Read in : English
சினிமா, தமிழக கிராமங்களில் புகுந்து கொண்டிருந்த காலம் அது. கன்னியாகுமரி மாவட்ட கிராமப் பகுதியில் வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம் போன்ற கலைகள் பிரபலம். கோடை அறுவடைக்குப் பின், கொடை விழாக்கள் இந்த கலைகளால் சிறக்கும். அவற்றில் பூங்கனி என்ற வில்லிசைக் கலைஞர் பெயர் நிரம்பி இருக்கும். அவர் குரல் கேட்க கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட கிராமங்களில் மக்கள் காத்துக் கிடப்பர். நிறைநாழியில் நெல் குவித்து, வில் வளைத்து, அவரது வில்லிசை குழு நாண் பூட்டும் அழகு பிரத்யேகமானது.
குடம் இசை, உடுக்கை இசை, பின்பாட்டு இசைப்போர் என துணைக் கலைஞர்களை வில்லிசை வீச்சுகோலால் ஒருங்கிணைத்து சுவாரசியமாக அந்த கலையை நிகழ்த்துவார் புலவர் பூங்கனி. வறண்டு வெடித்த நிலத்தில் ஆர்ப்பரித்துப் பாயும் வெள்ளம் போல் அவரது பாட்டு நெஞ்சங்களை உசுப்பும். இசை வழியில், எளிய அசைவுள்ள நடனத்தை முன்னெடுப்பார். இடுப்புக்கு மேல் உடல் மட்டும் அசையும். உழைத்துக் களைத்த பாமரர்களுக்கு அது ஆசுவாசம் தரும்.
வில்லில் இசைக்கும் வீச்சுகோல், பூங்கனியின் கழுத்தைச் சுற்றி எப்போதாவது ஒருமுறை தான் தவழ்ந்து நகரும். அந்த வேளைக்காக, கண்ணிமைக்காமல் காத்திருக்கும் ரசிகர்கள் உண்டு. பொதுவெளியில், அந்த அனுபவம் நேரம் காலம் இன்றி வர்ணிப்பு பெறும். பேசுபொருளாகி பொழுதை நகர்த்தும்.
கன்னியாகுமரி மாவட்ட கிராமப் பகுதியில் வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம் போன்ற கலைகள் பிரபலம். கோடை அறுவடைக்குப் பின், கொடை விழாக்கள் இந்த கலைகளால் சிறக்கும். அவற்றில் பூங்கனி என்ற வில்லிசைக் கலைஞர் பெயர் நிரம்பி இருக்கும்
நாட்டுப்புற சாமிகளை ஆட்டி வைப்பதில் அலாதியான திறன் பெற்றவர் பூங்கனி. வில்லிசை பிரவாகமெடுக்கும்போது தனது இசையால், குரலால், நிகழ்த்துதலால் மனித மனங்களை ஆட வைப்பார். வீட்டு விலக்கான பெண்கள், வழிபாட்டு இடங்களுக்கு வரக்கூடாது என்ற பிற்போக்குத்தனம் கடுமையாகக் கடைபிடிக்கப்பட்ட காலம் அது. தன் கலைச் செயல்பாடுகளால் அதை உடைத்து நிர்மூலமாக்கினார்.
‘மண்ணை கூட்டி வைத்து வந்து ஆடு… என்று நான் பாடினால், கிளாச்சிட்டு கிடக்க சாமியும் வந்து ஆடும்…’ என்று மாறாத சிரிப்புடன் கூறியவர் பூங்கனி. சாமிகளின் சாமி அவர். ஆசாமிகளால் அலைக்கழிக்கப்பட்டவர். ஆசாமிகளின் அறிவீனம் அந்த மாபெரும் கலைஞரை முடக்கியது. வாழ்வின் பல பரிணாமங்களைத் தொடவிடாமல் தடுத்தது. அவர், ஆணாதிக்க மனநிலை கொண்டவர்களால் கடும் வேதனைகளை எதிர்கொண்டார். சகித்து, வலியைச் சுமந்தார்.
மேலும் படிக்க: சுப்பு ஆறுமுகம் வில்லிசையின் மறுபெயர்
2009 ல் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். கன்னியாகுமரி அருகே கொட்டாரம் கிராமத்தில், கல்லடி புறம்போக்கில் அமைந்த குடிசையில் இரண்டு ஆடுகளுடன் படுத்திருந்தார். முன் அறிமுகம் இல்லை. அறிமுகப்படுத்திக் கொண்டபோது வியந்தார். அந்த சந்திப்பில் நெகிழ்ந்தார்.
லண்டன் பி.பி.சி., டாகுமெண்டரி தயாரிப்பாளர் மார்க் கியூரக்ஸ் என்பவரை அறிமுகப்படுத்தினேன். இருவரும் நீண்ட நேரம் உரையாடினர். கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்குப்பின், வில்லிசையில் 30 நிமிடங்கள் ஒரு கதையின் உச்சப் பகுதியை பாடிக் காட்டினார். அந்த பாட்டில் கிறங்கிய மார்க், பூங்கனி பற்றி பிரத்யேகமாக டாகுமெண்டரி படம் ஒன்றைத் தயாரித்தார்.
கசப்பு சுவை மட்டுமே நிறைந்த பிந்திய வாழ்வின் நிச்சயமற்ற தன்மையை பேசிக் கொண்டிருப்பார் கலைஞர் பூங்கனி. இந்தியாவிலுள்ள ஏழை மக்களின் துயர் நிறைந்த வாழ்க்கையை நிரூபிக்கும் அவரது அனுபவங்கள். இசையால், சிறு அசைவுகளால், ரசிகர்களை வசப்படுத்தியவர். தனது உடல் மொழியால் அவர்களைக் கட்டிப் போட்டவர். உழைத்து அயர்ந்த பாமரர்களுக்கு, புத்துயிர்ப்பு ஊட்டியவர். அவர் கலையாகக் கொடுத்தது சாராயம் அல்ல… ஊட்டச்சத்து.
அடுத்த பருவத்துக்கான நம்பிக்கையை ஏழை விவசாயிகளுக்கு ஊட்டினார். அடுத்த இலக்கை அடைவதற்கான உற்சாகத்தை அவரது கலை தந்தது. கசப்புகளையும் களிப்பு மருந்தாக்க அவரது கலை இருந்தது.
கசப்பு சுவை மட்டுமே நிறைந்த பிந்திய வாழ்வின் நிச்சயமற்ற தன்மையை பேசிக் கொண்டிருப்பார் கலைஞர் பூங்கனி. இந்தியாவிலுள்ள ஏழை மக்களின் துயர் நிறைந்த வாழ்க்கையை நிரூபிக்கும் அவரது அனுபவங்கள்
நிச்சயமற்ற வாழ்வில் நம்பிக்கையுடன் நகர்ந்து வந்த பூங்கனி, தன் 12ஆம் வயது துவங்கி இடையறாது பாடிக் கொண்டிருந்தார். 86 வயதில் இமைகளை மூடினார். காலத்துள் காலமானார்.
வில்லிசையில் முன்னணி சம்பளம் பெற்ற கலைஞர் அவர். பிரபல வில்லிசை புலவர் இலந்தவிளை முத்துசாமி கூறுகையில், ‘1970 களில் ஒரு வில்லிசை நிகழ்ச்சிக்கு நான் 15 ரூபாய் சம்பளம் பெற்றேன். அதே நாட்களில், பூங்கனிக்கு 150 ரூபாய் சம்பளம் கொடுக்க போட்டி போடுவர்’ எனக் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: நாகஸ்வரம் தம்பதி வாசித்த மூன்று ராகங்கள்
நிச்சயமற்ற, நம்பிக்கை சிதைந்த சமுதாயத்தில் வீச்சு கோலை உயர்த்தி, தனது இனிய குரலால் உழைக்கும் மக்கள் வாழ்வின் மீது நம்பிக்கை ஏற்படுத்த முயன்றவர். பூங்கனியின் கோல் வீச்சு, பாட்டு வீரியம், ஆட்ட லயிப்பு எல்லாம் ஒரு தலைமுறையின் நம்பிக்கை. அது, விவசாய உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டது. அடுத்த பருவ விளைச்சலுக்கான உந்துதலைத் தந்தது. உற்பத்தியுடன் பின்னிக் கிடந்த கிராமியக் கலைகளின் முகம் இன்று மாறிவிட்டது. அது, சமூகத்தை விட்டு விலகிப் போகிறது. மதங்களுக்கு விளைச்சலை ஏற்படுத்துகிறது. தடத்தின் தடயங்களை அழித்து தரமிழந்து விட்டது.
அன்று, அறுவடையால் தளர்ந்த உடல்களை ஆற்றுப்படுத்தும் கலைஞராக பூங்கனி இருந்தார். வறண்ட மனங்களில் மென்மையை தடவியவர் இன்று ரசிகர்களின் நினைவாகிவிட்டார். காலம் அவரை கவுரவிக்கட்டும்!
Read in : English