Read in : English

2021-ல்நிகழ்ந்த கொடுமையான சென்னை வெள்ளத்தை ஆராய்ந்து நிரந்தரமான தீர்வுகளைக் கொடுக்கும் பணியை முன்னாள் அதிகாரி வி. திருப்புகழிடம் திமுக அரசு ஒப்படைத்தது. ஆனால் அதற்கு முன்பே 2015-ல் ஓர் ஊழி வெள்ளம் சென்னையில் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆகச்சிறந்த செயற்பாடுகளை ஆராய்வதற்கு  ஒன்றிய அரசின் தேசிய இடர் மேலாண்மை ஆணையத்தின்  சார்பாக திருப்புகழ்   ஓர் ஆய்வை நடத்தினார்.

இயற்கை இடர்களைத் தமிழக அரசு  எதிர்கொள்வதற்கான முக்கிய நடவடிக்கைகளை திருப்புகழ் குழு அந்த நேரத்தில் பரிந்துரைத்தது. அவற்றில் இருந்த மையக்கொள்கை  வெளிப்படைத்தன்மை. ”சிறந்த செயற்பாடுகளை ஆவணப்படுத்தி அவற்றை பொதுவெளியில் பகிர்ந்துகொள்ள வேண்டும்,” என்று குழு பரிந்துரைத்தது. ”அப்போதுதான் சென்னை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு அபாயங்களைக் குறைக்க மற்ற மாநிலங்கள் கற்றுக்கொள்ளும். மேலும் மற்ற நாடுகளுக்கும், குறிப்பாக வளர்ந்துவரும் ஆசிய நாடுகளுக்கு, வெள்ள அழிவைச் சரிசெய்து புனருத்தாரண முயற்சிகள் எடுக்க இது பெரிதும் உதவும்,” என்று குழு சொன்னது.  ஆனால் இதிலிருந்து சென்னையும், தமிழ்நாடும் என்ன கற்றுக்கொண்டது?

2021 வடகிழக்குப் பருவகாலத்தில் தமிழ்நாட்டின் வெள்ளப்பகுதிகளைப் பார்வையிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் திருப்புகழ் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் எதிர்பார்க்கக்கூடிய சில திட்டங்களை, நடவடிக்கைகளை அறிவிப்பார் என்று எதிர்பாரக்கப்படுவது ஆச்சரியமில்லை. சென்னைப் பெருநகர மாநகராட்சி உட்பட அரசு முகமைகளோடு ஜூன் 24 அன்று முதல்வர் பருவகாலத் தயார்நிலையை ஆய்வு செய்தார்.

மேலும் படிக்க:

புவியியல் ரீதியாகவும் சூழலியல் ரீதியாகவும் சென்னையில் என்ன திட்டமிடல் தேவை?

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு: சென்னையில் காடுகளை மீட்டெடுக்கும் திட்டம்

வடிகால்களும் ஒரு மரணமும்
பருவகால முன்னோட்டம் தற்போது ஆபத்தோடு ஆரம்பித்திருக்கிறது. இது கடவுளின் செயலாக இருக்கலாம்; அல்லது சென்னை மாநகராட்சியின் ஒப்பந்ததாரர்களின் கவனக்குறைவாக இருக்கலாம். ஜூன் 24 அன்று சென்னை கேகே நகரில் மரமொன்று ஒரு கார்மீது விழுந்ததில் வங்கி மேலாளர் ஒருவர் இறந்திருக்கிறார்.

சென்னையின் அனைத்துப் பகுதிகளைப் போலவே கேகே நகரிலும் சாலைகள் பைபாஸ் சர்ஜரி செய்துகொண்ட நோயாளியின் இதயத்தைப் போல  வெட்டப்பட்டுக் கிடக்கின்றன. பருவகாலக் கெடு முடிவதற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்ற வேகம் ஒப்பந்ததாரர்களிடம் இருப்பது போலத் தெரியவில்லை. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பச் செம்மை கொண்ட கான்கிரீட் கிடைக்கிறது. ஒரு முழு மருத்துவமனையை ஒரே வாரத்தில் சீனாவால் கட்ட முடியும். ஆனால் இங்கே அதற்கான ஆர்வமும் வேகமும் இல்லை.

கழிவுநீர் வடிகால் ஒப்பந்தங்களில் சிலவற்றின் பணிகள் 2022 நவம்பரில் முடிய வேண்டும். ஆனால் அதற்குள் பருவமழை சென்னையை ஒருவழியாக்கிவிடும். அதற்கான முன்னோட்ட எச்சரிக்கைகள் ஏற்கனவே வந்துவிட்டன. ஜூன் 1 முதல் 25 வரையிலான பெய்த மழையின் அளவு 166.2 மிமீ (ஐஎம்டி தரவின்படி). இது வழக்கமான 52.9 மிமீ அளவிலிருந்து 214 விழுக்காடு அதிகம்.

திருப்புகழ் குழு தேசிய இடர்  மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கிய பரிந்துரைகளில் மிகப்பெரிய ஒன்று, இடர்களை எதிர்கொள்ளும் தயார்நிலையில் வெளிப்படையானதோர் ஆட்சிமுறையை கைகொள்ள வேண்டும் என்பதே. ஆனால் திமுக அரசு ஏற்பாடு செய்திருந்த திருப்புகழ் குழுவின் அறிக்கை ஏப்ரலில் வந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அது பொதுவெளிக்கு வரவே இல்லை. அவசரகால வடிகால் கட்டமைப்பை உருவாக்கவும், அதுசம்பந்தமாக ரூ. 900 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை வழங்கவும் உதவிய இடைக்கால அறிக்கை கூட இணையத்தில் தென்படவில்லை.

  இயற்கை இடர்களைத் தமிழக அரசு எதிர்கொள்வதற்கான முக்கிய நடவடிக்கைகளை திருப்புகழ் குழு பரிந்துரைத்தது.

2015 கற்றுத்தரும் பாடங்கள் என்ன?
தற்போது இருக்கும் சென்னையின் உட்கட்டமைப்பைப் பயன்படுத்தி கழிவுநீரை அகற்றலாம் என்று தேசிய இடர்  மேலாண்மை ஆணையத்தின் திருப்புகழ் குழு முன்பு சொன்னது. அதற்குப் பருவகாலம் வருவதற்கு முன்பே வடிகால் அமைப்புகளைச் சுத்தப்படுத்துவதையும், பேணிக்காப்பதையும் குழு வற்புறுத்தியது. ஆனால் சென்னையில் வடிகால் குழாய்கள் இறுகிப்போய்க் கிடந்ததை 2021 நவம்பர், டிசம்பர் காலத்து வெள்ளம் காட்டிக்கொடுத்தது. 2015-ன் ஊழிவெள்ளத்திற்குப் பின்பு ஆறாண்டு ஆட்சிக்கட்டிலில் இருந்த அஇஅதிமுக இவற்றைக் கண்டுகொள்ளவே இல்லை.

2022 மார்ச் நிலவரப்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருக்கும் மொத்தம் 1,644 நீர்த்தேக்கங்களில் 899 தேக்கங்களில் ஆக்ரமிப்புகள் அகற்றுப்பட்டுவிட்டன; மேலும் மற்றவர்களுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. இவை நீர்வளத்துறையின் சமீபத்து தரவுகள்.

ஆனால் பின்வரும் கேள்விகளுக்கு விடைகள் இருக்கிறதா?

  • சென்னையிலுள்ள எல்லா வடிகால் கால்வாய்களிலும் நீர்நிலைகளிலும் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டனவா?
  • தி.நகர், கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், கேகே நகர் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட 2021 வெள்ளத்திற்குக் காரணமாகச் சொல்லப்பட்ட ஸ்மார் சிட்டி பணிகள் உண்டாக்கிய தடைகள் நீக்கப்பட்டனவா?
  • சென்னையின் பெரும்பாலான பகுதிகள் கடல்மட்டத்தில் இருப்பதால், அதிலும் சில பகுதிகள் கடல்மட்டத்திற்குக் கீழாக இருப்பதால், கால்வாய்களிலும், நதிகளிலும் வடிநீர் செல்வதற்கு ஏதுவான கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றனவா?
  • ”2015-ன் ஊழிவெள்ளத்திலிருந்து கற்ற பாடங்களின் அடிப்படையில் சென்னைக்கான மாஸ்டர் பிளான்-2030 உருவாகிக் கொண்டிருக்கிறது” என்று தேசிய இடர்  மேலாண்மை ஆணையத்தின் திருப்புகழ் குழு சொல்கிறது. ஆனால் சிஎம்டிஏ இணையதளத்தில் காணக்கிடைப்பது இரண்டாவது மாஸ்டர் பிளான்-2026 மட்டுமே. அதில் சென்னைப் பெருநகரப் பகுதியின் பெரும் வடிகால் அமைப்புப் பிரிவில் இருக்கும் அறிக்கை ஆரம்பகாலத்துப் பரிந்துரைகளையே சொல்கிறது. ஆனால் 2015 பேரிடர்க்குப் பின்பான எந்தவொரு ஆய்வுக்கருத்தும் அதில் இல்லை.

  ஜூன் 24 அன்று சென்னை கேகே நகரில் மரமொன்று ஒரு கார்மீது விழுந்ததில் வங்கி மேலாளர் ஒருவர் இறந்திருக்கிறார்.

சென்னை மாநகர எல்லையிலும், சென்னைப் பெருநகர எல்லையிலும் ஓடும் நீர்நிலைகளின் நீளத்தை மட்டுமே அந்த அறிக்கை எடுத்துரைக்கிறது. மற்ற நீர்நிலைகளைக் காட்டிலும் கூவம் மட்டுமே வெள்ளத்தைக் கடத்திச் செல்லும் வலிமையைக் கொண்டிருக்கும் சாத்தியம் இருக்கிறது. மற்ற நீர்நிலைகளுக்கு ஒரு விரிவான வடிகால் கட்டமைப்பு வேண்டும்.

பின்வருவன சென்னை மாநகர எல்லையிலும், சென்னைப் பெருநகர    எல்லையிலும் ஓடும் நீர்நிலைகளின் மதிப்பிடப்பட்ட நீளங்கள், கிலோமீட்டரில் (பொதுப்பணித்துறையின் தரவுகள்):

இப்போதைய முக்கிய கேள்விகள் இவைதான்: தற்போது கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் விரிவான,  விலையுயர்ந்த வடிகால் கட்டமைப்பு இந்த நீர்நிலைகளோடு இணைக்கப்படுகிறதா? வானிலை இடர்காலங்களில் அந்தக் கட்டமைப்பால் ஆகப்பெரிய வெள்ளத்தைக் கடத்திச் செல்ல முடியுமா?

சென்னை நீர்நிலைகளில் சகதி தேங்குவது 1994-ல் புற ஆலோசனை ஆய்வுகளின் மூலம் ஆராயப்பட்டது. செவர்ன் டெரெண்ட்  என்ற நிறுவனம் சென்னை நீர்நிலைகளை மேம்படுத்துவது பற்றி ஓர் ஆய்வு நடத்தி 1991-ல் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது.

மேலும், சென்னை மெட்ரோவாட்டர் மற்றுமொரு விலையுயர்ந்த திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. கூவம் நதி, அடையார் நதி,  பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நுல்லா, கேப்டன் காட்டன் கால்வாய், மாம்பலம் வடிகால் ஆகியவற்றைப் பேணிக்காக்கும் இலக்கைக் கொண்டிருப்பது அந்தத் திட்டம். ஒன்றிய அரசின் தேசிய நதி பாதுகாப்பு இயக்குநரகத்தின் ஆதரவோடு இயங்கும் திட்டம் அது. ரூ. 382.24 கோடி மதிப்புள்ள பணிகள், 2001-03 காலகட்டத்தில் 16 பகுதிகளாக முடிக்கப்பட்டன என்று மெட்ரோவாட்டர் இணையதளம் தெரிவிக்கிறது. அந்தத் தொகையில் மிச்சப்பட்ட ரூ. 22 கோடி கழிவுநீர் வசதிகளை விரிவாக்கம் செய்யப் பயன்படுத்தப்பட்டது.

வெளிப்படையான ஆட்சி தருவோம் என்று திமுக கொடுத்திருந்த தேர்தல் வாக்குறுதிப்படி, அரசு இந்தப் பிரச்சினை சம்பந்தமாக பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவது அவசியம்.

இதெல்லாம் சரி. 2021-ல் பெய்த பருவமழை பிரச்சினையை ஏற்படுத்தியது ஏன்?   மேம்படுத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட  நீர்நிலைகள் மிகையான வெள்ளநீரை உள்வாங்கிக் கொள்ளவில்லையே! ஏன்? அந்த நீர்நிலைகளில் புதிதாக நீர்த்தடைகள், ஆக்ரமிப்புகள் அதற்குள் முளைத்து விட்டனவா? இந்த வினாக்களுக்கான விடைகள் ஒருவேளை 2021-க்கான திருப்புகழ் குழுவின் அறிக்கையில் இருக்கலாம்.

வெளிப்படையான ஆட்சி தருவோம் என்று திமுக கொடுத்திருந்த தேர்தல் வாக்குறுதிப்படி, அரசு இந்தப் பிரச்சினை சம்பந்தமாக பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவது அவசியம். வரப்போகும் பருவகாலத்தை எதிர்கொள்ளும் நோக்குடன் ஒரு தயார்நிலையை உருவாக்கும் முகமாக, அரசு சம்பந்தப்பட்ட அனைவரோடும் ஓர் உரையாடல் நிகழ்த்த வேண்டும்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival