘திருமணம், குழந்தைகள் போன்றவை பெண்களுக்கு சமூகம் இழைக்கும் அநீதி’ என்று கருத்துகளை வெளியிடுகிறார்கள். இவற்றைப் படிக்கும்போது 90 ஆண்டுகள் கழித்து பெரியார் கருத்துகள் மிளிரத் தொடங்குகிறதை வியப்புடன் காண்கிறோம். மேலும் வீடுகளில் சமையலறைகள் நீக்கப்படவேண்டும், பதிலாக சமூக சமையலறை கூடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று தன்னுடைய ‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகத்தில் எழுதுகிறார். எப்பொழுது? சமையலறையே உலகம் என்று பெண்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில். இன்றைக்கு நாம் நம்முடைய வீடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பார்க்கவில்லையா?

அதுமட்டுமின்றி, பெண்கள்  ஆண்கள் போல முடி வெட்டிக்கொள்ள வேண்டும், எளிதாக இயங்க, ஆண்கள் போல முழுக்கால் சட்டை அணிய வேண்டும் என்று வலியுறுத்தினார். இன்றைக்குக் கேரளாவில் பள்ளிக்கூடங்களில் மாணவ மாணவிகள் ஒரே மாதிரியான உடை உடுத்த வேண்டும் என்ற நடைமுறையைக் கொண்டு வரும்போது, பெரியார் தெரிகிறார்.

பெரியார் பிராமணர் எதிர்ப்பாளர் என்று கட்டமைக்கப்பட்டபோதிலும்  தனிப்பட்ட முறையில அவர்களை அவர் என்றைக்குமே எதிர்த்ததில்லை.  இன்னும் சொன்னால் பலரிடம் நட்பு பாராட்டி உள்ளார். அவருடைய எதிர்ப்பு, ஆதிக்கத்தை எதிர்த்துத் தான். அச்சமூகத்தைச் சார்ந்த பிரபல எழுத்தாளர் சிவசங்கரி, ஒருமுறை குமுதத்திற்கு அளித்த பேட்டியில்  முற்காலத்தில் கைம்பெண்கள் நிலை எப்படி இருந்தது, நாங்கள் இன்றைக்கு மாறுதல்கள் பெற்று இருக்கிறோம் என்று சொன்னால் அதற்குப் பெரியாருக்கு நன்றிக் கடன்பட்டு இருக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்

எச்சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் பெரியாரை எதிர்க்க எப்படி மனம் வரும்?

1924இல் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த  வழக்கறிஞர் ஒருவர் கேரளாவில் வைக்கத்தில் சிவன் கோயிலைச் சுற்றியுள்ள அக்கிரகார வீதியில் நடந்து சென்றதற்காகத் தாக்கப்பட்ட போது தமிழ்நாட்டிலிருந்து அங்கே சென்று தொடர் போராட்டம் நடத்தி கடும் சிறைத் தண்டனை அனுபவித்தவர் பெரியார்.  எல்லாத் தெருக்களிலும் எல்லோரும் நடக்கலாம் என்று அரசாங்க ஆணை பெறும்வரை போராடியவர்.

அதேபோல், சேரன்மாதேவியில் வ.வே.சு. அய்யர் நடத்திய குருகுலத்தில், சாதி வேறுபாடு காரணமாக உயர் சாதியினருக்கும் மற்றவர்களுக்கும் தனித்தனியாக உணவு அளிக்கப்பட்ட அநீதியை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டவர். தமக்குக் கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றாலும் கருவறைக்குள் பூசை செய்யும் உரிமை ஒருவருடைய பிறப்பின் அடிப்படையில்  தீர்மானிக்கப்படுகிறது என்பதை எதிர்த்து குரல் எழுப்பி சமூக நீதிக்காகப் போராடியவர் பெரியார். மறைந்து பல ஆண்டுகள் கழித்து அவருடைய கனவு இன்றைக்கு நனவாகியுள்ளதைப் பார்த்தோம்.

ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை கொடுக்க வேண்டும் என்று பெரியார் முழங்கியது, முதன்முதலாக முழுமையான வடிவத்தில் தமிழ்நாட்டில் 1989இல் திமுக ஆட்சியில் அமலாக்கப்பட்டது. பிறகு 2005இல் நாடு முழுவதும் மன்மோகன்சிங் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது

பெரியாரால் சமூக நீதி  பெற்றவர்கள் எப்படி அவரை வெறுக்க முடியும்?

இனிவரும் உலகம் என்கிற புத்தகத்தில் பெரியார் எப்படி  எதிர்காலத்தில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி காணும் என்பதைக் குறித்து எழுதி இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. உதாரணத்திற்குக் கம்பியில்லா தொலைப்பேசி, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பேசும் வசதிகளை (காணொளி அழைப்புகள்) எல்லாம் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என்று எழுதியவர் பெரியார். அவர் தொலைநோக்கு சிந்தனையாளர் என்பதற்கு இதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும்.

பெரியார் மானிட பற்றாளர். இன்னும் கூடுதலாகச் சொன்னால் உலகில் எல்லா உயிர்களும் வாழ்வதற்கு இடமுண்டு என்று நம்பியவர். கருத்தடையை அவர் ஆதரித்துப் பேசும் போது ‘எதிர்காலத்தில் குழந்தைகளே இல்லாமல் போய்விடுமே’ என்று கேட்டபோது ‘போனால் போகிறது இந்த உலகம் நமக்கு மட்டும்தானா’ என்று அர்த்தத்துடன் கேள்வியை எழுப்பியவர்.

பெரியார் பழமை வாதிகளுக்கும் அடிப்படை வாதிகளுக்கும் எதிரானவர். அத்தகையோரின் செயல்களுக்குப் பெரியாரின் கொள்கைகள் என்றைக்குமே முட்டுக்கட்டை போடக் கூடியவை. எனவே பெரியாரை எதிர்ப்பதற்கு அவர்களுக்குக் காரணங்கள் உண்டு. எதிரிகள் விதம்விதமாக கட்டமைத்துக் கொண்டே வருகிறார்கள். மறைந்து கிட்டத்தட்ட அய்ம்பது ஆண்டுகள் ஆனபோதிலும்  பெரியார் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். காரணம் பெரியார் என்பது அறிவியல். நம்மைக் காப்பாற்றும் சமூக மருந்து.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival