Read in : English
கடந்த அக்டோபர் மாதம் சென்னை அசோக்நகரில் பணி நிறைவுறாமலிருந்த ஒரு மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து ஒரு பத்திரிகையாளர் மரணமடைந்தார்; அந்த அவலத்தைத் தொடர்ந்து 100 மழைநீர் வடிகால் பள்ளங்கள் ‘சென்ட்ரிங் ஷீட்களால்’ மூடப்படும் என்று அறிவித்திருக்கிறது பெருநகர சென்னை மாநகராட்சி.
அதற்கு முன்பு, சென்னையில் எத்தனை சதவீதம் புதிய மழைநீர் வடிகால்கள் வேலை முடிந்து தயாராக இருக்கின்றன என்பது பற்றிய தரவுகளை மாநகராட்சி திருத்தியமைத்து விட்டது.
செப்டம்பர் 29 அன்று, மழைநீர் வடிகால் பணிகளில் 95 சதவீதம் முடிந்துவிட்டன என்று மேயர் பிரியா ராஜன் சொன்னதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதே தொனியில், தீபாவளி அன்று மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துவிட்டன அல்லது கிட்டத்தட்ட முடிந்துவிட்டன என்றார் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி; ஆனால், எண்ணிக்கை ஏதும் குறிப்பிடவில்லை.
சென்னை கேகே நகரில் மரம் விழுந்து வங்கி மேலாளர் வாணி கபிலன் இறந்து ஒரு வாரம் கழித்து, கடந்த அக்டோபர் 23 அன்று இரவு மூடப்படாமலும் பணி முழுதாக முடிக்கப்படாமலும் இருந்த ஒரு மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார் சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணண். இந்த மழைநீர் வடிகால் பணி நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த விபத்துக்கள் எழுப்பும் கேள்வி இதுதான்: துரிதகதியில் நடைபெறும் இந்த மழைநீர் வடிகால் பணிகள் பாதுகாப்பாக நிறைவேற்றப்படுகிறதா? ஏனென்றால், மழைநீர் வடிகால் பகுதிகளில் மணலை இளக்கமாக விட்டுவிட்டதின் பக்கவிளைவுதான் மரம்சரிந்த நிகழ்வு என்று பலர் சொல்கின்றனர்.
செப்டம்பர் 29 அன்று, மழைநீர் வடிகால் பணிகளில் 95 சதவீதம் முடிந்துவிட்டன என்று மேயர் பிரியா ராஜன் சொன்னதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதே தொனியில், தீபாவளி அன்று மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துவிட்டன அல்லது கிட்டத்தட்ட முடிந்துவிட்டன என்றார் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி
கவுன்சிலர்கள் கண்காணிக்கிறார்களா?
தமிழ்நாடு தொடர் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உலக வங்கியின் வழிகாட்டுதல் நெறிகள்படி சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டன. இந்தாண்டு மார்ச்சில் பெருநகர சென்னை மாநகராட்சி படுமும்முரமாக டெண்டர்கள் விட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தி.நகரில் ஜி.என்.செட்டி சாலை, பசூல்லா சாலை, கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், கே.கே.நகர் பகுதிகள், அதிகமாக வளர்ந்துவிட்ட புறநகர்ப் பகுதிகள் என்று பல நாட்களாக ஒதுக்கப்பட்டிருந்த இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கத் திட்டமிட்டது நல்ல விசயம்தான்!
2015, 2021 ஆண்டுகளில் மாமூல் வாழ்க்கையை முடமாக்கி முடக்கிய பெருவெள்ளங்களில் பாடம் கற்றுக் கொண்ட சென்னையில் தொடங்கப்பட்டிருக்கும் ஆகப்பெரிய குடிமைப்பணி திட்டங்களில் ஒன்று மழைநீர் வடிகால் திட்டம். ஆதலால் குடிமக்களின் உடனடியான முதல் தொடர்பான கவுன்சிலர்கள் இந்தத் திட்டத்திற்கு மிகப்பெரிய ஆதரவை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் கவுன்சிலர்களின் பெயர்கள், அவர்களின் தொலைபேசி எண்கள் காணப்படவில்லை. வார்டு குழுக்களின் தலைவர்கள் பற்றிய தகவல்களும் கிடைக்கவில்லை.
மேலும் படிக்க: சென்னை வெள்ளம்: நிபுணர் குழு பரிந்துரைத்த வெளிப்படைத்தன்மை அரசின் செயற்பாட்டில் இருக்கிறதா?
மழைநீர் வடிகால் பணிகளைப் பற்றிய புகார்களை அடிமட்டத்திலிருந்து கவுன்சிலர்கள் மூலம் மாநகராட்சி பெற்று ஆய்வு செய்து ஆவன செய்திருந்தால் இந்தத் திட்டம் பற்றிய முழுத் தகவல் சித்திரம் ரிப்பன் கட்டிடத்தில் கிடைத்திருக்கும்.
செப்டம்பர் மாத முடிவில் ஐ.டி. காரிடர் உட்பட சில தென்சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களின் மனப்பூர்வமான ஈடுபாடு தென்படவில்லை.
செப்டம்பர் 29 அன்று நடந்த பெருநகர சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் சில கவுன்சிலர்கள் மழைநீர் வடிகால் பணிகளின் மந்தகதியால் ஏற்படும் இடையூறுகளைப் பற்றிப் பேசினர்; பணிகள் மெதுவாக நடக்கின்றன என்று பலர் புகார் தெரிவித்தனர். ஆனால் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குடிமை நிர்வாகத்தின் பல அம்சங்களைப் பற்றியவை. பள்ளிகளை மீளுருவாக்கம் செய்தல், கழிப்பறைகள், கடைகள் ஒதுக்குதல் போன்ற விசயங்கள் தீர்மானங்களில் இடம்பெற்றன. மழைநீர் வடிகால் பற்றிய பிரதானமான தீர்மானம் ஒன்று ஜி.என்.செட்டி சாலை (மண்டலம் 9, அலகு-26, பிரிவு 117) மழைநீர் வடிகால் பணிகளுக்காக மறு நிதி ஒதுக்கீட்டைப் பற்றியது. சீதாம்மாள் காலனிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியிலிருந்து ‘25 சதவீத மிகைநிதி’ (ரூ.7.53 கோடி) ஜி.என்.செட்டி மழைநீர் வடிகால் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ”முன்பிருந்த வடிகால்வாயின் உச்சிப் பகுதியை நீக்கி தூர் எடுக்கும் பணி”யை போசன் இன்ஃப்ராஸ்ரக்ட்சர் என்னும் நிறுவனம் ஏலம் கேட்டு எடுத்து அந்தப் பணிக்காக ரூ. 2.71 கோடி பெற்றது.
என்றாலும் அந்தப் பகுதியில் செங்கல் வடிகால்வாய் மிகப் பலகீனமாகிவிட்டதால் அந்த வடிகாலை மீண்டும் கட்டி மேம்படுத்த வேண்டிதாயிற்று என்று மாநகராட்சி சொல்கிறது. அடைப்பு மிக்க வடிகால்களைத் தூர் எடுத்து சுத்தம் செய்யும் செலவும், அடைப்பைக் குறைக்க வேண்டிய தேவையும் இதன்மூலம் தெளிவாகின்றன.
மூடப்படாத மழைநீர் வடிகால் பள்ளங்களைப் பற்றி புகார் தெரிக்க தோதாக மாநகராட்சியின் அதிகாரப்பூர்வமான செயலியை மேம்படுத்த வேண்டும். மழைநீர் வடிகால் பணிகளின் நிலையைச் சுயாதீனமாக மதிப்பீடு செய்ய இதுவோர் துரிதமுறையாகும்
எதிர்கால அபாயத்தைக் கண்காணித்தல்
ஒவ்வொரு மழைநீர் வடிகால் பணியும் தணிக்கை செய்யப்படவில்லையென்றால் அத்திட்டம் மெதுவாகத்தான் நகரும். மழைநீர் வடிகால் பணிகளை மதிப்பீடு செய்யப் பல வழிகள் இருக்கின்றன. குறிப்பாக மாநகராட்சி ஊழியர்களையும், பெருநகர சென்னைப் போக்குவரத்துக் காவல்துறை உட்பட பல்வேறு துறை ஊழியர்களையும் இந்தப் பணியில் ஈடுபடுத்தலாம். உயிரைக் காவுகொள்ளும் வண்ணம் துருத்திக் கொண்டிருக்கும் இரும்புக் கம்பிகள் பதிக்கப்பட்ட முற்றுப்பெறாத ஆபத்தான மழைநீர் வடிகால் பள்ளங்களைப் பற்றி ஆய்வு செய்யச் சொல்லலாம். அந்த இரும்புக் கம்பிகள்தான் பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணனின் உயிரைப் பலி வாங்கின.
மூடப்படாத மழைநீர் வடிகால் பள்ளங்களைப் பற்றி புகார் தெரிக்க தோதாக மாநகராட்சியின் அதிகாரப்பூர்வமான செயலியை மேம்படுத்த வேண்டும். மழைநீர் வடிகால் பணிகளின் நிலையைச் சுயாதீனமாக மதிப்பீடு செய்ய இதுவோர் துரிதமுறையாகும். ஏனெனில் இதன் மூலம் தொகுக்கப்படும் தரவுகள் தரமாகவும் முழுவடிவிலும் இருக்கும்.
மேலும் படிக்க: சென்னை மழை வெள்ளம்: 1976ஆம் ஆண்டு அறிக்கைப் பரிந்துரைகள் எப்போது நிறைவேறும்?
சென்னையில் வெள்ளத்தைத் தடுக்க வழிமுறைகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிவுரை தருவதற்கு உருவாக்கப்பட்ட திருப்புகழ் குழு நேரடியாக குடிமக்களிடமிருந்து புகார்களைப் பெறுவதில்லை. பொதுமக்கள் தரும் புகார்கள் அடிப்படையில் அரசும் மாநகராட்சியும் எழுப்பும் வேண்டுகோள்களுக்கு மட்டுமே திருப்புகழ் குழு எதிர்வினையாற்றுகிறது. எதிர்வினைகளை, விளைவுகளைப் பதிவு செய்யும் ஒரு கட்டமைப்பின் முக்கியத்துவம் இதன்மூலம் புரிகிறது. சமீபத்தில் கொள்கை விவாதக் கூட்டம் ஒன்று சென்னையில் நடந்தது. அதில் அறப்போர் இயக்கம் என்னும் ஊழலுக்கு எதிரான ஓர் அரசுசாரா நிறுவனத்திற்கு இந்த விளக்கம் கொடுக்கப்பட்டது.
சீதாம்மாள் காலனி, தியாகராய நகர், பசூல்லா சாலை, ஜி.என்.செட்டி சாலை, அசோக் நகர், ஆற்காடு சாலை, ரங்கராஜபுரம், மாம்பலம், விருகம்பாக்கம், அம்பேத்கார் கல்லூரி சாலை, புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டன என்று சமீபத்திய உரையாடல் ஒன்றில் ககன்தீப் சிங் பேடி கூறியதாகச் சொல்லப்படுகிறது. இந்த பகுதிகளிலுள்ள குடிமக்கள் இந்தப் பணிகளின் நிலை, தரம் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப் பதிவு செய்யலாம்.
முடிக்கப்படாத மழைநீர் வடிகால்பள்ளங்கள் அடைக்கப்படும் என்ற வாக்குறுதியைப் பெருநகர சென்னை மாநகராட்சி காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால், இரும்புக் கம்பிகள் நிறைந்த திறந்தவெளி மழைநீர் வடிகால் பள்ளங்கள் மழைநீர் வெள்ளத்தால் நிரம்பும்போது அவற்றில் விழுந்து உயிரிழக்கும் அபாயங்களும் அதிகமாகவே இருக்கும், முத்துகிருஷ்ணண் உயிரைப் பறித்த அபாயம் போல.
அலட்சியமும் அசட்டையும் மோசமான விளைவுகளை உருவாக்கும் என்று மக்கள் எச்சரித்திருக்கிறார்கள். அதிகார வர்க்க அலட்சியத்தின் முதல்பலி பதிவு செய்யப்பட்டுவிட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியையும் மற்ற முகமைகளையும் விரைந்து செயல்பட வைக்க வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டிருக்கிறது.
Read in : English