Read in : English
பெரிதாக நோய் தாக்குதலுக்கு ஆளாவதோ, அதற்கு நேரெதிராக உடல் பலத்துடன் இருப்பதோ, குடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து மாறுபடும். என்ன நம்ப முடியவில்லையா? குடல் மண்டலம் ஆரோக்கியமாக இருந்தால் நிறைய நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்; நன்றாகச் சிந்திக்க முடியும்; மகிழ்ச்சியாக, சுறுசுறுப்பாக இருக்க முடியும்; பதற்றம், மன அழுத்தம் இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ள முடியும்.
அப்படிப்பட்ட குடல் ஆரோக்கியத்தை எவ்வாறு கைக்கொள்ள முடியும் என்று பார்ப்போமா?
குடல் இரைப்பை மண்டலத்தில் ட்ரில்லியன் கணக்கிலான பாக்டீரியாக்கள் உள்ளன. இவற்றில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு; அவற்றின் சமநிலை மாறும்போது ஆரோக்கியம் கெடுகிறது. குடல் இரைப்பை பகுதியில் நடைபெறும் செயல்பாடுகளில் செரிமானம், சத்துகளை உறிஞ்சுதல் போன்றவை மிக முக்கியமானவை. அவற்றில் குடல் மண்டலத்திலுள்ள பாக்டீரியாக்களின் பங்கு அதிகம். இந்த விகிதம் பாதிக்கப்படும்போது ஆரோக்கியமும் நலிவடையும்.
குடல் இரைப்பையை ‘இரண்டாவது மூளை’ என்று கூடச் சொல்லலாம். ஏனென்றால், குடல் மண்டலத்தில் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட நரம்பு செல்கள் உள்ளன. அதனால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்போது மன ஆரோக்கியமும் பாதிப்புக்குள்ளாகிறது. நோய்வாய்ப்பட்டவர்களிடம் பதற்றம், மன அழுத்தம் இருப்பதில் இருந்து இதனை உணர முடியும்.
சரி, குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை எவ்வாறு அறிவது? சில அறிகுறிகள் மூலம் அதனைக் கண்டறிய முடியும்.
குடல் இரைப்பை மண்டலத்தில் ட்ரில்லியன் கணக்கிலான பாக்டீரியாக்கள் உள்ளன; இவற்றில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு
தூக்கமின்மை, சோர்வாக உணர்தல், வாயுத்தொல்லை, அசீரணக் கோளாறுகள், ஒழுங்கற்ற தூக்கம், அடிக்கடி காய்ச்சல் ஏற்படுதல் போன்றவை குடல் ஆரோக்கியமற்று இருப்பதை வெளிப்படுத்தும்.
சில உணவுகளை உட்கொள்வதன் மூலமாக குடல் ஆரோக்கியத்தை கைக்கொள்ள முடியும். தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள், என்று பல்வேறுபட்ட உணவுகளைச் சமநிலையுடன் எடுத்துக்கொள்ளும்போது நமது குடல் நலத்தைப் பேணலாம்.
மேலும் படிக்க: தேன் இனிமை தெரியும், நச்சுத்தன்மையுடைய தேனும் இருக்கிறது தெரியுமா?
இரண்டாவதாக, நார்ச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். குடல் பகுதியிலுள்ள நுண்ணுயிரிகள் (Micro Organisams) நன்கு வளர, ப்ரீ பயோடிக் (Pre Biotics) எனப்படும் நார்ச்சத்து உணவுகள் ரொம்பவும் அவசியம். சராசரியாக ஒருவர் ஒருநாளைக்கு 30 முதல் 40 கிராம் நார்ச்சத்து எடுத்துக்கொள்வதன் மூலமாக குடல் ஆரோக்கியத்தைப் பேண முடியும்.
மூன்றாவதாக, புளித்த அல்லது நொதித்தலுக்கு (fermented) உள்ளான உணவுகளை உண்ணலாம். தயிர் அல்லது யோஹர்ட் அடிக்கடி சாப்பிடுவதன் மூலமாக இவ்வழக்கத்தைப் பின்பற்றலாம். தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு சளி பிடிக்கிறது என்று சொல்பவர்கள், அதனை ப்ரிட்ஜில் வைக்காமல் ’ப்ரெஷ்’ தயிரை உட்கொள்ளுமாறு செய்யலாம்.
நான்காவதாக, அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்; இதனால் செரிமானம் மேம்படுவதுடன் தேவையற்ற நச்சுப்பொருட்கள் உடலில் இருந்து வெளியேற்றப்படும்.
இவை தவிர்த்து சிறுதானியங்கள், கைக்குத்தல் அரிசி என்று நார்ச்சத்துமிக்க தானியங்களைச் சாப்பிடுவதும் குடலின் ஆரோக்கியத்தைத் தக்கவைக்க உதவும். அதேநேரத்தில், குடலைப் பாதுகாக்க காபி அதிகம் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அதிலுள்ள ‘கஃபீன்’ குடலின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். வெள்ளை சர்க்கரையை அதிகளவு உட்கொள்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். மது அருந்தும் வழக்கமுள்ளவர்களுக்கு, குடல் பகுதியிலுள்ள நுண்ணுயிரிகளின் வளர்ச்சி தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும். ஆதலால், மது அருந்துவதைத் தவிர்ப்பது குடல் நலத்தை மேம்படுத்தும்.
குடல் இரைப்பையை ‘இரண்டாவது மூளை’ என்று கூடச் சொல்லலாம்; ஏனென்றால், குடல் மண்டலத்தில் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட நரம்பு செல்கள் உள்ளன
நன்றாகத் தூங்குவது மிக முக்கியம். அப்போதுதான், மன அழுத்தம் இல்லாமல் போகும்; அதையே வேறு வகையில் சொல்வதானால், மன அழுத்தம் இல்லாதபோது குடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். அவ்வாறு இல்லாதவர்களுக்கு அமிலத்தன்மை முதற்கொண்டு பல்வேறு அசீரணக் கோளாறுகள் ஏற்படுவதாகச் சொல்கின்றன சில ஆய்வுகள். ஆதலால் மனநலத்தைக் காக்கும் மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட பல பயிற்சிகளைப் பின்பற்றுவது சரியான வழிமுறையாக அமையும்.
அதே போல பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அதாவது சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் நிறைந்த மைதா போன்ற உணவு வகைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. அவற்றை அதிகம் சாப்பிடுவதால் நம் குடலிலுள்ள நன்மையளிக்கும் பாக்டீரியாக்கள் பாதிப்புக்குள்ளாகும்.
எப்போதாவது ஒருமுறை எடுத்துக்கொள்கிறேன் என்று தொடங்கி அடிக்கடி அவற்றை உட்கொள்வது குடலின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். இதனால், பின்னாட்களில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதனால், குழந்தைகளுக்கு பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை உண்ணக் கொடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
மேலும் படிக்க: தாமரைவிதைத் தின்பண்டம் மக்கானா ஓர் உணவு-மருந்து
ஆன்டிபயாடிக்குகள் உட்கொள்வதைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அவை எல்லாவகையான பாக்டீரியாக்களையும் அழிக்கும் தன்மை கொண்டவை. அதனால் குடல் நலம் பாதிக்கப்படும். சில பெற்றோர்கள் குழந்தை மருத்துவரைச் சந்தித்தாலும், அடுத்தடுத்த முறை நோய்வாய்ப்படும்போது அம்மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை மருந்தகங்களில் வாங்கிக் கொடுத்து விடுவர். அது தவறான விஷயம்.
ஏனென்றால், மருத்துவரின் ஆலோசனையில்லாமல் ஆன்டிபயாடிக் சாப்பிடுவதென்பது உடலிலுள்ள பாக்டீரியாக்களை மொத்தமாக அழித்துவிடும். அதனால், குழந்தைகளின் நோய் எதிர்ப்புத்திறன் பாதிக்கப்பட்டு அடிக்கடி நோய்வாய்ப்படுவது வாடிக்கையாகும். ஆண்டிபயாடிக் உட்கொள்வது இயற்கையாகவே நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிப்பதை தடுக்கும். அதனால், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த அவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
எல்லாவற்றையும் விட, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 20 முதல் 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி உள்ளிட்ட ஏதேனும் ஒரு பயிற்சியைப் பின்பற்றுவதன் மூலமாக உடலின் செரிமானத்தைச் சீராக்கலாம்; குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்; உங்களது வாழ்வில் நிறைய மாற்றங்களை உருவாக்கலாம்.
அதேபோல, வெளியிடங்களில் சாப்பிடுவதை விட வீட்டிலேயே சமைத்த உணவுகளைச் சாப்பிடுவது இன்னும் நல்ல பலன்களைத் தரும்!
Read in : English