Read in : English
குற்றம் என்பதன் உண்மைப் பொருள் என்ன? கருணை என்பது யாது? இவை தொடர்பாகப் பேசுகிறது அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள குற்றமும் கருணையும் நூல். இதழாளர் வி.சுதர்ஷன் ஆங்கிலத்தில் எழுதிய இந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் மு.குமரேசன். உத்திரப்பிரதேசத்தில் பிறந்து தமிழ்நாட்டுக்குக் காவல் துறை அதிகாரியாக வந்த அனூப் ஜெய்ஸ்வால் என்பவருடைய பணிவாழ்க்கையை விவரிக்கிறது நூல்.
காவல்துறையின் அதிகாரியாக அனூப் இருந்திருந்தபோதும், அவர் மனிதர்களை ஒருபோதும் குற்றவாளிகளாக அணுகாத போக்கு நூலில் வெளிப்பட்டுள்ளது. ஒரு பெரிய ஹீரோ போல் அவரை நூல் தூக்கி நிறுத்தவில்லை. ஆனால், ஒரு ஹீரோ செய்ய இயலாத காரியங்களைக் கூட மிகவும் அநாயாசமாக நிறைவெற்றியுள்ளார் என்பதை நூலை வாசிக்கும்போது அறிந்துகொள்ள முடிகிறது.
இந்த நூல் ஒரு நாட்டின் குறுக்குவெட்டுத் தோற்றம் போல் உள்ளது. இந்த நாடும் இதன் அதிகாரவர்க்கமும் சாமானிய மனிதர்களை எப்படிக் கையாள்கிறது என்பதற்கு நூலில் பல சான்றுகள் உள்ளன. நூலில் முகப்பில், இளம் ஐபிஎஸ் அதிகாரியின் தூத்துக்குடி அனுபவங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓர் அதிகாரி மனிதநேயமுள்ளவராக இருந்தால் எத்தனை பேருடைய வாழ்க்கையில் அவரால் ஒளியேற்றிவைக்க முடிகிறது என்பதை உணரும்போது அதிகாரம், குற்றம், தண்டனை, மன்னிப்பு போன்ற சொற்களுக்கு எல்லாம் புதுப் பொருளைக் காண முடிகிறது
ஆனால், தூத்துக்குடி என்பதை ஒரு உருவகமாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில், இந்த நூலில் தூத்துக்குடி போன்ற பலவிடங்களில் அவர் பணியாற்றியபோது எதிர்கொண்ட பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
நூலை வாசிக்க வாசிக்க அனூப் ஜெய்ஸ்வால் என்னும் போலீஸ் அதிகாரிக்குள் மனிதநேயம் ததும்பத் ததும்ப வாழும் ஒரு மனிதரைத் தரிசிக்க முடிகிறது. நூலை எழுதியுள்ள சுதர்ஷன் நூலுக்குக் கையாண்டுள்ள நடை மிகவும் சுவாரசியம் ததும்பும் நடையாக உள்ளது. மொழிபெயர்ப்பிலேயே இந்த அளவு விறுவிறுப்பான நடை அமையப்பெற்றுள்ளது எனில், மூல மொழியான ஆங்கிலத்தில் நூல் மிகச் சிறப்பான வாசிப்பனுபவத்தைத் தரும் என்றே தோன்றுகிறது.
மேலும் படிக்க: தூத்துக்குடி: காவல்துறை அதிகாரியின் அனுபவங்கள்
நூலில் மொத்தம் இருபது கதைகள் உள்ளன. விவரிப்புத்தன்மையின் காரணமாகவே இவற்றைக் கதைகள் எனக் குறிப்பிடுகிறேன். மற்றபடி ஒவ்வோர் அத்தியாயமும் ஒவ்வொரு மனிதரது வாழ்வை நம்முன் கடைபரத்துகிறது.
மனிதர்கள் பலரது கதையை விவரித்துள்ள இந்நூலில் நூலின் நாயகன் அனூப் ஜெய்ஸ்வாலின் வாழ்க்கையும் விவரிக்கப்பட்டுள்ளது. எத்தனையோ தடைக்கற்களை எதிர்கொண்ட அவருடைய வாழ்க்கைக் கதையை விவரிக்கும் அத்தியாயத்தின் தலைப்பு அன்னியன் என்பது. இப்படியான மனிதர்கள் நிச்சயமாக அன்னியர்கள்தான். ஓர் அதிகாரி மனிதநேயமுள்ளவராக இருந்தால் எத்தனை பேருடைய வாழ்க்கையில் அவரால் ஒளியேற்றிவைக்க முடிகிறது என்பதை உணரும்போது அதிகாரம், குற்றம், தண்டனை, மன்னிப்பு போன்ற சொற்களுக்கு எல்லாம் புதுப் பொருளைக் காண முடிகிறது.
நூலில் தொடக்கத்தில் சிவலார்குளம் கொலைகள் என்னும் அத்தியாயம் இடம்பெற்றிருக்கிறது. நிலத்துக்காக நடந்த கொலைகள். இதைப் போல பல கொலைகள் நூலில் இடம்பெற்றுள்ளன. மிகப் பலவீனமான மனிதர் ஒருவர் தன் மனைவியைக் காப்பாற்றும் பொருட்டு மிகப் பலமான மனிதன் ஒருவனைக் கொலைசெய்துவிடுகிறான். கொன்ற மனிதனின் தலையைப் பையில் போட்டு அனூப் ஜெய்ஸ்வாலின் முகாம் அலுவலகத்துக்கே வருகிறான். இன்னொரு சம்பவத்தில் காமப்பித்துத் தலைக்கேறிய கணவனைக் கொன்ற மனைவி வருகிறாள். இப்படி விதவிதமான மனிதர்கள் நூலில் வந்துகொண்டேயிருக்கிறார்கள்.
ஓர் அதிகாரி சட்டம் என்பதையும் விதிமுறைகள் என்பதையும் மிகச் சரியாகப் புரிந்துகொண்டுவிட்டால் அவரால் மனிதர்களுக்குப் பல நல்ல காரியங்களைச் செய்ய முடிகிறது என்பதற்கு இந்நூல் பலமான சான்று பகர்கிறது.
நடுத்தரக் குடும்பத்து மனிதராகத் தான் பிறந்திருக்கிறார் அனூப் ஜெய்ஸ்வால். அவரது ஐபிஎஸ் வேலையே ஆச்சரியப்படத்தக்க அளவில் பறிபோயிருக்கிறது; அதியசப்படத்தக்க அளவில் மறுபடியும் கிடைத்திருக்கிறது. 18 ஆம் அத்தியாயம் சற்று நீளமானது. அதில் தான் அனூப்பின் வாழ்க்கை பொதிந்து கிடக்கிறது.
நூலை வாசிக்கத் தொடங்கும் போது, சீருடை அணிந்த கம்பீர மிகு இளம் அதிகாரி ஒருவர் நம் கண் முன் காட்சி தருகிறார். ஒவ்வொரு அத்தியாயமாக வாசித்து, ஒட்டுமொத்தமாக நூலை நிறைவுசெய்கையில் சீருடையில்லாத மனிதநேயமிகு அனூப் ஜெய்ஸ்வால் என்னும் மனிதரை நம்மால் காண முடிகிறது
அவருக்கும் மனைவிக்கும் அடுத்தடுத்த மாதங்களில் வேலை போய்விடுகிறது. வாழ்க்கையை உற்சாகமாகத் தொடங்கும் வேளையில் வேலை போகிறது. ஆனாலும், தன்னம்பிக்கையுடனும் போராட்டக் குணத்துடனும் உண்மையின் துணைகொண்டு போராடி வென்ற மனிதராகத் தான் அனூப் குறித்த சித்திரம் விரிகிறது. இது வாசிப்பவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையைத் தருகிறது. இது புனைவுப் புத்தகம் அன்று. முழுக்க முழுக்க உண்மையாக நடந்த சம்பவங்களைக் கொண்டது. ஆனால், ஒரு புனைவைவிட வசீகரத்தை நூல் கொண்டுள்ளது.
நூலை வாசிக்கத் தொடங்கும் போது, சீருடை அணிந்த கம்பீர மிகு இளம் அதிகாரி ஒருவர் நம் கண் முன் காட்சி தருகிறார். ஒவ்வொரு அத்தியாயமாக வாசித்து, ஒட்டுமொத்தமாக நூலை நிறைவுசெய்கையில் சீருடையில்லாத மனிதநேயமிகு அனூப் ஜெய்ஸ்வால் என்னும் மனிதரை நம்மால் காண முடிகிறது.
குற்றவாளிகளும் மனிதர்கள்தாம். அவர்களது சூழல் காரணமாகக் குற்றம் செய்திருக்கிறார்கள். அவற்றை வெறுமனே சட்டத்தின் படி பார்த்து அவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தல் அபத்தம் என்பதை இந்நூல் சொல்லாமல் சொல்கிறது. ஒரு குற்றம் நடைபெறுகிறது என்றால் அது ஏன் நடைபெற்றது, அதன் பின்னணிக்காரணம் என்ன? என்பன போன்ற பல விஷயங்களையும் தீவிரமாக விசாரிக்கும்போது, குற்றம் தொடர்பான பார்வை மாறிவிடுகிறது. சில சம்பவங்களில் அது குற்றமே இல்லாமல் போய்விடுகிறது.
மேலும் படிக்க: புதுச்சேரி சுதந்திரம் பெற்ற கதை
மீன் குழம்பும் சோறும் அத்தியாயத்தில் அந்தோணி மூக்கன் என்னும் மனிதர் வருகிறார். அவர் குற்றங்கள் புரிந்தவர்தான். அவர் ஒரு மனிதரைக் கொலையே செய்தவர். ஆனால், அவர் கொலை செய்த காரணத்தையும் அவர் கொலை செய்த மனிதரையும் அறிந்துகொள்ளும்போது, அதைக் கொலை என்று சொல்லவே முடியவில்லை. சட்டம் அதைக் கொலையாகக் கருதலாம், ஆனால் மனிதநேயத்தின் கண் கொண்டு பார்த்த்தால் அது ஒரு வதம். இப்படியான காரணங்களுக்கெல்லாம் மனிதர்கள் கொலை செய்வார்களா என வியக்காமல் இருக்க முடியாது.
ஓர் அத்தியாத்தில் ஒரு தாய் வருகிறாள். வெளிமாநிலத்தில் பணிசெய்த தன் மகனிடமிருந்து ஒரு தகவலும் வரவில்லையே எனப் பதறிப்போய் அனூப் ஜெய்ஸ்வால் அலுவலகத்துக்கு வருகிறாள். அவர் மகனைப் பற்றி விசாரிக்கிறார். அவர் கேட்ட தகவலை அந்தப் பெண்மணியிடம் கூறுகிறார். இடியென அந்தத் தகவல் அவள்மீது இறங்குகிறது. சில மாதங்கள் கழித்து அதே பெண் அனூப் ஜெய்ஸ்வாலுக்கு நன்றி தெரிவிக்க வருகிறார்.
அந்தப் பெண்மணியால் அனூப் ஜெய்ஸ்வாலுக்குக் கொடுக்க முடிந்ததெல்லாம் வெறும் வெற்றிலைப் பாக்குதான். அனூப் ஜெய்ஸ்வாலுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்த நன்றியறிவிப்பு அவரை நெகிழ்த்துகிறது.
அந்தப் பெண்மணியின் மகன் இறந்த தகவலைத் தான் அனூப் ஜெய்ஸ்வால் தெரிவித்திருந்தார். என்ன விநோதமாக இருக்கிறதா? அதுதானே வாழ்க்கை.
இந்நூலைப் படித்தால் உங்களுக்கு கோவில்பட்டி வீரலட்சுமி, டாணாக்காரன் போன்ற படங்கள் நினைவுக்கு வரலாம். இந்நூல் நல்ல திரைக்கதையாசிரியரின் கையில் கிடைத்தால் வருங்காலத்தில் பல தமிழ்ப் படங்களில் இந்நூலின் சம்பவங்களைக் காட்சியாகக் காண இயலும். அப்படியான பல சம்பவங்கள் நூலில் கொட்டிக் கிடக்கின்றன. நூலைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கலாம்.
ஆனால், எவ்வளவு எழுதினாலும் இந்த நூலின் ஓர் அத்தியாயத்தில் கிடைக்கும் உணர்வில் நூற்றில் ஒரு பங்கைக்கூட உணர்த்த முடியுமா என்பது சந்தேகமே.
Read in : English