Read in : English
கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. பல கல்லூரிகளில் அந்தப் பணிகள் எல்லாம் கவுரவ விரிவுரையாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தங்களது பணி நிரந்தரமாகிவிடும் என்ற நம்பிக்கையில் அவர்கள் அப்பணியைத் தொடர்ந்து வந்தனர்; பலர் நடுத்தர வயதைக் கடந்தவர்கள். இந்த சூழலில்தான், 4,034 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப டிஆர்பி தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருப்பது, கவுரவ விரிவுரையாளர்கள் இடையே அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் பற்றி அறியத் தொடங்கினால், கவுரவ விரிவுரையாளர்கள் பலரது பணி அனுபவங்களும் வருத்தங்களும் வேறொரு சுழலுக்குள் நம்மைத் தள்ளுகின்றன.
4,000 உதவிப் பேராசிரியர்கள் டிஆர்பி தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள். 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். ஆனால், தேர்வு எந்த வகையில் நடத்தப்படும் என்பது குறித்த தெளிவான அறிவிப்போ, அரசாணையோ வெளியிடப்படவில்லை
நிரப்பப்பட்ட பணியிடங்கள்!
10 ஆண்டுகளுக்கு முன்பு எழுத்து தேர்வு இன்றி பணி அனுபவத்தின் அடிப்படையிலும், நேர்காணலை மையப்படுத்தியும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அவ்வாறு நிரப்பும்போது, ஆராய்ச்சி அல்லது ஆய்வுக் கட்டுரை எழுதி இருந்தால் அதற்கு மதிப்பெண், பணி அனுபவம் மற்றும் கல்வித் தகுதிக்கு தனித்தனி மதிப்பெண்கள் அடிப்படையில் உதவிப் பேராசியர் நியமனம் நடத்தப்பட்டது. 2011ம் ஆண்டு வரை நேர்காணலின்போது வழங்கப்படும் 34 மதிப்பெண்களில் 15 மதிப்பெண்கள் அரசுப் பள்ளிகளில் ஏழரை ஆண்டுகள் கவுரவ விரிவுரையாளராகப் பணி செய்தவர்களுக்கு வழங்கப்பட்டன.
நீண்ட நாட்களாகப் பணி நியமனம் செய்யாத நிலையில் 2019ம் ஆண்டு 2,331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, கிட்டத்தட்ட 40,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் கே.பி. அன்பழகன் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது, 2020ம் ஆண்டு 1,146 கவுரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக நியமனம் செய்ய அரசாணை 56 வெளியிடப்பட்டது. அதற்காக 2021ம் ஆண்டு பிப்ரவரி 15 முதல் 18ம் தேதி வரை சென்னையில் சான்றிதழ் சரிபார்க்கும் பணியும் நடைபெற்றது.
மேலும் படிக்க: சப்தமின்றி சாதனை: கல்வி உதவித் தொகையுடன் ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர முதல் தலைமுறை பட்டதாரிகளைக் கைதூக்கி விடும் ஆசிரியர்!
அவர்களனைவரும் நேர்காணலுக்குக் காத்திருந்த நிலையில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது. அதனால் உதவிப் பேராசிரியருக்கான நேர்காணல் கிடப்பில் போடப்பட்டது.
சோர்வில் கவுரவ விரிவுரையாளர்கள்!
தற்போது உள்ள திமுக அரசு 4,000 உதவிப் பேராசிரியர்கள் டிஆர்பி தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது. 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். ஆனால், தேர்வு எந்த வகையில் நடத்தப்படும் என்பது குறித்த தெளிவான அறிவிப்போ, அரசாணையோ வெளியிடப்படவில்லை.

தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ்.எஸ்.ராமஜெயம்
தற்போது அறிவித்துள்ள டி.ஆர்.பி. பொதுப்போட்டி தேர்வை, அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் மட்டுமின்றி, தனியார் கல்லூரி பேராசிரியர்கள் உட்பட அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் ஆகத் தகுதி பெற்றிருக்கும் யார் வேண்டுமானாலும் எழுதலாம்.
தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ்.எஸ்.ராமஜெயம் பேசுகையில்,
“முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்முகத்தேர்வுக்குச் செல்லும்போது, கடந்த 10 ஆண்டுகளாக அரசு கல்லூரிகளில் பணியாற்றிய கவுரவ விரிவுரையாளர்களுக்கு அனுபவத்தின் அடிப்படையில் சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
ஆனால், நாங்கள் நேர்முகத் தேர்வுக்கு செல்லாமல் முதல்நிலை தேர்வுகளிலேயே தடுத்து நிறுத்தப்படுவோம். கடந்த 10 ஆண்டுகளாக எந்த நியமனமும் செய்யாமல் இருப்பதால் குறைந்த ஊதியத்திற்கு வேலை பார்த்து மன உளைச்சலிலும், பொருளாதாரச் சிக்கலிலும் தவித்து வருகிறோம். ஒரு சிலர் 50 வயதைக் கடந்து விட்டதால் அரசு பணியை நிரந்தரம் செய்யும் எனக் காத்திருந்து சோர்ந்து விட்டனர்.
அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளராக இருக்க இளங்கலை, முதுகலை, எம்பில், பி.எச்டி, நெட், செட் என அத்தனை தேர்வுகளை எழுதியுள்ளோம். வாழ்வில் எத்தனை தேர்வுகளை தான் நாங்கள் எதிர்கொள்வது?
அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளராக இருக்க இளங்கலை, முதுகலை, எம்பில், பி.எச்டி, நெட், செட் என அத்தனை தேர்வுகளை எழுதியுள்ளோம். இன்னும் எங்கள் தகுதியைச் சோதிக்க அரசு பொதுப்போட்டித் தேர்வை அறிவித்துள்ளது. வாழ்வில் எத்தனை தேர்வுகளை தான் நாங்கள் எதிர்கொள்வது?” என்று அவர்களது கவலையை வெளிப்படுத்துகிறார்.
கவுரவ விரிவுரையாளராக இருப்பது அவ்வளவு எளிதல்ல என்கின்றனர் இதுநாள்வரை அப்பணியை மேற்கொண்டு வருபவர்கள். ஒவ்வொரு கல்லூரியிலும் நிர்வாக வேலை தொடங்கி மாணவர் சேர்க்கை, வகுப்பு எடுத்தல், தேர்வுப்பணி, விடைத்தாள் திருத்தம் என அனைத்துப் பணிகளும் கவுரவ விரிவுரையாளர்களைக் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன. உதவிப் பேராசிரியருக்கு இணையாக கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்தாலும்கூட, அவர்களுக்கான ஊதியம் குறைவுதான்.
சாதாரணமாக ஒரு உதவிப் பேராசிரியர் ரூ.80,000 ஊதியம் பெறுகிறார் என்றால், கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.20,000 மட்டுமே வழங்கப்படுகிறது.
இது பற்றிப் பேசிய முனைவர் எஸ்.எஸ்.ராமஜெயம், “இந்த உழைப்புச் சுரண்டலைத் தான் எந்த அரசு வந்தாலும் செய்கிறது. நாங்கள் தேர்வுக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் எங்களுக்கான அங்கீகாரம் வேண்டும் என்று தான் கேட்கிறோம். 4,000 பணியிடங்கள் நிரப்ப உள்ளன. அதில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 25% உள் ஒதுக்கீடு வேண்டும். அதன் மூலம் 2,000 கவுரவ விரிவுரையாளர்கள் பணி நியமனம் செய்யப்படலாம். இல்லையென்றால் பொதுப்போட்டி தேர்வு இல்லாமல், கவுரவ விரிவுரையாளர்களுக்குள் போட்டி நடத்தி பணி நியமனம் செய்யலாம்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் படிக்க: சூரிய ஒளி எரிசக்தி: மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக சோலார் பஸ்ஸில் சுயராஜ்ய யாத்ரா!
சலுகைகள் கிடையாது!
2010ம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் மு.கருணாநிதி பதவியில் இருந்தபோது, பி.எச்.டி முடித்து SLED/ NET தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற விரிவுரையாளர்கள் ஓராண்டிற்குள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டது. அதனால் தங்களது பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் கடந்த 10 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்திற்கு கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வந்தனர். யுஜிசி விதியின்படி 2010ம் ஆண்டில் இருந்து ரூ.25,000, 2019ம் ஆண்டில் இருந்து மாதம் ரூ.50,000 கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்பட வேண்டும். ஆனால், ரூ.20,000 மட்டுமே ஊதியமாக வழங்கியதால், கடந்த 12 ஆண்டுகளில் கவுரவ விரிவுரையாளர்களால் அரசுக்கு சுமார் ரூ.1,500 கோடி செலவினம் குறைந்துள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உயர் கல்வி சேர்க்கை அதிகம். அதிலும் 60% மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் கவுரவ விரிவுரையாளர்களால் அதிகரித்து வருகிறது. ஆனாலும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு எந்த அங்கீகாரமும் சலுகையும் கிடைத்ததில்லை.
“கவுரவ விரிவுரையாளராக இருக்கும் எங்களுக்கு எந்த வகையான பணப்பயன்களும் கிடைப்பதில்லை. ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, போக்குவரத்து செலவு, வீட்டு வாடகைப்படி, அகவிலைப்படி, போனஸ், ஊதிய உயர்வு போன்ற எந்தவித சலுகைகளும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு கிடையாது. கடந்த 10 ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளர்களை நவீன கொத்தடிமையாக ஆண்ட அரசும், ஆளும் அரசும் வழி நடத்துகிறது” எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் எஸ்.எஸ்.ராமஜெயம்.
எண்பது சதவீத கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு இருக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மாணவர்களின் வகுப்பறை, ஆய்வுக்கூடங்களில் தான் கவுரவ விரிவுரையாளர்கள் அமர்கின்றனர். பெண் விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுமுறை கூட கிடையாது. ஆண்டுக்கு 11 மாதங்கள் மட்டுமே பணிபுரிவதால் மகப்பேறு விடுமுறை இல்லை என அரசு தரப்பில் விளக்கம் கூறப்படுகிறது.
இவ்வளவு ஏன், கேட்ஷிப் போன்ற ஆராய்ச்சி படிப்புகளைத் தேர்ந்தெடுக்கக் கவுரவ விரிவுரையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் தனியார் கல்லூரிகளில் ஊழல் அதிகரிக்கிறது.
யுஜிசி விதியின்படி 2010ம் ஆண்டில் இருந்து ரூ.25,000, 2019ம் ஆண்டில் இருந்து மாதம் ரூ.50,000 கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்பட வேண்டும். ஆனால், ரூ.20,000 மட்டுமே ஊதியமாக வழங்கியதால், அரசுக்கு சுமார் ரூ.1,500 கோடி செலவினம் குறைந்துள்ளது
“கவுரவ விரிவுரையாளர்கள் சந்திக்கும் இது போன்ற அவமரியாதைகள் தொடர்பாக யுஜிசி அதிகாரிகளையும், மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகளையும், தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகளையும் சந்தித்துப் பலமுறை முறையிட்டோம். ஆனால், எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. ஆளுநரின் கட்டுப்பாட்டில் பல்கலைக்கழகங்கள் இருப்பதால் அவரைச் சந்தித்து முறையிட கடந்த 4 ஆண்டுகளாக முயற்சித்து வருகிறோம். பேக்ஸ், மனு என அனுப்பி வைத்தும், இதுவரை ஆளுநரைச் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை” என்கிறார் அனைத்திந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் சங்கத்தின் தேசியச் செயலாளர் முனைவர் வெ.தங்கராஜ்.
கண்டுகொள்ளாதது ஏன்?
கொரோனா காலகட்டத்தில் 15 கவுரவ விரிவுரையாளர்கள் உரியிழந்துள்ளனர். இதுவரை அவர்களைச் சார்ந்தோருக்கு எந்த ஒரு நிதியுதவியும் கொடுக்கப்படவில்லை. சாதாரணமாக விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கும் அரசுக்கு கவுரவ விரிவுரையாளர்கள் கொரோனாவுக்குப் பலியானது மட்டும் ஏன் கண்ணில் படவில்லை என்பதே கவுரவ விரிவுரையாளர்களின் கேள்வியாக உள்ளது.
ஆசிரியர் தினத்தன்று பஞ்சாப் மாநிலத்தில் கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரப் பணி நியமனம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் 57,000 தற்காலிகப் பணியாளர்களை விரைவில் பணி வரன்முறை செய்ய உள்ளனர்.
“குறைந்த வருவாய் ஈட்டக்கூடிய மாநிலங்கள் எல்லாம் பணி வரன்முறை செய்வதற்கான பணியைத் தொடங்கிவிட்டன. ஆனால் உயர்கல்வி சேர்க்கையில் முதன்மையாக உள்ள தமிழகமோ, தற்காலிகப் பணியாளர்களின் பணி வரன்முறையில் மெத்தனமாக இருப்பது வருத்தமளிக்கிறது. தமிழக அரசோ, மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் கல்வியில் லாபம் பார்க்க விரும்புகிறது.
அரசால் அலைக்கழிக்கப்படும் எங்களின் கோரிக்கை இது தான். கவுரவ விரிவுரையாளர்களுக்கு டி.ஆர்.பி தேர்வில் 50% உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் அல்லது 2020ம் ஆண்டு அறிவிக்கப்பட்டபடி, சிறப்பு ஒதுக்கீடு செய்தவர்களுக்கு பணி வழங்க வேண்டும். அதுவும் முடியாத பட்சத்தில் கடந்த 10ஆண்டுகளாக எங்களுக்கு முறையாகத் தராமல் இருந்த ஊதியத்தை ஒட்டுமொத்தமாக அரசு வழங்க வேண்டும்” என்றார் தங்கராஜ்.
குறைந்த வருவாய் ஈட்டக்கூடிய மாநிலங்கள் எல்லாம் பணி வரன்முறை செய்வதற்கான பணியைத் தொடங்கிவிட்டன. உயர்கல்வி சேர்க்கையில் முதன்மையாக உள்ள தமிழகமோ, தற்காலிகப் பணியாளர்களின் பணி வரன்முறையில் மெத்தனமாக இருப்பது வருத்தமளிக்கிறது
அரசு கலைக்கல்லூரிகளில் ஏறக்குறைய 9,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தாலும், தற்போது 4,000 பணியிடங்கள் மட்டுமே நிரப்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “50 வயதைக் கடந்து பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்களுக்கு அரசு எழுத்து தேர்வு நடத்த உள்ளது. இத்தனை காலம் அரசுக்காக உழைத்த எங்களுக்கு உள் ஒதுக்கீடுகளை செய்வதுடன், பொதுப்போட்டி இல்லாமல் கவுரவ விரிவுரையாளர்களுக்குள் தேர்வை நடத்த வேண்டும்.
அரசின் மாற்றாந்தாய் போக்கு மனப்பான்மை பொருளாதாரச் சிக்கலைத் தருவதுடன், மன உளைச்சலையும் கொடுத்துள்ளது. ஆதலால், வேலைக்கேற்ற ஊதியம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்பட வேண்டும்” என்பதே கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கையாக உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை எதிர்த்து சமூக நீதி கோட்பாட்டைக் கடைப்பிடிக்கத் துடிக்கும் மாநில அரசு, ஆசிரியர்கள் மீது மட்டும் அக்கறை செலுத்தாமல் இருந்துவிடலாகுமோ? கட்சிகள் மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது இந்த விஷயத்திலும் உண்மையாகிவிடுமோ?
Read in : English