Read in : English

பத்மஸ்ரீ கலைமாமணி சுப்பு ஆறுமுகம் இன்று நம்மிடையே இல்லை. பாரதப் பிரதமர் நேரு, காந்தி மகான் மறைந்த போது சொன்னது தான் நினைவிற்கு வருகிறது. “அந்த ஒளி மறைந்து விட்டது; இல்லை இல்லை, அந்த ஒளி நம்மிடையேதான் இருக்கிறது என்று இருபொருள் படத்தான் எண்ணச் செய்கிறது. மற்ற விற்பன்னர்கள் பலர் இருந்தாலும் வில்லுப்பாட்டிற்கு மறுபெயர் சுப்பு ஆறுமுகம் என்றே ஆகிவிட்டது.

தமிழ்நாட்டில் மேடைப் பேச்சு கொண்டு ஜொலித்தவர்கள், நம்மை ஆட்கொண்டவர்கள், கட்டிப் போட்டவர்கள் அநேகர் என்றால், இந்த வில்லுப் பாட்டுக் கலையினால் நம்மை, இங்கு அங்கென்று நகர விடாமல் இருக்கையிலே இருக்கச் செய்தவர் இப்பெருந்தகை. இதில் மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால் வந்திருப்பவர்கள், அவர்கள் பிரபலங்களாக இருந்தாலும் சரி, ஏன் குழந்தைகளாக இருந்தாலும் சரி அவர்களைப் பற்றியும் தனது நிகழ்ச்சியில் பேசி அரவணைத்துச் செல்வது கவிஞர் சுப்புவிற்கு இயல்பாய் அமைந்த குணம். எல்லோரையும் ஒரு சம பொருட்டாக மதிக்கத் தெரிந்தவர் இவர்.

28-06-1928 அன்று தமது பெற்றோருக்குத் திருமகனாய் பிறந்த சுப்பு ஆறுமுகம் திருநெல்வேலியில் உள்ள நெல்லை சத்திரம் புதுக்குளத்தைச் சார்ந்தவர். நம் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து இவரைப் பெரிதும் ஊக்குவித்து நிறைய வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களே.

திரைப்படங்களில் கதை வசனம் பாடல்கள் என்று நிறைய வாய்ப்புகள் கொடுத்து சுப்புவை விளங்கச் செய்தவரும் கலைவாணரே. காந்திமகான் கதையை, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 1948இல் கவிஞர் சுப்பு அவர்களைக் கொண்டு எழுதச் சொல்லி அதை நடத்திக் கொடுத்தது, சுப்புவை எங்கோ கொண்டு சென்று விட்டது. காஞ்சிப் பெரியவர் முன்னிலையில் இவரது முதல் நிகழ்ச்சி 1960 கருணைக் கடல் காமாட்சி எனும் பொருளில் நடந்தது.

காஞ்சிப் பெரியவர் முன்னிலையில் சுப்பு ஆறுமுகத்தின் முதல் நிகழ்ச்சி 1960 கருணைக் கடல் காமாட்சி எனும் பொருளில் நடந்தது

இவரது மொத்தமான நிகழ்வுகள் உத்தேசமாக 1000 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கும் என்று சொல்லலாம். மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதும், கலைமாமணி விருதும் இவரை வந்தடைந்தன. மிக சமீபத்தில் 2021இல் பத்மஸ்ரீ விருது இவரை அலங்கரித்தது.

ஏதோ புராண இதிகாசக் கதைகள் என்றில்லாமல் அரசின் தேசிய வெளிப்பாடுகள் என வரும் சமூகத்திற்குப் பயன்படும் திட்டங்கள் பற்றியும், தேசப்பற்று குறித்தும், தொழிற்சாலைகளில் கடைப்பிடிக்க வேண்டுவன பற்றியும் இவர் இதே வில்லுப்பாட்டு மூலம் உணர்த்தியதால், இவரை ஒரு சமூகக் காவலர், ஆர்வலர் என்றும் அழைக்கக்கூடும்.

மேலும் படிக்க: உலகிலேயே மிகப் பெரிய 21 அடி உயர சுடுமண் சிற்பத்தை உருவாக்கிய கிராமியக் கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது!

கவிஞர் என்ற பெயரும் இவருக்கு உரித்ததாகும். இவரது நிகழ்ச்சிகளில் இவர் இயற்றி ஓசைப்படாமல் அரங்கேறிய கவிதைகளும் உண்டு. இவர் ஒரு தேர்ந்த இசையமைப்பாளரும் ஆவார். பல பாடல்களுக்கு இவரே மெட்டமைத்திருக்கிறார்.

இவரது அருமை மகளான திருமதி பாரதி திருமகன் இந்த வில்லுப் பாட்டை அன்னார் (திரு சுப்பு ஆறுமுகம்) விட்டுச் சென்ற இடத்திலிருந்து கெட்டியாகப் பிடித்துக்கொண்டு செவ்வனே முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார். பாரதி தனது குழுவினருடன் சமீபத்தில் வாணி மஹாலில் நிகழ்த்திய வில்லுப் பாட்டு நிகழ்ச்சியில் மிகுந்த உருக்கத்துடன் கவிஞர் இயற்றிய பாடல் ஒன்றைப் பாடியதைக் கேட்கப் பெற்றோம்.

அர்ச்சுனனது குழப்பம் தான் பாடலின் பேசுபொருள்! அவன் பரமாத்வைப் பார்த்துக் கேட்கிறான்: கண்ணா நீ யார்? வானமா? கடலா? இல்லை முற்றும் உணர்ந்த பரம்பொருளா? எதற்காக இந்தப் போர்? போரில் வெற்றிபெற்றால் நான் அதனைக் கொண்டாட யார் இருப்பார்கள்! எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. இதோ காண்டீபம் என்னை நீயே கொன்று விடு என்பதாக அமைந்திருந்தது பாடல்.

ஆல் இந்தியா ரேடியோ எனும் ஸ்தாபனத்துக்கு 1948 முதல் 75 வருடங்களாக நிகழ்வுகள் கொடுத்துத் தொண்டாற்றியவர், சுப்பு ஆறுமுகம்

பாரதி திருமகன் உரைத்ததிலிருந்து இன்னொரு முத்து: 63 நாயன்மார்கள் என்று நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். அடுத்த நாயன்மார் வரவில்லையே என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்ட சுப்பு ஆறுமுகம், ஒரு முடிவுக்கு வந்து விட்டார் போல. ஆம் அந்த 64ஆவது நாயன்மார் வேறு யாரும் அல்ல! அது பாரதியாரே! இதனை நடைமுறைப் படுத்தும் முகமாகச் சென்னையில் உள்ள மத்திய கைலாஷ் கோவிலில் 63ஆவது நாயன்மாருக்கு அருகில் அதனைத் தொட்டு, பாரதியாரின் திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. பலர் இதற்கு உதவியிருந்தாலும் மூல காரண கர்த்தா சுப்பு ஆறுமுகமே ஆகும். இதனைக் கவிஞர் சுப்பு ஆறுமுகம் பாரதி மீது கொண்டிருந்த பக்தி என்பதா, காதல் என்பதா, அபிமானம் என்பதா!

ஒரு முறை காஞ்சிப் பெரியவர் இவர் நிகழ்விற்கு வந்திருந்த தருணம் சுப்பு அவர்கள் எழுந்து வந்து நமஸ்கரிக்காதது ஒரு பிரச்சினை. இது நமக்குத்தான். பெரியவர் இதற்கான ஒரு தெய்வீக விளக்கமளித்துள்ளார்.

மேலும் படிக்க: ஈழத்து இசை அடையாளம் தவில் இசைச் சக்கரவர்த்தி யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி

வில்லுப்பாட்டிற்கென்று ஒரு தனியான கால் கட்டொன்று இருக்கிறது. அதனை மாற்றுவது சுலபமும் அல்ல தொழில் தர்மமும் அல்ல. ஆகவே, சுப்பு ஆறுமுகம் நடந்துகொண்ட விதமே சரி, என்றிருக்கிறார்.

ஆல் இந்தியா ரேடியோ எனும் ஸ்தாபனத்துக்கு 1948 முதல் 75 வருடங்களாக நிகழ்வுகள் கொடுத்துத் தொண்டாற்றியவர், சுப்பு ஆறுமுகம். அதே போல சுமார் 1000 எழுத்துருக்களைத் (ஸ்க்ரிப்ட்களை) தயார் செய்துள்ளார்.

செவிவழியாகப் பெரும்பாலும் உணரப்படும் இந்த உன்னதக் கலையைப் புத்துயிர் பெறச் செய்தவர் பத்மஸ்ரீ சுப்பு ஆறுமுகம். ஏன் ஒரு படி மேலே சென்று விஸ்வரூபம் எடுக்கச் செய்தவர் இவர் என்றும் கொள்ளத் தகும்!

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival