Read in : English
மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், கல்வியிலும் மனித மேம்பாட்டிலும் மிகவும் முன்னேறி விட்டது என்ற பேரைச் சம்பாதித்த மாநிலம் கேரளா. ஆயினும் அதன் இன்னொரு முகம் இரகசியமானது; பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. ஆஷாடபூதித்தனத்திற்குத் துணைபோகும் அமானுஷ்யம் கொண்டது.
செய்வினை, சூனியம், மாந்திரீகம், தாந்திரீகம், முதலை வழிபாடு போன்ற விசித்திரமான இடைக்கால யுகத்தின் கறுப்புப் பயங்கரங்கள் மேவிய காட்டுமிராண்டித்தனமான ஒரு மர்மதேசம் அங்கே மறைவாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது கேரளாவைப் புகழ்பவர்களுக்குத் தர்மசங்கடம் தரும் ஒரு விசயம்.
கொச்சியில் செவ்வாய் அன்று வெளிப்பட்ட நரபலிச் செய்திகள் கல்வியறிவு அதிகமாகப் பதிவுசெய்யப்பட்ட கேரளா சமூகத்தில் புதைந்துகிடக்கும் நகைமுரண்களை நிதர்சனமாக்கியிருக்கின்றன.
மூடநம்பிக்கை இரண்டு பெண்களைக் காவு கொண்டிருக்கிறது. கொச்சியில் பொன்னுருத்தி பகுதியில் பஞ்சவடி காலனியில் வசித்துவந்த பத்மம் (53), ஆழப்புழை மாவட்டத்தின் கைநாடிப் பகுதியில் குடியிருந்த ரோஸிலி (49) ஆகிய இரண்டு பெண்களும் பகவால் சிங்-லைலா தம்பதியரால் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். பத்தனம்திட்டாவில் எலந்தூரைச் சேர்ந்த சிங் (68), லைலா (54), மற்றும் முகமது ஷஃபி என்ற ரஷீத் (52) ஆகிய மூன்றுபேர் கைதாகியிருக்கிறார்கள்.
கல்வியிலும் மனித மேம்பாட்டிலும் மிகவும் முன்னேறி விட்டது என்ற பேரைச் சம்பாதித்த மாநிலம் கேரளா. ஆயினும் செய்வினை, சூனியம், மாந்திரீகம், தாந்திரீகம், முதலை வழிபாடு போன்ற விசித்திரமான பயங்கரங்கள் கொண்ட ஒரு மர்மதேசம் அங்கே மறைவாக இயங்கிக் கொண்டிருக்கிறது
மஸாஜ் சிகிச்சையாளராக பணிபுரியும் பகவால் சிங்கின் குடும்பம் நரபலி கொடுத்தால் செல்வச் செழிப்பில் கொழிக்கும் என்று சொல்லி ஷஃபி பகவால் சிங்-லைலா தம்பதியரை நம்ப வைத்திருக்கிறார் பின்பு இரண்டு பெண்களை அடுத்தடுத்து சிங்கின் வீட்டிற்கு கவர்ச்சியான வார்த்தைகள் பேசி அழைத்துவந்தார் ஷஃபி. ரோஸிலி இந்தாண்டு ஜூன் திங்களில் கொலை செய்யப்பட்டார்; பத்மம் செப்டம்பரில் பலியானார். மாந்திரீகச் சடங்குகளைத் தொழில்முறையில் செய்துகொண்டிருந்தார் ஷஃபி.
அமானுஷ்யச் சடங்குகள் ஒருவரின் ரண, ருண, சத்ரு அபாயங்களை நீக்கிவிடும் சக்தி கொண்டவை என்று அவர் பிறரை நம்பவைத்தார். முதல் பெண்ணை நரபலி கொடுத்தபின்பு தங்கள் வாழ்க்கையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தம்பதியர் சொன்னதால், ஷஃபி இரண்டாவது நரபலி ஏற்பாடு செய்யவேண்டும் என்றார். பெண்களைக் கவர்ந்திழுத்து நரபலி கொடுப்பதற்காக அவருக்கு சிங் குடும்பம் பெரிய தொகையைக் கொடுத்திருந்தது.
குற்றம் சுமத்தப்பட்டவர் இரண்டு பெண்களை கடுமையாக இம்சித்து கொலை செய்ததோடு நிற்காமல், இறந்த உடல்களின் சதைகளை வெட்டி எடுத்து தின்று விட்டு மிச்சங்களை சிங்கின் வீட்டருகே நான்கு குழிகளில் புதைத்து விட்டதாகக் காவல்துறை கூறியிருக்கிறது.
மேலும் படிக்க: முதலில் ஓணம் பண்டிகை கொண்டாடியது கேரளத்திலா, தமிழ்நாட்டிலா?
ஆதரவாளர்கள் பலருண்டு
கேரளாவில் நிகழ்ந்திருக்கும் காட்டுமிராண்டித்தனமான நரபலிகள் என்பது மற்ற மாநிலங்களுக்கு வேண்டுமானால் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் உண்டாக்கலாம். ஆனால் காலங்காலமாக அந்த மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் அமானுஷ்ய மாந்திரீக மரபோடு பரிச்சயம் கொண்டவர்களுக்கு கிஞ்சித்தும் திகிலூட்டும் சேதியல்ல இது. இதில் வினோதம் என்னவென்றால் மற்ற விசயங்களில் எல்லாம் பிளவுபட்டு நிற்கும் இந்துமதம் உட்பட எல்லா மதங்களிலும் இந்த அமானுஷ்ய பழக்கத்திற்கான ஆதரவாளர்கள் ஒற்றுமையோடு இருக்கிறார்கள் என்பதே.

கேரளா நரபலி வழக்கின் குற்றவாளிகள்
எங்கும் வியாபித்திருக்கும் குட்டிச்சாத்தானுக்கு தீய சக்திகள் இருப்பதாக நம்பப்படுகிறது. கேரளாவின் கலாச்சாரத் தலைநகரான திரிசூரில் மாந்திரீகத்திற்கென்றே சிறப்புக் கோயில்கள் இருப்பது கேரளாவின் நகைமுரண். பல்வேறு கிராமங்களில் மங்கலகரமான நாட்களில் பக்தர்களுக்கு செல்வச் செழிப்பையும் அதிர்ஷ்டத்தையும் அருளும் வாராந்தரச் சடங்குகளைச் செய்யும் அமானுஷ்ய மாந்திரீக நிலையங்கள் பெருகியுள்ளன. என்னதான் கல்வியிலும் எழுத்தறிவிலும் உயர்விகிதங்கள் கொண்ட மாநிலமாக கேரளா திகழ்ந்தாலும், மக்களின் மத்தியில் இன்னும் மூடநம்பிக்கை நிலவுகிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.
பாபியா என்னும் சைவயுணவு உண்ணும் முதலை
சமீபத்தில் காசர்கோடு மாவட்டத்தில் ஒரு முதலை இறந்தவுடன் நடத்தப்பட்ட சடங்குகளும் உலாவந்த தொன்மங்களும் இதற்கு நல்லதோர் உதாரணம், காசர்கோட்டில் கும்பாலாவில் இருக்கும் அனந்தபத்மநாபன் கோயில் குளத்தில் அந்த முதலை வசித்தது. அது மரணித்தபின்பு புனித சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. வெல்லம், தேங்காய்த் துண்டுகள், அரிசி போன்ற சைவ உணவுகளையே முதலை தின்று வளர்ந்ததாலும், மனிதர்களை அது தாக்கியதில்லை என்பதாலும், அந்த விலங்குக்கு ஒரு புனிதத்தன்மை கிட்டியது என்று பக்தர்கள் நம்பினார்கள். கோயில் பூஜை முடிந்தவுடன் தினம் இரண்டுவேளை முதலைக்குப் பிரசாதம் கொடுக்கப்பட்டது. பாபியாவுக்கு நூற்றுக்கணகான பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கிறித்துவர்கள் மத்தியிலும் தனித்துவமான சில குழுவினர்கள் இருக்கிறார்கள். தாங்கள் நடத்தும் கறுப்பு ஜெபவழிப்பாட்டுச் சடங்கில் அவர்கள் சாத்தானை வழிபடுகிறார்கள். அந்த மாதிரியான ‘கறுப்பு ஜெபவழிப்பாட்டு’ தலங்களைப் பற்றி கொச்சி கிறித்துவர்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள். மற்ற அமானுஷ்யமான வழிப்பாட்டு முறைகளில் இருப்பதைப் போலவே இந்தக் கறுப்பு ஜெபவழிப்பாட்டிலும் பெரும்பணம் பெறுதல், எதிரிகளைச் சம்ஹாரம் செய்தல் போன்ற வாக்குறுதிகள்தான் பலரை கலந்துகொள்ள வைத்தன.
கொச்சியில் பொன்னுருத்தி பகுதியில் பஞ்சவடி காலனியில் வசித்துவந்த பத்மம் (53), ஆழப்புழை மாவட்டத்தின் கைநாடிப் பகுதியில் குடியிருந்த ரோஸிலி (49) ஆகிய இரண்டு பெண்கள் பகவால் சிங்-லைலா தம்பதியரால் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்
எர்ணாகுளத்தில் கொல்லன்சேரிக்கருகே இருக்கும் கடாமாட்டத்தைச் சார்ந்த காலஞ்சென்ற கிறித்துவபாதிரி கடாமாட்டத்து காதனார் பற்றி பல தொன்மக்கதைகள் உலா வந்திருக்கின்றன. நாட்பட்ட நோய்களோடு போராடியவர்களை அவர் குணமாக்கினார்; பேய்பிசாசுகளிடமிருந்து ஆன்மாக்களைக் காப்பாற்றினார்; தீய சக்திகளை விரட்டியடித்தார் என்று அவரிடம் பல்வேறு அசாதாரண மந்திரச் சக்திகள் இருப்பதாக நம்பிக்கையாளர்கள் சொன்னார்கள். அவரைப் பற்றி பல திரைப்படங்கள், நாடகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் வந்திருக்கின்றன. தற்காலத்தில் கூட, சாத்தானிடமிருந்தும், மற்ற தீய சக்திகளிடமிருந்தும் ஆன்மாக்களைக் ‘காப்பாற்றும்’ சடங்குகளை நடத்துவதில் ’நிபுணர்களான’ பாதிரிமார்கள் இருக்கிறார்கள்.
கேரளாவில் பல தனிப்பட்ட கிறித்துவ ஸ்தலங்கள் இருக்கின்றன. அங்கே இருக்கும் தலைமை பாதிரியார்களிடம் மீமெய்யியல் திறன்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. அத்திறன்கள் வாயிலாகவும் தாங்கள் அருளும் ஆசீர்வாதங்கள் மூலமாகவும் அவர்கள் தீராத நோய்களையும் தீர்த்து வைக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க: தமிழர்களை விட மலையாளிகள் அதிகம் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?
கேரளாவில் முதல் நரபலி வழக்குகள் இப்போது பதிவாகியிருக்கின்றன. சிங்-லைலா தம்பதியின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகளை மீண்டும் எடுத்து மறுவிசாரணை செய்ய ஆரம்பித்திருக்கிறது காவல்துறை. குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஷஃபியின் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. அவரை விசாரித்தால் மேலும் பல நரபலி வழக்குகள் வெளிவரலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் சொல்கின்றன. எர்ணாகுளம் மாநகரில் லாட்டரி டிக்கெட் விற்கும் பெண்கள் பலரிடம் பணமும், நல்ல வேலையும் தருவதாக அவர் வாக்களித்தார் என்று சொல்லப்படுகிறது. எனினும் அவர் காவல்துறையிடம் இன்னும் எதையும் சொல்லவில்லை.
கேரளாவில் நிலவும் இந்த மாதிரியான பிற்போக்கு மதப்பழக்க வழக்கங்களைக் கண்டுதான் வெதும்பிப்போய் சுவாமி விவேகாநந்தர் அந்த மாநிலைத்தைப் ‘பைத்தியக்கார விடுதி’ என்று 1892-ல் அழைத்தார். என்னதான் முற்போக்கு அடையாளம் இருந்தாலும், ஆன்மீகம் என்ற பேரில் நடைபெறும் பிற்போக்குத்தனங்களை உதறித்தள்ளுவதற்குக் கடுமையான பிரயத்தனம் செய்தாக வேண்டிய நிலையில்தான் கேரளா இப்போது இருக்கிறது.
Read in : English