Read in : English
இந்தாண்டுக்கான சாலைப் பாதுகாப்பு வாரம் ஜனவரி 11 முதல் 17ஆம் தேதி வரை கொண்டாடப்படவிருக்கிறது. உச்ச நீதிமன்றம் அதற்கான பின்னணியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சாலைப் பாதுகாப்பிற்கு மாநில அரசுகள் முன்னுரிமை கொடுக்காமல் போகலாம்.
ஆனால் மோட்டார் வாகனச் சட்ட விதிகளைக் கறாராக நடைப்படுத்துவதற்கு மின்னணு கண்காணிப்புக் கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும் என்றதோர் ஆணையை இந்தியாவின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதி கொண்ட அமர்வு வழங்கியிருக்கிறது.
இந்தப் பிரச்சினை சம்பந்தமாக ஒரு கூட்டத்தைக் கூட்டும்படி, சாலைப் பாதுகாப்புக்கான உச்ச நீதிமன்றக் குழுவின் தலைவர் நீதியரசர் ஏ.எம்.சாப்ரேவை கேட்டுக் கொண்டிருக்கிறது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஜே.பி.பார்டிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு.
சிசிடிவி உட்பட பல்வேறு உபகரணங்களைப் பயன்படுத்தும் மின்னணு கண்காணிப்பு பற்றி 2019ல் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் தெளிவாகச் சொல்கிறது
நிர்வாகச் சீர்திருத்தங்கள் செய்தும் இன்னும் சாலைப் பாதுகாப்பு விசயத்தில் படுமோசமான நிலையைக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டிற்கு இந்த ஆணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சாலைப் பாதுகாப்பு பற்றி உச்ச நீதிமன்றம் செய்திருக்கும் இந்த சீராய்வு பல ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூர் எலும்பு மருத்துவர் எஸ்.ராஜசேகர் தொடுத்த வழக்கை அடிப்படையாகக் கொண்டது.
தகவல் தொழில்நுட்பப் பொறியியலாளர் சோபனா சென்னையில் சாலை விபத்தில் இறந்துவிட்டார்; கடலூர் அருகே நெடுஞ்சாலையில் ஐந்து வாகனங்கள் முட்டிமோதி ஒரு குடும்பத்தைச் சார்ந்த ஐந்து பேர் மரணமடைந்து விட்டார்கள். இந்தச் சமீபகாலத்து விபத்துகள் எழுப்பும் கேள்விகள் இவைதான்: இதற்கெல்லாம் யார் காரணம்? சாலைகளைப் பாதுகாப்பானதாக்க முடியுமா?
மேலும் படிக்க: சாலை விபத்து மரணங்கள்: அதிகார வர்க்கம் காட்டும் அலட்சியம்!
மின்னணு கண்காணிப்பு என்றால் என்ன?
சிசிடிவி உட்பட பல்வேறு உபகரணங்களைப் பயன்படுத்தும் மின்னணு கண்காணிப்பு பற்றி 2019ல் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 136 (ஏ) பின்வருமாறு சொல்கிறது:
1. ஒன்றிய அரசு நிர்ணயித்த மக்கள்தொகை கொண்ட ஒரு நகர்ப்புறத்தில் அல்லது தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மற்றும் சாலைகளில் சாலைப் பாதுகாப்பிற்காக மின்னணுக் கண்காணிப்பை மாநில அரசு உருவாக்க வேண்டும். எப்படி உருவாக்குவது என்பது உபபிரிவு (2)ல் வரையறுக்கப்பட்டிருக்கிறது.
2. துரித கேமரா, சிசிடிவி, வாகன வேகத்தை அளக்கும் கருவிகள், உடலில் அணியும் கேமரா மற்றும் பல தொழில்நுட்பச் சாதனங்களின் உதவியுடன் செய்யும் மின்னணு கண்காணிப்புக்காகவும் சாலைப் பாதுகாப்பிற்காகவும் ஒன்றிய அரசு விதிமுறைகளை உருவாக்கும்.
’உடலில் அணியும் கேமரா’ என்பது மாநில அரசினால் அங்கீகரிக்கப்பட்ட சீருடை ஊழியர்களின் உடலில் பொருத்தப்பட்டு நகரும் ஆடியோ, வீடியோ கருவி என்று சட்டம் வரையறுத்திருக்கிறது.
விதிகள் கறாராக அமல்படுத்தப்பட்டாலும் தமிழ்நாட்டில் ஏற்படும் விபத்துக்களின் கடுமை குறைந்த மாதிரி தெரியவில்லை. மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 198 (ஏ) விபத்துக்களுக்குக் காரணமாக அதிகாரிகளின் அல்லது முகமைகளின் அலட்சியத்தையும் கடமையுணர்வு பற்றாக்குறையையும் பற்றிப் பேசுகிறது. ஆனால் அந்த ஷரத்தை அதிகாரிகள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.
சிசிடிவி அடிப்படையிலான மின்னணு கண்காணிப்பிற்கு சென்னையின் மத்தியப் பகுதிகளில் யாரும் அஞ்சியது போல் தெரியவில்லை. வாகனங்கள் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தால் போதும் என்பதில் மட்டுமே காவலர்கள் கவனம் செலுத்துகிறார்கள். இருக்கும் சாலைப் பரப்பை சாலைப் பயனர்கள் அனைவரும் ஓர் ஒழுங்கமைப்பில் பயன்படுத்துகிறார்களா என்பதை அவர்கள் கண்காணிப்பதில்லை. ஆக்கிரமிப்புகள் அபாயங்களை உருவாக்க அனுமதிக்கப்படுகின்றன.
மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 198 (ஏ) விபத்துக்களுக்குக் காரணமாக அதிகாரிகளின் அல்லது முகமைகளின் அலட்சியத்தையும் கடமையுணர்வு பற்றாக்குறையையும் பற்றிப் பேசுகிறது; அந்த ஷரத்தை அதிகாரிகள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை
காவலர் கண்காணிப்பு வாகனங்கள் எல்லாமிடங்களிலும் பயணம் செய்கின்றன. வாஸ்தவம்தான். ஆனால் அவர்களின் கவனமெல்லாம் சட்டம் ஒழுங்கு மட்டுமே. போக்குவரத்து ஒழுங்கை உறுதி செய்வதில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. ஒவ்வொரு காவலர் கண்காணிப்பு வாகனமும் மின்னணு கண்காணிப்பு அலகுதான். அதில் சாலை விதிமீறல்களைப் படம்பிடித்து அபராத ரசீதுகளை வழங்கும் ஒரு மின்னணு கட்டமைப்பு இருக்கிறது. ஆனால் அது பயன்படுத்தப்படுவதில்லை.
சாலை சந்திப்புகளில் மாட்டப்பட்டிருக்கும் விலையுயர்ந்த சிசிடிவிக்கள் அடிக்கடி பழுதுபட்டுக் கிடக்கின்றன. அதனால் பெரிய விபத்துக்கள் நடக்கும்போது, அவற்றை ஆய்வு செய்வதற்குத் தனியார் சிசிடிவிகளையே காவல்துறை சார்ந்திருக்கிறது.
சரியாகத் தெரியாத வாகன நம்பர் பிளேட், இடைஞ்சல் ஏற்படுத்தும் பார்க்கிங், அபாயகரமாக வாகனங்களை இயக்குதல் போன்ற சாலை விதிமீறல்களைப் படம்பிடித்து அவற்றை சென்னை மாநகராட்சிப் போக்குவரத்துக் காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் ஒரு போக்கு சமீபகாலமாக சமூக ஊடகங்களில் உருவாகியிருக்கிறது.
மேலும் படிக்க: அதிக அபராதம்: சாலை விதிமீறல் அடங்குமா?
ஆரம்பத்தில் காவல்துறை விதிமீறல்களுக்கு அபராதம் வசூல் செய்யப்பட்டதற்கான ரசீதுகளை டிவிட்டரில் காட்சிப்படுத்தியது. அதன்பின்னர் சாலை விதிமீறல்கள் சுட்டிக்காட்டப்படும்போது, விசாரிக்கிறோம் என்று கவனமாகப் பதில் சொல்ல ஆரம்பித்துவிட்டது காவல்துறை. ஒரு நிகழ்வில் அரசு வாகனம் ஒன்று தவறான வழியில் பயணித்தது படம்பிடித்துக் காட்டப்பட்டது. அதில் தவறென்ன இருக்கிறது என்று பதிலளித்தது காவல்துறை. அந்தப் பதில் சமூக ஊடகங்களில் பரிகாசங்களை உருவாக்கிவிட்டது.
பாதசாரிகளுக்கான கேமரா
சாலை விபத்துக்களில் பலியாகும் பாதசாரிகள் தேசிய அளவில் 12.2 சதவீதம். ஆனால் சென்னையின் அதிகாரப்பூர்வமான கொள்கைகள் அவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. பாதசாரிகளுக்கான வரிக்கோட்டுத் தடங்கள் (ஜீப்ரா கிராஸிங்ஸ்) சென்னை சாலைகளில் பெரும்பாலும் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் காவலர்கள் அவற்றைக் கவனிப்பதில்லை. அதனால் ஏராளமான வாகனங்கள் பாதசாரிகள் கடந்து போகும்வரை காத்திருப்பதில்லை.
பாதசாரிக் கோணத்தில் உருவாக்கப்பட்ட போக்குவரத்து சமிக்ஞைகள் 1990களில் பரிசோதிக்கப்பட்டன. அவை பின்பு அமைதியாகக் கைவிடப்பட்டன.
பாதசாரிகள் கடந்து போவதற்கான தடங்கள் சாலைகளில் இருந்தாலும், மோட்டார் வாகனங்களின் அதிரடி வேகத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பாதசாரிகளால் முடிவதில்லை. 2021ல் தமிழ்நாட்டில் பதிவான சாலை விபத்துக்கள் மொத்தம் 55,682. பேருந்து விபத்துக்களும் இருசக்கர வாகன விபத்துக்களும் கணிசமான அளவுக்கு இருக்கின்றன.
சாலை விதிமீறல்களைப் படம்பிடித்து அவற்றை சென்னை மாநகராட்சிப் போக்குவரத்துக் காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் ஒரு போக்கு சமீபகாலமாகச் சமூக ஊடகங்களில் உருவாகியிருக்கிறது
தேசிய சாலைப் பாதுகாப்பு வாரியம், மாநில சாலைப் பாதுகாப்பு கவுன்சில், மாவட்ட சாலைப் பாதுகாப்புக் குழுக்கள் ஆகியவற்றை உருவாக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது.
மாவட்ட ஆட்சியர்கள், துணைக் காவல் ஆணையர்கள், தலைமை மருத்துவ அதிகாரி, பொதுப்பணித்துறை செயல் பொறியியலாளர், ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்கத்தின் பிராந்திய அலுவலகப் பிரதிநிதி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர், உள்ளாட்சி அமைப்பின் செயல் அதிகாரி, ஓர் அரசு சாராத இயக்கம், ஆர்டிஓ, மாநில நெடுஞ்சாலைத் துறை உறுப்பினர் (உறுப்பினர் செயலர்) ஆகியோரை மாவட்ட சாலைப் பாதுகாப்புக் குழுக்களில் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என்று 2022ஆம் ஆண்டு மார்ச் 29 அன்று நீதிபதி சாப்ரே, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் செயலருக்கும், மாநிலங்களின், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கும் கடிதம் எழுதினார்.
பல உறுப்பினர்களை மாநிலங்கள் நியமிக்கலாம்; ஆனால் நிர்ணயிக்கப்பட்ட உறுப்பினர்கள் விலக்கப்படக் கூடாது. மாவட்ட சாலைப் பாதுகாப்புக் குழுக்கள் எடுத்த தீர்மானங்களைத் தொகுத்து அவற்றை இணையத்தில் வெளியிடும்படி காவல் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிடலாம்.
இந்தாண்டு சாலைப் பாதுகாப்பு வாரத்திற்கு அது பொருத்தமாக இருக்கும். இதன்மூலம் சம்பந்தப்பட்ட முகமைகளுக்குப் பொறுப்புணர்வு ஏற்படும்; பொதுவெளிக் கவனம் தங்கள் மீது குவியும் என்ற ஓர் அச்சமும் உண்டாகலாம். மாவட்டங்களின் வெற்றிகளும் தோல்விகளும் வெளிப்படும்; அதனால் புகார்கள் தெரிவிக்கப்பட்டு நிவர்த்தியாகலாம்.
ஒன்றிய அரசின் போக்குவரத்து செயலர், கூடுதல் சொலிசிடர் ஜெனரல், நீதிமன்றத்தின் நடுநிலை அறிவுரையாளர் ஆகியோருடன் கலந்தாலோசித்து, மின்னணு கண்காணிப்பிற்கான செயல்முறைகளையும், மாநிலத்திற்கான வழிகாட்டுதல்களையும் இரண்டு வாரத்தில் உருவாக்கும்படி, உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதி அமர்வு நீதியரசர் ஏ. எம். சாப்ரேவைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதுவோர் ஆறுதலான விசயம்.
இதன்மூலம் மாநில நிர்வாகங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு சாலைப் பாதுகாப்பு விதிகள் இன்னும் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு சாலை விபத்துக்களும் மரண விகிதங்களும் குறைந்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
Read in : English