Read in : English
கல்வியிலும் பெண் விடுதலையிலும் முன்னேறிய மாநிலமாக புகழ்பெற்று விளங்கும் கேரளாவில்தான் சமீபகாலமாக எல்லா வயதுப் பெண்கள் மீதும் வன்முறைத் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. ஆணாதிக்கச் சிந்தனைகளாலும் சட்டங்களாலும் கட்டமைக்கப்பட்ட சமூகத்தை எதிர்த்து வீரியமிக்க கலாச்சாரப் புரட்சியை நடத்தும் இளைய தலைமுறை கேரளப் பெண்களின் எழுச்சியை அடக்கும் முகாந்திரத்தோடு இவை அமைந்திருக்கின்றன.
இந்த வன்முறை நிகழ்வுகள் கேரளப் பெண்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக்கின்றன. தேசிய அளவிலும் உலக அளவிலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னேறிய பெண்கள், தங்கள் அந்தரங்க வாழ்க்கையைக் கண்காணிக்கும் சமூக கலாச்சாரக் காவல்துறை போக்கையும், பெற்றோர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளையும் எதிர்க்கத் தொடங்கிவிட்டனர்.
அதன் வெளிப்பாடுதான் ‘தனியாக வாழ்தல்’, ‘ஆணோடு மணம் புரியாமல் சேர்ந்து வாழ்தல்’, ’டேட்டிங்’ போன்ற புதிய கலாச்சாரப் போக்குகள். இந்தப் புரட்சிகரமான செயற்பாடுகள் சமூகத்தில் விரிசலையும் உராய்வுகளையும் ஏற்படுத்தி விட்டதால் பெண்கள் மீதான வன்முறை சமீபகாலங்களில் அதிகரித்திருக்கிறது.
புதியதோர் உலகில் சமத்துவம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் கேரளப் பெண்களுக்கு முதிய ஆண்களும் இளைஞர்களும் வில்லன்களாக விளங்குகிறார்கள். சமூக மற்றும் தனிமனித ஒழுங்கைப் போதிக்கும் கலாச்சாரக் கட்டமைப்பு, மற்றவர்களின் படுக்கையறையை எட்டிப் பார்க்கும் சமூகக் குணம் பெண்களுக்குச் சாபமாக மாறிவிட்டது.
இணைய வீதிகளிலும் பெளதீக தெருக்களிலும் பெண்கள் இந்தக் கலாசாரக் காவலர்கள் என்னும் வன்முறையாளர்களின் தாக்குதலுக்கும் வசைச்சொற்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.
‘தனியாக வாழ்தல்’, ‘ஆணோடு மணம்புரியாமல் சேர்ந்து வாழ்தல்’, ‘டேட்டிங்’ போன்ற புதிய கலாச்சாரப் போக்குகள் சமூகத்தில் விரிசலையும் உராய்வுகளையும் ஏற்படுத்தி விட்டதால் பெண்கள் மீதான வன்முறை சமீப காலங்களில் அதிகரித்திருக்கிறது
தொழில் நகரமான கொச்சியிலும், கலாச்சாரத் தலைமையகமான கோட்டயத்திலும், மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்திலும் கேரளப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஆதலால் அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் நிரம்பிய இந்தச் சமூகத்தை விட்டு பெரும்பாலான கேரளப் பெண்கள் வெளியேறவே விரும்புகிறார்கள்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள்படி, தமிழ்நாட்டில் 2019-2021 காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 43.25 சதவீதமும், தேசிய அளவில் 5.35 சதவீதமும் உயர்ந்திருக்கின்றன. ஆனால் இந்தியாவில் குற்றங்கள் அதிகம் நிகழும் மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் கேரளாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் அதிகரிப்பு பதிவு செய்யப்படவில்லை.
கேரள காவல்துறையின் தரவுகள்படி, கடந்த பத்தாண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் பெரிய அதிகரிப்பும் இல்லை; பெரிய வீழ்ச்சியும் இல்லை.
மேலும் படிக்க: கேரளாவில் நரபலிகளா?
கொரோனா ஊரடங்கினால் 2020ல் மட்டும் மிகக்குறைவான குற்றங்கள் (12,659) பதிவாகின. கொரோனாவிற்கு பிந்திய ஆண்டான 2021ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் (16,199) அதிகரித்தன. இந்தாண்டு அக்டோபர் வரை பெண்களுக்கு எதிராக மொத்தம் 15,403 குற்றங்கள் பதிவாகியிருக்கின்றன.
பெண்களுக்கும் சமூகத்திற்கும் எதிரான தீயசக்திகளால் ஆளப்படுவது போலத் தோற்றமளிக்கும் இன்றைய கேரள சமூகத்தில் பெண்கள் அணியும் வித்தியாசமான ஆடை, சீண்டல் விமர்சனங்களுக்கு அவர்கள் ஆற்றும் பலவீனமான எதிர்வினைகள், இரவுகளில் ஆண் தோழர்களோடு மேற்கொள்ளும் வாகனச் சவாரிகள், பாலியல் வன்கொடுமையைத் தடுக்கும் அவர்களின் முயற்சிகள்… இவையெல்லாம் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அதிகரிக்கச் செய்யும் முக்கியக் காரணிகள்.
ஆகக் கொடுமையான நிகழ்வு ஒன்று கடந்த நவம்பர் 28 அன்று அதிக எழுத்தறிவு விகிதமும் செழிப்பான அறிவுஜீவித்தனமும் கொண்ட கோட்டயத்தில் நடந்திருக்கிறது. அங்குள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நண்பரைப் பார்க்கச் சென்று கொண்டிருந்த 21 வயது மாணவியையும், அவருக்குத் துணையாகச் சென்ற ஓர் இளைஞனையும் மூன்று இளைஞர்கள் கடுமையாகத் தாக்கினர். பின்பு அந்தப் பெண் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்; அவருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்யக் கூடாது என்று ஆட்சிக் கூட்டணியில் தலைமை வகிக்கும் சிபிஎம் தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டது. என்றாலும், பெரும்பாலான கட்சிகள் அந்தப் பெண்ணின் பக்கம் நின்றதால் மூன்று பேரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் நிரம்பிய இந்தச் சமூகத்தை விட்டு பெரும்பாலான கேரளப் பெண்கள் வெளியேறவே விரும்புகிறார்கள்
கோட்டயம் சென்ட்ரல் ஜங்சனில் இருந்த சாலையோரத்து உணவுக்கடையில் நண்பரோடு உணவருந்திக் கொண்டிருக்கும்போது அந்த மூன்று இளைஞர்கள் விகாரமான பார்வைகளாலும், வக்ரமான வார்த்தைகளாலும் தன்னை இம்சித்ததாக அந்தப் பெண் புகார் தெரிவித்தார். “உணவுக் கடையை விட்டு வெளியேறி நாங்கள் ஸ்கூட்டரில் சென்றபோது அந்த மூன்று பேரும் காரில் எங்களைப் பின்தொடர்ந்தார்கள். இடையில் வழிமறித்து என்னை வண்டியிலிருந்து இழுத்து என் முகத்திலும் வயிற்றிலும் மீண்டும் மீண்டும் உதைத்தார்கள்,” என்று கூறியிருக்கிறார் அந்தப் பெண்.
இந்நிகழ்வில் தாக்குதலுக்கு ஆளானவர்களும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் சிபிஎம்மின் பிற இயக்கங்களில் செயற்பாட்டாளர்களாக இருக்கிறார்கள் என்பது ஒரு நகைமுரண். அந்தப் பெண்ணும் அவரது தோழரும் எஸ்எஃப்ஐயைச் சேர்ந்தவர்கள்; குற்றம் சாட்டப்பட்ட மூவரும் டிஒய்எஃப்ஐ உறுப்பினர்கள்.
மேலும் படிக்க: போதைமருந்து யுத்தம்: கேரளாவை தொடருமா தமிழகம்!
இதன் விளைவாக மாநிலம் முழுவதும் கல்லூரிகளில் பெரிய போராட்டங்கள் வெடித்தன. கோட்டயத்தில் சிஎம்எஸ் கல்லூரியில் மாணவிகள் மனிதச்சுவரை எழுப்பியும், மூன்று பேர் தங்கள் தலைமுடியை வெட்டியும் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். “இரவு பொழுது எல்லோருக்குமானது. பையன்களைப் போலவே இரவு நேரத்தின் மீதான உரிமை எங்களுக்கும் உண்டு” என்று போராளிப் பெண்கள் முழங்கினர்.
இதைப் போன்ற இன்னொரு நிகழ்வு கொச்சியில் சில வாரங்களுக்கு முன்பு நிகழ்ந்திருக்கிறது. மூன்று பேர் 19 வயது பெண் மாடல் ஒருவரைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர். மேல்தட்டு வாழ்க்கைக்கும் ஒப்பீட்டளவில் சிறப்பான இரவு வாழ்க்கைக்கும் பேர் பெற்ற கொச்சியில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது ஆச்சரியம்.
நவம்பர் 17 இரவு 8.30 மணியளவில் கொச்சின் கப்பல்தளத்திற்கருகே அந்த பெண், டிம்பிள் லாம்பா என்ற இன்னொரு மாடல் உடன் ஒரு ‘பப்’பிற்குச் சென்றிருக்கிறார். அங்கே அவரது பானத்தில் போதை வஸ்துக்களை யாரோ கலந்துவிட்டதாகப் பின்னர் அந்தப் பெண் புகார் தெரிவித்தார். மயங்கி விழுந்த அவரை வீட்டில் கொண்டுவிடுவதாக மூன்று பேர் முன்வந்திருக்கின்றனர். அதை டிம்பிள் லாம்பாவும் ஏற்றிருக்கிறார். ஆனால் அவர் அவர்களோடு காரில் செல்லவில்லை.
அதன்பிறகு, காரில் போய்க் கொண்டிருக்கும்போது மூன்று பேரும் அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்தனர். பின்னர், பீர் பானத்தில் போதை மாத்திரை கலந்து கொடுத்ததற்காக டிம்பிள் லாம்பா என்ற ராஜஸ்தான் பெண்ணையும் அந்த மூன்று பேரையும் காவல்துறை கைது செய்தது.
இன்னொரு நிகழ்வு, நான்கு வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சந்தியாவிற்கும், உத்தரகாண்டைச் சேர்ந்த ஃபரூக்கிற்கும் இடையிலேற்பட்ட மனவிரிசல் சம்பந்தப்பட்டது; அதன் காரணமாக, அழகு நிலையத்தில் பணிபுரியும் சந்தியாவைக் கொச்சியில் பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றிருக்கிறார் ஃபரூக்.
தன்னுடன் கொண்டிருந்த உறவை முறித்துக் கொண்டு வேறொரு நபருடன் சந்தியா சென்றுவிட்டதால் ஏற்பட்ட விரக்தியால் ஃபரூக் கொலை முயற்சியில் இறங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கழுத்தைக் குறிவைத்த கத்தி அந்தப் பெண்ணின் சாமர்த்தியமான தற்காப்பு நகர்வால் அவரது கைகளைப் பதம் பார்த்திருக்கிறது.
மாநிலத் தலைநகரம் திருவனந்தபுரத்தில் கூட, இப்போது பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. பெரிய மனிதர்கள் நடைபயிற்சி செல்லும் அருங்காட்சியக வளாகத்தில், கடந்த அக்டோபர் 26 காலை மணி 5.45 அளவில் ஒரு மருத்துவ மாணவியை ஒரு நபர் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தியிருக்கிறார்.
எனினும், நவம்பர் 1ஆம் தேதி அன்று மந்திரி ஒருவரின் கார் ஓட்டுநரான அவரைக் காவல்துறை கைது செய்துவிட்டது. அதே திருவனந்தபுரத்தில் கெளடியார் என்னும் இடத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுப் பயிற்சி நிலையத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த இரண்டு பெண்களை பைக்கில் சென்ற ஒரு நபர் பாலியல் சீண்டல் செய்திருக்கிறார்.
அரசியல் கட்சிகளில் மாஃபியாக்கள் நுழைந்துவிட்டதால், கேரளாவின் அரசியல் கட்டமைப்பை அவர்கள் தங்கள் கைக்குள் கொண்டுவந்து விட்டனர் என்று அரசியல் அவதானிப்பாளர்கள் கூறுகிறார்கள்
கடந்த பல ஆண்டுகளாக கேரளாவில் பெண் சுதந்திர இலட்சியத்தை அடைவதில் பெரும்பங்காற்றியிருக்கும் முற்போக்கான அரசியல் சக்திகளும், பெண்ணியல்வாதக் குழுக்களும் பெண்ணுக்கு எதிரான வன்முறை நிகழ்வுகளால் கதிகலங்கிப் போயிருக்கின்றன. ஆனாலும் அவர்களிலே புகழ்பெற்று விளங்கும் தலைவர்கள் மீது கூட பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன.
இடதுசாரி பெண்ணியல்வாதிகள் அற்ப விசயங்களுக்காகவும், இல்லாத பிரச்சினைகளுக்காகவும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. சிவிக் சந்திரன் என்னும் தலித் பெண்கள் செயற்பாட்டாளர் பல பெண்கள் குழுக்களை ஆதரித்தவர்.
அவர் மீது கூட ஒரு பெண் எழுத்தாளர் பாலியல் சீண்டல் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அவருக்குச் சார்பாகவும் எதிராகவும் கேரளப் பெண்ணியல்வாதிகள் பிரிந்து கிடக்கிறார்கள்.
அரசியல் கட்சிகள் பெண்களை வழிநடத்திச் செல்லுமளவுக்குக் கருத்தியல் பலமோ ஆத்ம பலமோ கொண்டவை அல்ல. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும் கேரளாவின் இரண்டு பெரும் அரசியல் கூட்டணிகள் ஆகும். இந்த இரண்டு அமைப்புகளின் தலைவர்கள் மீதும் கூட பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
சமீபத்தில் தன்னைப் பாலியல் சித்ரவதை செய்ததாக காங்கிரஸ் எம்எல்ஏ எல்தோஸ் குன்னப்பிள்ளி மீது ஒரு பெண் புகார் ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் இது மாதிரியான புகார்களைப் பெண் தொண்டர்கள் தலைவர்கள் மீது வைத்திருக்கிறார்கள்.
அரசியல் கட்சிகளில் மாஃபியாக்கள் நுழைந்துவிட்டதால் அவர்கள் இன்று கேரளாவின் அரசியல் கட்டமைப்பைத் தங்கள் கைக்குள் கொண்டுவந்து விட்டனர் என்று அரசியல் அவதானிப்பாளர்கள் கூறுகிறார்கள். சிபிஎம் கட்சியைச் சார்ந்த கலகக்காரர் டி.பி.சந்திரசேகர் அந்நாளைய தீப்பொறித் தோழர். அவரைக் கட்சித்தலைவர்களே கூலிப்படையை விட்டு கொலை செய்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்நிகழ்வு அரசியலுக்கும் மாஃபியாவுக்கும் உள்ள தொடர்பிற்கான சான்றாகும். வைய்யூர் சிறைச்சாலையில் சித்ரவதை அனுபவிப்பதாகக் குண்டர்கள் புகார் தெரிவித்தவுடன், காலஞ்சென்ற கொடியேரி பாலகிருஷ்ணன் உட்பட பல சிபிஎம் தலைவர்கள் சிறைக்கு விரைந்து சென்று பார்த்தனர்.
இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி இரண்டாவது தடவையும் ஆட்சியைப் பிடித்தவுடன் எல்லா மாஃபியாக்களும் சிபிஎம் கட்சியில் சென்று ஐக்கியமாகி விட்டன என்று அரசியல் அவதானிப்பாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
குற்றங்களில் ஈடுபடும் சிபிஎம் கட்சித் தொண்டர்களின் எண்ணிக்கையும், கட்சியோடு தொடர்பு கொண்ட பல்வேறு இயக்கங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் முன்பைவிட பன்மடங்கு அதிகரித்திருக்கிறது என்பது கவலை தரும் விசயம்.
Read in : English