Read in : English
கடந்த சில ஆண்டுகளாக வடகிழக்குப் பருவமழையால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு அரசு தரும் நிவாரணங்களை எதிர்பார்த்து நிற்கும் அவலம் நிகழ்கிறது. உலகத்திற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த நீர் மேலாண்மைக் கட்டமைப்புகளை உருவாக்கியதில் தமிழ்நாட்டிற்கென்று ஒரு பாரம்பரியம் உண்டு.
ஆதிகாலம் தொட்டு ஓடைகளில் அல்லது நதிகளில் வரிசையாகத் தொட்டிகள் கட்டி நீரைச் சேமித்துப் பயன்படுத்தினர் மக்கள். சுதந்திரத்திற்குப் பின்பு, அதிகமான அளவுக்கு நகர்ப்புறமயமான மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இங்கு சுமார் 54 சதவீதம் மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். அதற்கேற்றவாறு நகர்ப்புறங்களில் அடிப்படை வசதிகள் இல்லை.
மக்கள்தொகை வடிவமைப்பு மாற்றத்தின் காரணமாக முதன்முதலில் தமிழகம் மாநில நீர்க்கொள்கையை 1994-ல் உருவாக்கியtது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் போன்ற கண்காணிப்பு அமைப்புகள் உருவாயின.
ஆயினும் இந்த விசயத்தில் அரசின் கொள்கைத் தீவிரம் காலஞ்செல்ல செல்ல குறைந்து போனது. உள்ளுர் மக்களின் பொறுப்புணர்வும் கடமையுணர்வும் தேய்ந்து போயின. அதனால் கழிவுநீர் சுத்திகரிப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் காலாவதியான பின்பும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டன.
அரசின் கொள்கைத் தீவிரம் காலஞ்செல்ல செல்ல குறைந்து போனது. உள்ளுர் மக்களின் பொறுப்புணர்வும் கடமையுணர்வும் தேய்ந்து போயின. அதனால் கழிவுநீர் சுத்திகரிப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் காலாவதியான பின்பும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டன
குறைந்தளவில் சுத்திகரிப்பு
·’கழிவு சுத்திகரிப்பு ஆலைகளின் தேசிய பட்டியல்-2021′ என்ற ’தேசிய மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கைப்படி, தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் 6,421 எம்எல்டி (Million Litre per Day) கழிவுநீர் உற்பத்தியாகிறது. ஆனால், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் மொத்த திறன் வெறும் 1,492 எம்எல்டி தான் (23 சதவீதம்).
· மேலும், இக்கழிவுநீரில் 995 எம்எல்டி (15 சதவீதம்) காலாவதியான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் ஆலைகளில் சுத்திகரிக்கப்படுகிறது. அதனால் தீயவிளைவுகளை உருவாக்கும் பல கழிவுகள் நிராகரிக்கப்படுகின்றன.
· இந்தியாவில் வெறும் 28 சதவீதம் கழிவுநீர் மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது.
· ஸ்வச்தா நிலைமை அறிக்கை 2016-ன் படி, தமிழகத்தில் 46.3 சதவீத கிராமங்கள் கழிவுநீரை திறந்தவெளிகளில் கொட்டுகின்றன. 23.4 சதவீத கிராமங்கள் குளங்களில் கொட்டுகின்றன; 18 சதவீத கிராமங்கள் திறந்தவெளி வடிகால்களிலும் (ஓடைகள்), 7.3 சதவீத கிராமங்கள் நதிகளிலும், 4.6 சதவீதக் கிராமங்கள் மற்ற முறைகளிலும் கழிவுநீரைக் கொட்டுகின்றன.
· தேசிய அளவிலான நிலைமையோ இன்னும் மோசம். இந்தியாவில் 44.4 சதவீத கழிவு திறந்தவெளிகளிலும், 15.8 சதவீதம் குளங்களிலும், 24 சதவீதம் வடிகால்களிலும், 6.8 சதவீதம் நதிகளிலும் 9 சதவீதம் மற்ற வழிகளிலும் கொட்டப்படுகின்றன.
மேலும் படிக்க: பயோமைனிங்க் திட்டத்தால் குப்பை ஒழியுமா?
தொழில்மயமான, நகர்ப்புறமயமான தமிழ்நாட்டில் பாரம்பரிய கழிவுநீர்த் தொட்டிகளிலிருந்து (செப்டிக் டாங்க்ஸ்) வெளியேற்றப்படும் கழிவுநீர் திறந்தவெளி வடிகால்களிலும் சாலைகளிலும் திறந்தவெளி மைதானங்களிலும் கொட்டப்படுகிறது. அதனால் நிலத்தடிநீர், நதிகள், ஓடைகள் எல்லாம் மாசுபட்டு சுகாதாரம் கெட்டு வயிற்றுப்போக்கு, காலரா, டைஃபாயிடு போன்ற நோய்கள் உருவாகின்றன.
பல்வேறு அரசுசாரா தொண்டுநிறுவனங்கள், பஞ்சாயத்துகள், கல்வி நிறுவனங்கள் போன்ற அமைப்புகள் கொடுத்த குரல்களின் எதிரொலியாக தமிழகத்தில் அவ்வப்போது சில கொள்கைகள் உருவாகின்றன. தமிழ்நாடு கழிவுநீர் மேலாண்மை இயங்கு வழிகாட்டு நெறிமுறைகள் 2014 என்ற விரிவான கொள்கையை உருவாக்கி இந்தியாவில் முதல் மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்தது.
ஒன்றிய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ’மலக்கழிவு மற்றும் கழிவுநீர் மேலாண்மை தேசியக் கொள்கை-2017’-ன் முக்கிய சாராம்சங்களை உள்வாங்கி, தமிழகத்தின் நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர்வழங்கல் துறை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ’கழிவுநீர் மேலாண்மை இயங்கு வழிகாட்டு நெறிமுறைகள்-2020’ என்ற புதிய வழிகாட்டுதல் விதிகளை நிர்ணயித்தது. சரியான விஞ்ஞான முறையைக் கடைப்பிடிக்காமல் கழிவுநீரைக் கண்ட இடங்களில் கொட்டுவதைக் குற்றமாக்கி அதற்கு அபராதங்கள் விதித்தன அந்த விதிமுறைகள்.
‘நகர்ப்புறங்களில் மலக்கழிவு மற்றும் கழிவுநீர் மேலாண்மை: சேவை மற்றும் தொழில் மாதிரிகள்-2021’ என்ற நிதி ஆயோக்கின் அறிக்கையில் பின்வரும் அம்சங்கள் இருக்கின்றன:
· தமிழகத்தின் நகர்ப்புறங்களில் 70 சதவீத வீடுகள் கழிவுநீர்த் தொட்டி, குழிகள் போன்ற கள சுகாதார அமைப்புகளையே சார்ந்திருக்கின்றன (தேசிய மாதிரி சாம்பிள் ஆய்வு நிறுவனத்தின் (என்எஸ்எஸ்ஓ) 2017ஆம் ஆண்டு ஆய்வு அறிக்கை).
· அந்த கள சுகாதார அமைப்புகள் பெரும்பாலும் தரமற்ற, காலாவதியான முறைகளிலே கட்டப்பட்டிருக்கின்றன என்று என்எஸ்எஸ்ஓ ஆய்வு சொல்கிறது.
· நிதி ஆயோக் அறிக்கையும் அந்த கள சுகாதார அமைப்புகளில் இருக்கும் பல்வேறு குறைகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறது. தரமற்ற கட்டுமானம், இயக்கம், பராமரிப்புக் குறைபாடுகள், இடம் மற்றும் பணப்பற்றாக்குறையால் தரவிதிகளைக் கடைப்பிடிக்காமல் இருந்தது, தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைப்புத் தரங்களை மேம்படுத்தாமல் இருந்தது ஆகிய குறைபாடுகளை நிதி ஆயோக் அறிக்கை சுட்டிக் காட்டியது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) கொண்டுவந்த நுண்ணுயிரி கரைப்பு கழிவுநீர்த் தொட்டித் தொழில்நுட்பம், 1992-97 காலகட்டத்தில் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் டிஆர்டிஓ தலைவராகப் பதவி வகித்தபோது அவரின் தூண்டுதலால் உருவானது
கட்டுப்பாடற்ற கழிவுநீர் அகற்றல் முறைகள்
தமிழகத்தில் நகர்ப்புறப் பகுதிகளில் மலக்கழிவை நீக்கும் தொழிலில் இயங்குபவர்கள் (கழிவுநீர்த் தொட்டி லாரிகள்) 9,000-க்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர். இறுதியில் அந்தக் கழிவுநீர் எங்கே எப்படிக் கொட்டப்பட்டு அகற்றப்படுகிறது என்பதற்கான விதிமுறைகள் இல்லை. இதற்கு ஒரே தீர்வு இந்த லாரிகளில் ஜிபிஎஸ் கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தி கழிவுகள் எங்கே, எவ்வாறு அகற்றப்படுகின்றன என்பதை உள்ளாட்சி அமைப்புகள் அவதானிக்கலாம்.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர்வழங்கல் துறை, 01.09.2014 தேதியிட்ட ஓர் அரசாணையை (எண்.106) எல்லா உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வெளியிட்டது. ’நகர்ப்புற, கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கான கழிவுநீர் மேலாண்மை இயங்கு வழிகாட்டு நெறிமுறைகள்–2014’ சம்பந்தமான விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்று அந்த அரசாணை சொன்னது.
அதன் பின்னர் 2020-ல் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளிவந்தன. மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் அரசாணையில் சொல்லப்பட்ட விதிகளை மீறும் உரிமையாளர்களுக்கும், தொழில்முறை செயற்பாட்டாளர்களுக்கும் விசாரணை செய்து அபராதங்கள் விதிக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டது.
மேலும் படிக்க: வனத்துறை: பள்ளிக்கரணையில் ஆண்டுக்கு ரூ.217 கோடி வருமான இழப்பு
உரிமையாளர்கள் முதன்முதலாக விதிமீறினால் அவர்களுக்கு ரூ. 5,000மும், மேலும் தவறு செய்தால் ரூ.25,000 வரைக்கும் அபராதம் விதிக்கலாம் என்ற அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கொடுக்கப்பட்டது. அதேபோல், தொழில்முறை செயற்பாட்டாளர்கள் விதிமீறிச் செயற்பட்டால் ரூ. 50,000மும், தொடர் தவறுகளுக்கு ரூ.2 இலட்சம் வரையிலும் அபராதம் வசூலிக்கலாம் என்றும் அவர்களது உரிமத்தை ரத்து செய்யலாம் என்றும் அரசாணை கூறியது.
ஆயினும் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. அதன் விளைவாக நகர்ப்புறங்களில் காற்றும் நீரும் மாசுபட்டன. நகர்ப்புறப் புரட்சியில் ஒரங்கம் வகிக்க ஆசைப்பட்ட மக்களால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை வற்புறுத்தி தங்களுக்கான அடிப்படை வசதிகளைப் பெற முடியவில்லை.
கழிவுநீர் மேலாண்மையிலும் பாரம்பரிய கழிவுநீர்த் தொட்டிகளிலும் மாற்றுத் தீர்வுகளை நவீன உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள் மூலம் கண்டுபிடிக்க வேண்டிய அவசியத்தை எல்லோரையும் உணரச் செய்ய வேண்டும்.
சுத்திகரிப்பில் கலாமின் தாக்கம்!
இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களில் ஒன்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) கொண்டுவந்த நுண்ணுயிரி கரைப்பு கழிவுநீர்த் தொட்டித் தொழில்நுட்பம். 1992-97 காலகட்டத்தில் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் டிஆர்டிஓ தலைவராகப் பதவி வகித்தபோது அவரின் தூண்டுதலால் உருவான தொழில்நுட்பம் இது. 1997-ல் இந்தத் தொழில்நுட்பம் அந்த நிறுவனத்தின் டில்லி பவனில் முதன்முதலில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டது. பின்பு இது பாதுகாப்புத் துறையிலும் ரயில்வேயிலும் பயன்படுத்தப்பட்டது.
அதன் பல்வேறு நன்மைகள் பின்வருமாறு:
· பிராணவாயு (ஆக்சிஜன்) இல்லாத முறையில் டிஆர்டிஓவின் நுண்ணுயிரி கரைப்பு கழிவுநீர்த் தொட்டி செயல்படுகிறது. இதனால் கழிப்பறைக் கழிவுநீர் தரைக்கடியில் கரைக்கப்பட்டு சுத்தமான நீர் உருவாகி அது தோட்டங்களுக்குப் பயன்படும்; நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
· நுண்ணுயிரி கரைப்பு கழிவுநீர்த் தொட்டி இனோகியுலம் என்றழைக்கப்படும் கரிம பாக்டீரியாவுடன் (மாட்டுச் சாணம்) இயங்குகிறது. கழிப்பறைக் கழிவுநீரில் இருக்கும் நோய்தரும் நுண்ணுயிரிகளில் 99.9 சதவீதம் இந்தத் தொட்டிக்குள் எந்தவித இரசாயனப் பொருட்கள் இல்லாமலே கரைந்து விடுகின்றன.
· இந்த செயற்பாட்டிற்கு மின்சாரம் தேவையில்லை. ஒரே ஒருதடவை திரவ நுண்ணுயிரி பாக்டீரியாவான இனோகியுலம் உட்செலுத்தினால் போதும்.
· ஒருதடவை இந்தத் தொட்டியை நிறுவினால் போதும். பராமரிப்பு வேலைகள் கிடையாது.
· நுண்ணுயிரி கரைப்பு கழிவுநீர்த் தொட்டிக்கு அதிக இடம் தேவையில்லை. நூறு சதவீதம் சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்தது.
· இந்தத் தொட்டிகளினால் கழிப்பறைகளில் துர்நாற்றம் இருக்காது. தொட்டியில் மலக்கழிவு கண்ணுக்குத் தென்படுவதில்லை.
· அடைப்பு ஏற்படுவதில்லை. கழிவில் துர்நாற்றம் கிடையாது; மேலும் அதில் திடக்கழிவும் இல்லை.
2013-லிருந்து டிஆர்டிஓ இந்தத் தொழில்நுட்பத்தை நாட்டிலுள்ள சுமார் 60 தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியிருக்கிறது. தென்னிந்தியாவில் அதைப் பெற்ற 8 நிறுவனங்களில் ஒன்று தமிழ்நாட்டில் இருக்கிறது.
இந்தத் தொழில்நுட்பத்தால் தமிழகத்தில் சுமார் 3.5 முதல் 5 எம்எல்டி கழிப்பறைக் கழிவுநீர் மறுசுழற்சி செய்யப்படுகிறது என்று ஒரு மதிப்பீடு சொல்கிறது. மொத்தக் கழிவுக்கடலில் இது வெறும் சிறுதுளி என்றாலும் இதுவொரு நல்ல ஆரம்பம்.
நாட்டில் சுமார் 20,000 நுண்ணுயிரி கரைக்கும் கழிவுநீர்த் தொட்டிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று நாடாளுமன்றத்தில் சொல்லப்பட்ட ஒரு தகவல் சொல்கிறது.
தமிழ்நாட்டில் 53 மலக்கழிவு சுத்திகரிப்பு நி்லையங்கள் இருக்கின்றன. ஆனாலும் அவை அதிதிறனோடு செயற்படுவதாகச் சொல்ல முடியாது; 18 நிலையங்களில் மொத்தம் 0.52 எம்எல்டி கழிவு மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது. மேலும் 35 மலக்கழிவு சுத்திகரிப்பு நி்லையங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
டிஆர்டிஓவின் நுண்ணுயிரி கரைப்பு கழிவுநீர்த் தொட்டி எளிதானது; அதிதிறன் கொண்டது. ஆதலால் ’தமிழ்நாட்டு நகர்ப்புற சுகாதார ஆதரவுத் திட்டத்தில்’ இதை ஓரங்கமாகக் கொண்டுவர வேண்டும். மேலும் ‘தமிழ்நாடு ஒன்றிணைக்கப்பட்ட நிலவளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் 2019’ன் விதிமுறைகளிலும் இதை இணைக்க வேண்டும்.
தமிழகத்தில் நகர்ப்புறப் பகுதிகளில் மலக்கழிவை நீக்கும் தொழிலில் இயங்குபவர்கள் (கழிவுநீர்த் தொட்டி லாரிகள்) 9,000-க்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர். இறுதியில் அந்தக் கழிவுநீர் எங்கே எப்படிக் கொட்டப்பட்டு அகற்றப்படுகிறது என்பதற்கான விதிமுறைகள் இல்லை
டிஆர்டிஓவின் நுண்ணுயிரி கரைப்பு கழிவுநீர்த் தொட்டித் தொழில்நுட்பத்தின் உதவியோடு கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் பலமான பரவலாக்கப்பட்ட கழிவுநீர் மேலாண்மைக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும். ஆர்சிசி காங்கிரீட்டை அடிப்படையாகக் கொண்ட ஆயத்தமாடல் (பிரீ காஸ்ட் மாடல்) தமிழகத்தின் அனைத்து புதிய கட்டிடங்களிலும் நிறுவப்பட வேண்டும்.
அதற்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஒப்புதல் அளிக்க வேண்டும்; அப்போதுதான் எஃப்ஆர்பி போன்ற பொருட்கள் மூலம் ஏற்படும் சுற்றுப்புறச் சூழல் சீரழிவு தடுக்கப்படும் என்று பொதுக் கொள்கை ஆராய்ச்சி சொல்கிறது.
கழிவுநீர்க் குழிகளையும் தொட்டிகளையும் மனிதர்களே கைகளால் சுத்தம் செய்யும் படுமோசமான அருவருப்பான பழக்கத்திற்கு நுண்ணுயிரி கரைப்பு கழிவுநீர்த் தொட்டித் தொழில்நுட்பம் முடிவு கட்டும்; அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்கப் பேருதவி செய்யும். அப்படி உயிரிழப்புச் சம்பவங்கள் நிகழும் போதெல்லாம் ஒப்பந்தக்காரர்களையும் சுத்திகரிப்புத் தொழிலாளர்களையும் குற்றஞ்சொல்கிறது பெருநகர சென்னை மாநகராட்சி. ஆனால் கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது ஏற்படும் மரணங்களைத் தவிர்க்க மாநகராட்சி சரியான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில்லை என்பதே உண்மை.
இன்றைய காலகட்டத்தில் பொதுசுகாதாரம், சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றில் நிறைய சவால்கள் இருக்கின்றன. இந்தச் சூழலில் டிஆர்டிஓவின் நுண்ணுயிரி கரைப்பு கழிவுநீர்த் தொட்டித் தொழில்நுட்பம் நாம் எதிர்கொள்ளும் சவாலான சூழலை முற்றிலும் மாற்றியமைத்து, தமிழ்நாட்டில் ஆரோக்கியமான, சுகாதாரமான நகர்ப்புறச் சூழலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
(கட்டுரை ஆசிரியர் – பொருளாதார அறிஞர் மற்றும் பொதுக் கொள்கை நிபுணர்)
Read in : English