Read in : English

திரைப்படம் என்பது முதலில் வணிகம், அதன்பிறகே கலை. இதுவே நடைமுறை யதார்த்தம் என்று சொல்லியிருக்கிறது ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’இன் அபார வெற்றி. முதல் நாள் தொடங்கி இதுநாள்வரை தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் எத்தனை கோடி வசூல் ஈட்டியிருக்கிறது என்பது முதன்மைச் செய்திகளில் ஒன்றாகியிருக்கிறது.

கல்கியின் நாவலைப் படிக்கும்போது மனதில் தேங்கிய ருசி படத்தில் கிடைக்கிறதா? நாவலில் இடம்பெற்ற பாண்டியர், சோழர் கொடிகள், ஈழ நில வர்ணனைகள் திரைப்படத்தில் தவிர்க்கப்பட்டது ஏன் என்பதும், ராஜராஜ சோழன் இந்து மன்னர் அல்லவென்பதும் விவாதிக்கப்படுவது திரையரங்குகளின் கூட்டம் குறையாமல் இருக்கக் காரணமாகியிருக்கிறது.

அதே நேரத்தில், ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ஆல் இதர திரைப்படங்களின் வெற்றி முடக்கப்பட்டிருக்கிறதா எனும் கேள்வியும் பூதாகரமாகியிருக்கிறது. என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா?

‘நானே வருவேன்’ சர்ச்சை!
‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘இரண்டாம் உலகம்’ போன்ற படங்களின் திரைக்கதையும் காட்சியமைப்பும் வித்தியாசமானதாக இருந்தாலும், அவற்றின் பட்ஜெட் தமிழ்த் திரைப்பட உலகில் பெரும் விவாதத்தை உருவாக்கியது. அப்படங்கள் பெரிய வெற்றியை பெறாத காரணத்தால், செல்வராகவனுக்கு ஒரு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அதற்கு நேரெதிராக, ‘நானே வருவேன்’ படத்தைச் சிக்கனமான பட்ஜெட்டில் கனகச்சிதமாக உருவாக்கியிருந்தார்.

இடைப்பட்ட காலத்தில் செல்வராகவன் இயக்கிய ‘என்ஜிகே’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ இரண்டுமே முழுமையாகத் தயாராகி நீண்டகாலத்திற்க்குப் பிறகே வெளியாயின; அதேநேரத்தில், அப்படங்களைக் கண்ட அனுபவமும் உவப்பானதாக இல்லை. அதனாலேயே, ‘நானே வருவேன்’ படம் எதிர்பார்க்குள்ளானது. போதாக்குறைக்கு தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ வேறு அமைதியாக வந்து பாக்ஸ் ஆபீஸில் புயலைக் கிளப்பியது.

‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ஆல் இதர திரைப்படங்களின் வெற்றி  முடக்கப்பட்டிருக்கிறதா எனும் கேள்வியும் பூதாகரமாகியிருக்கிறது

இப்படியொரு சூழலில், ‘பொ.செ. பாகம்1’ வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாக செல்வராகவனின் படைப்பு வந்தது. கலவையான வரவேற்பை மீறி, முதல் நாளே பத்து கோடி ரூபாய் வசூலித்ததாகவும் செய்திகள் வெளியாயின. ‘பொ.செ. வெளியானால் நானே வருவேன் வசூல் பாதிக்குமே’ என்ற கேள்விக்கு, ‘மூன்றாம் நான்காம் நாளில் இருந்து நிலைமை சீராகும்’ என்று பதில் சொன்னார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.

மேலும் படிக்க: பொன்னியின் செல்வனும் வெற்றிமாறன் அரசியலும்

ஆனால், அந்தச் சீர்மை ஒரு வாரம் ஆனபிறகும் உருவாகவில்லை. காரணம், மக்கள் தந்த அபார வரவேற்பினால் விஜயதசமி விடுமுறை நாள்களிலும் கூட ‘பொ.செ. பாகம்1’க்கான சிறப்புக் காட்சிகளும் முன்பதிவு வருமானமும் குறையவே இல்லை. இதனால், செப்டம்பர் 30ஆம் தேதியன்று குறைக்கப்பட்ட ‘நானே வருவேன்’ காட்சிகள் மீண்டும் அதிகரிக்கப்படவே இல்லை. சில திரையரங்கு நிர்வாகிகள் ‘நானே வருவேன்’ ஹவுஸ்புல்லாக ஓடினாலும் முன்பதிவு அதிகமில்லாத காரணத்தால் காட்சிகள் அதிகப்படுத்தப்படவில்லை என்று தகவலை வெளியிட்டனர்.

வெளியீட்டுக்கு முன்னரே லாபம் ஈட்டித் தந்துவிட்டது என்று தாணு சொன்னாலும் கூட, ‘நானே வருவேன்’ படத்தின் கடந்த வார வசூல் மிகச்சில கோடிகளாகவே இருந்து வருகிறது. தீபாவளியை ஒட்டியும் அதற்கு முன்னதாகவும் படங்கள் வெளியானால், இன்னும் காட்சிகள் குறைக்கப்படலாம் என்பதே தற்போதைய நிலைமை. ஒருவேளை ‘பொ.செ. பாகம் 1’ சுமாரான வரவேற்பைப் பெற்றிருந்தால் நானே வருவேன் வெற்றியும் எதிர்பார்த்த அளவிற்கு இருந்திருக்கும் என்பதே சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உள்ளது.

முடங்கிய படங்கள்!
அக்டோபர் முதல் வாரத்தில் தமிழில் கிட்டத்தட்ட நான்கைந்து படங்கள் வெளியாவதாக இருந்தது. ஆனால் ‘பிஸ்தா’, ‘ரீ’ ஆகிய படங்களே மிகக்குறைவான காட்சிகளுடன் சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெளியாகியிருக்கின்றன. வரும் அக்டோபர் 14 அன்று யோகிபாபு நடித்துள்ள ‘ரிப்பீட் ஷூ’, புதுமுகங்கள் நடித்துள்ள ‘இளமை எனும் பூங்காற்று’, அருண் விஜய் நடித்த ‘பார்டர்’ உள்ளிட்ட படங்கள் வெளியாகக்கூடும். ‘பொ.செ. பாகம் 1’க்கான காட்சிகள் குறைக்கப்பட்டால் மட்டுமே அவற்றின் வெளியீடு நிச்சயமாகும்.

கேரளத்தில் கடந்த 7ஆம் தேதியன்று மம்முட்டியின் ‘ரோர்சாக்’, அபர்ணாவின் ‘இனி உத்தரம்’ ஆகிய படங்கள் வெளியாயின; ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கின்றன. இதற்கு முன்னர் வெளியான மம்முட்டியின் ‘பீஷ்ம பருவம்’ முதல் நாளே கேரளத்தில் மட்டும் 6.15 கோடிகளை ஈட்டியிருந்தது. அதனை ஒப்பிடும்போது ‘ரோர்சாக்’கின் பட்ஜெட் குறைவென்றாலும், அது அதிகத் திரையரங்குகளில் வெளியாகாத காரணத்தால் முதல் நாளில் 2.6 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது.

இப்படமும் ‘இனி உத்தர’மும் ஓடும் திரையரங்குகளுக்கு நிகராக, ‘பொ.செ. பாகம் 1’ மலையாளம், தமிழ் பதிப்புகள் திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட நகரங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. புதிதாக மலையாளப் படங்கள் வெளியானபோதும், ‘பொ.செ.’ வரவேற்பினால் அதற்கான காட்சிகள் குறைக்கப்படவில்லை.

வெளிநாட்டிலும் உள்நாட்டிலுமாக இதுவரை 300 கோடி ரூபாய்க்கும் மேல்  வசூலைக் குவித்துள்ளது ‘பொ.செ. பாகம் 1’. இதன் வரவே பல படங்களின் புகழையும் வசூலையும் பாதித்திருப்பது வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது 

போலவே, ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் கடந்த 5ஆம் தேதியன்று சிரஞ்சீவி, சல்மான்கான் நடித்த ‘காட்பாதர்’, நாகார்ஜுனாவின் ‘தி கோஸ்ட்’ ஆகியவற்றின் வசூலும் குறைந்திருக்கிறது. பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘லூசிபர்’ படத்தின் ரீமேக் ஆக இருந்தபோதிலும், அப்படத்தின் டப்பிங் பதிப்பு தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற போதிலும், சிரஞ்சீவியின் படம் என்ற அடையாளத்துடன் சென்னை போன்ற நகரங்களில் ‘காட்பாதர்’ வெளியாகியிருக்க வேண்டும்.

ஆனால், அவ்வாறு நிகழவில்லை. ‘ரட்சன் தி கோஸ்ட்’ என்று மொழிமாற்றம் செய்யப்பட்டாலும், நாகார்ஜுனாவின் படம் குறைவான திரையரங்குகளிலேயே வெளியாகியுள்ளது. தெலுங்கு பதிப்புக்கும் குறைவான காட்சிகளே சென்னையில் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், கேரளத்தில் இவ்விரு படங்களின் தெலுங்குப் பதிப்புகளும் வெளியாகியுள்ளன.

‘காட்பாதர்’ இந்தி டப்பிங் வெர்ஷன் சல்மான் கான் வரவால் ஓரளவு வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட நான்கே நாள்களில் 100 கோடியைத் தொட்டிருக்கிறது தெலுங்குப் பதிப்பின் வசூல். ஆனால், சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டு நகரங்களில் இப்படம் வெளியாகாமல் போனதால் சில கோடிகள் வரவு ‘மிஸ்’ ஆகியிருப்பது உண்மை.

மேலும் படிக்க: பொன்னியின் செல்வன் பாகம் 1 வியப்பு!

கர்நாடகாவில் ‘பொ.செ. பாகம் 1’ படத்துடன் ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கி நாயகனாக நடித்துள்ள ‘கண்டாரா’ படமும் வெளியாகி அபார வரவேற்பைப் பெற்றுள்ளது. சொல்லப்போனால், ‘கேஜிஎஃப்2’வைவிட இப்படத்தின் வெற்றி பெரிதாகக் கொண்டாடப்படுகிறது. இரண்டு படங்களையும் தயாரித்துள்ள ஹொம்பாலே பிலிம்ஸ் தென்னிந்திய மாநிலங்களில் பெரிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ‘பொ.செ’ கன்னடப் பதிப்புக்குப் பெரிய வரவேற்பு இல்லையென்ற போதிலும் தமிழ், இந்திப் பதிப்புகள் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே தொடர்ந்து வருகின்றன. அதேநேரத்தில், செப்டம்பர் 30 அன்று வெளியான ஜக்கேஷின் ‘தோத்தாபுரி சேப்டர் 1’ சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது.

இந்தியைப் பொறுத்தவரை சையீப் அலிகான், ஹ்ரித்திக் ரோஷன் நடித்த ‘விக்ரம் வேதா’ தொடக்கத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றபோதும் தொடர்ந்து வசூலை ஈட்டவில்லை. அதேநேரத்தில், ‘பொ.செ. பாகம் 1’ இந்தி பதிப்பிற்கான வரவேற்பு வட இந்திய மாநிலங்களில் குறைவாகவே உள்ளது. கடந்த வாரம் வெளியான அமிதாப்பின் ‘குட்பை’ படமும் கூட பெரியளவில் வசூலிக்கவில்லை. ‘கேஜிஎஃப் 2’ இந்தித் திரையுலகில் பெற்ற வெற்றியை மற்ற மொழிகளிலிருந்து மாற்றம் செய்யப்பட்ட படங்களாலோ, இந்தி நேரடி படங்களாலோ முறியடிக்க முடியவில்லை.

அதேநேரத்தில், வெளிநாட்டிலும் உள்நாட்டிலுமாக இதுவரை 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலைக் குவித்துள்ளது ‘பொ.செ. பாகம் 1’. இதன் வரவே மேற்கூறிய படங்களின் புகழையும் வசூலையும் பாதித்திருப்பது வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது.

தீபாவளி வெளியீட்டைப் பாதிக்குமா?
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பிரின்ஸ்’ அக்டோபர் 21ஆம் தேதியும், கார்த்தியின் ‘சர்தார்’ தீபாவளி அன்றும் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு நிகழ்ந்தால் இவ்விரு படங்களுக்கும் நடுவே மூன்று நாள்கள் இடைவெளி இருக்கும். அதனால் இரு படங்களுக்குமான வசூலிலும் திரையரங்குகளில் காட்சிகள் ஒதுக்கப்படுவதிலும் பெரிய பாதிப்பு இருக்காது என்று நம்பப்படுகிறது. ஆனால், அப்போதும் ‘பொ.செ. பாகம் 1’ அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடினால் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

2022இல் வெளியாகி அதிக வசூல் ஈட்டிய தமிழ் படங்களில் ‘விக்ரம்’, ‘டான்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ ஆகியன ஒன்றரை மாதங்களுக்கும் மேலாகத் திரையரங்குகளில் காட்சிகள் குறைக்கப்பட்டபோதும் நிறைந்த பார்வையாளர்களைக் கொண்டிருந்தது மறுக்க முடியாத உண்மை. புதிதான, மீண்டும் ரசிக்கவந்த பார்வையாளர்களால் அது சாத்தியமானது. பல ஆண்டுகளாகத் திரையரங்குகளுக்கு வராதவர்களையும் ‘பொ.செ. பாகம்1’ ஈர்த்து வரவழைத்ததற்குக் கல்கியின் எழுத்தாளுமையே முக்கியக் காரணம்.

அவர்களது வரவு தீர்ந்துபோனபிறகு, சாதாரணப் பார்வையாளர்கள் மீண்டும் ஒருமுறை இப்படத்தைக் காண்பார்களா என்பது கேள்விக்குறியே! ஒரு படத்தின் நீளமும் உள்ளடக்கமுமே அதனைத் தீர்மானிக்கும். தற்போதைய வரவேற்பு வெகுவாகக் குறையும்போது ‘பிரின்ஸ்’, ‘சர்தார்’ இரண்டுமே அதிகத் திரையரங்குகளில் வெளியாகும்; பார்வையாளர்களால் கொண்டாடப்பட்டால் பெரும் வரவேற்பை ஈட்டும்.

ஆதலால், தீபாவளி வெளியீட்டை ‘பொ.செ.’ ஓட்டம் பாதிக்காது; விக்ரமின் வசூலைச் சமம் செய்வதோ தாண்டுவதோ நிகழும். மாறாக, தற்போதிருக்கும் வரவேற்பு கிஞ்சித்தும் குறையாமல் தொடர்ந்தால் பெருஞ்சாதனை படைத்த தமிழ்த் திரைப்படமாக ‘பொ.செ. பாகம் 1’ மாறும். ஆனால், அது நிகழுமா என்பதை வர்த்தகப் பண்டிதர்களைவிடத் தமிழ் திரைப்பட ரசிகர்கள் மட்டுமே தீர்மானிப்பார்கள்!

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival