Read in : English
தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக அறியப்பட்டிருக்கும் யோகி பாபு நவம்பர் 28 அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தாதா’ வெளியீடு தொடர்பான விளம்பரப் படமொன்றைப் பகிர்ந்திருந்தார். அந்தப் படத்தில் நிதின் சத்யாதான் நாயகன் என்றும் அவருடைய நண்பனாக நடித்திருக்கிறேன் என்றும் தான் நாயகன் என்பதை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து ‘தாதா’ படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கும் கின்னஸ் கிஷோர் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் யோகி பாபுவைக் கடுமையாக விமர்சித்திருந்தார். படத்தில் யோகி பாபு நான்கு காட்சிகளில் நடித்திருக்கிறாரா, நாற்பது காட்சிகளில் நடித்திருக்கிறாரா என்பது படம் வெளிவந்தால் தெரியும் என்றார் கிஷோர். அத்துடன் நிற்கவில்லை, படத்தில் அதிகக் காட்சிகளில் யோகி பாபு நடித்திருந்தால் சினிமாவை விட்டுப் போய்விடுவாரா என்றும் சவால் விட்டிருந்தார்.
தமிழ்த் திரைப்படத் துறையில் இப்படியான சர்ச்சைகள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். திரைப்படத் துறையைப் பொறுத்தவரை வெற்றி தான் முதன்மையானது. வெற்றிக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்துச் செயல்படுவோர் அநேகர். தமிழில் ஒரு நடிகர் நடித்த திரைப்படம் வெற்றி பெறும்போது, அவர் நடித்த பிறமொழிப் படங்களைத் தமிழில் மொழி மாற்றி வெளியிட்டு லாபம் பார்க்க முயல்வார்கள். முன்னர் ரஜினிகாந்துக்கு இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டது.
‘தாதா’ படத்தில் யோகி பாபு நான்கு காட்சிகளில் நடித்திருக்கிறாரா, நாற்பது காட்சிகளில் நடித்திருக்கிறாரா என்பது படம் வெளிவந்தால் தெரியும்
ரஜினிகாந்த் நடித்த இந்திப் படமொன்றை ‘லட்சத்தில் ஒருவன்’ என்ற பெயரில் தமிழில் வெளியிட முயன்றபோது, தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் என்று நினைத்த ரஜினி அந்தப் படம் வெளிவருவதை விரும்பவில்லை. தமிழில் ரஜினி பெரிய ஹீரோ. ஆனால், அப்போது இந்தியில் ரஜினியின் நிலைமை அப்படியல்ல. அங்கே பல ஹீரோக்களில் ஒருவராகத் தான் நடித்தார். ஆகவே, அவரது பெயரை வைத்து அந்தப் படத்தைத் தமிழில் வெளியிட்டால் அவரை நம்பி தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் ஏமாற்றமடைவார்கள் என அச்சப்பட்டார். ஒரு நடிகராக ரசிகர்களிடம் தனது பெயரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய தேவை இருந்தது.
இப்போது யோகி பாபுவுக்கும் இதுதான் நிலைமை. அவரது படங்கள் வெற்றி பெற்றுவரும் சூழலில், அவர் சில காட்சிகளில் மட்டும் நடித்த ஒரு படத்தை அவர் முகத்தை மட்டும் வைத்து விளம்பரப்படுத்தி வசூலைத் திரட்ட முயலும் சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது.
மேலும் படிக்க: பாபா: புதிய வரலாறு படைக்குமா?
‘தாதா’ படம் தொடர்பான விஷயத்திலும் அப்படியானதொரு சிக்கல் இருக்கலாம். அப்படத்தைப் பற்றி ஒரு செய்தியை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சியில் ஒரு தகவல் வெளியானது. அதில், மணி என்னும் படத்தில் தான் நடித்திருந்ததாகவும் தாதா என்னும் படத்தில் தான் நடிக்கவேயில்லை என்றும் யோகி பாபுவின் குரலில் அத்தகவல் அமைந்திருந்தது.
‘தாதா’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியிலும் பெரிய அளவில் தயாரிப்பாளர்களோ, படத்தில் நடித்த நடிகர் நடிகைகளோ கலந்துகொள்ளவில்லை. யாரும் கலந்துகொள்ளவில்லை என்ற வருத்தத்தை அந்த மேடையில் பேசியவர்களே வெளிப்படுத்தினார்கள். படத்தின் இரண்டு நாயகர்களில் யோகி பாபுவும் ஒருவர் என்னும் தகவலும் அந்த மேடையில் தெரிவிக்கப்பட்டது. இரண்டு நாயகர்கள் படத்தில் நடித்திருப்பின் ஏன் யோகி பாபுவின் படம் மட்டும் பெரிதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றிருக்கிறது என்பது இயல்பாகவே எழும் ஒரு சந்தேகம்.
இரண்டு நாயகர்கள் நடித்திருப்பின் ஏன் யோகி பாபுவின் படம் மட்டும் பெரிதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றிருக்கிறது
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் பாடலாசிரியர் என நா.முத்துக்குமாரின் பெயர் இருக்கிறது. அவர் இயற்கை எய்திய ஆண்டு 2016. அதிலிருந்து படம் உருவாக்கப்பட்ட காலத்தை ஊகிக்க முடிகிறது. அப்போது யோகி பாபு என்ன நிலையிலிருந்திருப்பார்?
விஜய் தொலைக்காட்சி வழியே திரைத்துறைக்கு வந்த பாபு, 2009இல் வெளியான ‘யோகி’யில் தான் முதன்முதலாக நடிகராகத் திரையில் தோன்றியிருந்தார். தொடர்ந்து சில ஆண்டுகள் நடித்து வந்தாலும், 2015இல் வெளியான ‘காக்கா முட்டை’ படத்துக்குப் பின்னர்தான் நன்கு அறியப்பட்ட முகமானார். அதிலும் 2018இல் ‘பரியேறும் பெருமாள்’, ‘கோலமாவு கோகிலா’ போன்ற படங்களில் நடித்த பின்னர் அவருடைய சந்தை மதிப்பு அதிகரித்தது.
மேலும் படிக்க: தரம் இழந்து போகும் நகைச்சுவை: உருவத்தை கேலி செய்து கிண்டலடிக்கும் தமிழ் சினிமா!
‘தர்ம பிரபு’, ‘கூர்கா’ எனத் தனியாக அவரை மட்டும் நம்பி படங்கள் உருவாக்கப்பட்டன. கொரோனா காலகட்டத்தில் வெளியான ‘மண்டேலா’ அவருக்கு ரசிகரிடையே நல்ல மரியாதையைப் பெற்றுத் தந்தது. ரஜினி, விஜய், அஜித், தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் முதலிய முன்னணி நாயகர்களுடனும் இணைந்து நடித்துவிட்டார்.
அண்மையில் பெரிய வெற்றியைப் பெற்ற சிறிய பட்ஜெட் படமான ‘லவ் டுடே’ வரை அவருடைய பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவரே கதை திரைக்கதை வசனம் எழுதி ஒரு படத்தை உருவாக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
வளரும் நிலையில் வருமானத்தின் பொருட்டு யோகி பாபு நடித்துக் கொடுத்த சில படங்கள் இப்போது அவருடைய சந்தை மதிப்பைப் பயன்படுத்தி வியாபாரமாகலாம்
இந்தச் சூழலில் தமிழ்த் திரையுலகில் தன்னுடைய முயற்சியின் காரணமாகவும் திறமையின் காரணமாகவும் தான் வந்து சேர்ந்திருக்கும் இடத்தைத் தக்கவைக்க அவர் விரும்புவதில் ஒரு பிழையும் இருக்க இயலாது. வளரும் நிலையில் வருமானத்தின் பொருட்டு நடித்துக் கொடுத்த சில படங்கள் அப்போது வெளியாகாமல் இப்போது அவருடைய சந்தை மதிப்பைப் பயன்படுத்தி வெளியாகும்போது அப்படங்கள் வியாபாரமாகலாம். ஆனால், அவரது நற்பெயருக்கு அது களங்கமாக அமையும் வாய்ப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது. எனும்போது, ஒரு நடிகராக அவர் அதை எப்படி அனுமதிப்பார்?
அதே நேரத்தில், அவர் எப்போதோ நடித்திருந்த படம் ஒன்றை இப்போது வெளியிடுவதைத் தவறென்றும் சொல்லிவிட இயலாது. அந்தப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் படத்தை விற்று லாபமீட்ட விரும்பத்தானே செய்வார்? ஒருவேளை ‘தாதா’ படத்தில் யோகி பாபு உண்மையிலேயே அதிகக் காட்சிகள் நடித்திருந்து அதை அவர் மறைக்க முயன்றால் குற்றம் சொல்லலாம். இல்லை அவர் தெரிவிப்பதுபோல், சில காட்சிகளில் மட்டும் நடித்திருக்க படத்தில் அவர் தான் ஹீரோ என்பதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்கிப் படத்தை விற்றிருந்தால் படத்தின் தயாரிப்பாளர் மீது குற்றம் சொல்லலாம்.
இது தொடர்பான முடிவை ரசிகர்கள் தாம் எடுக்க முடியும். அது எப்போது சாத்தியம்? படம் வெளியானால்தான் உண்மை தெரியவரும்.
நடிகர் யோகி பாபுக்கு ரெட் கார்ட் தடை விதிக்க வேண்டும் என கின்னஸ் கிஷோர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்திருப்பதாக ஒரு செய்தி உலவுகிறது. இதனிடையே துரை ராஜன் என்பவர் 2016இல் தனது நண்பர்களுடன் இணைந்து தான் தயாரித்த ‘மணி’ என்ற படத்தை ‘தாதா’ என்னும் பெயரில் கிஷோர் வெளியிட முயல்வதாகவும் ஆகவே படம் வெளியிடுவதைத் தடை செய்யும் வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் படத்தை வெளியிடத் தடை விதித்துள்ளது; வழக்கு விசாரணையை டிசம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது; வழக்கு குறித்து கிஷோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
திறமையை மட்டுமே வைத்து முன்னேறிவரும் யோகி பாபு போன்ற கலைஞர்களுக்கு இப்படியான தடைகள் வரத்தான் செய்யும். அவற்றை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களது வெற்றியும் தோல்வியும் அமையும் என்பதே இப்போதைய யதார்த்தம்.
Read in : English