Read in : English
புதுச்சேரி வரலாறு முறையாக எழுதப்படவில்லையே என்னும் பெரிய குறையைத் தீர்த்துவைத்துவிட்டார் பிரான்ஸ் நாட்டு வரலாற்று அறிஞர் J.B.P. மொரே. அரசியல்வாதிகள் புதுச்சேரி விடுதலை வரலாற்றை எழுதியிருக்கிறார்கள்; பாடநூல் ஆசிரியர்கள் புதுச்சேரி வரலாற்றை எழுதியிருக்கிறார்கள். வரலாற்று அறிஞர்கள் பலரும் நூல்களை எழுதி இருக்கிறார்கள். 20 ஆண்டு காலம் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு, ஆதாரங்களைத் திரட்டி புதுச்சேரி வரலாற்றை முழுமையாகச் சிறப்பாக எழுதி முடித்திருக்கிறார் அறிஞர் மொரே. மாஹே, ஏனாம் பகுதி வரலாறுகளை ஏற்கெனவே எழுதிய அனுபவம் மொரேவுக்குப் பெரிதும் கைகொடுத்திருக்கிறது.
புதுச்சேரியில், தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் அல்லாமல் இந்திய அளவில், உலக அளவில் புதுச்சேரி வரலாற்றைக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார் மொரே. புதுச்சேரி வரலாற்றை எழுதியுள்ள பிரான்ஸ் நாட்டு அறிஞர் மொரே ஒரு புதுச்சேரிக்காரர் என்பதும் ஒரு கூடுதல் சிறப்பு. தன்னுடைய ஊரின் வரலாற்றை எழுதுகிறோம் என்ற பொறுப்புணர்வும், அக்கறையும் அவருக்குப் பலம் சேர்த்திருக்கின்றன. அவர் புதுச்சேரிக்கான தன்னுடைய கடமையைச் சிறப்பாகச் செய்துள்ளார்.
புதுச்சேரியில், தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் அல்லாமல் இந்திய அளவில், உலக அளவில் புதுச்சேரி வரலாற்றைக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார் மொரே.
புதுச்சேரியில் பிறந்து, சைகோனில் மிகப்பெரும் செல்வராக வாழ்ந்து, காந்தியின் அழைப்பை ஏற்று இந்திய விடுதலைப் போராட்டத்தின்பால் ஈடுபாடுகொண்டு, வேலையையும் விட்டுவிட்டு, களத்தில் இறங்கியவர் புருஷாந்தி. அவர் இரண்டாம் உலகப் போரின்போது, சைகோன் ஜப்பான் வசம் ஆனதும், அங்கு வந்த நேதாஜியை வரவேற்று, தன்னுடைய வீட்டையே இந்திய விடுதலைப் படையின் அலுவலகம் ஆக்கித் துணை நின்று ஆதரித்தவர். போரின் முடிவில் சைகோன் மீண்டும் பிரான்ஸ் வசம் ஆனதும் புருஷாந்தி பெரும் துன்பத்துக்கு ஆளாகிப் புதுச்சேரிக்குக் குடிபெயர்ந்தார். அவருடைய பேரன்தான் இந்நூலின் ஆசிரியர் மொரே. வீர வரலாறு படைத்த குடும்பத்தின் வாரிசு என்பதால், புதுச்சேரியின் உண்மை வரலாற்றைத் துணிச்சலோடு எழுதி இருக்கிறார் மொரே.
விடுதலைப் போராட்டக் காலத்தில் புதுச்சேரியின் மிகப் பெரிய தலைவர்களாக விளங்கிய இருவர் எதுவார் குபேரும், வ. சுப்பையாவும். அவர்கள் இருவருக்கும் உரிய இடம் அளித்து இந்நூல் எழுதப்பட்டிருப்பது இந்நூலின் மிகப் பெரிய சிறப்பு.
1946 முதல் 1964 வரை 18 ஆண்டுகள் புதுச்சேரியின் தலைவராக, புதுச்சேரி மக்களின் ஒரே நம்பிக்கையாக விளங்கினார் எதுவார் குபேர். பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியின் கீழும், 1954 இல் நெட்டப்பாக்கம் பகுதியைக் கைப்பற்றிய போதும், பிறகு இந்திய நிர்வாகத்தின் கீழ் வந்தபிறகும், 1962க்குப் பிறகு முறையாக இந்தியாவுடன் இணைந்து புதுச்சேரி ஒன்றியப் பகுதி உருவான போதும் தலைமை தாங்கி புதுச்சேரியை வழிநடத்திய குபேரை இந்த நூல் முறையாக அடையாளப்படுத்துகிறது.
காந்தியின் பால் ஈடுபாடு கொண்டவராகத் தன் பொது வாழ்க்கையை மாணவப் பருவத்திலேயே தொடங்கி, தொழிலாளர் தலைவராகி, ஒரு கம்யூனிஸ்ட் தலைவராக உயர்ந்து, புதுச்சேரிக்கான பங்களிப்பை வாழ்நாள் முழுக்கத் தொடர்ந்து செய்த வ. சுப்பையாவைப் பற்றியும் இந்த நூல் நமக்கு உரிய அடையாளத்தைத் தருகிறது.
மேலும் படிக்க: டெட் எண்ட்: இறந்தவர்கள் சொல்லும் கதை
பிரான்சுக்கும் புதுச்சேரிக்குமான உறவு தனித்தன்மை வாய்ந்தது. புதுச்சேரியை உருவாக்கி, அதை வளர்த்தெடுத்து உலக அரங்கில் நிலைநிறுத்திய பெருமை பிரான்சுக்கு உண்டு; எனவே, புதுச்சேரி மக்களுக்கு பிரான்சின் மீது அளவு கடந்த பற்றுதல் உண்டு. எனவே, பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகளில் விடுதலைப் போராட்டம் நீண்ட காலம், மிகத் தீவிரமாக நடந்தபோதும் புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிக்கு எதிராக எந்த ஒரு போராட்டமும் தீவிரம் பெறவில்லை என்பதை இந்த நூல் விவரமாகச் சொல்கிறது.
இந்திய விடுலைப் பிறகுதான் இங்கே நிலைமைகள் மாறுகின்றன. இந்திய அரசும், பிரான்ஸ் அரசும் பேச்சு வார்த்தைகளை நடத்துகின்றன. புதுச்சேரி இந்தியாவோடு இணைய வேண்டும் என்ற ஆசையைத் தலைவர்களில் சிலர் வெளியிடுகிறார்கள். பிரான்சோடுதான் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் சிலர் கொண்டிருக்கிறார்கள். 1948 இல் இந்திய அரசும், பிரான்ஸ் அரசும் இணைப்பு தொடர்பாகக் கூட்டறிக்கை ஒன்றை வெளியிடுகின்றன. அப்போதுதான் பிரான்சின் அரசியல் சட்டத்தின் 27 ஆவது பிரிவின்படி புதுச்சேரி மக்களின் சம்மதம் பெற்றுத்தான், இந்தியாவுடன் சேர்க்க முடியும் என்ற உண்மை தெரிய வருகிறது.
பிரெஞ்சு இந்தியப் பகுதிகளை அவற்றின் அண்டை மாநிலங்களோடு சேர்த்து விடுவதைப் புதுச்சேரி மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைத் தமிழ்நாட்டோடும், மாஹேவைக் கேரளத்தோடும். ஏனாம் புகுதிகளை ஆந்திரத்தோடும், சந்திரநாகூரை வங்காளத்தோடும் சேர்ப்பதற்குப் பதிலாக பிரெஞ்சு இந்தியப் பகுதிகளைத் தனியாக வைத்து இந்தியா நிர்வாகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை குபேர் முன் வைத்தார்.
புதுச்சேரி மக்களும், தங்களை நிலைநிறுத்திக்கொள்ள, தனித்தன்மையைக் காப்பாற்றிக்கொள்ள இந்தியா, பிரான்ஸ் இரண்டு நாடுகளோடும் போராடிய போராட்டம் மகத்தானது.
எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாத வகையில் நிலைமைகள் மாறுகின்றன. பிரான்சு அரசு, புதுச்சேரிக்காரர்களிடம ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்தது. அதிகாரம் மிக்க ஆளுநர் என்ற பதவியை நீக்கியது. ஆணையர் என்ற மேற்பார்வையாளர் பதவியை உருவாக்கியது. கருத்துக்கணிப்புத் தேர்தலை நடத்தினால் புதுச்சேரி மக்கள் பிரான்சுக்கு ஆதரவாக வாக்களித்தால் என்ன செய்வது என்ற குழப்பம் இந்திய அரசுக்கும் பிரான்ஸ் அரசுக்கும் ஏற்பட்டது. அதனால் புதுச்சேரியில் அந்தத் தேர்தல் நடைபெறவில்லை. சந்திர நாகூரில் மட்டும் தேர்தலை நடத்தி, இந்தியாவுடன் அதை இணைத்துவிட்டார்கள்.
புதுச்சேரி மக்களை வழிக்குக் கொண்டுவர பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவந்த இந்தியா போக்குவரத்தையும் தடைசெய்தது. கடும் கட்டுப்பாடுகள் புதுச்சேரி மக்களை நிலைகுலையச் செய்தன. 1954 இல் இந்தியாவுடன் சேர்ந்துவிடலாம் என்ற முடிவுக்கு புதுச்சேரி வந்தது. இந்தியாவும் பிரான்சும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டன.
1954 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் நாள் கீழூரில், உள்ளாட்சி அமைப்புகளிலும், பிரதிநிதித்துவ சபையிலும் இருந்த மக்கள் பிரதிநிதிகளிடம் தேர்தல் நடத்தி, இந்தியாவுடன் சேர சம்மதம் பெறப்பட்டது. 21 ஆம் தேதி உரிமை மாற்ற ஒப்பந்தம் இந்தியா, பிரான்ஸ் இடையே கையெழுத்தானது. நவம்பர் முதல் தேதியன்று பிரெஞ்சு இந்திய நிர்வாகத்தை இந்தியா ஏற்றுக்கொண்டது.
மேலும் படிக்க: தூத்துக்குடி: காவல்துறை அதிகாரியின் அனுபவங்கள்
1956ஆம் ஆண்டில் இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. இந்திய நாடாளுமன்றம் அதை ஏற்றுக்கொண்டது. ஆனால், பிரான்ஸ் பாராளுமன்றம், சந்திரநாகூர் போல மக்களிடம் கருத்துக் கணிப்புத் தேர்தல் நடத்தாமல் மக்கள் பிரதிநிதிகளிடம் கீழூரில் நடத்தப்பட்ட தேர்தல் அடிப்படையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என நிராகரித்துவிடட்து. 1962 ஆம் ஆண்டில்தான் சிக்கல் தீர்ந்தது. பிரெஞ்சிந்தியப் பகுதிகள், இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.
1947 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட முயற்சி, 1962இல் தான் நிறைவேறியது. இந்தியாவும், பிரான்சும் பட்டபாடு கொஞ்சமல்ல. புதுச்சேரி மக்களும், தங்களை நிலைநிறுத்திக்கொள்ள, தனித்தன்மையைக் காப்பாற்றிக்கொள்ள இந்தியா, பிரான்ஸ் இரண்டு நாடுகளோடும் போராடிய போராட்டம் மகத்தானது. இராமாயணம், மகாபாரதம் போல மிக நீண்ட இந்த வரலாற்றை எழுதுவது என்பது எளிதன்று. அதை மொரே வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளார். அனைத்துத் தகவல்களையும் திரட்டி, ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நூலை அவர் எழுதியுள்ளார். உலகம் இதுவரை அறியாத பல்வேறு தகவல்களை, உண்மைகளைத் தன்னுடைய ஆய்வின் மூலம் மொரே வெளிக்கொண்டு வந்துள்ளார்.
குபேர், பிரான்ஸ் ஆதரவு நிலையைக் கைவிட்டு, இந்தியாவோடு சேர்ந்துவிடலாம் என்ற முடிவை எடுத்து, அமைதியான முறையில் தீர்வுகான வழியேற்படுத்திக் கொடுத்தார் என்பதை நூலாசிரியர் சிறப்பாக விளக்கி எழுதி உள்ளார். குபேருக்கு நேரு கொடுத்த ஆதரவும், இடமும் மகத்தானது என்பதை மொரே நன்றாகப் பதிவுசெய்துள்ளார்.
Towards Freedom in Pondicherry என்பது நூலின் தலைப்பு. Freedom என்ற சொல் சுதந்திரம் என்பதைக் குறிப்பது; சுதந்திரம் புதுச்சேரிக்குப் புதிதல்ல; பிரெஞ்சுக்காரர்களே புதுச்சேரியை இப்போது இந்தியாவுடன் இருப்பதைப் போலச் சுதந்திர பூமியாகத்தான் வைத்திருந்தார்கள். பிரான்சிடமிருந்து பிரிந்து இந்தியாவுடன் புதுச்சேரி சேர்ந்ததுதான் நடந்த நிகழ்வு ஆனாலும், அதைக் குறிக்க Freedom என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அப்போதுதான் உலகம் எளிதாகப் புரிந்துகொள்ளும் என்பதாலேயே அப்படியொரு தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது எனலாம். அது மட்டுமன்று; வங்காளத்துடன் சேர்ந்த சந்திரநாகூரைப் போல – புதுச்சேரியும் தமிழ்நாட்டுடன் சேர்ந்துவிடும் என்றே அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், குபேர், புதுச்சேரியின் தனித்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்; தமிழ்நாட்டுடன் சேர்க்கக் கூடாது என்று போராடினார். அப்படித் தனி அடையாளத்துடன் இருக்கும் சுதந்திரத்தை புதுச்சேரிக்கு இந்தியாவும் கொடுத்துவிட்டது. ஆசைப்பட்டது போல பிரெஞ்சு இந்தியப் பகுதிகளின் தலைநகராக இருக்கும் சுதந்திரம் புதுச்சேரிக்குக் கிடைத்திருக்கிறதே! அந்த வகையிலும் Towards Freedom in Pondicherry தலைப்பு மிகவும் பொருத்தமானதுதானே!
புதுச்சேரி இந்திய நிர்வாகத்தின் கீழ் இருப்பது உண்மைதான். அதே வேளையில் அது ஒரு பிரெஞ்சிந்தியப் பகுதி என்ற அடையாளத்தையும் இழக்காமல் இப்போதும் இருப்பதும் உண்மைதானே! அதற்கான சுதந்திரம் (Freedom) புதுச்சேரிக்கு இருக்கிறது அல்லவா!
நூல்
Towards Freedm in Pondicherry
Society, Economy and Politics
Under French Rule (1816 – 1962)
ஆசிரியர்
J.B.More
விலை : ரூ. 2, 300/-
வெளியீடு: Monohar Publishers and Distributors
4753/23, Ansari Road, Daryaganj,
New Delhi – 110 002.
Read in : English