Read in : English

சாலை விபத்து மரணங்கள் விஷயத்தில் அதிகார வர்க்கம் காட்டும் அலட்சியத்தை எதிர்த்து குடிமைச் சமூகம் போராட வேண்டும். ஷோபனா என்ற மென்பொருள் பொறியாளர் ஜனவரி 3ஆம் தேதி சாலை விபத்தில் மரணமடைந்தார்.

சென்னையிலும், அதன் புறநகர்ப்பகுதிகளிலும் இருக்கும் மோசமான சாலைகளில் நடக்கும் மற்றுமொரு மரணம் என்று புள்ளி விவரங்களில் வழக்கம்போல் இந்த மரணம் மறைக்கப்பட்டுவிடும். சாலைப் பாதுகாப்புப் பிரச்சினையில் அதிகாரிகள் காட்டும் மெத்தனத்திற்கு அவர்களை யாரும் கேள்வி கேட்கமுடியாத நிலைமை நிலவுகிறது. அதனால் எளிதில் தவிர்க்கக் கூடிய சாலை மரணங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

ஷோபனாவின் மரணம் நிகழ்ந்த இடம் இரும்புலியூர்–மதுரவாயல் மேம்பாலத்து நெடுஞ்சாலையில் இருக்கும் சர்வீஸ் சாலை. வீடுகளும், கேட்டட் கம்யூனிட்டிகளும் பெரிதளவில் வளர்ந்துகொண்டிருக்கும் பகுதி அது. அங்கே மேம்பாலத்து நெடுஞ்சாலையின் கீழ் சரிவாகச் செல்லும் சிறிய சாலைகளும் இருக்கின்றன. அந்தச் சாலைகள் சரியாகத் திட்டமிடப்பட்டுக் கட்டப்படவில்லை. பலகீனமான பாதுகாப்பு அம்சங்கள் அங்கே இருக்கின்றன.

அப்படிப்பட்ட ஒரு சாலையில்தான் ஷோபனா தன் சகோதரனை முகப்பேரில் இருக்கும் பள்ளியில் விடுவதற்கு இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். குண்டும் குழியுமான சாலையில் தடுமாறிய அவர் பின்னால் வந்துகொண்டிருந்த லாரியில் அடிப்பட்டு இறந்திருக்கிறார். அவரது சகோதரன் காயத்துடன் தப்பித்திருக்கிறார்.

ஷோபனாவும் அவர் சகோதரரும் ஹெல்மெட் அணியவில்லை என்பது தவறுதான். ஆனால் விபத்து நடந்ததற்கு அது காரணமில்லை. குண்டும் குழியுமான சாலையும், மோசமாக ஓட்டிவந்த லாரி ஓட்டுநரும்தான் காரணம்

சோஹோ நிறுவனத்தில் பிரகாசமான எதிர்காலக் கனவுகளோடு பணிபுரிந்து கொண்டிருந்த ஷோபனாவின் சாலை விபத்து மரணம் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்நிகழ்வின் மூலம் ஒன்றிய அரசின் அல்லது மாநில அரசின் முகமைகள் மீது குடிமை சமூகம் பெரியதாக அழுத்தம் கொடுத்து ஆரோக்கியமான சாலைகளை உருவாக்கப் போராடலாம்.

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் 2019-இல் ஒரு பலகீனமான ஷரத்து இருக்கிறது. அதன்படி, அரசுப்பணி சாலை ஒப்பந்தக்காரர்கள், முகமைகள், ஆலோசகர்கள் ஆகியோர் காட்டும் அலட்சியத்தால் மரணமோ, அங்கஹீனமோ ஏற்பட்டால் அவர்கள் அதிகபட்சம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்று அந்த ஷரத்து சொல்கிறது.

மேலும் படிக்க: ஜெட்பாட்சர் சென்னைக்குச் சரிப்பட்டு வருமா?

அந்தச் சட்டத்தின் பிரிவு 198-ஏ பின்வருமாறு சொல்கிறது:

1. சாலைகளைப் பாதுகாப்புத் தரங்களோடு வடிவமைக்கும் அல்லது பராமரிக்கும் பொறுப்பு கொண்ட அரசு ஒப்பந்தக்காரர்கள், ஆலோசகர்கள் அல்லது பொறுப்பாளர்கள் அவ்வப்போது ஒன்றிய அரசு பரிந்துரைக்கும் கட்டுமானம் அல்லது பாரமரிப்புத் தரங்களைப் பின்பற்ற வேண்டும்.

2. துணைப்பிரிவு (1) சொல்லும் தரவிதிகளைப் பின்பற்றாமல் போனதால் ஏற்படும் மரணங்களுக்கு அல்லது அங்கஹீனங்களுக்குச் சம்பந்தப்பட்ட அரசு ஒப்பந்தக்காரர்கள், ஆலோசகர்கள் அல்லது பொறுப்பாளர்கள் பொறுப்பேற்க வேண்டும். ஒரு லட்சம் ரூபாய் வரையிலான அபராதத்தை அவர்கள் செலுத்த வேண்டும்.

ஷோபனாவின் மரணம் அவரது குடும்பத்திற்கு ஏற்படுத்திய இழப்பிற்கு நஷ்டஈடு மட்டுமல்ல, சாலைப் பாதுகாப்பின்மையால் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அபாயத்திற்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் சாலைப்பராமரிப்பு முகமைகளுக்கும் தண்டனை கொடுக்கும் விதமாக அவர்களின் சொந்த பணத்திலிருந்தும் நிதிதிரட்டிக் கொடுப்பதும் அவசியம்.

2009-இல் மது கெளர் எதிர் டில்லி அரசு வழக்கில் டில்லி உயர்நீதிமன்றம் டில்லி அரசைக் கடுமையாகச் சாடியிருக்கிறது. ”சாலைகளைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பைப் பற்றி அக்கறையில்லாமல் டில்லி அரசு செயல்படக்கூடாது; சேதமான சாலைப் பகுதிகளில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்க வேண்டும். அப்படி செய்யாதது அரசின் அலட்சியமே ஆகும்,” என்று உயர்நீதிமன்றம் எச்சரித்திருக்கிறது.

1974-இல் சி பி சிங் எதிர் ஆக்ரா கன்டோண்மெண்ட் வாரியம் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “சாலைகளைப் பயன்படுத்துவோர் மிகமிக அதீதமாக கவனமாக இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்லவில்லை.

நெடுஞ்சாலையில் காரோட்டிப் போகும் ஓட்டுநருக்கு தனது பாதையில் ஆபத்துகள் ஏதும் இல்லை என்று நினைப்பதற்கு உரிமை இருக்கிறது. அப்படியே இடையூறுகள் ஏற்படும் வாய்ப்பு இருந்தால் சமிக்ஞை அல்லது எச்சரிக்கை பலகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கும் உரிமையும் அவருக்கு உண்டு.”

2017-இல் கோயம்புத்தூர் எலும்புநல மருத்துவர் எஸ். ராஜசேகரன் தொடுத்த மிக முக்கியமான வழக்கில், உச்ச நீதிமன்றம் சாலைப் பாதுகாப்பை சாலைகளின் வடிவமைப்புக் கோணத்திலிருந்து ஆராய வேண்டும் என்று மாநிலங்களுக்கு ஆணையிட்டது. தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் சாலைப் பாதுகாப்புக் குழுக்கள் உருவாகின. அந்தக் குழுக்கள் என்னதான் செய்துகொண்டிருக்கின்றன என்று தகவலறியும் உரிமைச் சட்டப்படி ஊடகங்களும் பொதுநலச் செயற்பாட்டாளர்களுக்கும் கேள்வி கேட்கலாம்.

தமிழ்நாடு சாலைப் பாதுகாப்புக் கவுன்சிலுக்கென்று ஒரு கால்சென்டர் அமைத்து மோசமான சாலைகள் பற்றிய புகார்களை மக்களிடமிருந்து பெற்று நடவடிக்கை எடுக்கலாம்

பொருளாதார மேம்பாட்டுக்காக சென்னைத் துறைமுகம் முதல் மதுரவாயல் வரை புதியதொரு சாலையை உருவாக்குவதில் ஆர்வம் காட்டும் ஒன்றிய அரசு, இரும்புலியூர்–மதுரவாயல் நெடுஞ்சாலைப் பகுதியில் சாலைப் பயனர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உச்ச நீதிமன்ற ஆணையை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

மதுரவாயல் அருகே இந்த சாலை விபத்து நடந்த பின்பு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரைவாகச் செயல்பட்டு சாலையின் மோசமான பகுதிகளைத் தற்போதைக்குச் சரிசெய்திருக்கிறது. ஆனால் கேள்வி என்னவென்றால், போரூர், மாங்காடு, குன்றத்தூர், காட்டுப்பாக்கம், பூந்தமல்லி ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் பகுதிகளில் உள்ள சாலைகளின் பாதுகாப்புக்கு என்ன செய்திருக்கின்றன என்பதுதான்.

ஷோபனாவும் அவர் சகோதரரும் ஹெல்மெட் அணியவில்லை என்பது தவறுதான். ஆனால் விபத்து நடந்ததற்கு அது காரணமில்லை. குண்டும் குழியுமான சாலையும், மோசமாக ஓட்டிவந்த லாரி ஓட்டுநரும்தான் காரணம்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் அமர்வதற்கு முன்பிருந்தே பல உயிர்களைக் காவுவாங்கிய மோசமான சாலைகள் பிரச்சினைகளை உருவாக்கியிருந்தன. மோசமான உட்கட்டமைப்பும், பொறுப்பற்ற ஓட்டுநர்களின் மனப்போக்கும் அந்தப் பிரச்சினைகளில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆனால் இனியும் தாமதம் செய்வதற்கு அவையெல்லாம் சாக்காகி விடக்கூடாது.

மேலும் படிக்க: குண்டும் குழியுமாக உள்ள சென்னை சாலைகள் எப்போது சரி செய்யப்படும்?

சென்னையிலும், சிறிய நகரங்களிலும் புறநகர்ப்பகுதிகளிலும் பெருமளவு போக்குவரத்து இல்லாத பகுதிகளிலும் சாலை விபத்துக்கள் நடக்கின்றன. அப்படியென்றால், அரசு முகமைகளிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் ஏதோ தவறு இருக்கிறது என்றுதான் அர்த்தம். இருக்கின்ற சாலைகளில் அடிக்கடி பழுது பார்ப்பதற்குப் பதில் புதிதாக சாலை போடும் ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. ஏனென்றால் புதிய ஒப்பந்தங்கள் ஒப்பந்தக்காரர்களுக்கு மேலும் லாபம் தரும்.

தமிழ்நாடு சாலைப் பாதுகாப்புக் கவுன்சிலுக்கென்று ஒரு கால்சென்டர் அமைத்து மோசமான சாலைகள் பற்றிய புகார்களை மக்களிடமிருந்து பெற்று நடவடிக்கை எடுக்கலாம். கைப்பேசி செயலி ஒன்றையும் உருவாக்கி இந்தச் செயல்முறையில் பங்கெடுக்க வைக்கலாம். இதில் பதிவு செய்யப்படும் உண்மையான புகார் என்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஒரு நோட்டீஸாகவும் செயல்படும்.

இபிகோ பிரிவு 304-ஏ (அலட்சியத்தால் மரணம் விளைவித்தல்) அல்லது இபிகோ பிரிவு 304-II (மரணம் விளைவிக்கும் குற்றம்) பிரகாரம் சாலைப் பாதுக்காப்புத் தரத்தைக் கடைப்பிடிக்காத அதிகாரிகள்மீது சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களுக்குத் தண்டனை வழங்க ஏற்பாடு செய்யலாம். ஷோபனாவின் சாலை விபத்து மரணத்திற்குப் பிறகாவது அரசு அதிகாரிகளுக்குப் பொறுப்புணர்வு ஏற்படுமா?

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival