Read in : English
ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ திரைப்படம் மீண்டும் வரப் போகிறது. மறுவெளியீட்டுக்காகவே பிரத்யேகமாகப் பின்னணிக் குரல் தரும் பணிகளில் ரஜினிகாந்த் ஈடுபட்டது தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்களில் வலம் வருகின்றன. ரஜினியின் விருப்பத்தின் பேரிலேயே ‘பாபா’ மீண்டும் வெளியாவதாகத் தெரிவித்திருக்கிறார் படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.
இதெல்லாம் சேர்ந்து திடீரென்று அப்படத்தை மறுவெளியீடு செய்யக் காரணம் என்ன, அது எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறும் என்ற கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
ஏற்கெனவே ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’, சிவாஜி கணேசனின் ‘கர்ணன்’, 80’களில் குழந்தைகளைக் கவர்ந்த முப்பரிமாணப் படமான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ உள்ளிட்ட சில படங்கள் தமிழ்நாட்டில் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளன. இந்த படங்களுக்கும் பாபா திரைப்படத்துக்கும் என்ன வேறுபாடு என்று கேட்டால், மேற்சொன்ன அனைத்துமே முதன்முறை வெளியானபோதே பெரிய வெற்றியைப் பெற்றவை என்றுதான் சொல்ல வேண்டும்.
2002ஆம் ஆண்டு இந்திய விடுதலை நாளான ஆகஸ்டு 15 அன்று வெளியாகிப் படுதோல்வியடைந்தது பாபா. அப்போது, ரஜினிகாந்தே அடுத்து என்ன பண்ணுவது எனச் சிறிது தடுமாறித்தான் போனார். விநியோகஸ்தர்களுக்குச் சிறிய அளவிலான பணத்தைத் திரும்பக் கொடுத்தார் என்று செய்திகள் வந்தன. அப்படியான ஒரு படத்தை மீண்டும் என்ன நம்பிக்கையில் வெளியிடுகிறார்கள் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சிவாஜி கணேசனின் ‘கர்ணன்’, முப்பரிமாணப் படமான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’, ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’ உள்ளிட்ட சில படங்கள் தமிழ்நாட்டில் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளன; மேற்சொன்ன அனைத்துமே முதன்முறை வெளியானபோதே பெரிய வெற்றியைப் பெற்றவை
திரையுலக சென்டிமெண்டுகளில் நம்பிக்கை கொண்ட சராசரியான ஒரு மனிதர் தான் ரஜினிகாந்த். ஏவிஎம்மின் பிள்ளையார் கோயிலில் தேங்காய் உடைக்கும் ஷாட்டை முதலில் படம்பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல சென்டிமெண்டுகளை நம்பக்கூடியவர். அவர் மிகவும் பிரியத்துடன் சில விஷயங்களில் ஈடுபடுவார். அது அடுத்தவருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, அவருக்குப் பிடித்துவிட்டால் அதை எப்படியும் செய்து முடித்துவிடுவார்.
தனது நூறாவது படத்தை அவர் அப்படித்தான் உருவாக்கினார். மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரோவாக ஆராதிக்கப்பட்ட எண்பதுகளின் மத்தியில், வர்த்தக வெற்றியை மனதில் கொள்ளாமல் ஆன்மிகம் பேசிய ‘ஸ்ரீராகவேந்திரர்’ திரைப்படத்தைத் தந்தார் ரஜினிகாந்த். அவரது ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான கே.பாலச்சந்தர் அப்படத்தைத் தயாரித்தார்; எஸ்பி முத்துராமன் இயக்கியிருந்தார். ஆனால், ரஜினிகாந்தின் படு ஸ்டைலான நடிப்பை ரசித்த ரசிகர்கள் ஸ்ரீராகவேந்திரரை ரசிக்க இயலாமல் தவித்தனர்.
மேலும் படிக்க: ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி ஸ்டைல்: ரஜினியின் இளமை; ரசிகர்களின் முதுமை!
அதேபோல, ரஜினிகாந்த் முதன்முதலில் ஒரு படத்தைத் தயாரிக்க விரும்பினார். அந்தப் படம் தான், 1986இல் வெளியான ‘மாவீரன்’. அதன் இயக்குநர் ராஜசேகர். ரஜினியின் பல வெற்றிப் படங்களை இயக்கியவர். ரஜினியின் பிரியத்துக்குரியவர்களில் ஒருவரான ராஜசேகர், தர்மதுரை படத்தின் நூறாம் நாளன்று காலமாகிவிட்டார்.
அவர் மறைந்த அன்று, நடிகர் ரஜினிகாந்த் பிரிவைத் தாங்கமாட்டாமல் படப்பிடிப்பையே ரத்து செய்துவிட்டார் எனச் செய்திகள் வந்தன.
‘மாவீரன்’ திரைப்படம் இந்திய விடுதலைப் போர் காலப் பின்னணியில் வெளியான படம். ‘எழுகவே படைகள் எழுகவே’ என்ற புரட்சிகரமான பாடல் அதில் இடம்பெற்றிருந்தது. ஏழை எளியவர்களின் நாயகனாக வேடமேற்றிருந்தார் ரஜினி. பிரபல குத்துச்சண்டை வீரர் தாராசிங் ரஜினிக்குத் தந்தையாகவும், இதில் தாயாகவும் நடித்திருந்தனர். ’பாபா’விலும் கூட சுஜாதா தான் ரஜினியின் தாயாக நடித்தார். ‘மாவீரன்’ பெரிய வெற்றியைப் பெற்றிராத படம்.
அதன்பின்னர் ரஜினிகாந்த் மீண்டும் ஒரு துணிச்சலான முயற்சியுடன் தன்னை வெளிப்படுத்திய படம் ‘வள்ளி’.
‘முள்ளும் மலரும்’ படத்துக்காக இயக்குநர் மகேந்திரன் உருவாக்கிய வள்ளி என்னும் பாத்திரத்தின் நினைவாக அப்படத்துக்கு அப்பெயர் வைத்திருந்தார் ரஜினி. அதன் கதையை எழுதி தயாரித்து கௌரவ வேடத்தில் நடித்தும் இருந்தார். 1993 ஆகஸ்ட் 20 அன்று வெளியான ‘வள்ளி’, மிகவும் பிற்போக்கான கதையம்சம் கொண்டது.
அரசியல்ரீதியில் ரசிகர்களைக் கிளுகிளுக்க வைப்பதற்கான வசனங்கள் இடம்பெற்றிருந்தாலும் கூட படம் படுதோல்வியே!
இந்த வரிசையில், ரஜினிகாந்த் கதை எழுதிய படம் தான் ’பாபா’. படத்துக்கு கோபு – பாபுவுடன் இணைந்து வசனம் எழுதியிருந்தார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். படத்தின் தொடக்கத்தில் எழுத்தாளர்கள் சுஜாதா, பாலகுமாரன் இருவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. சுவாமி தயானந்த சரஸ்வதியின் சீடரான சுவாமி பரமானந்தாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து ‘தெரிஞ்சது கையளவு தெரியாதது உலகளவு’ என்னும் வாசகம் இடம்பெற்றிருந்தது. பின்னரே படம் தொடங்கியது.
பாபாவும் கூட ரஜினியின் ஆன்மிக ஆர்வ வெளிப்பாடே. அதில் ஹீரோயிச காட்சிகள் சகட்டுமேனிக்கு இடம்பெற்றிருந்தன. ரஜினிகாந்த் நடந்து வரும்போது, தரையிலிருந்து நெருப்புத் துகள்கள் பறப்பது போல் எல்லாம் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ரஜினியின் பல பஞ்ச் டயலாக்குகள் படத்தில் இருந்தன. அவற்றில் முக்கியமானது, பாபா முத்திரையுடன் ரஜினி கூறும் ‘கதம் கதம்’ என்பது.
ரஜினியின் பிறந்தநாளன்று ’பாபா’ வெளியாக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்; இதற்கு முன்னர் ‘லிங்கா’ திரைப்படம் தான் அவரது பிறந்தநாளன்று வெளியானது
கதம் கதம் என்பதற்குப் பொருள் ‘கதை முடிந்துவிட்டது’ என்பதுதான். எந்த நேரத்தில் அந்த வசனத்தைத் தேர்ந்தெடுத்தார்களோ தெரியவில்லை; படம் காலை வாரிவிட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரஜினி நடித்த படமே வெளியாகவில்லை. 2005ல் வாசு இயக்கிய ‘சந்திரமுகி’ படம் தான் ரஜினி மீண்டும் வாகைசூட உதவியது.
அப்படியான ஜாதகத்தைக் கொண்ட பாபாவைத் தூசி தட்டியிருக்கிறார்கள். வெறும் தரம் உயர்த்துதலுடன் நிறுத்திக்கொள்ளாமல் சில காட்சிகளை நீக்கி சிலவற்றைச் சேர்த்து ஒரு புதிய தயாரிப்பாக ரசிகர்கள் முன்னர் படைக்க சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். அதிகாலை 4 மணிக் காட்சி திரையிடப்படும் என்கிறார்கள். அந்த முயற்சிகள் எந்த அளவுக்குக் கைகொடுக்கப் போகிறதோ தெரியவில்லை.
கபாலி, காலா, பேட்ட, தர்பார், அண்ணாத்த போன்ற படங்களைவிட பாபா எவ்வளவோ மேல் என ரஜினி தரப்பினர் கருதியிருக்கலாம். ரசிகர்களும் அப்படி நினைத்து பாபாவுக்கு ஆதரவு தந்தால் ரஜினியின் தோல்விப் படங்களுக்கு எல்லாம் ஒரு மறுபிறப்பு கிடைக்கலாம். இதே போல, சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘ஆளவந்தான்’ படத்தையும் புத்தம்புதுப் பொலிவுடன் நேரத்தைக் குறைத்து வெளியிடத் தயாராகி வருகிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.
மேலும் படிக்க: ரஜினியின் அரசியல் வியாபாரம் : தனக்கேயுரிய நடையில் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணி
தெலுங்கில் வெளிவரவிருக்கும் ‘ஹனுமான்’ போன்ற படங்களின் முன்னறிவுப்புகள் இந்துத்துவ சாயல் திரைப்படங்களுக்கான சூழல் கனிந்துள்ளதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்திருக்கின்றன. அண்மையில் வெளியான ‘பிரம்மாஸ்திரா’ படத்திற்குக் கிடைத்த கலவையான வரவேற்பும்கூட அப்படித்தான் இருந்தது. ஆகவே, ‘பாபா’வை மறுபடியும் வெளியிட தோதான நேரம் இது என ஆன்மிக ஆர்வம் கொண்ட ரஜினி தரப்பு நினைத்திருக்கலாம்.
ரஜினியின் பிறந்தநாளன்று ’பாபா’ வெளியாக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். இதற்கு முன்னர் ரஜினி நடித்த ‘லிங்கா’ திரைப்படம்தான் அவரது பிறந்தநாளன்று வெளியானது. அப்படமும் கூட வணிகரீதியாகவோ விமர்சனரீதியாகவோ பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இப்போது, பாபாவை ரஜினியின் பிறந்தநாளன்று வெளியிடப் போகிறார்கள். ரஜினியின் பாபா புதிய சரித்திரம் படைக்குமா, பழைய பாதையிலேயே பயணிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!
Read in : English